வியாழன், 24 ஜூன், 2010

மல்லிகை வாசம்




காலையில் கண் விழித்ததும் அறையை விட்டு வெளியே வந்து பால்கனியில் நின்று பார்வையை சுழற்றினால் எங்கெங்கும் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போல வீடுகள், வீடுகள், மேலும் மேலும் வீடுகள். கான்க்ரீட் காடுகளில் இருந்து கொண்டு பழைய நினைவுகளைப் பற்றிய கனவுலகில் சஞ்சரிக்கத்தான் முடிகிறது.

காலையில் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் மரம் செடி கொடிகளைப் பார்க்கலாம் என்றால் இந்த நகர வாழ்க்கையில் முடிவதில்லை. பால்கனியில் வைத்துள்ள பூந்தொட்டிகளில் உள்ள சின்னஞ்சிறு செடிகளை பார்த்தே மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பெரும்பாலான தினங்களில் நெய்வேலியில் வாழ்ந்த இனிய வாழ்க்கை நினைவில் வராமல் இருப்பதில்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணியாளர்களுக்கான தனித்தனி குடியிருப்புகள் – ஒவ்வொரு வீட்டிற்கும் தனியாக தோட்டம். காலையில் வெளியே வந்தால் சில்லென்று முகத்தில் படும் வேப்ப மரக்காற்று, காதுக்கு இனிமை தரும் குயில்,மைனா,மற்றும் சிட்டுக் குருவிகளின் இனிய சத்தங்கள் என ரம்மியமான விடியல் ஒவ்வொரு நாளும்.

தோட்டத்தில் பங்கனபள்ளி, ஜலால், ஒட்டு மாம்பழம் என ஆறு விதமான மாமரங்கள், பலா, எலுமிச்சை, அறிநெல்லிக்காய், வாழை, முருங்கை, புளிய மரம், வேப்ப மரம், கல்யாண முருங்கை ,சீதாப் பழம்,மாதுளை என விதவிதமான மரங்கள் செடிகள். வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டது போக மீதி எல்லா பழங்களும் தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் வினியோகம். விலைக்கு விற்பதில்லை.

வீட்டின் வராந்தாவிலிருந்து வாசல் வரை ஒற்றை மல்லி, அடுக்கு மல்லி, முல்லை, கனகாம்பரம், டிசம்பர் பூ என விதவிதமாக பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசம்.

வீட்டில் இருக்கும் பெண்கள் சூடிக்கொண்டது போக மீதமிருக்கும் மல்லிகைப் பூவினை என் அம்மா அழகாகத் தொடுத்து வைத்து பக்கத்திலிருக்கும் என்.எல்.சி. பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் கூந்தலைப் பார்த்தவாறு காத்திருப்பார். எந்தச் சிறுமி தலையில் பூ வைக்காமல் செல்கிறதோ அதை அழைத்து பூவைக் கொடுத்து கூடவே கூந்தலில் சூடிக்கொள்ள ஹேர்பின் வேறு தருவார்.

இப்போது தில்லியில் மல்லிகை என்ற பெயரில் வெள்ளை நிறத்தில் வாசமில்லா ஒரு மலர் தருகிறார்கள். கைவிரல் அளவுள்ள ஒரு துண்டு பூவின் விலை 10 ரூபாய்.

”பசுமை நிறைந்த நினைவுகளே!..” என்று பாடி மனதைத் தேற்றிக் கொள்ளதான் வேண்டும். வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை!

திங்கள், 21 ஜூன், 2010

விருந்து!



வேலை கிடைத்து தில்லி வந்து கரோல் பாக் பகுதியில் மூன்று நண்பர்களோடு இருந்த போது தினமும் சாப்பாடு வெளியில் தான். சமையல் செய்யத் தெரிந்திருந்தும் மற்ற நண்பர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் ["டேய் டேய்... சமையல் செய்ய உனக்கு சோம்பேறித்தனம்னு ஒத்துக்கோடா!” அப்படின்னு பசங்க கத்தறது கேட்குது. ஹிஹி…] கரோல் பாக்கில் உள்ள ஒவ்வொரு உணவகங்களுக்கும் ஓவ்வொரு நாள் விசிட்.

தாபா, ஹோட்டல்களில் தான் எங்க மூணு வேளை சாப்பாடும்னு இருக்கும் போது, கல்யாணம் ஆன நண்பர்களின் வீடுகளில் எதாவது விசேஷம்னு சாப்பிடக் கூப்பிட்டாங்கன்னு வையுங்க முதல் நாள் ராத்திரியிலிருந்தே பட்டினி கிடந்து அடுத்த நாள் போய் ஒரு கட்டு கட்டிடுவோம்ல. அதுக்கும் வேட்டு வைக்கிற மாதிரி சில சமயங்கள்ல ஒரு விசேஷமும் இருக்காது.

