புதன், 22 செப்டம்பர், 2010

சென்னை பயணமும் சில சந்திப்புகளும்



ஒவ்வொரு பயணங்களும் நமக்கு பல விஷயங்களை, நினைவுகளைத் தந்து விட்டுத்தான் செல்கின்றன. கடந்த 09.09.2010 [வியாழன்] அன்று தில்லியிலிருந்து கிளம்பி சென்னை சென்று, உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு 14.09.2010 [செவ்வாய்] காலை தில்லி திரும்பினேன். இப் பயணம் எனக்களித்த சில சந்திப்புகள், நினைவுகள், பரிசுகள் ஆகியவைகளைப் பற்றிய பகிர்வு இது! ஒரு முக்கிய நபரையும் இந்த பயணத்தில் சந்தித்தேன். அவரை பற்றி கடைசியில் சொல்கிறேனே…

பிரயாண ஆரம்பமே கலகலப்பாக அமைந்தது. நானிருந்தது எஸ்-8 கோச். வண்டி கிளம்ப இன்னும் 15 நிமிடங்கள் இருக்கும்போது இரு நபர்கள் எங்கள் கோச்சில் ஏறி 6 மற்றும் 8-ஆம் இருக்கையில் உட்கார்ந்த நபர்களிடம் அந்த இருக்கைகள் அவர்களது என தமிழில் ஹிந்தி பேசினர். உட்கார்ந்திருந்த நபர்களோ, ”இல்லை, இல்லை, இது எங்கள் இருக்கைகள், நாங்கள் தான் முன்பதிவு செய்துள்ளோம்” என மறுத்தனர். அந்த நால்வரும் தாங்களே முன்பதிவு செய்திருப்பதாக வாதாடிக் கொண்டிருந்தனர்.ஆனால் பயணச்சீட்டைக் காண்பிக்க ஒருவரும் தயாரில்லை. ஒரு வழியாக மெதுவாக வந்த நபர்களின் சீட்டை வாங்கிப் பார்த்தால் – அவர்களிடம் எஸ்-8, 6 மற்றும் 8-ஆம் இருக்கைகளுக்கான முன்பதிவுச் சீட்டு இருந்தது. தேதியில் மட்டுமே சிறு குழப்பம். அது 09.10.2010. ரொம்பவுமே சுறுசுறுப்பாக ஒரு மாதம் முன்பே ரெயில் நிலையத்திற்கு வந்து விட்டனர் பாவம்! “சார், இது அக்டோபர் 9-ஆம் தேதிக்கான பயணச்சீட்டு!, நீங்கதான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக – ஒரு மாசம் முன்னாடியே வந்துட்டீங்க” என்றால் ”இப்ப நடக்கறது அக்டோபர் மாசம்தானே சார், என்று சொன்னபடியே” இறங்கிச் சென்றனர்.

”குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!” என்பது இதுதானோ?" எப்பொழுதும் நாம் முன்பதிவு செய்த பின்பு டிக்கெட்டில் பதிவு செய்திருக்கும் விவரங்கள் சரிதானா என்று பார்த்துக் கொள்வது நல்லது!

முன் பதிவு செய்ததில் எனக்குக் கிடைத்தது கீழ் Berth. ஒரு கைக்குழந்தையுடன் இருந்த பெண்மணிக்குக் கிடைத்தது மேல் Berth. தனக்கு பக்கவாட்டில் உள்ள கீழ் Berth கிடைத்தால் சௌகரியமாக இருக்கும் என்று அதில் இருந்தவரிடம் போய் கேட்டதற்கு , அவரோ – “ம்.. தர மாத்தேன் போ… எனக்குத் தான் இது!” என்று சற்றே பெரிய குழந்தை போல அடம் பிடிக்கவே, மனிதாபிமானத்துடன் என்னுடைய கீழ் Berth- ஐ அந்த குழந்தைக்காரிக்கு விட்டுக் கொடுத்தேன். அவளும் சுகமாக பயணம் செய்து வந்தாள் – Berth- ஐ விட்டுக்கொடுத்த எனக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல். சரி அவ்வளவு தான், நாம் எதிர்பார்ப்பதுதான் தப்பு என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன், பின்னர் பெரிய பரிசாக எனக்குக் கிடைக்கப்போவதை தெரியாமலே.

