புதன், 27 ஜனவரி, 2010

"டொக், டொக். டொக், டொக்" (ஒரு பக்கக் கதை)


"டொக், டொக், டொக், டொக்" என்று சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த எழுபத்தைந்தை கடந்துவிட்டிருந்த கணபதி.

அதிகாலை நாலு மணிக்கே அவருக்கு முழிப்பு வந்து விட்டது. கல்யாணி இருந்திருந்தால் ஒரு கப் காப்பியாவது கொடுத்திருப்பாள். ஆறு மணியாகியும் காப்பி வரும் அறிகுறிகள் எதையும் காணோம். சமையலறையில் ஆள் நடமாடும் சலனமோ, பாத்திரங்கள் உருளும் சத்தமோ எதுவுமில்லை. "மருமகள் ஜானகி தூங்கிக்கொண்டு இருக்கா போலிருக்கு!" என்று ரோட்டை வெறித்தபடி இருந்தார்.

அவரும் கல்யாணியும் பார்த்துப் பார்த்து கட்டி ஆண்டு அனுபவித்த வீடு. அவள் காலமான பிறகு உடல் ஒடுங்கி அவரின் நடமாட்டம் குறைந்து விட்டது. காலையில் காவிரிக்கரைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசல் திண்ணையில்தான் வாசம். சாப்பிடுவது கூட அங்கேயே.

வீட்டின் உள்ளே தண்ணீர் விழுகின்ற சலனம். "சரி எப்படியும் பத்து-பதினைந்து நிமிடங்களில் காப்பி வந்து விடும்..." மனக் கணக்கு போட்டவாறே உள்ளே பார்த்தபடி "டொக், டொக், டொக், டொக்" என்று சொல்லிக் கொண் டிருந்தார் கணபதி. "வந்துண்டு தானே இருக்கேன், அதுக்குள்ளே என்ன சத்தம்?" என்றவாறே வந்து அவரெதிரே ஜானகி வைத்த காப்பியை எடுத்து பொறுமையாக குடித்தார். இளஞ்சூட்டில் இருந்த காப்பி அவருக்கு ருசிக்கவில்லை.

பதினோரு மணிக்கு அவருடைய தட்டில் சாதம், குழம்பு, பொரியல் என்று எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு வந்து அவரெதிரே வைத்துவிட்டு வேற ஏதாவது வேண்டுமா என்று கூட கேட்காமல் உள்ளே சென்றுவிட்ட மருமகளைப் பார்த்ததும், கல்யாணி இருந்தவரை பார்த்துப் பார்த்து அவள் கையால் தனக்கு பரிமாறிய காட்சிகள் ஏனோ அவர் மனதில் வந்து போனது. இனிமேல் சாயங்காலம் ஒரு காப்பி, இரவு ஏதோ ஒரு பலகாரம். அவ்வளவு தான். அதற்கு மேல் எதுவும் கிடையாது.

இரவு நாலு இட்லியைத் தட்டில் போட்டு அவர் முன்னாள் வைத்து விட்டு பக்கத்து வீட்டு பங்கஜத்துடன் பேசப் போய்விட்டாள் ஜானகி.

"உன் மாமனார் ஏன் 'டொக், டொக் '-ன்னு அடிக்கடி சொல்லிண்டே இருக்கார்?" என்று பேச்சோடு பேச்சாகக் கேட்ட பங்கஜத்திடம்...

"ஏன்னு தெரியல, மாமியார் போனதிலிருந்தே இப்படித்தான் அப்பப்ப "டொக், டொக்,டொக், டொக்" ன்னு சொல்லிண்டே இருக்கு. அவருக்கு பைத்தியம் பிடுச்சுடுத்தோ என்னவோ யாரு கண்டா? என்று ஜானகி சொன்னது கணபதி காதில் விழாமலில்லை.

