புதன், 11 ஆகஸ்ட், 2010

“போல் பம், பம் போல்”




தமிழ்நாட்டில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்தசஷ்டி போன்ற முருகனுக்கு உகந்த தினங்களில் முருக பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்குச் செல்வதை நாம் எல்லோரும் பார்த்திருக்கிறோம். ஆனால் சிவபெருமானுக்காகக் காவடி எடுப்பதை நீங்கள் பார்த்ததுண்டா?

வட இந்தியாவில், அதுவும் ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலத்தவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் சிவபெருமானுக்காகக் காவடி எடுக்கிறார்கள்.

தன்னுடைய வீட்டிலிருந்து ஹரித்வார் சென்று, கங்கையில் குளித்து, அங்கிருந்து கங்கையின் தண்ணீரை எடுத்து வந்து தன்னுடைய வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

ஹரித்வாரில் இருந்து காவடியைச் சுமந்துகொண்டு இரண்டு பக்கங்களிலும் தண்ணீரை குடங்களிலோ, பிளாஸ்டிக் குப்பிகளிலோ நடைப் பயணமாகவே எடுத்து வருவது இவர்களது வாடிக்கை. ஹரித்வாரிலிருந்து தில்லியைச் சுற்றி இருக்கும் தத்தம் கிராமங்களுக்கும், ராஜஸ்தான் மாநில கிராமங்களுக்கும் நடைப்பயணமாக செல்லும் இவர்கள் பயணம் செய்யும் தொலைவு பெரும்பாலும் 250 கிலோ மீட்டருக்கும் அதிகம்.

ஹரித்வாரிலிருந்து தில்லி வரும் நெடுஞ்சாலை வழி நெடுகிலும் பல விதமான சங்கங்களிலிருந்தும் கொட்டகைகள் கட்டி ”காவரியா” என்று அழைக்கப்படும் காவடி சுமப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.

ஆடி மாத அமாவாசைக்கு முன்னதாகவே அவர்கள் கொண்டு வரும் கங்கை நீரை சிவனுக்கு அபிஷேகம் செய்து விடுவது அவர்கள் வழக்கம். ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசைக்கு இரண்டு மூன்று தினங்கள் வரை ஹரித்வார் நெடுஞ்சாலைகளில் எந்த வித வாகனங்களையும் அனுமதிப்பதில்லை. சாலை முழுவதும் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட காவடிகளையும், உதவி அரங்குகளையும் நீங்கள் பார்க்கலாம்.

ஆரஞ்சு நிற அரைக்கால் சட்டையும், சிவபெருமான் உருவம் பொறித்த பனியனும் அணிந்து கொண்டு இவர்கள் சாரி சாரியாக வருவது நெடுஞ்சாலைக்கு ஆரஞ்சு வண்ணமடித்தது போல இருக்கும்.

முருகப் பெருமானுக்குக் காவடி எடுப்பவர்கள் சொல்லும் “அரோகரா” முழக்கங்களைப் போல சிவபெருமானுக்கு இந்த காவடி எடுக்கும் நபர்கள் முழக்கம் இடும் வாசகம் “போல் பம், பம் போல்” [Bhol Bam, Bam Bhol].

லட்சோப லட்சம் பேர்கள் இந்த சமயத்தில் ஹரித்வாரில் குழுமி அங்கிருந்து நடைப்பயணம் செல்வார்கள் என்பதால் தமிழகத்தில் இருந்து ஹரித்வார்-ரிஷிகேஷ் வருவதாக இருந்தால் ஆடி மாத சமயத்தில் வருவதைத் தவிர்ப்பது நல்லது.

சமீப காலங்களில் ரிலே ஓட்டப்பந்தயங்களைப் போல ரிலே காவடிகள் கூட எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்! ஒரு பெரிய லாரியில் 10-15 பேர் சேர்ந்து ஹரித்வார் சென்று, அங்கிருந்து அவரவர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தண்ணீரைச் சுமந்தபடி ரிலே ஓட்டமாக ஓடி வருகிறார்கள். லாரியிலிருந்து பெரும் சத்தத்தில் சிவபெருமானின் புகழ் பரப்பும் பாடல்களை ஒலிபரப்பியபடி செல்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய சினிமா படங்களின் பாடல் மெட்டுகளில் இருப்பது தான் கொடுமை!

16 கருத்துகள்:

  1. கடவுளையும் சினிமா மூலம்தான் நினைவு வெச்சுக்கிறாங்க போலிருக்கு.....

