திங்கள், 24 மே, 2010

இய்யாமுட்டி இன்பரசன்



சில நாட்கள் முன்பு சிக்கனம் சின்[னு]னி என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நெய்வேலியில் நான் இருந்த போது அங்கே அவருடைய அண்ணன் “இய்யாமுட்டி இன்பரசன்” என்று ஒருவர் இருந்தார். அவர் அவ்வப்போது செய்த காரியங்கள் நண்பர்களிடையே மிகவும் பிரபலம்.

நெய்வேலியில் காமராஜர் சாலையும், ராஜாஜி சாலையும் சந்திக்கும் இடத்தில் ஒரு காமராஜர் சிலை வைக்கப்பட்டு இருக்கும். அதன் அருகிலேயே காமராஜர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையும் அதையொட்டி நிறைய பெட்டிக் கடைகளும் இருக்கும். ஒரு நாள் அங்கு நண்பர்களோடு நின்று தேனீர் அருந்தி கொண்டே எதிர் திசையில் பார்வையை வீச அங்கே நமது அண்ணன் இய்யாமுட்டி, காமராஜர் சிலையை சுற்றிக் கொண்டிருந்தார்.

தரையைப் பார்த்தபடி ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை என்று அவர் சுற்றி வந்ததைப் பார்த்தபோது, “சரி ஏதோ வேண்டுதலா இருக்கும்” என்று நினைத்து நாங்கள் விவாதத்தைத் தொடர்ந்தோம். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பார்த்தால், அப்போதும் காமராஜர் சிலையை சுற்றி வந்து கொண்டும், தனியே பேசிக்கொண்டும் இருந்தார். 'சரி என்ன தான் ஆயிற்று இவனுக்கு?' என்று விசாரிக்கலாம் என அருகே சென்று, “என்னண்ணே, ஏன் காமராஜர் சிலையை சுத்திக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்ட போது அவர் அதற்கு அவர் கோபமாக “நான் சுத்தினா உனக்கு என்னடா?, நானே நாலணா தொலைஞ்சி போச்சேன்னு தேடிட்டு இருக்கேன், பெரீசா வந்துட்டான்பாரு கேட்க!” என்று சொன்னாரே பார்க்கணும்!.

இன்னொரு நாள், அவர் வீட்டு வழியே போய்க் கொண்டு இருந்தபோது ஒரே சத்தமாக “போச்சே போச்சே, நிறைய காசு சம்பாதிச்சிருப்பேன், உன்னாலே அது போச்சே” என்று மனைவியைத் திட்டிக்கொண்டு இருந்தார். சென்ற அனுபவத்தின் காரணமாக அவரிடம் மெதுவாக, ”என்ன அண்ணே?” என்றேன்.

கடுங்கோபத்தோடு என்னைப் பார்த்து “பாருப்பா, வீட்டுக்குள்ள உடும்பு வந்துருக்கு. இவ என்னடான்னா, வந்ததை வரவேற்காம தோட்ட வேலைக்காரனைக் கூப்பிட்டுப் பிடிச்சுட்டு போகச் சொல்லியிருக்கா. வெளியிலே உடும்புக் கறி என்னா விலை விக்குது? நானா இருந்தா, அதைப் பிடிச்சு நல்ல விலைக்கு வித்திருப்பேன். அதை இவ அநியாயமா ஓசில குடுத்துட்டா பாரு!” என்று அவர் போட்ட போட்டில் எங்கே தோட்ட வேலைக்காரன் தான் பிடிச்ச உடும்பை திரும்ப விட்டுடுவானோன்கிற பயத்தில் அங்க பிடிச்ச ஓட்டம், எங்க வீட்டுல வந்துதான் நின்னேன்னா பாருங்களேன்!.

வெள்ளி, 21 மே, 2010

யோகக்காரண்டா நீ!