காலையில் காப்பி வைக்கும்போது ஒரு "டொக்", மதிய சாப்பாட்டின்போது ஒரு "டொக்", சாயங்கால காப்பிக்கு ஒரு "டொக்", இரவு பலகாரம் வைக்கும் போது ஒரு "டொக்" என்ற சத்தத்துடன் கடனே என்று வைத்துவிட்டு போகிற மருமகளை நினைத்து மனதுக்குள் சிரித்தபடியே "டொக், டொக், டொக், டொக்!" என்று மீண்டும் சத்தமாக சொல்ல
ஆரம்பித்தார் கணபதி.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

குழந்தைக்கு என்ன பெயர்?




தமிழர்கள் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அதற்கு பெயர் வைக்க, அக்குழந்தை பிறந்த அன்று உள்ள நட்சத்திரத்திற்கு என்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி சிலர் பெயர் வைக்கிறார்கள். வெகு சிலர் குழந்தையின் தாத்தா அல்லது பாட்டியின் பெயரை வைக்கிறார்கள். வேறு பலர் இறைவனின் பெயரை வைக்கிறார்கள்.

இது போன்றே இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்களும் பெயர் வைப்பதற்கு பல்வேறு வழிகளை பின்பற்றுகின்றனர். சீக்கியர்கள் குழந்தை பிறந்தவுடன் "குருத்வாரா" சென்று வணங்கி பெயர் வைக்கச் சொல்லி குருவிடம் வேண்டுகின்றனர். அவரும் "குரு கிரந்த் சாஹிப்" என்ற அவர்களது புனித நூலை எடுத்துப் பிரித்து, அன்றைய தினத்தின் "வாக்" உள்ள பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள முதல் வாக்கியத்தின் முதல் வார்த்தையை எடுத்துக் கொடுக்கிறார். அதில் ஆரம்பிக்கும்படி அவர்களின் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள்.

உதாரணத்திற்கு "மன்" என்ற வார்த்தை வருகிறது என்றால், "மன்மோகன், மன்மீத், மன்வீர்" போன்ற பெயர்களுள் ஒன்றை வைக்கிறார்கள். ஜாதி மத வேறுபாடு இருக்கக்கூடாது என்று இந்த ஏற்பாடு. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதில் எந்த பெயரை வேண்டுமானாலும் வைக்கலாம். பிறகு எப்படி அந்த பெயரைக் கொண்டவர் ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்வது? ஆணாக இருந்தால், பெயருக்குப் பின்னால் "சிங்" , பெண் என்றால் "கௌர்" என்றும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆணாக இருந்தால் மன்மோகன் சிங், பெண்ணாக இருந்தால் மன்மோகன் கௌர்!. இது எப்படி இருக்கு?

பெயர் எப்படி இருந்தாலும் வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்கள், பண்டி, பப்ளி, லவ்லி, மோன்டி, பின்டூ என்று விதவிதமாக இருக்கும். நம் ஊரில் ரங்கு, வெங்கு, சீமாச்சு, ரங்காச்சு, என்று கூப்பிடுவது போல.

மிசோரம் மாநிலத்தில் உள்ளவர் பெயரை வைத்து அவர் ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள ஒரு வழி சொல்லித் தந்தார் அந்த ஊர் நண்பர் ஒருவர். பெரும்பாலான ஆண்களின் பெயர்கள் " a " வில் முடியும், பெண் பெயர்கள் " i " இல் முடியும். "Vanlalfela" என்பது ஒரு ஆண் பெயர். "Mimi", "Mengmawi" என்பதெல்லாம் பெண்களின் பெயர்கள். கஷ்டம்டா சாமி!.

"Lalrintluangi" இது ஒரு மிசோ பெண்மணியின் பெயர். இதை சரியாக உச்சரிப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க நிதி மந்திரிக்கு சிபாரிசு செய்ய நான் தயார் . போட்டிக்கு நீங்க ரெடியா?

புதன், 20 ஜனவரி, 2010

மறக்க மனம் கூடுதில்லையே!



