புதன், 30 செப்டம்பர், 2009

குரங்கு நீர்வீழ்ச்சியும் நண்பர் நடராஜனும்

நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதம் படித்து கொண்டிருந்த போது மாணவ மாணவிகள் எல்லோரும் சுற்றுலா சென்றிருந்தோம். நான்கு நாட்கள் சுற்றுலா. பல இடங்களுக்கு சென்று வந்தோம். பசுமையான சில நினைவுகள். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் ஆனைமலை பகுதியில் ஆழியார் அணைக்கட்டில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள குரங்கு நீர் வீழ்ச்சி. நிர்வீழ்ச்சியில் இருந்து மூலிகை செடிகளில் தவழ்ந்து நல் மணத்துடனும் வேகமாகவும் இடைவிடாமலும் வரும் தண்ணீரில் ஆனந்தமான ஒரு குளியல். குளிர்ந்த தண்ணீர் மேலே பட்டவுடன் Vibrator Mode-ல் உள்ள செல் போன் போல உடம்பில் ஒரு நடுக்கம். நண்பர்கள் எல்லோரும் குளித்து விட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். நிறைய குரங்குகளுடன் நாங்களும்! இயற்கையை அனுபவித்து இருந்த வேளையில், நண்பர் நடராஜன் கவனிக்காமல் பாசியில் காலை வைக்க, வழுக்கி விழுந்தார். நாங்களும் மற்ற மாணவிகளும் அலற, நண்பர் நடராஜனோ சமாளித்து, "டேய் மச்சி, இந்த போஸில் என்னை ஒரு போட்டோ எடுங்கடா!" என்று மீசையில் மண்ணே ஓட்டவில்லை [நண்பருக்கு அப்போது மீசையே முளைக்கவில்லை!] என்பது போல படுத்துக் கொண்டு ஒரு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்[!] விளைவு அப்படி ஒரு மோசமாக இருந்தது. இரவில் மெதுவாக எங்களிடம் வந்து தேங்காய் எண்ணை இருக்கா? என்று வினவியது மட்டும் இல்லாமல், அடுத்த இரண்டு நாட்களும் பேருந்தில் உட்காராமல் நின்று கொண்டே பயணம் செய்தார்.