ஒரு சமயம் யார் சாப்பாடு போடப்போறாங்கன்னு காய்ஞ்சு இருந்தப்ப, சமீபத்தில் கல்யாணம் ஆன நண்பர் ஒருத்தர் அவரோட மனைவியோட எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அவங்களோட பேசிட்டு இருந்தப்ப, ”சாப்பாடு எல்லாம் எப்படி? சமைச்சு சாப்பிடுவீங்களா?ன்னு அவங்க கேட்க, நண்பரோ, “அட சமையலா, இவங்க எங்க சமைக்கிறாங்க, அடுத்தவங்க சமைச்சா, நல்லா சாப்பிடுவாங்க!” ன்னு நம்மளைப் பத்தி புட்டு வைச்சுட்டாரு.

”எப்பவும் ஹோட்டல் சாப்பாடுதானா? நாக்கு செத்துப் போயிருக்குமே, அய்யோ பாவம்!" னுட்டு அவங்களும் ”இந்த ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டுக்கு வாங்க, நான் சமைச்சு போடறேன்”ன்னு கூப்பிட, நாங்களெல்லாம் சனிக்கிழமையிலிருந்தே நாக்க தொங்கப் போட்டுட்டு காத்திருந்தோம். ஞாயிற்றுக்கிழமை காலை பத்தரை மணிக்கே, பக்கத்துத் தெருவிலிருந்த நண்பரின் வீட்டுக்கு சென்று விட்டோம்.

”வாங்க வாங்க”ன்னு வாய் நிறைய எங்களுக்கு வரவேற்பு. தேனீர், பிஸ்கெட் எல்லாம் வந்தது. ”பிஸ்கெட்ட தின்னு வயத்த ரொப்பாதடா”ன்னு பக்கத்துல இருந்து ஒரு வாய்ஸ். சரின்னு அடக்கி வாசிச்சோம். நண்பரோட மனைவி ”தோ இருங்க! குக்கர் வைச்சுட்டேன், அரை மணி நேரத்துல சமைச்சுடுவேன்”னு சொல்லிட்டு, எங்களோட பேசினபடியே காய்கறி நறுக்கிட்டு இருந்தார். பத்து நிமிஷம் ஆச்சு, குக்கர்ல இருந்து ஒண்ணும் சத்தத்தையே காணோம். சரின்னு உள்ள போய்ட்டு வந்த நண்பரின் மனைவி, “தோ இப்ப சாதம் ஆகிடும்!”ன்னு சொல்லிட்டு திரும்ப காய் நறுக்க ஆரம்பிச்சார்.

அடுத்த பத்து நிமிஷம் கழிச்சு, உள்ள போனாங்க, நாங்க உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். திடீர்னு “டமால்”னு ஒரு சத்தம். கூடவே ஒரு அலறல் சத்தமும்…..

என்ன ஆச்சோன்னு பதறியபடி நாங்களும் சமையலறைக்கு ஓடினா, சமையலறைக் கதவைப் பிடித்தபடி நின்னுட்டு அழுதுட்டு இருந்தாங்க.. சமையலறை முழுவதும் சாதமும் பருப்பும் இறைந்து கிடக்கிறது. கீழே மட்டும் இல்லாம, அந்த அறையோட சீலிங் முழுதும் சாதம் ஒரு டிசைன் போட்ட மாதிரி ஒட்டிட்டு இருக்கு. குக்கர் வெடிச்சு விழுந்ததுல காஸ் அடுப்பு நசுங்கிக் கிடக்கு. பக்கத்துல இவங்க அழுதுட்டு இருக்காங்க. நல்ல வேளை அவங்களுக்கு ஒண்ணும் அடிபடல.

”சரி பரவாயில்லை! இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்கன்”னு சொல்லிட்டு, எல்லோரும் சேர்ந்து சமையலறையை சுத்தம் செய்தோம்.

”ஓ, அப்பறம் என்ன சாப்பிட்டீங்க?”ன்னு கேட்கறீங்களா?" ஆபத் பாந்தவானா எங்களுக்கு இருக்கவே இருக்கு “வைஷ்ணவ் தாபா!” எல்லோரும் சேர்ந்து அங்க போய், எப்பவும் போல, “ரொட்டி-சப்ஜி” தான்!