செல்லப் பிராணிகளுடன் நம் எல்லோருக்கும் சில ரசிக்கத்தக்க அனுபவங்கள் இருக்கும். பொதுவாக எல்லோரும் நாய், பூனை, கிளி, புறா வளர்ப்பது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்த போது அவரின் மகள் ஒரு சிறிய கூடையை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் "அங்கிள், இதைப் பாருங்க!" என்றாள். மூடியை மெதுவாகத் திறந்து பார்த்தால் ஒரு தேங்காய்ப்பூ துண்டில் வெள்ளையாக ஒரு உருவம். பிறந்து ஒரு நாளே இருக்கும் ஒரு உயிரினம். அதை பார்த்து, "ஓஷோ, இங்க பாரு! அங்கிள் வந்திருக்காரு பாரு!" என்று ஒரு அழைப்பு வேறு. தன் சிறு கண்ணை திறந்து பார்த்த அந்த உயிரினம் "வெள்ளெலி". வித்தியாசமான ஒரு செல்லப் பிராணி!. சிறிது நாள் கழித்து அங்கே சென்ற போது ஓஷோ இருந்த கூடை காலி. நண்பரின் மகள் சோகத்துடன் கூறியது, "அப்பாவால, ஓஷோவை சரியா பார்த்துக்க முடியல!".

இன்னொரு நண்பரின் வீட்டில் நிறைய பூனைகள் இருக்கும். நண்பரின் அம்மா ஒவ்வொரு பூனைக்கும் வித்தியாசமான பெயர் வைத்து கொஞ்சுவார். பூனைக் குட்டிகள் பிறக்கும் போது அப்போது ரிலீஸ் ஆகும் சினிமா படத்தின் கதாநாயகி பெயரை வைப்பார். மைக்கேல் மதன காமராஜன் படம் வந்த போது, ஒரு பூனைக்கு அவர் வைத்த பெயர் "திரிபுரசுந்தரி"!. பூனைகள் மேல் அப்படியொரு அலாதியான பாசம் அவருக்கு.

தில்லியின் லோதி ரோடு பகுதியில் ஒரு பெட்டிக்கடை. அதன் வாசலில் ஐந்து-ஆறு தெரு நாய்கள் விளையாடி கொண்டு இருக்கும். வாடிக்கையாளர்கள் கடையில் நின்று
பொருள் வாங்கும் போது, காலில் யாரோ தட்டுவது போல இருக்கும், திரும்பிப் பார்த்தால் ஒரு நாய் நம்மைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும். எதாவது தின்பண்டம் வாங்கி போடும் வரை அது நம்மை விடாது. கடைக்காரரிடம் பிஸ்கட் வாங்கிப் போட்டால் தின்னாது. அதன் பிறகு கடைக்காரர் நம்மிடம் "சார், இது ரஸ்க் தான் சாப்பிடும்!" என்று சொல்வார். அப்பிறமென்ன? ரஸ்க் வாங்கி போட்ட பிறகு தான் அது நம்மை விடும். கடைக்காரரின் வியாபார யுக்தி?

வீட்டில் நாய் வளர்ப்பவர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது வெறும் பிராணி அல்ல. அவர்கள் வீட்டில் அதுவும் ஒரு உறுப்பினர். ஆனால் அவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இது தெரிய வேண்டும் என்பது அவசியம் இல்லையே! ஒரு நண்பர் வீட்டில் ராஜபாளையம் நாய் வளர்க்கின்றனர். அவர்கள் வீட்டு வாசல் கம்பிக்கதவைத் தட்டினால் போதும், ஐயா ஒரே பாய்ச்சலில் வந்து விடுவார். கதவின் மேல் முன்னிரண்டு காலையும் வைத்து, நம்மை பார்த்து உறுமுவார். நண்பர் வந்து அதைப் பிடித்து பின்னால் உள்ள அறையில் விட்டு வருவார். நான் உள்ளே வந்து சில நொடிகள் கூட ஆகியிருக்காது - அந்த நாய் உறுமலுடன் வந்து என்னை முகர்ந்து பார்க்கும். பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் என்னை அம்போன்னு விட்டுவிட்டு நாயிடம் நண்பர் சொல்லுவார் - "நம்ம அண்ணன்டா, ஒண்ணும் பண்ண மாட்டான்!" இது எப்படி இருக்கு? என்னமோ நம்மளைப் பார்த்து நாய் பயந்த மாதிரியும், நாம் என்னமோ நாயை கடித்து விடுவது மாதிரியும்!". நமக்கு இல்ல தெரியும் பயத்தில B.P. எகிறியது?.

