திங்கள், 24 மே, 2010

இய்யாமுட்டி இன்பரசன்



சில நாட்கள் முன்பு சிக்கனம் சின்[னு]னி என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நெய்வேலியில் நான் இருந்த போது அங்கே அவருடைய அண்ணன் “இய்யாமுட்டி இன்பரசன்” என்று ஒருவர் இருந்தார். அவர் அவ்வப்போது செய்த காரியங்கள் நண்பர்களிடையே மிகவும் பிரபலம்.

நெய்வேலியில் காமராஜர் சாலையும், ராஜாஜி சாலையும் சந்திக்கும் இடத்தில் ஒரு காமராஜர் சிலை வைக்கப்பட்டு இருக்கும். அதன் அருகிலேயே காமராஜர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையும் அதையொட்டி நிறைய பெட்டிக் கடைகளும் இருக்கும். ஒரு நாள் அங்கு நண்பர்களோடு நின்று தேனீர் அருந்தி கொண்டே எதிர் திசையில் பார்வையை வீச அங்கே நமது அண்ணன் இய்யாமுட்டி, காமராஜர் சிலையை சுற்றிக் கொண்டிருந்தார்.

தரையைப் பார்த்தபடி ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை என்று அவர் சுற்றி வந்ததைப் பார்த்தபோது, “சரி ஏதோ வேண்டுதலா இருக்கும்” என்று நினைத்து நாங்கள் விவாதத்தைத் தொடர்ந்தோம். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பார்த்தால், அப்போதும் காமராஜர் சிலையை சுற்றி வந்து கொண்டும், தனியே பேசிக்கொண்டும் இருந்தார். 'சரி என்ன தான் ஆயிற்று இவனுக்கு?' என்று விசாரிக்கலாம் என அருகே சென்று, “என்னண்ணே, ஏன் காமராஜர் சிலையை சுத்திக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்ட போது அவர் அதற்கு அவர் கோபமாக “நான் சுத்தினா உனக்கு என்னடா?, நானே நாலணா தொலைஞ்சி போச்சேன்னு தேடிட்டு இருக்கேன், பெரீசா வந்துட்டான்பாரு கேட்க!” என்று சொன்னாரே பார்க்கணும்!.

இன்னொரு நாள், அவர் வீட்டு வழியே போய்க் கொண்டு இருந்தபோது ஒரே சத்தமாக “போச்சே போச்சே, நிறைய காசு சம்பாதிச்சிருப்பேன், உன்னாலே அது போச்சே” என்று மனைவியைத் திட்டிக்கொண்டு இருந்தார். சென்ற அனுபவத்தின் காரணமாக அவரிடம் மெதுவாக, ”என்ன அண்ணே?” என்றேன்.

கடுங்கோபத்தோடு என்னைப் பார்த்து “பாருப்பா, வீட்டுக்குள்ள உடும்பு வந்துருக்கு. இவ என்னடான்னா, வந்ததை வரவேற்காம தோட்ட வேலைக்காரனைக் கூப்பிட்டுப் பிடிச்சுட்டு போகச் சொல்லியிருக்கா. வெளியிலே உடும்புக் கறி என்னா விலை விக்குது? நானா இருந்தா, அதைப் பிடிச்சு நல்ல விலைக்கு வித்திருப்பேன். அதை இவ அநியாயமா ஓசில குடுத்துட்டா பாரு!” என்று அவர் போட்ட போட்டில் எங்கே தோட்ட வேலைக்காரன் தான் பிடிச்ச உடும்பை திரும்ப விட்டுடுவானோன்கிற பயத்தில் அங்க பிடிச்ச ஓட்டம், எங்க வீட்டுல வந்துதான் நின்னேன்னா பாருங்களேன்!.

6 கருத்துகள்:

  1. இல்லையே அந்த உடும்ப நீங்க எடுத்துகிட்டு வந்து வித்தத கேள்விப் பட்டேன்

    பதிலளிநீக்கு
  2. அனுபவங்களைக்கூட மிகவும் அழகாக நகைச்சுவை ததும்ப கதைப்போல் அமைத்து எழுதி இருக்கிறீர்கள் .
    மிகவும் சிறப்புத்தான் . பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. உடும்புப்பிடி ஆசாமி போலிருக்கிறதே இந்த இன்பரசன்! :-)

    பதிலளிநீக்கு
  4. "இய்யாமுட்டி இன்பரசன்” - இய்யாமுட்டி- ன்னா இன்னா நைனா?

    பதிலளிநீக்கு
  5. வெங்கட் அண்ணாச்சி, தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டது, நூற்றுக்கு நூறு உண்மை. எந்த காரியத்தை எடுத்தாலும், அது கதை / கவிதை எழுதுவதோ அல்லது மற்றவர்க்கு உதவுவதோ, எத்தனை சிரமங்கள் இருந்தாலும், அதில் வெற்றி அடையும் வரை ஓயமாட்டார் என்றால் மிகையாகாது. வாழ்த்துக்கள்.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....