வெள்ளி, 18 ஜூன், 2010

சிந்தனைச் சிதறல்கள்…..

நாகரீகம்?



சென்ற வெள்ளிக் கிழமை தில்லி மெட்ரோவில் நான் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பக்கத்தில் ஒரு கல்லூரி மாணவர் அமர்ந்திருந்தார். ஜீன்ஸ் பேண்ட், மேலே ஒரு குர்தா, பின்னால் ஒரு பேக்-பேக் [Back-pack], ரப்பர் பேண்ட் போடப்பட்ட நீண்ட கூந்தல், கையில் ஒரு கிடாருடன் உட்கார்ந்திருந்தாலும் ஆடியபடியே இருந்தார். வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. கைகளில் நம்மை பயமுறுத்தும் டாட்டூக்கள். இந்த அலங்காரமெல்லாம் பரவாயில்லை என சொல்ல வைக்கும்படி இருந்த ஒன்று – புருவத்தில் அவர் அணிந்திருந்த ஒரு அணிகலன் – Eyebrow Pin. மென்மையான கண்ணுக்கு மேலே இப்படியெல்லாம் ஒரு அணிகலன் அணிவது தேவையா, இதுதான் நாகரீகமா? தெரியவில்லை. அதை அணிவதற்கு முன்னால் எப்படி புருவத்தில் ஓட்டை போட்டிருப்பார்கள்? வலிக்கவே வலிக்காதா?. காலகாலமா பெண்கள் காதிலும், மூக்கிலும் தோடு மூக்குத்தி அணிந்து கொண்டாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியல?

நேரம்….

போன வாரம் பொழுது போகாம ”சரி டீவியாவது பார்த்து வைப்போமே!”ன்னு டீவி ஸ்விட்ச்சை ஆன் பண்ணி சன் மியூசிக் வைச்சேன். பார்த்தா இளைய தளபதி “நான் நடந்தா அதிரடி”ன்னு சரவெடி வெடிச்சுட்டு இருந்தார். வெடின்னாலே நமக்கு ரொம்ப பயமாச்சேன்னு ”இசையருவி”யில குளிக்கப் போனேன். அங்க போனா ”புலி உறு”மிக்கிட்டு இருக்கு. நமக்கோ பூனை போடற மியாவ் சத்தம் கேட்டாலே அதிரும், இதுல புலி வேற உறுமுதேன்னு டீவி பொட்டிய அணைக்கப் போனேன்.

அதுக்குள்ள என் பொண்ணு அப்பா டீவியை அணைக்காதீங்க, நான் சுட்டி டீவி பார்க்கறேன்னு சொன்னதினாலே, ஓவர் டு சுட்டி டீவி. அங்க ”சிந்துபாத்தும் அற்புதத் தீவும்” ஓடிட்டு இருந்தது. ”கொடுமை, கொடுமைன்னு ஒருத்தன் கோவிலுக்குப் போனானாம், அங்க என்னடான்னா ரெண்டு கொடுமை தலைவிரிச்சு ஆடிட்டு இருந்ததாம்” ன்னு சொல்ற மாதிரி சிந்துபாத் யாரோ ஒருத்தர பார்த்து ”நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாளு தூங்க மாட்டே”ன்னு பஞ்ச் டயலாக் விட்டுட்டு இருக்காரு. அய்யய்யோன்னு அப்ப நிறுத்துன டீவி தான். நாலு நாள் ஆச்சு தொட்டு. என்னத்த சொல்ல? எல்லாம் நேரம்.

புதன், 9 ஜூன், 2010

மறந்துபோன மானுடம்




தில்லியைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் பிரதான சாலையான ரிங் ரோடில் ”ரஜோரி கார்டன்” பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மேம்பாலம். நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டிருக்கும் இந்த சாலையின் ஓரத்தில் ஒரு பெண்ணின் சடலம். அதைச் சுற்றி காக்கிச் சட்டை காவலர்கள்.

அந்த பெண்மணிக்கு முப்பது-முப்பத்தைந்து வயதிருக்கலாம். அணிந்திருந்த வெள்ளை நிற சுடிதார் சிகப்பு நிறமாக மாறியிருந்தது. முகம் அடையாளம் உருத்தெரியாத அளவிற்கு நசுங்கி இருந்தது. உடலும் பல இடங்களில் பிய்ந்து தொங்கிக் கொண்டு இருந்தது.