பொதுவாக இரண்டாம் வகுப்பில் பயணம் செல்லும் பயணிகள், நீங்கள் கேட்கிறீர்களோ இல்லையோ, உங்களிடம் தாமாகவே சொல்வர் – “நான் எப்பவுமே ஏ.சி.யில் தான் செல்வேன், தத்காலில் கூட கிடைக்கவில்லை” என்று . நான் ஏ.சி.யில் பயணம் செய்யும் போதும் இதே கதைதான் – தாம் எப்போதுமே விமானத்தில்தான் செல்வதாக சொல்லிக்கொள்வர். ஏன் இந்த மனநிலை என்பது புரிவதில்லை.

சென்னை அடைந்து, உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டேன். முதல் நாளில் வைத்திருந்த வரவேற்பு விழாவில், சக்தி விகடன் பத்திரிக்கையின் முதன்மை பொறுப்பாசிரியர் திரு ரவி பிரகாஷ் அவர்களைச் சந்திக்கவும் அவருடன் சுமார் பதினைந்து நிமிடங்கள் பேசவும் எனக்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. அவரது வலைப் பூவில் எழுதிக் கொண்டு இருக்கும் விஷயங்கள் பற்றியும் பொதுவாகவும் இருவரும் அளவளாவினோம். அவருடன் பேசியது என்னை மேலும் எழுத ஊக்குவித்ததில் சந்தேகமில்லை. அவர் எழுதிக்கொண்டு இருக்கும் இரு வலைப்பூக்கள் – என் டைரி மற்றும் உங்கள் ரசிகன்.

எனக்குக் கிடைத்த பரிசு

கைக்குழந்தைக்காரிக்கு என் இருக்கையை விட்டுக் கொடுத்தேன் என்று சொன்னேன் அல்லவா?அவள் எனக்குக் கொடுத்த மறக்க முடியாத பரிசு – அவளுக்கு இருந்த கண் வலி [Eye Flu – Madras Eye] எனக்கும்! வாய் வார்த்தையாகச் சொல்லும் “நன்றி!” சீக்கிரம் மறந்து விடும் என்று நினைத்தாளோ என்னமோ!.

நல்ல வேளை திருமணம் முடிந்த பிறகே எனக்கு கண் வலிக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்ததால் மணம் முடித்த தம்பதிக்கும், மற்ற விருந்தினர்களுக்கும் நானும் இதையே பரிசாகக் கொடுக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தோடு மண்டபத்தை விட்டு திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே வெளியேறினேன்.

பயணத்தில் கிடைத்த மற்ற விஷயங்களை இரண்டாம் பாகமாக போட்டு விடுகிறேன். உங்களுக்கும் நல்லது – எனக்கும் நல்லது… [”உனக்கு என்ன நல்லது, இன்னுமொரு இடுகையா?” என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல… ஹிஹிஹி…]

தொடரும்…

19 கருத்துகள்:

  1. ஒவ்வொருமுறையும் எங்களிடமோ அல்லது நாங்கள் இருக்கும் பெட்டியிலோ யாராவது இதே மாத்ரி டிக்கெட்ல்
    தேதி மாற்றி வச்சிக்கிட்டு
    வந்து போராடுவாங்க..
    அது பத்தி ஒருபதிவு போட்டிருந்தேன் முன்பு..டிக்கெட்டைப் பாத்து வாங்குங்குப்பான்னு
    :)

    பரிசு மெகா பரிசா இருக்கே :)

