செவ்வாய், 26 அக்டோபர், 2010

பெஜவாடா - விஜயவாடா பயணம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் யாருக்கு பலனளித்ததோ இல்லையோ, பள்ளி செல்லும் சிறார்களுக்கு நல்லதோர் பரிசை அளித்தது – ஆமாம் பள்ளிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை! என் பெண்ணுக்கும் விடுமுறை என்பதால் நானும் அலுவலகத்தில் விடுப்பு வாங்கிக் கொண்டு, சென்ற மாதம் 30-ஆம் தேதி இரவு தமிழ்நாடு விரைவு வண்டியில் விஜயவாடா புறப்பட்டேன்.

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் அங்கு சென்றிருந்த காரணத்தினால், விஜயவாடா எனக்குப் பிடித்த ஊர். மனைவிக்கும் மகளுக்கும் இவ்வழகிய ஊரினை சுற்றிக் காட்டும் எண்ணத்தினால் மேற்கொண்ட பயணமே இது. நீங்களும் வாருங்களேன், விஜயவாடாவை பார்க்கலாம்!!

நள்ளிரவு 12.45-க்கு தென் இந்தியாவின் மிகப்பெரிய ரெயில் நிலையமான விஜயவாடா சென்றடைந்தோம். அங்கேயே பணி புரியும் குடும்ப நண்பர் சேகர் எங்களுக்காகக் காத்திருந்தார். அவருடன் ரயில் நிலையத்தின் பக்கத்திலேயே இருக்கும் அவருடைய வீட்டுக்கு ஆட்டோவில் சென்றோம்.

நடு இரவு ஆனாலும் பயமில்லாமல் பயணிக்க வசதியாய் காவல் துறையினர் செய்திருந்த ஒரு ஏற்பாடு – பயணியின் பெயர், வேலை செய்யும் இடம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், ஆட்டோ ஓட்டுனர் பெயர், மற்றும் வண்டி எண் என பல தகவல்களை கேட்டு எழுதிக் கொண்டு அதன் ஒரு நகலை பயணியிடம் கொடுக்கின்றனர். பயணி போய்ச் சேர்ந்த பிறகு அந்த நகலை ஆட்டோ ஓட்டுனரிடம் கொடுத்து விட்டால், அதனைக் கொண்டு போய் காவல் துறையினரிடம் திரும்பக் கொடுக்க வேண்டுமாம். நல்லதொரு முயற்சி. நடு இரவு பயணிகளுக்கு பயமில்லாமல் பயணிக்க வசதியாய் இருக்கும்.

தூங்கி எழுந்து காலையில் எல்லோரும் கிருஷ்ணா நதியில் குளிக்க எண்ணியிருந்தோம் – ஆனாலும் ஆசையில் மண் – மழை ரூபத்தில் வந்தது. ஆகையினால் வீட்டிலேயே குளித்து சிற்றுண்டி முடித்து, மழை நின்ற பின் வெளியே கிளம்பினோம்.

விஜயவாடாவின் பிரபல வியாபார ஸ்தலமான பெசண்ட் ரோடில் உள்ள கடைகளைப் பார்த்தபடி [அப்ப ஒண்ணுமே வாங்கலையான்னு கேட்கக் கூடாது, கேட்டா, நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துடுவேன்] வலம் வந்து கொண்டு இருந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு, பூம்பூம் மாடுகளை பார்க்க முடிந்தது. காளை மாட்டினை அழகாய் அலங்கரித்து ஒவ்வொரு தெருவிலும் பணம் வாங்கிக் கொண்டு இருந்தனர்!. பெசண்ட் ரோடு முடிவதற்குள்ளாகவே மூன்று நான்கு பூம்பூம் மாடுகளைப் பார்த்து விட்டேன். அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளை முதல் முறையாய் கண்ட என் மகளுக்கு அவை அதிசயமாய் இருக்கவே, திரும்பித் திரும்பி பார்த்தபடியே வந்து கொண்டிருந்தாள்.

பெசண்ட் ரோடில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சிலை – தியாகப் பிரம்மம் ஸ்ரீ தியாகராஜருடையது. அவரை அழகான சிலையாக வடிவமைத்து கீழே டிஜிட்டல் கடிகாரத்தினை வைத்திருக்கிறார்கள்! ஏதோ அவர் உண்டு, அவர் பாட்டு உண்டு என பாடிக்கொண்டு இருந்தவரை மணிக்கூண்டாக்கி விட்டார்கள் பாவம்.

விஜயவாடாவில் கிடைக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்பு – ”பூத்தரேக்கு” என்பதால் அதை வாங்கிக் கொண்டு வந்தோம். அசட்டுத் தித்திப்பில் இருந்த அந்த இனிப்பு அரிசி மாவு, நெய் ஆகியவை கலந்து செய்வதாம். மேலே பேப்பர் போல இருக்கவே, அதை பிரித்து சாப்பிட வேண்டும் போல என நினைத்தால் பேப்பரே இனிப்பு தானாம். அதை பேப்பர் மாதிரி மடித்து வைத்திருக்கிறார்கள். இது வெளி நாடுகளுக்கெல்லாம் கூட ஏற்றுமதியாகிறதாம். அதன் படம் கீழே கொடுத்துள்ளேன். அட்லீஸ்ட் சாப்பிடுவதாக கற்பனையாவது பண்ணித்தான் பாருங்களேன்.

கிருஷ்ணா நதி அழகாய் ஓடிக்கொண்டு இருக்கும் விஜயவாடா, இந்திரகிலாத்ரி மலையால் சூழப்பட்டு இருக்கும் இந்நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அடுத்த இடுகைகளில் உங்களை அழைத்துச் செல்லலாம் என இருக்கிறேன். வருவீர்கள் தானே!

