புதன், 9 ஜூன், 2010

மறந்துபோன மானுடம்




தில்லியைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் பிரதான சாலையான ரிங் ரோடில் ”ரஜோரி கார்டன்” பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மேம்பாலம். நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டிருக்கும் இந்த சாலையின் ஓரத்தில் ஒரு பெண்ணின் சடலம். அதைச் சுற்றி காக்கிச் சட்டை காவலர்கள்.

அந்த பெண்மணிக்கு முப்பது-முப்பத்தைந்து வயதிருக்கலாம். அணிந்திருந்த வெள்ளை நிற சுடிதார் சிகப்பு நிறமாக மாறியிருந்தது. முகம் அடையாளம் உருத்தெரியாத அளவிற்கு நசுங்கி இருந்தது. உடலும் பல இடங்களில் பிய்ந்து தொங்கிக் கொண்டு இருந்தது.

முதல் முறை அடிபட்டு விழுந்தது எப்போது என்று தெரியாமல், மூன்று மணி நேரமாக அந்த வழியே சென்ற பல வாகனங்கள் அப்பெண்ணின் உடலை சாலையோடு சாலையாக நசுக்கி விட்டுச் சென்றிருக்கிறது. எந்த ஒரு வாகன ஓட்டிக்கும் தனது வாகனத்தை நிறுத்தி என்ன ஆயிற்று என்று பார்க்கக் கூடத் தோணாமல் சடலமான அப்பெண்ணின் மேல் மேலும் மேலும் வண்டியை ஓட்டிச் செல்லும் எண்ணத்தைத் தந்தது எது? அடிபட்டு விழுந்த உடனே யாராவது நின்று முதலுதவி செய்திருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ ஒரு வேளை அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.

இப்போதெல்லாம் தில்லி போன்ற பெரு நகரங்களில் மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை. இது போன்ற நிகழ்ச்சி நடப்பது புதிதும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் கூட காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்த ஒரு 80 வயது முதியவர் மீது வாகனம் முட்டி கீழே விழ அவருக்கு உடனே முதலுதவி அளிக்காமல் விட்டதால் அந்த முதியவர் இறந்த சம்பவம் நடந்ததும் நினைவுக்கு வருகிறது.

காவல்துறையிலிருந்து தொந்தரவு வரும் என பயந்தோ, நமக்கு எதற்கு வீண்வம்பு என்றோ எல்லோரும் இது போன்ற விபத்து நேரும் இடங்களில் தொலைவில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக மாறி விட்டனர்.

ஊர், பேர் தெரியாத அப்பெண்ணைப் பற்றி சில நாட்களில் நாம் மறந்து விடுவோம். அடுத்த செய்தி என்ன என்ற அலைதலோடு பத்திரிக்கைகளும் இந்த விஷயத்தினை விட்டு விடுவார்கள்.

எங்கே போனது நமது மானுடம்? பறவைகள் கூட மற்ற ஒரு பறவைக்கு அடி பட்டு விடும் போது பதறிப் போய் குரல் கொடுத்துத் தவிக்கின்றன. ஆனால் ஆறறிவு பெற்றதாக பெருமை கொள்ளும் மனிதன் மட்டும் மானுடத்தை மறந்து விட்டது ஏனோ?

16 கருத்துகள்:

  1. மனிதர்களெல்லாம் இயந்திரங்களாக மாறிவருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. :( மிக வருத்தமாக உள்ளது, பயமாகவும்.

    பதிலளிநீக்கு
  3. அட கஷ்டமே நாம் அவ்வளவு மோசமாகவா மாறி விட்டோம்..

    பதிலளிநீக்கு
  4. நினைத்துப் பார்க்கவே பதறுகிறது? ரிஷபன் சார் சொல்கிற மாதிரி நாம அவ்வளவு மோசமாகவா மாறிவிட்டோம்?

    பதிலளிநீக்கு
  5. மிகவும் வேதனைத்தரும் நிகழ்வுதான் ஒருவேளை அதன் வழியாக அன்று முழுவதும் கடந்து சென்ற ஏதேனும் ஒரு வாகனத்தில் சென்ற யாரேனும் ஒருவரின் குடும்பத்தில் உள்ள ஒரு நபராக அந்தப் பெண் இருந்திருந்தால் இப்படி கண்டுகொள்ளாமல் சென்றிருப்பார்களா ????

    சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு நண்பரே . பகிர்வுக்கு நன்றி தொடரட்டும் உங்களின் சேவை !