அந்த பயம் கூட கொஞ்ச நாள்ல மறந்து விட்டது, ஆனால் நாய்க்கு நான் அண்ணன்னு சொன்னத இப்ப கூட மறக்க முடியல. யாருக்காவது இதை மறக்க வைக்க எதாவது வழி தெரிஞ்சா சொல்றீங்களா? ரொம்பவும் புண்ணியமா இருக்கும்.

திங்கள், 18 ஜனவரி, 2010

எங்கே போகிறோம்?




"நீங்கள் ஒரு வேட்பாளர் ஆக வேண்டுமா? அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்குத் தேவைப்படும் ஒரே ஒரு தகுதி, நீங்கள் ஒரு முறையாவது சிறை சென்றிருக்க வேண்டும். அதற்காக சிறை அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வந்தால் போதும். கண்டிப்பாக உங்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் உண்டு."

பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் பீகார் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் ஆவதற்கு இதையே ஒரு தகுதியாக அறிவித்துள்ளார் திரு லாலு பிரசாத் யாதவ். நல்ல வேளை, கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை அடைந்தவர்களுக்குத்தான் தேர்தலில் நிற்க சீட்டு என்று சொல்லவில்லை.

ஏற்கனவே அரசியல் ஒரு சாக்கடை என்று நிரூபிக்க ஏகப்பட்ட Accused அரசியல்வாதிகள் இருக்கும் போது இப்படி ஒரு அறிவிப்பு தேவையில்லை. அவர்கள் எல்லோரும் அளிக்கும் ஒரே சமாளிப்பு - "குற்றங்கள் நிருபிக்கப் படாத வரை நாங்கள் குற்றவாளிகள் அல்ல!" என்பது தான்.

வடக்கில் இது போன்ற புதிய "திட்டங்கள்" வெளி வந்து கொண்டு இருக்கும் போது, தெற்கும் தாழ்ந்து விடக்கூடாது என்பதாலேயோ என்னவோ, முன்னாள் பிரதம மந்திரி திரு தேவ கௌடா, கர்நாடக முதல் அமைச்சரைப் பற்றிக் கன்னாபின்னாவென திட்டி இருக்கிறார். பிறகு மற்ற எல்லா அரசியல்வாதிகளைப் போலவே இவரும் "நான் ஏதோ கோபத்தில் சொல்லி விட்டேன்" என்று ஒரு அசிங்கமான சமாளிப்பு நாடகத்தை நடத்துகிறார்.

இப்படியெல்லாம் நமது நாட்டில் அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்றுதான் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதிவிட்டுப் போய்விட்டாரோ?

"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

செவ்வாய், 12 ஜனவரி, 2010

"ஹே, மா!"

பொதுவாக எல்லோருக்கும் தங்களது தாய்மொழி மீது அபரிமிதமான பற்று இருக்கும். மலையாளிகள், பெங்காலிகள் எங்கிருந்தாலும் தங்களது தாய்மொழியில் பேசுவதையே விரும்புகிறார்கள். ஆனால் தமிழர்களில் பெரும்பாலானோர் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது எங்கு இருக்கிறார்களோ அந்த ஊர் பாஷையிலே பேசுகிறார்கள்.

ஒரு பெங்காலி இன்னொரு பெங்காலியை பார்த்தால் போதும், உடனே "KI KABOR? BALAWACHI?" என்று பெங்காலியிலும், மலையாளிகள் "எந்தா சுகந்தன்னே?" என்று மலையாளத்திலும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுடன் வேற்று மொழி பேசுபவர்கள் இருந்தாலும், மற்றவர்களுக்குப் புரியாதே என்றாலும் கவலையே இல்லை அவர்களுக்கு. தமிழர்கள் இந்த விஷயத்தில் இதற்கு தலைகீழ்.

