திங்கள், 15 பிப்ரவரி, 2010

தலை நகரிலிருந்து... பகுதி 2

சென்ற வாரம் பதிவு செய்த "தலை நகரிலிருந்து..." நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. தமிலிஷ்-இல் ஓட்டு அளித்த நல்ல உள்ளங்களுக்கும் தங்களது மேலான கருத்துகளைப் பின்னூட்டமாக பதிவு செய்தவர்களுக்கும் எனது நன்றி.

என்னடா இது, நிறைய நல்ல விஷயங்கள், சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் எல்லாம்தில்லியில் இருக்கும்போது என்னவோ காது நோண்டுறவன், பல்லு புடுங்குறவன்னு எழுதி இருக்கியேன்னு நீங்க கேட்கறது புரியுது. அதையும் அடுத்தடுத்து எழுதுவோமுல்ல, அதுக்கு முன்னாடி இன்னும் சில சுவாரசியமான விஷயங்களை இந்த வாரம் பார்க்கலாமா?

பீகாரி ரிக்ஷாவாலா: தில்லியின் தெற்கு பகுதியைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் ஒரு வாகனம் தான் ரிக்ஷா. அதுவும் பழைய தில்லியில் ரிக்ஷா இல்லாமல் நீங்கள் எங்கும் செல்ல முடியாது. எல்லா சந்துகளிலும் புகுந்து விளையாட ஒரு ஆதர்ச வாகனம் அதுதான். பெரும்பாலும் இதை ஓட்டுபவர்கள் பீகார் மாநிலத்தவர்கள், அவர்களுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்திலிருந்து வருபவர்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது காவலர்களிடம் அடிவாங்கும் இந்த பாவப்பட்ட மனிதர்கள், ரிக்ஷாவை நாள் வாடகைக்கு எடுத்து ஓட்டுகிறார்கள். பெரும்பாலான ரிக்ஷா காவல்துறையில் பணிபுரியும் நண்பர்களுடையது[!] என்பது மேலும் வருத்தமான விஷயம். ஆனாலும் இவர்களுக்கு கவலையே இல்லையோ என்னமோ, தில்லி இரயில் நிலையம் வந்து இறங்கியதும் அவர்களில் பலர் வாங்கும் முதல் பொருள் ஒரு ரேடியோ. இப்போது அதிலிருந்து கொஞ்சம் முன்னேறி எப்.எம்.வசதியுடன் கூடிய அலைபேசியை வாங்குகிறார்கள்.



சோலே-குல்ச்சே வாலா: தள்ளு வண்டியில் ஒரு அடுப்பு, சிறிய காஸ் சிலிண்டர், மேலும் சிறிய கழுத்துள்ள ஒரு பெரிய பாத்திரம் [புகைப்படம் பார்க்கவும்] வைத்துக்கொண்டு வெங்காயம், தக்காளி, சோலே ஆகியவற்றை போட்டு ஒரு சைடு டிஷ், கெட்டியான ரொட்டி போன்ற ஒரு பதார்த்தம் தான் குல்ச்சே. சரியான தயாரிப்பு முறையை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தீங்கன்னா அவங்களிடமே கேட்டு அதைப் பற்றி ஒரு பதிவே போட்டுடறேன். ஆனா அவ்வளவு பெரிய பாத்திரத்தை அடுப்பில் நேராக வைக்கிறத விட்டுட்டு ஏன் சரிச்சு வைக்கிறாங்க என்பது இன்று வரையிலும் எனக்குள் ஒரு புரியாத புதிராவே இருந்து கொண்டிருக்கு. இரண்டு குல்ச்சே தொட்டுக்கொள்ள ஒரு தொன்னை சோலே, சலாட் மற்றும் சாப்பிடும் போது கடித்துக்கொள்ள ஒரு பச்சை மிளகாய் - இதுக்கு ரொம்ப அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை ஜென்டில்மேன் - இப்போதும் பத்து ரூபாய்தான். ஸ்பைசி உணவுக்கு அவர் உத்தரவாதம் தருவார் - உங்க உடம்புக்கு ஒத்துக்கும் என்றால் ஒரு கட்டு கட்ட வேண்டியதுதானே?



அப்பளம் விற்பவர்: தமிழ் நாட்டில் கண்காட்சிகளுக்கு செல்பவர்கள் அங்கே கண்டிப்பாக ஒரு கடையை பார்த்திருக்கலாம். அது பெரிய சைசில் கிடைக்கும் பாம்பே அப்பளம். அதைத்தவிர பொரித்த அப்பளம் விற்கும் கடைகளை எங்கேயும் எனக்கு தெரிந்து கண்டதில்லை. ஆனால் தில்லியில் பொரித்த அப்பளம் விற்பதையே தொழிலாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். தினமும் ஒரு பெரிய மூங்கில் கூடை நிறைய அப்பளம் பொரித்துக் கொண்டுவரும் இவர்களிடம் வருவோர் போவோர் எல்லாம் வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு அப்பளம் மூன்று ரூபாய். காலையில் எடுத்து வரும் மொத்த அப்பளமும் மாலைக்குள் காலியாகிவிடும். ஒரு முக்கியமான விஷயம் - எந்த சாப்பிடும் பொருளாக இருந்தாலும் சரி, அதில் கொஞ்சம் மசாலா தூவி கொடுத்தால் போதும், அதை அமிர்தம் போல சாப்பிடுகிறார்கள் இங்கே. சாப்பிடும் பொருள் முக்கியமா இல்லை மசாலா முக்கியமா - மண்டைக்குழப்பம் தீர ஒரு முறை வாங்கி சாப்பிடப் போறேன். உங்களுக்கும் வேணுமா? ம்... அப்போ புறப்பட்டு தில்லிக்கு வாங்க.

