புதன், 20 ஜனவரி, 2010

மறக்க மனம் கூடுதில்லையே!



செல்லப் பிராணிகளுடன் நம் எல்லோருக்கும் சில ரசிக்கத்தக்க அனுபவங்கள் இருக்கும். பொதுவாக எல்லோரும் நாய், பூனை, கிளி, புறா வளர்ப்பது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்த போது அவரின் மகள் ஒரு சிறிய கூடையை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் "அங்கிள், இதைப் பாருங்க!" என்றாள். மூடியை மெதுவாகத் திறந்து பார்த்தால் ஒரு தேங்காய்ப்பூ துண்டில் வெள்ளையாக ஒரு உருவம். பிறந்து ஒரு நாளே இருக்கும் ஒரு உயிரினம். அதை பார்த்து, "ஓஷோ, இங்க பாரு! அங்கிள் வந்திருக்காரு பாரு!" என்று ஒரு அழைப்பு வேறு. தன் சிறு கண்ணை திறந்து பார்த்த அந்த உயிரினம் "வெள்ளெலி". வித்தியாசமான ஒரு செல்லப் பிராணி!. சிறிது நாள் கழித்து அங்கே சென்ற போது ஓஷோ இருந்த கூடை காலி. நண்பரின் மகள் சோகத்துடன் கூறியது, "அப்பாவால, ஓஷோவை சரியா பார்த்துக்க முடியல!".

இன்னொரு நண்பரின் வீட்டில் நிறைய பூனைகள் இருக்கும். நண்பரின் அம்மா ஒவ்வொரு பூனைக்கும் வித்தியாசமான பெயர் வைத்து கொஞ்சுவார். பூனைக் குட்டிகள் பிறக்கும் போது அப்போது ரிலீஸ் ஆகும் சினிமா படத்தின் கதாநாயகி பெயரை வைப்பார். மைக்கேல் மதன காமராஜன் படம் வந்த போது, ஒரு பூனைக்கு அவர் வைத்த பெயர் "திரிபுரசுந்தரி"!. பூனைகள் மேல் அப்படியொரு அலாதியான பாசம் அவருக்கு.

தில்லியின் லோதி ரோடு பகுதியில் ஒரு பெட்டிக்கடை. அதன் வாசலில் ஐந்து-ஆறு தெரு நாய்கள் விளையாடி கொண்டு இருக்கும். வாடிக்கையாளர்கள் கடையில் நின்று
பொருள் வாங்கும் போது, காலில் யாரோ தட்டுவது போல இருக்கும், திரும்பிப் பார்த்தால் ஒரு நாய் நம்மைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும். எதாவது தின்பண்டம் வாங்கி போடும் வரை அது நம்மை விடாது. கடைக்காரரிடம் பிஸ்கட் வாங்கிப் போட்டால் தின்னாது. அதன் பிறகு கடைக்காரர் நம்மிடம் "சார், இது ரஸ்க் தான் சாப்பிடும்!" என்று சொல்வார். அப்பிறமென்ன? ரஸ்க் வாங்கி போட்ட பிறகு தான் அது நம்மை விடும். கடைக்காரரின் வியாபார யுக்தி?

வீட்டில் நாய் வளர்ப்பவர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது வெறும் பிராணி அல்ல. அவர்கள் வீட்டில் அதுவும் ஒரு உறுப்பினர். ஆனால் அவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இது தெரிய வேண்டும் என்பது அவசியம் இல்லையே! ஒரு நண்பர் வீட்டில் ராஜபாளையம் நாய் வளர்க்கின்றனர். அவர்கள் வீட்டு வாசல் கம்பிக்கதவைத் தட்டினால் போதும், ஐயா ஒரே பாய்ச்சலில் வந்து விடுவார். கதவின் மேல் முன்னிரண்டு காலையும் வைத்து, நம்மை பார்த்து உறுமுவார். நண்பர் வந்து அதைப் பிடித்து பின்னால் உள்ள அறையில் விட்டு வருவார். நான் உள்ளே வந்து சில நொடிகள் கூட ஆகியிருக்காது - அந்த நாய் உறுமலுடன் வந்து என்னை முகர்ந்து பார்க்கும். பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் என்னை அம்போன்னு விட்டுவிட்டு நாயிடம் நண்பர் சொல்லுவார் - "நம்ம அண்ணன்டா, ஒண்ணும் பண்ண மாட்டான்!" இது எப்படி இருக்கு? என்னமோ நம்மளைப் பார்த்து நாய் பயந்த மாதிரியும், நாம் என்னமோ நாயை கடித்து விடுவது மாதிரியும்!". நமக்கு இல்ல தெரியும் பயத்தில B.P. எகிறியது?.

அந்த பயம் கூட கொஞ்ச நாள்ல மறந்து விட்டது, ஆனால் நாய்க்கு நான் அண்ணன்னு சொன்னத இப்ப கூட மறக்க முடியல. யாருக்காவது இதை மறக்க வைக்க எதாவது வழி தெரிஞ்சா சொல்றீங்களா? ரொம்பவும் புண்ணியமா இருக்கும்.

6 கருத்துகள்:

  1. நாயிடம் நாங்கள் படும்பாடு ந்னு நானும் ஒரு தடவை புலம்பியிருக்கேன்.

    :))http://pudugaithendral.blogspot.com/2009/03/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  2. \\"நம்ம அண்ணன்டா, ஒண்ணும் பண்ண மாட்டான்!" //
    :)
    sorry நான் இந்த வரியைப் படிச்சதுமே காப்பி செய்துபின்னூட்டத்தில் போட எடுத்துட்டேன். அப்பறம் தான் நீங்க அதை மறக்க நினைக்கறீங்கங்கற வரியைப்பார்த்தேன்.. :)

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்லா இருக்கு இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு

    பதிலளிநீக்கு
  4. பிராணி நாயகர்கள் பதிவு அசத்தல்..

    பதிலளிநீக்கு
  5. நண்பர் கூறியதில் தவறேதுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது . உங்களை, அவர், தன்னிலிருந்து வேறு படுத்திக் கண்டதின் விளைவே இது. "உங்களை, அவர், "செய்நன்றி கொன்ற மனிதர்" கூட்டத்தில் சேர்க்கவில்லை என்று நிம்மதி அடைக!

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  6. நானும் நாய்கிட்ட மாட்டிற்க்கேன். காலேஜ் ல NSS போலியோ சொட்டுமருந்து விழிப்புணர்வு க்காக நெல்லையில் ஒரு ஒரு வீடா போய் சொல்லிட்டு இருந்தோம் , ஒருவீட்ல நாய் , அந்த வீட்டு மெயின் கதவு பின்னாடி இருந்தது , எங்கள பார்த்து நாய் போட்ட சத்தத்தைவிட அத பார்த்து நா போட்ட சத்தம்தான் ஜாஸ்தி . நல்ல வேலை கடிக்கல . போனா மாசம்கூட இங்க என் appartmentla ஒரு குட்டி நாய் என்ன 5 நிமிஷம் நகர விடாம அரெஸ்ட் பண்ணிருச்சு .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....