தில்லியில் நான்கு தமிழ் பேசும் நண்பர்கள் கூடிப் பேசினால், அவர்களுக்குள் சம்பாஷனைகள் பெரும்பாலும் ஹிந்தி பாஷையில் தான். அவர்களுள் ஒருவர் தமிழில் பேசினாலும் மற்றவர்கள் அவருக்கு ஹிந்தியில் தான் பதில் சொல்கிறார்கள்.

தில்லியிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் என்றால் கூட பரவாயில்லை என ஒத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு தமிழ் மேல் அப்படி ஒன்றும் பற்று இருக்காது. ரவி என்று எனக்கு ஒரு நண்பர். சென்னையில் தமிழ் படித்து, பேசி வளர்ந்தவர். எனக்குப் பின் தில்லிக்கு வேலை காரணமாக வந்தவர். வந்தபின்தான் ஹிந்தி பாஷையே கற்றவர். ஆனாலும் அவருக்கு தமிழை விட ஹிந்தியின் மேல் அப்படி ஒரு காதல்.

நண்பர்கள் கூடி தமிழில் பேசும்போது அவர் ஹிந்தியிலேயே பேசுவார். நாங்கள் தமிழில் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஹிந்தியிலேயே பதில் சொல்வார். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் இப்போதும் அப்படியே இருக்கிறார். அதைப் பற்றி அவரிடமே கேட்டால் அதற்கும் பதில் ஹிந்தியிலேயே சொல்வார். சரி கல்யாணம் ஆன பிறகு மனைவியிடமாவது தமிழில் பேசுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் அந்த ஆசையிலும் மண்தான் விழுந்தது..

கல்யாணத்திற்கு விசுவின் மணல் கயிறு "கிட்டுமணி" போல பதினாறு கண்டிஷன் எல்லாம் அவர் போடவில்லை. ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டார். அது பெண்ணுக்கு ஹிந்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும். கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பின் அவரது மனைவி தாய்ப் பற்றோடு தமிழில் பேசினாலும் அவருக்கும் ஹிந்தியிலேயே பதில் சொல்கிறவரை என்னவென்று சொல்வது?

கடைசி கடைசியாக எங்களுக்கு ஒரு யுத்தி தோன்றியது. ஒரு நாள் நண்பர்கள் கூடிப் பேசும்போது, யாராவது அவருக்குத் தெரியாமல் திடீரென அவரது முதுகில் ஓங்கி ஒரு குத்து விடுவது என்றும் மனுஷர் அப்போது வலியில் "அம்மா" என்று கத்தித்தானே ஆக வேண்டும் என்று தீர்மானித்து ஒரு குறிப்பிட்ட நாளில் அதை நிறைவேற்றியும் விட்டோம். ஆனால் அந்த வேளையிலும் அவரிடமிருந்து வந்த சத்தமோ - "ஹே மா!". என்னே அவரது மொழிப்பற்று!

வியாழன், 7 ஜனவரி, 2010

வானமே கூரை, நடைபாதையே பஞ்சு மெத்தை




தில்லியின் கரோல் பாக் பகுதி. பதினாறு வயது தினேஷ் மற்றும் அவனது தாய் வாழும் இடம். இருவரும் குப்பை பொறுக்கி, அதை விற்றுக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் கஷ்ட ஜீவன்கள். வீடு, வாசல், சொத்து என ஏதும் இல்லை. இருப்பதெல்லாம் ஒரு சில கிழிந்த உடைகள், இரண்டு மூன்று பாத்திரங்கள், ரொட்டி செய்ய ஒரு தவா இவையே. கிடைக்கும் சொற்ப பணத்தில் நடைபாதையிலே நான்கு செங்கல்களை வைத்து குப்பையை கொளுத்தி சமைத்துச் சாப்பிடும் பரம ஏழைகள். இவர்களை போலவே நிறைய ஏழைகள் இங்குள்ள பெரிய கடைகளின் முன் இருக்கும் நடைபாதைகளில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வானமே கூரை, நடைபாதையே பஞ்சு மெத்தை.