''என்னய்யா ஒரு ஏ.சி. கூட இல்லாம எப்படி தூங்கறே நீ?'' அப்படீன்னு நம்மைப் பார்த்து ஒரு எருமை கேட்டா எப்படி இருக்கும்? ஏன் கேட்காது? அது ஏ.சி. யில இல்லே தூங்குது? ,

ஆமாம். ஹரியானா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள பல கிராமங்களில் பலர் தாங்கள் வைத்திருக்கும் எருமைகளுக்கென பெரிய வீடு கட்டி அதில் ஏ.சி. பொருத்தி அவற்றை அதில் தங்க வைத்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் வெட்ட வெளியில் படுத்து நட்சத்திரத்தை எண்ணுகிற பலரை நீங்கள் காணலாம்.

இங்கு நாள் ஒன்றுக்கு 35 லிட்டர் பால் கொடுக்கும் எருமைகள் கூட இருக்கின்றன. ஆகவே இவற்றுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். ராம நாராயணன் குரங்கு, யானை போன்ற விலங்குகளுக்குத்தான் உடை அணிவித்தார். இங்கோ எருமைகளுக்குக் கூட உடை அணிவிக்கின்றனர். எருமைகளுக்குக் குளிர் ஒத்துக்கொள்ளாததால், அவற்றின் மேல் சாக்கினால் ஆன உடையைத் தைத்து போர்த்தி விடுகிறார்கள்.

நம் ஊரில் காளை மாடுகளைத் தான் மாட்டு வண்டியில் பூட்டி வாகனங்கள் ஓடுவதைக் காண முடியும். இங்கே மாட்டு வண்டியில் எருமையைக் கட்டித் தான் ஓட்டுகின்றனர். வயல்வெளிகளில் ஏரோட்டுவதற்கு தற்போது நிறைய கருவிகள் வந்துவிட்டாலும், இங்கே முதலில் எருமைகளைத்தான் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தில்லி பெருநகரின் மத்தியில் உள்ள Greater Kailash போன்ற பணக்கார பகுதியின் அருகில் இருக்கும் ஜம்ருத்பூர் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான எருமைகளை வைத்து வளர்க்கின்றனர். ”எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி” என்று சொல்வதை உண்மையாக்க இங்குள்ள எருமைகள் பிரதான சாலைகளில் நட்ட நடுவில் படுத்துக்கொண்டு ”நீ போகணும்னா என்னைச் சுத்திகிட்டுப் போ” என்று சுகமாக படுத்துக்கொண்டு சொல்வது போல அசையாமல் இருக்கின்றன.

சிறு வயதில் அம்மா என்னை நான்கு-ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தும் போகாதவன் கோபத்தில் அவர் “டேய் டெல்லி எருமை” என்று கூப்பிட்டதும் உடனே காதில் தேன் வந்து பாய்ந்ததை போல “என்னம்மா?” என்று கேட்டுக்கொண்டு உள்ளே செல்வேன். அவர் ஒரு தீர்க்கதரிசி – இந்த ”எருமை” டெல்லியில் தான் இருக்கப் போகிறது என்று அன்றே அவருக்கு தெரிந்திருக்கு பாருங்க!

திங்கள், 17 மே, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 11

என்னுடை இரண்டாவது இருப்பிடமான தலை நகர் "தில்லி"யைப் பற்றி இதுவரை பத்து பகுதிகள் பதிவிட்டுவிட்டேன் என்பதை நினைக்கும்போது எனக்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. இத் தொடருக்கு வலைப்பூ வாசகர்கள் அளித்து வரும் நல் ஆதரவும் இதனைத் தொடர்வதற்கு ஒரு காரணம். பதிவிட்ட பத்து பதிவுகளுமே தமிலிஷ்-ல் முதல் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுவரை நல்லாதரவு தந்து வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவில் இன்னும் சில விஷயங்களை பார்க்கலாம்.