... இன்னும் வரும்.

10 கருத்துகள்:

  1. சோலே குல்ச்சே எங்கவீட்டில் எல்லாருக்கும் பிடித்தமானது..

    \\அவ்வளவு பெரிய பாத்திரத்தை அடுப்பில் நேராக வைக்கிறத விட்டுட்டு ஏன் சரிச்சு வைக்கிறாங்க என்பது இன்று வரையிலும் எனக்குள் ஒரு புரியாத புதிராவே இருந்து கொண்டிருக்கு.//

    கொஞ்சமா வைக்கிறதால் எடுக்க வசதிக்காகவோ , அல்லது

    நம்ம ஊருல இட்லி சுடறோம் என்பதற்காக க்டைகளில் இட்லி குண்டானை ரோட்டுலயே வைச்சிருப்பாங்க அதைப்பாத்து நிறுத்துவாங்க வண்டியை.. அதுபோல இது எங்க இருந்து பாத்தாலும் தெரியும் இல்லையா அதுக்காகவோ இருக்கலாம் என்று இந்த புதிருக்கு நானா ஒரு சில முடிவுகளை எடுத்து வச்சிருக்கேன்.. :)

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப வருடங்களாக அந்த ஆசை. தில்லியில் வண்டிகளில் விற்கிற அந்த ரொட்டியும் அதற்கு தரும் கருப்பு நிற குழம்பும் பல வருடம் முன்பு விரும்பி ரசித்து சாப்பிட்ட சுவை இன்னும் நாவில். இரண்டையும் எப்படி செய்வது என்பதை விளக்கினால் நா உள்ளவரை மறவேன்.

    பதிலளிநீக்கு
  3. சோலே குல்சே என் ஃபேவரிட். அம்பாலா ச்டேஷனில் ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்க. அப்புறம் ஃபேன் ஆகிடுவீங்க.

    சரியா சொன்னீங்க வெங்கட். இங்கே எல்லாத்துலேயும் மசாலா பொடி தான். இந்த ஊர் நம்கீன் எல்லாம் சாப்பிடவே முடியல. வயித்து வலி தான் மிச்சம்.

    அடுத்த பதிவர் சந்திப்புக்கு மெனு சொல்லுங்க. வீட்டிலேயே சமைச்சு சுகாதாரமா எடுத்துட்டு வந்துர்றேன். :)

    பதிலளிநீக்கு
  4. ஆபிஸ் வேலையா அடுத்த மாசம் டில்லி வரவேண்டியிருக்கு.. இந்த தடவை இதெல்லாம் கண்ணுல படுதான்னு பார்க்கணும்..

    பதிலளிநீக்கு
  5. \\அவ்வளவு பெரிய பாத்திரத்தை அடுப்பில் நேராக வைக்கிறத விட்டுட்டு ஏன் சரிச்சு வைக்கிறாங்க என்பது இன்று வரையிலும் எனக்குள் ஒரு புரியாத புதிராவே இருந்து கொண்டிருக்கு.//

    இதோ நம்ம ஆராய்ச்சி! அந்த பாத்திரத்தின் வாய் பெரியது. சரிச்சு வைக்காம நிமிர்த்தி வச்சா ஆகாயத்துல பறக்கிற காக்கா, "கக்கா" போயிடுச்சுன்னா குல்ச்சே, குல்ச் "சே" ஆகிடும்ல, அதான்.

    சரி, சரி, அடிக்கவராதீங்க.

    பதிலளிநீக்கு
  6. சார் நாங்க அங்க வந்தா இது எல்லாம் கிடைக்காது என்ன நாங்க வரமாட்டம்

    பதிலளிநீக்கு
  7. அய்யா வெங்கட் அவர்களே, உங்களின் எழுத்துக்களை, எல்லோரையும்போலே என்னால் பார்க்க முடியவில்லை. வருங்காலத்தின் ஒரு தலை சிறந்த படைப்பாளியாகதான் என்னால் காண முடிகிறது. ஏன் எனில் உங்கள் எழுக்களில் ஒரு கோர்வை, சொல்லழகு மற்றும் ஒரு உயிரோட்டத்தை காண்கிறேன் என்றால் மிகையாகது. எனவே, சுவைபட இன்னும் நிறைய எழுதுங்கள், புத்தகங்களாக பதிப்பியுங்கள். ஆதரவுதர உங்கள் நண்பர்களாகிய நாங்கள் காத்திருக்கிறோம். வாழ்க, வளர்க.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  8. டெல்லியையே பார்ப்ப‌து போல‌ இருக்குங்க‌ ப‌திவு. வாழ்த்துக‌ள்

    பதிலளிநீக்கு
  9. ஒரே ஒரு முறை தில்லி குல்ச்சாவைக் குழம்புடன் ருசித்ததுண்டு.வீட்டில் தலைகீழாக நின்றாலும் இப்படிப்பட்ட டேஸ்ட் வராதுதான்.
    எங்கள் மதுரை வீதிகளின் பஜ்ஜி,பரோட்டக் கடைகளையும் பரோட்டா கொத்தும் தாள லயம் காதுக்கு இனிமையாக ஒரு சங்கீதம் போல ஒலிப்பதையும் எப்போதாவது ரசித்ததுண்டா வெங்கட்.
    இல்லையென்றால் அதற்காகவாவது மதுரை சென்றே தீர வேண்டும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....