வெய்யில் காலம் என்றால் இவர்களுக்கு பரவாயில்லை, குளிர் காலத்தில் இவர்களது நிலை மிக மிக மோசம். ஐந்து-ஆறு டிகிரி குளிரில் எந்த விதமான குளிர்கால உடையும் இல்லாமல் நடுங்கியபடி இரவினை கழிக்க வேண்டிய பரிதாப சூழ்நிலை. எப்போதாவது ஏதாவது ஒரு சேவை நிறுவனம் கொடுக்கும் கம்பளிக்கு இவர்களுக்குள் நிறைய அடிதடி. யார் அவர்களுக்குள் பலவானோ அவருக்கே கிடைக்கும். மற்றவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

தினேஷிடம் ஏற்கனவே ஒரு கிழிந்த கம்பளம் இருந்தது. அது மட்டும் அவனுக்குப் போதவில்லை. அன்று இரவில் வந்த ஒரு சேவை நிறுவனத்தினர் 150 பேருக்கு கம்பளிகள் வழங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக தினேஷுக்கும் ஒரு கம்பளி கிடைத்தது. கீழே அட்டைப் பெட்டிகளை பிரித்துப் போட்டு, இரண்டு கம்பளி போர்த்தி இன்றாவது நன்றாக தூங்கலாம் என்று சந்தோஷமாக இருந்தான். அடிக்கும் குளிரிலும் "Tande Tande Paani-me Nahaanaa Chahiye" [சில்லென்ற தண்ணியில் குளிக்க வேணும்] என்று பாட்டு பாடியபடி இருந்தான்.

அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த கமலேஷ் வெறுப்பில் இருந்தான். அவனிடம் ஒரு கம்பளி கூட இல்லை. இன்றும் அவனுக்கு கம்பளி கிடைக்கவில்லை. முட்டி மோதி வண்டியிடம் அவன் சென்ற போது கம்பளி தீர்ந்து விட்டது. இன்றும் குளிரில் அவதிப்பட வேண்டியதுதான் என்று வந்து பார்த்தால், தினேஷிடம் இரண்டு கம்பளி. இரண்டில் ஒன்றாவது கொடுத்தால் பரவாயில்லை என நினைத்தான். தினேஷிடம் கேட்டபோது அவன் தர முடியாது என மறுத்து விட்டான். இருவருக்கும் பெரிய சண்டை. தினேஷுக்கு அவனது தாயின் பக்கபலமும் இருந்தது, கூடவே அவன் ஒரு காச நோயாளி என மற்றவர்களும் தடுக்கவே கமலேஷ் ஒரு வித வெறியுடன் அங்கிருந்து சென்று விட்டான்.

மறு நாள் காலையில் நடைபாதையில் ஒரே கூட்டம். போலீஸ் வந்து கூட்டத்தை விலக்கியது. அங்கே தினேஷ் நசுங்கிய தலையுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவன் போர்த்தியிருந்த பழைய கிழிசல் கம்பளி முழுவதும் ரத்தம். புது கம்பளி போன சுவடே தெரியவில்லை. கமலேஷையும் காணவில்லை.

சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சி இது. தினமும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனை காலம் தான் இப்படியே நடக்கும்? Survival of the Fittest என்று நம்மால் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

திங்கள், 4 ஜனவரி, 2010

முதல் நாள் முதல் ஷோ



நெய்வேலி நகரம் ஒரு அருமையான அமைதியான இடம். பிறந்ததிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை அங்கேயே இருந்தேன். முற்றிலும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் வாழும் ஒரு சொர்க்க பூமி.

முதலில் நெய்வேலி நகரம் முழுவதற்குமே "அமராவதி" என்ற பெயரில் ஒரே ஒரு திரை அரங்கம்தான். பிறகு "தேவி ரத்னா" என்ற பெயரில் மற்றுமொறு திரை அரங்கமும் வந்தது. "அமராவதி"யில் பழைய படங்களே திரையிடுவார்கள். ஆனால் தேவி ரத்னாவிலோ புதுப் படங்களும் திரையிடுவார்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை "தேவி ரத்னா" திரை அரங்கில் ஒரு புதிய திரைப்படம் திரையிடப் போவதாக நெய்வேலி நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது என்று முடிவு செய்தோம். பிறகு ரசிகர் மன்றத்தில் சொல்லி பத்து டிக்கெட்களுக்கு ஏற்பாடும் செய்துவிட்டோம்.