பார்க்க வேண்டிய இடம்: பிர்லா மந்திர் – தில்லியின் ”மந்திர் மார்க்” பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான கோவிலே பிர்லா மந்திர். பொதுவாக தமிழர்கள் சுற்றுலா வந்தால் தங்கும் கரோல்பாகின் அருகிலேயே இவ்விடம் இருக்கிறது. இக்கோவிலை “லக்ஷ்மி நாராயண் மந்திர்” என்றும் அழைக்கிறார்கள். வாரணாசியிலிருந்து சிற்பக்கலை நிபுணர்களை அழைத்து வந்து இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகரும், வலப்புறத்தில் ஆஞ்சனேயரும் இருக்கிறார்கள். உள்ளே லக்ஷ்மி நாராயணன் வீற்றிருக்கிறார். இருபுறமும், சிவனுக்கும், புத்தருக்கும் தனி கோவில்கள் உள்ளன. வேதங்களிலிருந்து சில காட்சிகளை இங்கே அழகாக செதுக்கி வைத்துள்ளனர். முற்றிலும் ஜெய்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மார்பிள் கற்களால் ஆன சிற்பங்கள் இங்கு உள்ளன. அருகிலேயே பகவான் ஸ்ரீக்ருஷ்ணனுக்காக “கீதா பவன்” என்ற தனி கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே பரிசாக வந்த ஒரு பெரிய உலக உருண்டையை நீங்கள் பார்க்க முடியும். நான் சென்றிருந்த போது தமிழகத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பல பேரைக் காண முடிந்தது. கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்து வந்த எல்லோரிடமும் கோவில் வாசலில் இருந்த ”தில்லி போலீஸ்” காவல்காரர் ஒருவர் “கோவிலுக்கு வந்தீர்களா இல்லை கல்யாணத்துக்கு வந்தீர்களா? தில்லில நிறைய செயின் திருட்டு நடக்கும், ஜாக்கிரதை” என்று அன்பாக தமிழில் மிரட்டிக் கொண்டிருந்தார். கோவிலின் உள்ளே அலைபேசி, புகைப்படக்கருவி போன்ற எந்தப் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோவிலின் வெளியே காலணிகள் வைக்கும் இடத்திலேயே இப்பொருட்களையும் வைக்க சிறு சிறு பெட்டகங்கள் உண்டு. அவற்றில் வைத்துப் பூட்டி அதன் சாவியையும் உங்களிடமே ஒப்படைத்து விடுகிறார்கள். இது ஒரு நல்ல ஏற்பாடு.

சாப்பிட வாங்க: ”தஹி-பல்லே பாப்டி”: வட இந்தியாவில் எந்த ஊருக்குச் சென்றாலும் கடைகளில் “தஹி பல்லே பாப்டி” என்ற ஒரு சிற்றுண்டி கிடைக்கும். தயிர், புளித்தண்ணீர், வெங்காயம், போன்ற பலபொருட்கள் இதில் சேர்க்கப்படுகிறது. எப்படிச் செய்வது என்று கஷ்டப்படாமல் நேராக கடைக்குச் சென்று சாப்பிடுவது நலம். புளிப்பு, இனிப்பு கலந்த ஒருவித நல்ல சுவைக்கு “தஹி பல்லே பாப்டி – உத்திரவாதம். ஒரு தட்டில் அலங்காரமாக வைத்துக் கொடுக்கப்படும் இதன் குறைந்த பட்ச விலை 15 ரூபாய். UPSC அலுவலகம் அருகில் உள்ள ஒரு நடைபாதைக் கடை இவ்வுணவிற்கு மிகவும் பிரபலம்.

இந்த வார ஹிந்தி சொல்: சென்ற பகுதியில் பிளாஸ்டிக் பையை “பன்னி” என்று ஹிந்தியில் சொல்கிறார்கள் என எழுதி இருந்தேன். அப்ப ”பன்னி”யை எப்படி அழைப்பது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். பன்னியை ஹிந்தியில் “சுவர்” என்று அழைக்கிறார்கள். நாம் தமிழில் “சுவர்” என்று சொல்லும் சுவற்றை இங்கே “தீவார்” [Dheewaar] என்று அழைக்கின்றனர். இப்பெயரில் அமிதாப் பச்சன் நடித்து 1975-ஆம் வருடம் ஒரு ஹிந்தி சினிமா கூட வந்திருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்ததே.

