புதன், 30 டிசம்பர், 2009

கர்நாடகா மெஸ்

வேலை கிடைத்து தில்லி வந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கரோல் பாக் பகுதியியிலிருந்து தில்ஷாத் கார்டன் பகுதிக்கு நாங்கள் நான்கு நண்பர்களாக சேர்ந்து குடி பெயர்ந்தோம். நிறைய எண்ணிக்கையில் மலையாளிகள் இருந்தாலும் தமிழர்கள் அவ்வளவாக இல்லாத பகுதி இது. வெளியே சாப்பிட வேண்டும் என்றால் தாபா மட்டும் தான். அங்கு தந்தூரி ரொட்டி மற்றும் சப்ஜிதான் கிடைக்கும்.

எங்களுக்கு ஏற்கனவே சமைத்து பழக்கம் இருந்ததால் ஒரு சிலிண்டரும் காஸ் அடுப்பும் வைத்து சமைத்து அனைவரும் சாப்பிட்டு வந்தோம். சிலிண்டர் தீர்ந்து விட்டால் மீண்டும் வரும் வரை "கோவிந்த்" தாபா ஜிந்தாபாத் தான்.

ஓரிரண்டு நாட்களில் சிலிண்டர் வந்த பிறகு திரும்பவும் நள பாகம் ஆரம்பம். வாழ்க்கை இப்படியே ஓடிக்கொண்டிருந்திருந்தால்தான் நன்றாக இருந்திருக்குமே! ஒரு நாள் நண்பர் ஒருவர் எங்களது வீடு இருந்த பகுதியில் ஒரு கர்நாடகா குடும்பம் இருப்பதாகவும் அவர்கள் தேவைப்படுவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தால் சமைத்துக்கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். இந்த விஷயம் தெரிந்த பத்து நாட்களுக்குள் சொல்லி வைத்த மாதிரி எங்கள் வீட்டில் காஸ் சிலிண்டர் தீர்ந்து விடவே அந்தக் கன்னட பெண்மணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான்கு பேருக்கு சாப்பாடு தேவை என்று சொன்னோம். அவரும் எங்களை அவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட அழைத்தார்.

இரவு எட்டுமணிக்கு மேல் அவரது வீட்டிற்கு சென்று கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தோம். கதவைத் திறந்து உள்ளே அழைத்த வீட்டின் தலைவர் எங்களை சோபாவில் உட்கார வைத்து சிறிது காத்திருக்கச் சொன்னார். பிறகு அந்த பெண் வந்து எங்களுக்கு சுடச்சுட சாதம், பொரியல், சாம்பார் என ஒவ்வொன்றாக பரிமாற நாங்கள் நால்வரும் குஷியாக சாப்பிட ஆரம்பித்தோம்.

குனிந்த தலை நிமிராமல் புதிய மணப்பெண் போல நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க திடீரென "உர் உர்" என்ற உறுமல் சத்தம். நிமிர்ந்து பார்த்தால், மேஜை மீது தன் முன்னிரண்டு கால்களையும் வைத்து, எங்கள் முகத்தின் அருகே நாக்கைத் தொங்க போட்டபடி ஒரு பெரிய நாய் எங்களை முறைத்துக் கொண்டு இருந்தது. பயத்தில் எங்கள் நால்வருக்கும் நாக்கு வெளியே தள்ளியது.

உள்ளிருந்து வந்த பெண்மணியிடம் " இந்த நாயை கட்டி போடுங்கள்!" என நாங்கள் கோரஸாகச் சொல்ல, அவரோ " இந்த டைகர் ஒன்னும் பண்ண மாட்டான் பயப்படாதீங்க!" என்று எங்களிடம் சொல்லிவிட்டு, நாயைப் பார்த்து " டைகர் உட்காரு," என்று சொல்ல, அது எங்கள் அருகிலேயே சோபாவில் உட்கார்ந்து கொண்டது. அதன் பிறகு எங்களுக்கு சாப்பாடு எங்கே இறங்கும்?. சாம்பார் சாதத்துடன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எடுத்தோம் ஓட்டம்.

அதன் பிறகு அந்த கன்னட குடும்பம் இருக்கும் தெருப் பக்கம் கூட நாங்கள் தலை வைத்துப் படுத்ததில்லை. சிலிண்டர் தீர்ந்தால் தந்தூரி ரொட்டி தான். இதற்குத்தான் ஆங்கிலத்தில் "BE A ROMAN WHEN YOU ARE IN ROME" என்று சொன்னார்களோ?

4 கருத்துகள்:

  1. பசி வந்தால் பத்தும் பறந்து விடும் ஆனால் டைகர் (செல்ல பிராணியை சொன்னேன் ) வந்தால் பசியும் பறக்கும் என்பதை சுவையோடு பதிவு செய்த விதம் அருமை

    பதிலளிநீக்கு
  2. ஒரு டைகருக்கு எடுத்து வைத்த சாப்பாட்டை நாலு சிங்கங்கள் (கல்யாணத்துக்கு முன்னால எல்லோரும் சிங்கம்தான்.இப்ப சுண்டெலி ஆகி இருப்பீங்க) சாப்பிட்டா, டைகருக்கு கோபம் வராதா?

    பதிலளிநீக்கு
  3. அந்த சீனை நினைச்சுப் பார்த்தேன்.. ஹா.. ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
  4. ஒருவேளை நீங்கள் அதிகம் சாப்பிடாமல் இருக்கத்தான் இது போன்ற பயமுறுத்தலோ? வெங்கட், வழக்கமான அழகான படத்தை காண வில்லையே?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....