    பதிலளிநீக்கு
  6. மனிதன் ரோபோவாக மாறி விட்டதை மிக அருமையாக எடுத்துரைக்கும் நிகழ்வு. மனம் பதறுகிறது. நாம் எங்கே செல்கிறோம்?

    பதிலளிநீக்கு
  7. "நாம் நம்மைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கும் வேளையில், பிறரைப்பற்றி சிந்திப்பதற்கு நமக்கு ஏது நேரம்? போலிசின் கெடுபிடிகளை எண்ணித்தான் தனிமனிதனோ அல்லது மருத்துவமனைகளோ அடிபட்டவர்களுக்கு உதவ முன்வருவதில்லை. ஆள்பவர்கள், சட்டத்தின் காவலர்கள், இது பற்றி சிந்தித்து ஆவன செய்வார்களா? ஆள் பலமும், பண பலமும் இல்லாத தனிமனிதனின் உயிகளுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. என்பதென்னவோ ஊரறிந்த உண்மை."

    பதிலளிநீக்கு
  8. மாநகரங்கள் மாநரகங்களாகி வருகின்றன சார்! மனிதநேயம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவது மிக நிதர்சனம். :-(

    பதிலளிநீக்கு
  9. Recently i have read same kind of news in Pune. I could not control my tears. We are no where near to be called as human beings.

    பதிலளிநீக்கு
  10. மனித சமூகம் இத்தனைதூரம் மதியிழந்துவிட்டனவா? மனிதம் மறந்து போயினவா? கேட்கவே மனம் நடுங்குகிறது!

    பதிலளிநீக்கு
  11. மனிதன் இயந்திரமாக மாறிவிட்டான். குறிப்பாக டில்லியில் வாழ்வதற்கு மிகுந்த மன தைரியமும், அழுத்தமான ஆயுள் ரேகையும் வேண்டும்.

    ஏன் மாநகரங்களில் இப்படி நடக்கிறது என்பதைப்பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் கூட நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. ஓட்டுனர்களின் தவறு ஒரு புறம் என்றாலும் காவல் துறையின் சரியான உறுதுணை இருந்தால் பலர் உதவ முன் வருவர் என்பது எனது கருத்து... காப்பத்த போனா வம்பாயடும்னு நெறைய பேரு மனிதநேயத்த தொடச்சுட்டு போயிடறாங்க... இருந்தாலும் எப்படி அப்படி செய்ய மனசு வருதுன்னு தெரியல. நல்ல பதிவுங்க

    பதிலளிநீக்கு
  13. • வாங்க LK. கொடுமை தான்.
    • வாங்க முனைவர் இரா குணசீலன். தங்களது முதல் வருகைக்கு நன்றி
    • விக்னேஷ்வரி வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    • அநன்யா மஹாதேவன், எனக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது.
    • வாங்க ரிஷபன் சார். இந்த இயந்திர உலகத்தில் மனிதர்களும் இயந்திரங்களாக மாறி வருவதில் சந்தேகமில்லை.
    • வாங்க KBJ சார். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    • வாங்க பனித்துளி சங்கர். தினம் தினம் இது போன்ற நிகழ்வுகள் எங்காவது நடந்து கொண்டு இருப்பது ஒரு வருந்தத் தக்க விஷயம்.
    • வாங்க ரங்கராஜன். ”நாம் எங்கே போகிறோம்?” எனக்குள்ளும் இந்த வினா இருக்கிறது.
    • வாங்க VKN. நீங்கள் சொல்வது உண்மை.
    • வாங்க சேட்டை. மாநகரங்க, மாநரகங்களாக மாறிவிட்டது என்பது முற்றிலும் உண்மை.
    • வாங்க “நாளும் நலமே விளையட்டும்”. தங்களது முதல் வருகைக்கு நன்றி.
    • வாங்க “வசந்தவாசல் அ. சலீம்பாஷா”. என்னுடைய மனமும் நடுங்கியதை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. தங்களது முதல் வருகைக்கு நன்றி.
    • வாங்க Dr. P. Kandaswamy சார். ஆராய்ச்சி செய்யச் சொன்னது நல்ல யோசனை. பார்க்கலாம் யாராவது முன் வருகிறார்களா என்று.
    • வாங்க அப்பாவி தங்கமணி. கொஞ்சம் பேருக்கு காவல் துறையைப் பார்த்து பயம், நிறைய பேருக்கு, ”நமக்கு எதுக்கு வீண் வம்பு?” என்றே இருக்கிறார்கள் என்பது பரிதாபமான விஷயம்.
    • வாங்க முத்துலெட்சுமி, வரவுக்கு நன்றி.
    • தமிலிஷ் தளத்தில் ஓட்டு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....