இன்னும் வரும்….

வெள்ளி, 14 மே, 2010

”சார், போஸ்ட்!”



இன்றைய அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு, எப்போதாவது நமக்கு வரும் கடிதங்களைக் கொடுக்கும் அஞ்சல்காரரைத் தெரியும்? அலைபேசி, மின்னஞ்சல், கொரியர் போன்ற பலவித விரைவான சௌகரியங்கள் வந்துவிட்ட பிறகு, அஞ்சல் துறையின் மதிப்பு என்னவோ குறைந்தாலும், அதற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கிறது.

நாங்கள் நெய்வேலியில் வட்டம் (Block) பதினொன்றில் இருந்த போது அந்தப் பகுதி முழுவதற்கும் ஒரே ஒரு அஞ்சல்காரர் தான். அவர் பெயர் வீரமணி. தினமும் சைக்கிளில் வந்து எல்லோரது அஞ்சல்களையும் அவரவர்களிடம் ஒப்படைப்பார். தெரு முனையில் அவரின் சைக்கிள் மணியோசையை கேட்டவுடனே நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வருவோம். அவ்வப்போது எங்களிடம் வீட்டில் உள்ள எல்லா நபர்களின் பெயரையும் சொல்லி விசாரிப்பார். இதைப் போன்றே அனைத்து வீடுகளிலும். அந்த அளவிற்கு எல்லோரையும் பற்றி அவருக்குத் தெரிந்து இருந்தது.

என்னுடைய அப்பா, சனிக்கிழமைகளில் அவரை பார்க்கும் போது அவர் கடிதம் ஏதும் தரவில்லையெனில் அவரைப் பார்த்து, “Nobody has written a letter?” என்று கேட்பது வழக்கம். அப்போது, ”இன்று ஒரு தபாலும் இல்லை” என்று சொல்லாமல், ”நாளைக்குத் தருகிறேன்” என்று சிரித்தபடியே செல்வார்.

அவருக்கு சிறு வயதிலேயே காது கேட்பதில் ஏதோ பிரச்சனை இருந்ததால் காதில் ஒரு கருவியை மாட்டிக்கொண்டு, சிரித்த முகத்துடன் எல்லோரையும் விசாரித்தபடி செல்லும் அவரின் உருவம் இன்னமும் என்னுள்ளிருந்து மறையவில்லை.

தற்போதோ, பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள், அவர்களது வீட்டில் உள்ள நபர்கள் எத்தனை, அவர்களது பெயர் என்ன, என்பது போன்ற ஒரு விஷயமும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நான் நெய்வேலியை விட்டு வந்து 19 வருடங்களும், எங்களது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் நெய்வேலியை விட்டு வந்து ஏறத்தாழ 15 வருடங்களும் ஆகிவிட்ட நிலையில் சென்ற மாதம் நெய்வேலி சென்றிருந்த என் தமக்கையைப் பார்த்த திரு.வீரமணி எங்கள் வீட்டில் உள்ள அனைவரது பெயரையும் சொல்லி விசாரித்திருக்கிறார். இதைக்கேட்ட போது நாம் எத்தனை எத்தனை நல்ல விஷயங்களை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பது எனது மனதைத் தைத்தது.

வீரமணி போன்றவர்கள் நம் நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்பார்கள் என்று நினைத்துக் கொண்டே ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது வெளியே அழைப்பு மணியோசை. கொரியர் அலுவலகத்திலிருந்து வந்தவர் “சார், கொரியர்” என்று கூறி தபாலை நீட்டினார். கையொப்பமிட்டு அதைப் பெற்றுக்கொண்டு, அவரிடம் “உங்கள் பெயர் என்ன? தண்ணீர் குடிக்கிறீர்களா?” என்று கேட்டவுடன் அவர் முகத்தில் ஒரு புன்னகையுடன் “வீர்சிங்” என்றார்.

புதன், 12 மே, 2010

”ஆசையைப் பாரு!”