முதல் முறை அடிபட்டு விழுந்தது எப்போது என்று தெரியாமல், மூன்று மணி நேரமாக அந்த வழியே சென்ற பல வாகனங்கள் அப்பெண்ணின் உடலை சாலையோடு சாலையாக நசுக்கி விட்டுச் சென்றிருக்கிறது. எந்த ஒரு வாகன ஓட்டிக்கும் தனது வாகனத்தை நிறுத்தி என்ன ஆயிற்று என்று பார்க்கக் கூடத் தோணாமல் சடலமான அப்பெண்ணின் மேல் மேலும் மேலும் வண்டியை ஓட்டிச் செல்லும் எண்ணத்தைத் தந்தது எது? அடிபட்டு விழுந்த உடனே யாராவது நின்று முதலுதவி செய்திருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ ஒரு வேளை அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.

இப்போதெல்லாம் தில்லி போன்ற பெரு நகரங்களில் மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை. இது போன்ற நிகழ்ச்சி நடப்பது புதிதும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் கூட காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்த ஒரு 80 வயது முதியவர் மீது வாகனம் முட்டி கீழே விழ அவருக்கு உடனே முதலுதவி அளிக்காமல் விட்டதால் அந்த முதியவர் இறந்த சம்பவம் நடந்ததும் நினைவுக்கு வருகிறது.

காவல்துறையிலிருந்து தொந்தரவு வரும் என பயந்தோ, நமக்கு எதற்கு வீண்வம்பு என்றோ எல்லோரும் இது போன்ற விபத்து நேரும் இடங்களில் தொலைவில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக மாறி விட்டனர்.

ஊர், பேர் தெரியாத அப்பெண்ணைப் பற்றி சில நாட்களில் நாம் மறந்து விடுவோம். அடுத்த செய்தி என்ன என்ற அலைதலோடு பத்திரிக்கைகளும் இந்த விஷயத்தினை விட்டு விடுவார்கள்.

எங்கே போனது நமது மானுடம்? பறவைகள் கூட மற்ற ஒரு பறவைக்கு அடி பட்டு விடும் போது பதறிப் போய் குரல் கொடுத்துத் தவிக்கின்றன. ஆனால் ஆறறிவு பெற்றதாக பெருமை கொள்ளும் மனிதன் மட்டும் மானுடத்தை மறந்து விட்டது ஏனோ?

திங்கள், 7 ஜூன், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 12

தில்லியா இல்லை சஹாரா பாலைவனமா என்று தெரியாத அளவிற்கு வெயில் இங்கே. தினமும் 44 – 46 டிகிரின்னு ஏறிட்டே போகுதே… ஸ்ஸ்ஸ்…. வெயில் தாங்கலை போங்க…



பார்க்க வேண்டிய இடம்: இந்தியா கேட்: தில்லியில் மிக முக்கியமான பொழுது போக்கு இடமே இது தான். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தொடங்கும் ராஜ்பத் [அதுதாங்க ராஜபாட்டை] முடியற இடத்தில் இருக்கும் ஒரு நினைவுச் சின்னம் தான் இந்தியா கேட். முதலாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படை சார்பாக போராடி மடிந்த 90,000 படை வீரர்களின் நினைவுச் சின்னமாக எழுப்பப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தில் அவர்கள் அனைவரின் பெயரும் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. உள்ளே 1971-ஆம் ஆண்டு முதல் உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக “அமர் ஜவான் ஜோதி” எரிந்து கொண்டு இருக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தில்லி வாசிகள் குடும்பத்தோடு வந்து இங்கே உள்ள புல்தரையில் உட்கார்ந்து அளவளாவி வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவை நிலாச் சோறு போல உண்டு மகிழ நாடும் ஒரே இடம் இது. இங்கே அரவாணிகளின் தொல்லையும் உண்டு. நாங்கள் சென்றபோது காசு கொடுக்காத எல்லோரையும் திட்டிக்கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. அது போல சிறுவர்களைக் கவரும் விளையாட்டுப் பொருட்களை விற்கும் வியாபாரிகளையும் பார்க்கலாம். நிறைய குழந்தைகள் தலையில் விளக்கு எரியும் கொம்புடன் கிங்கரர்களைப் போல அலைந்து கொண்டு இருக்கிறார்கள். மொத்தத்தில், மாலை நேரத்தில் அமைதியான சூழலில் அனுபவிக்க வேண்டிய ஒரு அழகான இடம்.