புதுப் பட ரிலீஸ் நாளும் வந்தது. காலை பத்து மணிக்கு முதல் ஷோ. எல்லா நண்பர்களும் திரை அரங்கின் வெளியில் சந்திப்பதாக ஏற்பாடு. ஒவ்வொருவராக ஒன்பது பேர் வந்து விட்டோம். பத்தாவது நண்பர் வரவில்லை. இப்போது இருப்பது போல அலைபேசி வசதியெல்லாம் அப்போது இல்லை. ஆகையால் ஷோ ஆரம்பிக்க ஐந்து நிமிடம் இருக்கும் போது,"சரி நாம் எல்லோரும் உள்ளே சென்று விடலாம், ஒரு டிக்கெட் வீணாகப் போனால் பரவாயில்லை" என நான் சொன்னேன். அப்போது நண்பன் ஒருவன் "எதுக்குடா வேஸ்ட் பண்ணனும்? இந்த டிக்கெட்டை ப்ளாக்கில் விற்று காசு பண்ணி விடலாம்" என்று சொன்னான் .

என் கையில் இருந்த ஒரு டிக்கெட்டை அந்த நண்பன் அவசரமாக வாங்கிக்கொண்டு வெளியே போய் "ஒரு டிக்கெட் வேணுமா? ஐம்பது ரூபாய்" என்று கையை உயர்த்தி சத்தமாகக் கூவி விற்க, அடுத்த வினாடி அவன் மேல் ஒரு கும்பல் பாய்ந்தது. குறைந்தது இருபது பேராவது அந்த கும்பலில் இருந்திருப்பார்கள். இரண்டு மூன்று நிமிடத்திற்கு ஒரே கூச்சல் குழப்பம், என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதன் பின்னர் தலைமுடி எல்லாம் கலைந்து, சின்னாபின்னமாகி சோகமாக வெளியே வந்த அந்த நண்பன் போட்டிருந்த சட்டையில் ஒரு பட்டன்கூட இல்லை. கையில் டிக்கெட்டும் இல்லை, காசும் போச்சு.

சரி எப்படியும் டிக்கெட் எடுத்தவர் எங்கள் அருகில்தானே இருப்பார் பார்க்கலாம் எனத் திரை அரங்கினுள் புகுந்தோம்.

ஐந்து நிமிடம் விளம்பரங்கள் ஓடி இருக்கும். இன்னமும் அந்த சீட் காலி. படம் ஆரம்பித்தது. பார்த்தால் திடீரென ஒரு அழகான இளம் பெண் வந்து அந்த சீட்டில் உட்கார எங்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. நிச்சயமாக அந்த பெண் எங்களது நண்பரிடமிருந்து டிக்கெட்டை பறித்துக்கொண்டு போனவராக இருக்க முடியாது என்றே எங்களுக்குத் தோன்றியது . சரி எதற்கும் விசாரிக்கலாம் என " மேடம் இந்த ஸீட்டை எங்கள் நண்பருக்காக ரிசர்வ் செய்திருந்தோம், உங்களுக்கு எப்படி இது கிடைத்தது?" என்று கேட்டதற்கு அவர் நூறு ரூபாய் கொடுத்து ப்ளாக்கில் வாங்கியதாக கூலாகச் சொல்லிவிட்டு சினிமாவைப் பார்ப்பதில் மும்முரமாகிவிட்டார். நாங்கள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டோம். வேறு வழி?

டிக்கெட்டும் போச்சு பணமும் போச்சு - இது தவிர நண்பருக்கு வீட்டில் வேறு தனியாக அர்ச்சனை! - சட்டையை கிழித்துக்கொண்டு வந்ததற்காக.