தில்லியில் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்துவதை தடை செய்து உள்ளதால், பல கடைகளில் நாம் வாங்கும் பொருட்களை காகிதப் பைகளில் போட்டு கொடுக்கிறார்கள். அப்படி வந்த ஒரு காகிதப் பையில் ”விண்ணப்பம்” என்று சிவப்பு நிற கொட்டை எழுத்துக்களில் எழுதி இருந்தது கண்ணைக் கவர்ந்தது. அந்த காகிதத்தில் ஹிந்தியில் எழுதி இருந்த கடிதத்தின் தமிழாக்கம் கீழே:
_____________________________________________________

என் பெயர் ராம்சிங். நான் ஒரு எண்பது வயது இளைஞன். இந்திய சுதந்திரத்திற்க்குப் பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து குடியேறியவர்களில் நானும் ஒருவன்.

இங்கு வந்த பிறகு நான் சில பல வேலைகள் செய்து வந்தேன். எனக்கென்று குடும்பமோ, குழந்தைகளோ யாரும் இப்போது இல்லை. நான் கடந்த இருபது வருடங்களாக தனியாகவே உள்ளேன்.

தனியாக இருந்த இந்த இருபது வருட காலங்களில் ஜோதிடம் மீது எனக்கு மிகுந்த நாட்டம் ஏற்பட்டு, ஜோதிடக் கலையை கற்றுக் கொண்டேன். என்னால் ஜோதிடத்தின் மூலம் எல்லோருடைய வாழ்க்கையையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நடந்தது, நடக்கப்போவது ஆகிய அனைத்தையும் என்னால் சொல்ல முடியும்.

எனக்கு இந்த வயதில் தேவை என்பது மிக மிகக் குறைவே. எனினும் இக்குறைவான தேவைகளைக் கூட பூர்த்தி செய்யும் நிலையில் நான் இல்லை. ஆகவே என்னுடைய கஷ்ட ஜீவனத்தை ஜோதிடம் மூலம் உயர்த்திக்கொள்ள உங்களது மேலான ஆதரவினையும் உதவியையும் நான் பெற்றுக் கொள்ள முடிவு செய்ததன் விளைவே இக்கடிதம்.

அப்படி ஒன்றும் பெரிதாக நான் உங்களைக் கேட்டுவிடப் போவதில்லை. எதாவது ஒரு முக்கியமான, மக்கள் அதிகம் வந்து தரிசிக்கும் கோவிலின் பக்கத்தில் தங்குவதற்கு ஒரு சிறிய வீடு ஏற்பாடு செய்து கொடுத்தால் அங்கே இருந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜோதிடம் சொல்லி அவர்கள் தரும் எந்த சிறு தொகையையும் பெற்றுக்கொண்டு என் மீதி வாழ்க்கையை ஓட்டி விடுவேன். ஜோதிடத்திலேயே அதிக நேரம் போய்விடும் என்பதால் எனக்கு உணவு சமைத்துத் தரவும், நான் கொடுக்கும் ஜோதிடக்குறிப்புகளை எழுதி வைக்கவும், என்னைப் போலவே தனியாக இருக்கும் பெண்மணியினையும் ஏற்பாடு செய்தால் நான் தன்யனாவேன்.

என்னுடைய இந்த சிறு விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும்,

உங்கள்

ராம்சிங்
பழைய தில்லி

__________________________________________

திங்கள், 10 மே, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 10

இந்த தொடரின் கடந்த ஒன்பது பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்கள், சாப்பாடு, ஹிந்தி சொற்கள் என சில விஷயங்களைப் பற்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்த வாரம் வேறு சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?