சாப்பிட வாங்க: தில்லியில் பொதுவாக எந்த உணவுப் பண்டமாக இருந்தாலும் மசாலாப் பொடி போடாமல் கொடுப்பதில்லை. இங்கே பெரும்பாலான இடங்களில் நடைபாதைகளில் கூடை நிறைய வாழைப்பழம் வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கத்தியால் வாழைப்பழத்தின் குறுக்கே கீறி மசாலா போட்டு தருவதையும் நிறைய பேர் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

இந்த வார ஹிந்தி: சில காய்கறிகளின் பெயர்கள் – உருளைக்கிழங்கு – ஆலு; வெங்காயம் – ப்யாஜ்; கத்திரிக்காய் – பேங்கன்; வெண்டைக்காய் – பிண்டி [bhindi]; பாவற்காய் – கரேலா; பூசணி – பேட்டா [Peta]; பரங்கிக்காய் – சீதா ஃபல்; சுரைக்காய் – கியா [Ghiya]. இந்த வாரம் இவ்வளவு போதும்னு அங்கே யாரோ அலறுவது இங்கே கேட்டுடுச்சு. அதுனால அடுத்த பதிவுல இன்னும் சில காய்கறிகள் பெயரைப் பார்க்கலாம். அதுவரைக்கும் இதையே மனப் பாடம் பண்ணிக்கிட்டு இருங்க… சரியா?

இன்னும் வரும்…

செவ்வாய், 1 ஜூன், 2010

பறவைகள் பலவிதம்….




தினம் தினம் பல மனிதர்களை நாம் சந்த்திக்கிறோம். ஒவ்வொருவரிடமும் சில தனித்தனமைகள் இருக்கும். பொதுவாக சில விஷயங்களில் எல்லோருடைய நடவடிக்கைகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன. வேறு சில விஷயங்களில் மிகுந்த வேறுபாடுகள் காண முடிகின்றது. அப்படி நான் சந்தித்த சில வித்தியாசமான சிலரைப் பற்றியே இப் பதிவு.

இப்பொழுதெல்லாம் தேனீர் கடைகளில் டீ-பேக் போட்டு தேனீர் தருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே யாருக்கு எவ்வளவு ஸ்ட்ராங்கா வேணுமோ அது மாதிரி டிப் செய்து கொண்டால் போதும் என்பதே. அன்னிக்கு ஒரு ஆள பார்த்தா – பலமுறை டிப் செய்த பிறகு, டீ-பேகை கையில் எடுத்து கசக்கிப்பிழிந்து கப்பில் விட்டுக்கொண்டு இருந்தார், தேன்கூட்டில் இருந்து தேன் பிழிந்து எடுப்பதைப்போல. “கடைசி சொட்டு வரை எடுக்காம விடமாட்டோம்ல” என்று முத்தாய்ப்பு வேறு.

தமிழ்நாட்டில் நமக்கு ப்ரெட் என்பது ஜுரம் வந்தால் மட்டுமே சாப்பிடக்கூடியது. தில்லில அப்படி இல்லை, இங்க மக்கள் தினம் தினம் ப்ரெட் மூஞ்சீல தான் முழிக்கிறாங்க தெரியுமா? ப்ரெட் டோஸ்ட், ப்ரெட் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று பலவிதங்களில் ப்ரெட்-ப்ரெட்-ப்ரெட் தான் காலை உணவு. நம்ம ஊர்ல இருந்து வந்த ஒருத்தர் வித்தியாசமா ப்ரெட் டோஸ்ட்-க்குக் காரக்குழும்பு ஊத்தி அடிச்சுட்டு இருக்காரு … என்னே அவரது சுவை!!

வெய்யில் கொடுமை தாங்காம நேற்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ”மதர் டைரி”ல ஒரு குல்ஃபி வாங்கி சாப்பிட்டபடியே வீடு செல்லலாம் என தள்ளுவண்டியிடம் நின்றபோது, அங்கே ஒருவர் கோன் ஐஸ் வாங்கி மேலுள்ள பேப்பரைப் பிரித்தபடி கடைக்காரரிடம் ”ஒரு ஸ்பூன் குடுங்க”ன்னு கேட்டுட்டு இருக்கார். அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஸ்பூன் கொடுத்தா, கோன் ஐஸ்ஸை ஸ்பூனால எடுத்து சாப்பிட்டு இருக்கார் மனுஷன் – ”இது புது மாதிரியா இருக்கே, உக்கார்ந்து யோசிப்பாரோ?”ன்னு நினைத்தபடி குல்ஃபி சுவைத்தேன்.

எல்லாம் புதுசு புதுசா யோசிப்பாய்ங்க போலிருக்கு!