    பதிலளிநீக்கு
  2. ந‌ல்ல‌ ப‌கிர்வு. மெட்ராஸ் ல‌ இருந்து வ‌ந்தும் மெட்ராஸ் ஐ யா? ம்ம்

    பதிலளிநீக்கு
  3. எச்சரிக்கை வேணும் தான் ஆனால் ஒரு மாதம் முன்னாடியே வருவது ரொம்ப ஓவர். இப்படியும் நடக்குமா என்று யோசிக்க வைக்கிறது நண்பா.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பயணக் கட்டுரை அருமை. ஒவ்வொரு பயணங்களும் நமக்கு புதுப்புது அனுபவங்களைத் தரும். சில நட்புக்களையும் பெற்றுத் தரும்.

    பதிலளிநீக்கு
  5. ம், நல்ல பயணக் கட்டுரை வெங்கட். அய்யோ பாவம் உங்களுக்கு வந்த ஐ ஃப்ளூவை என்னிடம் சொன்ன போது அது வேறு விதமாகக் காதில் விழுந்து தொலைந்ததற்கு மன்னிக்கவும். :)

    பதிலளிநீக்கு
  6. ஹும், சென்னை வரை வந்து சந்திக்காமல் போய் விட்டீர்கள் அல்லவா? அடுத்தமுறை வரும்போது நான் பிரதமரை மட்டும் பார்த்து விட்டு அப்படியே திரும்பி விடுகிறேன். :-)

    பதிலளிநீக்கு
  7. ரவி பிரகாஷ் கந்தன் கருணை பற்றி தனது ப்ளாக்கில் நன்றாக எழுதியிருக்கிறார். படித்தீர்களா.. மெட்ராஸ் ஐயோட இந்த ப்ளாக் அடித்தீர்களா. எனக்கும் கண் அரிக்கிற மாதிரி இருக்கு... ;-) ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  8. அவரோ – “ம்.. தர மாத்தேன் போ… எனக்குத் தான் இது!” என்று சற்றே பெரிய குழந்தை போல அடம் பிடிக்கவே,

    உங்களுக்கு கண் வலி. எனக்கு இதைப் படித்து மனத்திரையில் அந்தக் காட்சியை ஓட்டிப் பார்த்ததில் சிரித்து சிரித்து வயிற்று வலி.

    பதிலளிநீக்கு
  9. //அவளும் சுகமாக பயணம் செய்து வந்தாள் – Berth- ஐ விட்டுக்கொடுத்த எனக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல். சரி அவ்வளவு தான், நாம் எதிர்பார்ப்பதுதான் தப்பு என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்//

    இப்படியும் மனிதர்களா? ஆச்சரியம் + அதிர்ச்சி! என்ன நாகரீகமோ?

    பதிலளிநீக்கு
  10. ஆஹா.. கல்யாணத்துக்குப்போய் கண்வலி வாங்கி வந்தீங்களா.. ரிட்டர்ன் கிஃப்ட் :-)))

    பதிலளிநீக்கு
  11. ஐயோ பாவம்! உபகாரத்துக்குப் பலன் உபத்ரவமா.... நல்லது கெட்டது கலந்திருக்கிற வாழ்க்கை போலவே உங்க பயணமும் வெகு யதார்த்தமாய்...!

    பதிலளிநீக்கு
  12. திருநெல்வேலிக்கு ஆக்ராவில் இருந்து அல்வா வாங்கிப் போவது போல், Madras-க்கே டெல்லியில் இருந்து “Madras - Eye" வாங்கிப் போயிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  13. சுவாரசியமான பயண அனுபவம்.
    கல்யாணத்துக்குப்போய் கண்வலி வாங்கி வந்தீங்களா..ஐயோ பாவம்!

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வெங்கட்

    பயணக் கட்டுரை அருமை - நகைச்சுவையுடன் எழுதியது நன்று. இரக்கத்திற்குக் கிடைத்த பரிசு - ம்ம்ம்ம்ம்

    நல்வாழ்த்துகள் வெங்கட்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....