பார்க்க வேண்டிய ஒரு இடம்: தில்லி உயிரியல் பூங்கா – 214 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்கா தில்லியின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது. 1959-ம் வருடம் அமைக்கப்பட்ட இப்பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அனுமதி கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வீடியோ காமிரா எடுத்துச் சென்றால் அதற்கு தனிக்கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படும். செல்லும்போது கண்டிப்பாக உணவுப்பொருட்களோ, பிளாஸ்டிக் பைகளோ, பீடி, சிகரெட், தீப்பெட்டி போன்ற வஸ்துக்களையோ எடுத்துச் செல்லாதீர்கள். இங்கே முக்கியமாக பார்க்க வேண்டிய மிருகங்கள் – ஒட்டகச்சிவிங்கி, வெள்ளைப்புலி, நீர்யானை, காண்டாமிருகம், வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானை, வாலில்லா குரங்கு [மனிதக்குரங்கு].



மனிதக்குரங்கு மிகுந்த சந்தோஷத்தில் “ஹோகா…. ஹோகா..” என்று கத்திக்கொண்டு அங்கே கட்டியிருக்கும் கயிறுகளில் வித்தை காமித்துக்கொண்டு இருக்கும்போது வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறது. வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும். பூங்காவில் உள்ள அம்புக்குறியீடுகளைத் தொடர்ந்து நடந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் முழுப்பூங்காவினையும் உங்களால் கண்டுகளிக்க முடியும். நடந்து செல்ல முடியாதவர்கள் இங்கே உள்ள பேட்டரி பேருந்துகளிலும் செல்லலாம் ஆனால் பல அரிய காட்சிகளை நீங்கள் பார்க்கத் தவறி விடலாம். ஆகையால் காலாற நடந்து சென்று முழு பூங்காவின் அழகையும் ரசியுங்கள்.

சாப்பிட வாங்க: ஜல் ஜீரா: இரண்டு தேக்கரண்டி வறுத்துப் பொடித்த ஜீரகம், இரண்டு தேக்கரண்டி மைய அரைத்த புதினாதழை, ஒரு தேக்கரண்டி ஆம்சூர் பொடி, அரை தேக்கரண்டி கருப்பு உப்பு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து அதில் ஐந்து டம்ளர் குளிர்ந்த தண்ணீர் விட்டு மேலே சில புதினா இலைகளைப் போட்டு கிடைப்பதன் பெயரே “ஜல் ஜீரா”. இந்த வெய்யில் காலத்தில் பெப்ஸி, கோக் என்ற பானங்களை விட “ஜல் ஜீரா” பருகினால் "ஆகா ஆனந்தமா இருக்கே!"-ன்னு சொல்லுவீங்க .

இந்த வார ஹிந்தி சொல்: உயிரியல் பூங்கா பார்த்த தாக்கம் எனக்கு இன்னும் போகவில்லை. ஆகையால் இந்த வார ஹிந்தி சொல் மிருகம் சம்பந்தப் பட்டதாக அமைந்து விட்டதை தவிர்க்க முடியவில்லை. ஹிந்தியில் பிளாஸ்டிக் பையை “பன்னி” என்று சொல்கிறார்கள். பிளாஸ்டிக் கவர்களுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டதிலிருந்து கடைக்குப் போய் எதாவது பொருள் வாங்கினால் ”பன்னி நஹி ஹே!” என்று சொல்லி விடுகிறார்கள். அவன் நம்மள பன்னின்னு சொல்றானா, இல்லை பிளாஸ்டிக் கவர் இல்லைன்னு சொல்றானான்னு நாம தான் முடிவு " பண்ணி"க்கணும்.

இன்னும் வரும்…

புதன், 5 மே, 2010

அண்டங்காக்கையை வென்ற பல்லவன்



நான் வாழ்ந்த நெய்வேலியில் நிறைய மரம் செடி கொடிகள் இருக்கும். அதனால காக்கா, மைனா, குருவி போன்ற பறவை இனங்களுக்கு குறைச்சலே இல்லை. எங்க வீட்டுல அம்மா எதையாவது காய வைக்கணும்னா மொட்டை மாடில காய வைத்து விட்டு எங்களை காவலுக்கு உட்கார வைத்து ஸ்கூல் புத்தகத்தை வேற படிக்கச் சொல்லி விடுவார்கள். சிறு வயதில் இது போன்று காக்காய்களிடம் இருந்து காப்பாற்றிய பல பொருட்களில் மறக்க முடியாத ஒரு பொருளைப் பற்றியே இங்கே சொல்லப் போகிறேன்.

