எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 1, 2009

கங்கைக் கரை திடல்இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் 1952 -இல் பங்கெடுக்க ஆரம்பித்து இது வரை ஐந்தே ஐந்து பதக்கங்களே பெற்றுள்ளது. இந்திய ஹாக்கி டீம் எட்டு பதக்கங்களை வென்றிருந்தாலும் தனிப்பட்ட முறையில் வெறும் ஐந்து பதக்கங்களையே வென்று உள்ளோம். 100 கோடிக்கும் மேலே மக்கள்தொகை இருந்தும் நமது பதக்க எண்ணிக்கை நூற்றில் பாதி கூட இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ஆனால் நமது நாட்டில் திறமைகளுக்கு பஞ்சம் இருப்பதாக தோன்றவில்லை. இன்றும் கிராமங்களில் பல திறமைசாலி இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல விதத்தில் பயிற்சி கொடுப்பதற்கோ, அவர்களது திறமையை மேம்படுத்தவோ நமது அரசாங்கமோ தனியார் அமைப்புகளோ முன் வருவதில்லை. அரசாங்கம் திட்டமிடும் பல யோசனைகள் வெறும் காகிதத்திலேயே மடிந்து விடுகின்றன. திட்டத்தில் ஒதுக்கிய பணமோ அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் அவர்களின் சட்டைப்பைகளுக்குள் தஞ்சமடைகின்றன.

தனியார் நிறுவனங்களோ கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கே ஸ்பான்சர் செய்கின்றனர். தடகள போட்டி வீரர்கள் எந்த வித உதவியும் இல்லாமல் சில காலம் தமது முயற்சியால் முன்னேற முயன்றாலும், பண முடக்கம் காரணமாகவும் சரியான வழிகாட்டல் இல்லாத காரணத்தினாலும் அவர்களால் மேலும் முன்னேற முடியாத நிலை.

ஒரு முறை ஹரித்வார் சென்றிருந்தபோது கங்கைக்கரையிலே நிறைய சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்ததை பார்க்க நேரிட்டது. அந்த சிறுவர்கள் ஈரமான அரை டிராயருடன் கரையிலே காத்திருக்கிறார்கள். ஒரு பக்தர் கங்கையிலே காசினை தூக்கி எறிந்தால் போதும், இந்த சிறுவர்கள் பிரவாகமாக ஓடும் கங்கையிலே பாய்ந்து அந்த காசை எடுத்து விடுகிறார்கள். அப்படி ஒரு அபாரமான நீச்சல் திறமை. அவ்வளவு வேகமாக ஓடும் கங்கை நதியிலே மிகத்திறமையாக நீச்சல் அடிப்பது மட்டுமின்றி கங்கைப் படுகைக்கு அந்த நாணயம் போகும் முன்னரே எடுத்து விடுகிறார்கள். அவர்களின் நீச்சல் திறமையை என்னவென்று சொல்வது! அந்தத் திறமையை வல்லுனர்களைக் கொண்டு சரியான முறையில் மேம்படுத்தினோமானால் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வெல்லும் வீரர்களை உருவாக்குவது சாத்தியமே!

இவர்கள் இப்படியென்றால் வேறு சில சிறுவர்களையும் இங்கு காண முடிகிறது. அவர்கள் கங்கை நதிக்குக் குறுக்கே கட்டி இருக்கும் சிறு பாலங்களின் மேலே ஒரு நீண்ட கயிற்றினை கையில் வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். கயிற்றின் ஒரு முனையில் ஒரு சிறிய பாத்திரம் அல்லது கூடை கட்டப்பட்டுள்ளது. அவர்களது கண்கள் கரையிலேயே பதிந்து உள்ளது. எந்த ஒரு யாத்திரிகரும் தேங்காய் [மட்டைத்தேங்காய்] மற்றும் பொருள்களை கங்கைக்கு சமர்ப்பித்தால் போதும், அது போட்ட நேரத்தையும் இடத்தையும் கணக்கு வைத்து தங்கள் கையில் உள்ள கயிற்றினை லாவகமாக வீசி அடுத்த நிமிடமே அந்த மட்டைத்தேங்காயை கூடையில் எடுத்து விடுகிறார்கள். அவர்களது குறி தப்புவதே கிடையாது.

சந்தேகமே இல்லை, நல்ல முறையில் இவர்களுக்கு வில் வித்தை போட்டிகளில் பயிற்சி அளிக்கப்பட்டால் இவர்கள் நிச்சயமாக பதக்கங்கள் வெல்வார்கள்!

பி.கு: இந்த சிறுவர்களால் எடுக்கப்பட்ட அதே தேங்காய் காய வைக்கப்பட்டு கரையில் உள்ள கடையில் வந்து சேர்ந்து அடுத்த யாத்ரியிடம் விற்கப்படுவது தனி கதை!

6 comments:

 1. நல்ல எண்ணத்துடன் எழுதப்பட்ட நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கங்கைக் கரைச் சிறுவர்களைப் பத்தி நீங்க எழுதியதெல்லாம் நிஜமாங்ணா?! அப்படின்னா அவங்கதாங்ணா நெஜமான வீரர்கள். சுருக்கமா இருந்தாலும் சிறப்பா எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 3. இந்தியக் குழந்தைகளிடம் அசாத்திய திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றைச் சரியான முறையில் வழிநடத்தக்கூடிய பெரியவர்களும் அரசாங்கமும் இல்லாததுதான் நம் துரதிர்ஷ்டம்! கிராமத்து பம்ப்செட் மீதேறிக்கொண்டு, அங்கிருந்து ஒரு ரூபாய் நாணயத்தைக் கிணற்றுக்குள் எறிந்து, அது கண் மறைகிறவரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, பின்பு நீரில் டைவ் அடித்து உள்ளே போய் அந்த நாணயம் தரையைத் தொடுமுன் பிடித்துக்கொண்டு மேலே வருவது சின்ன வயதில் என் நீர் விளையாட்டாக இருந்தது!

  ReplyDelete
 4. Nijathai solvadharku oru thunichal vendum. Parattukkal. Manam Iruppavaridam Panam Iruppadhillai, Panam Iruppavarkalidam Manam Iruppadhillai!! Idhudhan Indraia Nilai, Nam Thai Thiru Nattil.!!!

  Mandaveli Natarajan.

  ReplyDelete
 5. எல்லா ஊரிலும் சிறுவர்கள் திறமையோடு இருக்கிறார்கள்.. அரசியல் அதை விட திறமையாக இருக்கிறது.. திறமைகளை உதாசீனப்படுத்திக் கொண்டு..

  ReplyDelete
 6. Anna seriously u r rocking.. oru chinna nigazhchithaan.. aana athula yevvalavu periya unmaigal...

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....