    பதிலளிநீக்கு
  2. வ‌ட‌ இந்தியா வ‌ந்த‌தும் நானும் அட‌ காவ‌டி எடுக்க‌றாங்க‌ன்னு நினைச்சேன். ந‌ல்ல‌ ப‌கிர்வு

    பதிலளிநீக்கு
  3. ஓ, எனக்கு இந்த விஷயம் தெரியாது வெங்கட். வித்தியாசப் பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சிரமமான ஒரு பயணம். அவர்களில் சிலர் தங்களுடன் பேஸ் பால் விளையாடும் பேட் எடுத்து செல்வது மற்றும் சண்டை போடுவது மிகவும் வாடிக்கையான ஒரு நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  5. பம்பம் போல்...

    அருமையான பதிவு. நானும் கண்டு கழித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. chuda chuda thagaval thanthamaikku nandri.paal kavadi,panneer kavadi,pushpa kavadi endru paada thondrugirathu.

    பதிலளிநீக்கு
  7. அட அங்கேயும் காவடி உண்டா புதிய தகவல்..

    பதிலளிநீக்கு
  8. ஆரஞ்சு நிற அரைக்கால் சட்டையும், சிவபெருமான் உருவம் பொறித்த பனியனும் அணிந்து கொண்டு இவர்கள் சாரி சாரியாக வருவது நெடுஞ்சாலைக்கு ஆரஞ்சு வண்ணமடித்தது போல இருக்கும்.
    super description!

    பதிலளிநீக்கு
  9. இதுவரை கேள்விப்படாத தகவல். படத்தைப் பார்த்து முருகனுக்கு காவடி என்று எண்ணி விட்டேன். ஹரித்வார் பற்றி எழுதியிருப்பதை வாசித்து,எனது முந்தைய பயணத்தில் ஹரித்வார்-தில்லி நெடுஞ்சாலையில் இருபுறமும் கரும்புப் பயிரைப் பார்த்து ரசித்துச் சென்றது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  10. பம் பம் போலே....
    ஹரித்துவார் போறது சரிங்க. இந்த பக்கம் குர்கவுன் வழியா எங்கே போறாங்கன்னு தெரியல...

    பதிலளிநீக்கு
  11. //பெரும்பாலான பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய சினிமா படங்களின் பாடல் மெட்டுகளில் இருப்பது தான் கொடுமை! //
    அருமையான மெட்டுகளுக்கு சினிமாக்காரர்கள் மோசமான வரிகளை போடுகிறார்கள். இவர்கள் அதே மெட்டுகளுக்கு நல்ல பக்தி கவிதைகளை பாடுகிறார்களே என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    நிறையப் பேர் உண்மையான பக்தியோடு காவடி எடுத்தாலும், சில சமயங்களில் சில குழுவினர் காவடியோடு அடாவடியும் கொண்டு வருவர்.

    (நீங்கள் வீட்டுக்குள் எப்போதும் காவடியோடுதான் இருப்பதாகக் கேட்டது உண்மையா?)

    பதிலளிநீக்கு
  12. வெங்கட் அண்ணாச்சி,

    தெரியாத நிகழ்வுகளை தெளிவாக, கலா (கலர்) ரசனையோடு அதே சமயம் சிரிப்பு உணர்ச்சியை தூண்டும் வகையில் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அய்யா! ஆண்டவனுக்கு தண்ணீர் காவடி எடுக்கவேண்டும் என்ற பக்த்தியோடு கூடிய ஆர்வத்தை பாராட்டும் வேளையில் , இது பாட்டுக்கு மெட்டா அல்லது மெட்டுக்கு பாட்டா என்ற ஆராய்ச்சியில் இறங்க எனது மனம் ஒப்பவில்லை! அட பரமேஸ்வரா!! என் அண்ணாச்சி, வருடம் 2002 , மே மாதம் முதற்கொண்டே அப்படி காவடி எடுக்கத்தொடங்கியது என்னவோ ஒரு மறுக்க முடியாத உண்மை. இதை ஒப்புக்கொள்ள நம்மைப்போல் அவருக்கு ஒரு துணிச்சல் இல்லாமல் போகவில்லை என்பதை யாவரும் அறிதல் நலமே!!

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  13. ஒ...நான் கடவுள்ள ஆரியா சொல்ற "பம்பம் போலே" என்கிற வாசகத்திற்கு எனக்கு இப்பதான் அர்த்தம் புரியுது.

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  14. என்னுடைய இந்த இடுகையை படித்த, கருத்துரை இட்ட, இண்ட்லியில் வாக்கு அளித்து பிரபலமாக்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....