”டேய் கண்ணா சீக்கிரம் வாடா, தொட்டி மேல கழட்டி வைச்ச என்னோட பல் செட்டை ஒரு காக்கா தூக்கிக்கிட்டு போறதுடா! சீக்கிரம் வந்து எப்படியாவது அதுக்கிட்டேயிருந்து திருப்பி வாங்கிடுடா?” என்றவாறே என்னைப் பார்த்துக் கத்திக்கொண்டே ஓடி வந்தார் பக்கத்து வீட்டு அம்மாள்.

”என்னாச்சு, என்ன ஆச்சு?” என்று கேட்டுக்கொண்டே என் அம்மாவுடன் நானும் வெளியே ஓடி வந்தேன். காக்காவின் மேல் ஒரு கண் வைத்தவாறே, பக்கத்து வீட்டு அம்மா சொன்னார், “புது பல் செட் வாங்கி ஒரு வாரம்தான் ஆகுது, அதைக் கழட்டித் துலக்கி தொட்டி மேலே வைச்சிட்டு வாய் கொப்பளிச்சுட்டு இருக்கேன், அந்த காக்கா என்னடான்னா, அதை ஏதோ மாமிசத்துண்டுன்னு நினைச்சு தூக்கிக்கிட்டு போயிடுச்சு”ன்னு. அவர் கண்களில் அழுகைக்கான ஆரம்ப அறிகுறிகள்.

மரத்து மேல பார்த்தா, காக்கையார் பல் செட்டை தனது கூர்மையான அலகினால் கொத்திக்கொண்டு இருக்கார். சரின்னு கீழே கிடந்த கல்லை எடுத்து அது மேல வீசினா, எதைப் பற்றியும் கண்டுக்காம தன் காரியத்திலேயே கண்ணா இருந்தது. சரி இது ஒண்ணும் வேலைக்காவாதுன்னு கிடுகிடுன்னு நான் மரத்துல ஏறி போகும்போது ’போடா போ’ன்னு பறந்து போய் மொட்டை மாடி மேல போய் உட்கார்ந்துடுச்சு.

வெற்றி அடையாமல் விடுவோமா? உடனே தாவித் தாவி மாடி மேலே போய் காக்காய பயமுறுத்தினா, "சே! சே! இவன் நம்மளவிட கேவலமா இருப்பான் போலிருக்கே”ன்னு பல் செட்ட கீழே போட்டுட்டுப் போக, அதை எடுத்து வந்து பக்கத்து வீட்டு அம்மா கிட்ட பெருமையோட கொடுத்து, “அண்டங்காக்கையை வென்ற பல்லவன்” என்ற பட்டம் வேற வாங்கினேன். (அப்பாடி இவன் ஏண்டா இந்த தலைப்பை வச்சான்னு இப்பவாவது புரிஞ்சுதா?) இனி மேலே படிங்க.

அதுதான் போச்சுன்னு பார்த்தா இங்கே தில்லிக்கு வந்த பிறகு கூடவா இந்த ”பல்” நம்மள தொந்தரவு பண்ணணும்?. நேத்து நண்பர்களோட மதிய உணவு சாப்பிடச் சென்ற போது எதிர் மேஜையில் ஒரு ஆள் தன்னோட முன் இரண்டு பல் இல்லாம ஒக்காந்து இருந்தார். என்னடான்னு பார்த்தா அவர் முன்னாடி ஒரு கண்ணாடி டம்ளர்ல தண்ணி. அதுக்கு உள்ளாற ஏதோ மிதக்குது. உற்றுப் பார்த்தா இரண்டு பல் வைத்த பல் செட், நம்மள பார்த்து ”என்னடா பல்லவா?” ன்னு கேக்கற மாதிரி தெரிஞ்சது. அதுக்கு தெரியல, நான் “அண்டங்காக்கையை வென்ற பல்லவன்”ன்ற பட்டம் வாங்கியவன்னு.

அதைப் பார்த்த அருவருப்பில் மதிய உணவு சாப்பிடாமலே நாங்கள் எல்லோரும் அங்கிருந்து எஸ்......கே..........ப்.

திங்கள், 3 மே, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 9

தலை நகரிலிருந்து – பகுதி 8 பதிவிற்கு தங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்து தமிலிஷ்-ல் 23 வாக்குகளை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இனி இந்த வாரம்….



பார்க்க வேண்டிய ஒரு இடம்: செங்கோட்டை – பதினேழாம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டுவிக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு UNESCO-வினால் உலக புராதன இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் தில்லியின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் இன்றியமையாத ஒன்று. முகலாய பேரரசர் ஷாஜஹான் தனது பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து மாற்றி தில்லியை தலை நகராக அறிவித்த போது இங்கிருந்துதான் தனது பேரரசை வழிநடத்தினார். ஷாஜஹானால் கட்டுவிக்கப்பட்டாலும், ஔரங்கசீப் போன்ற பல முகலாய அரசர்களாலும், ஆங்கிலேயர்களாலும் இதில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தியா சுதந்திர நாடான பின்பும் செங்கோட்டையின் பெரும்பகுதி இந்திய ராணுவத்தின் வசம் இருந்தது. 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் செங்கோட்டையின் முழு அழகினை பொது மக்கள் ரசிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதம மந்திரி அவர்களால் செங்கோட்டையில்தான் இந்தியாவின் தேசியக்கொடி பட்டொளி வீச பறக்க விடப்படுகிறது. நாம் பொறுமையாக சுற்றி பார்க்க வேண்டிய இடம் இந்த செங்கோட்டை. இங்கு சுற்றுலா வரும் இந்தியர்களிடமிருந்து நுழைவுக் கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. இப்பொழுதெல்லாம் தில்லி Local Site Seeing அழைத்துச்செல்லும் பல சுற்றுலா நிறுவனங்கள் தில்லி செங்கோட்டையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான வசதி இல்லாததால் தொலைவிலிருந்தே இது தான் செங்கோட்டை என்று காண்பித்து விடுகிறார்கள். ஆகவே முடிந்தால் செங்கோட்டையின் முழு அழகை ரசிக்க தில்லி நகர பேருந்தினை பயன்படுத்தி செங்கோட்டை அருகில் இறங்கி உள்ளே சென்று பாருங்களேன்.



சாப்பிட வாங்க: ஒரு வாரமா தில்லியில அனல் வாட்டி எடுக்குது மக்களே. என்னதான் தண்ணிய சில்லுன்னு குடிச்சாலும் உடம்பு சூடு தாங்கமுடியல. தயிர்ல நிறைய தண்ணி ஊத்தி கடைந்து கருவேப்பிலையெல்லாம் போட்டு மோர் குடிச்சா நல்லா இருக்கும். நம்ம ஊர் கடைகள்ல கூட நீர்மோர் கிடைக்கும், ஆனா இங்கே அதெல்லாம் கிடைக்காது. இங்கே இந்த சீசன்ல ஒரு ஜூஸ் கிடைக்குதுங்க. அது என்ன தெரியுமா? வில்வ மரத்தில கிடைக்கிற காயை பழுக்க வைச்சு அதுல ஜூஸ் செய்து தருவாங்க. கொஞ்சம் சுவை அப்படி இப்படின்னு இருந்தாலும், வெய்யிலுக்கு நல்லதுன்னு இந்த ஊர்க்காரங்க சொல்றாங்க.



இந்த வார ஹிந்தி சொல்: மெக்ஸிகோ நாட்டில இருந்து இந்தியா வந்த “சப்போட்டா” பழத்துக்கு ஹிந்தில என்னன்னு சொல்வாங்க தெரியுமா? புரதம், நார், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு போன்ற பலவித சத்துக்கள் இருக்கும் இப்பழத்தை ஹிந்தில ”சிக்கூ” [CHIKOO, चीकू ] ன்னு சொல்வாங்க.

இன்னும் வரும்…