திங்கள், 25 அக்டோபர், 2010

10-10-10

தில்லியில் கடந்த 10-10-10 அன்று நிறைய திருமணங்கள் நடைபெற்றது – காரணம் அந்த தேதி! அது போலவே 20-10-2010 அன்றும் நியூமராலஜி படி, 2 மற்றும் 6 எண்களைக் கொண்டவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும் என சொல்லுகிறார்கள். கொஞ்சம் பொறுங்கள் – இந்தப் பதிவில் நியூமராலஜி பற்றி ஒன்றும் எழுதப் போவதில்லை – நான் எழுதப் போவது வேறு ஒரு விஷயம்.

10-10-10 என்ற நாள் எனக்கும் ஒரு முக்கியமான நாள். எனது தாத்தா [அப்பாவின் அப்பா] பிறந்த தினம் அது. இப்போது அவர் இருந்திருந்தால் அவருக்கு 100 ஆண்டுகள் ஆகி இருக்கும். 30-10-1982 இல் எங்களை விட்டுப் பிரிந்த அவரின் நினைவுகள் எனக்கு இப்போதும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருக்கிறது.

அவர் பி.ஏ.பி.எல் படித்து விழுப்புரத்தில் வக்கீலாக பணியாற்றியவர். நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கெல்லாம் அறிவியல் பாடத்தில் வரும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். சில நாட்களில் எங்களை பள்ளியிலிருந்து வீடு அழைத்துச் செல்லவும் அவர் வருவதுண்டு. எங்களுக்கு அறிவியல் நோட்டுகளில் படங்களை வரைந்து கொடுப்பார். எனது மூத்த சகோதரிக்கு அப்படி அவர் 81-82 ல் வரைந்து கொடுத்த சில படங்கள் கீழே.







நெய்வேலியில் எங்களுடன் அவர் இருந்த நாட்களில் அவரை தினமும் நூலகத்திற்கு அழைத்துச் செல்வது எனது வேலைகளில் ஒன்று. நூலகத்திற்கு வரும் எல்லா ஆங்கில நாளிதழ்களையும் அவர் படிக்கும் வரை எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் அவரை நான் நூலகத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு காரணம்.

எனக்கு பத்து வயதுக்குள் இருக்கும் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வு இன்னமும் நினைவில் உள்ளது. ஒரு நாள் இரவு உணவு உண்டுவிட்டு அவர் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கி விட்டார். நான் உறங்கும் வேளை வந்தபோது, அவரை தாத்தா, தாத்தா” என்று தட்டி எழுப்ப அவரும் என்னடா பேரா?” என்று பாசத்துடன் வினவ, ”ஒண்ணுமில்ல, நீங்க போர்த்தியிருக்கிற போர்வை என்னுடையது, அதை குடுத்துட்டு நீங்க தூங்குங்க!” என்று சொல்லி போர்வையை எடுத்துக்கொண்டேன். பாதித் தூக்கத்தில் எழுந்து விட்டாலும் பாவம் ஒன்றும் சொல்லாமல், சிரித்தபடியே இருந்து விட்டார்.

எத்தனையோ விஷயங்களில் தாத்தா, பாட்டி குழந்தைகளுடன் இருப்பதில் உள்ள சுகம் அவர்கள் எப்போதாவது வந்து பார்த்து விட்டுச் செல்வதில் இருப்பதில்லை என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. இன்றைய காலகட்டத்தில் நிறைய வீடுகளில் கூட்டுக்குடித்தனம் என்பது இல்லாமலேயே போய்விட்டது என்பதை நினைக்கும் போது மனதில் வருத்தமே மிஞ்சுகிறது. ஒரே ஊரில் இருந்தாலும் கூட வேறு வேறு வீடுகளில் இருக்கும் நிலையையும் இங்கே பார்க்க முடிகிறது.

எனக்கு இன்னமும் அவரின் நினைவு இருப்பதற்குக் காரணம் அவர் எங்களிடம் காட்டிய பாசமும் பரிவும் தான். அவர் எங்களோடு இப்போது இல்லாவிடிலும் அவரின் ஆசியும் அன்பும் எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திங்கள், 18 அக்டோபர், 2010

மழலை மொழி



குழந்தையின் மழலை மொழியை கேட்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை என்பதை எங்கும் எவரிடமும் எவ்வித தயக்கமுமின்றி கூறலாம். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ராகம். அவர்களாகவே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரை வைத்துவிடுவார்கள்.

என்னுடைய பெண் பிறந்து இரண்டு வயது வரை சில சொற்களே பேசுவாள். மனைவிக்கு அது ஒரு பெரிய குறையாகவே இருந்தது. ”எப்பதாங்க நம்ம பொண்ணு அழகா மழலையா பேசுவா?” என்று என்னை அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பாள்.

ஆனால் எனக்கென்னவோ அவள் மழலையில் அழகழகாக சில வார்த்தைகள் பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாமெனத் தோன்றும். அவளின் சில மழலை வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் இங்கே:

நிக்கி – பாப்கார்ன்; லாலா ஐஸ்க்ரீம் – Kwality Walls Ice Cream; மம்மி 2 – ஜாம்; பூஸ்டிகா – பூஸ்ட்; மம்மாச்சி – ஸ்வாமி; ஒயிட் – வாழைப்பழம்; முன்பே வா அன்பே வா பிஸ்கெட் - Little Hearts Biscuit; பட்டாசு – விளக்கு/ மெழுகுவர்த்தி; நெய்மோஸ் – நெயில் பாலிஷ்; நவல் சோப் – Vivel Soap; இஞ்சி ஐஸ்க்ரீம் – Mother Diary Ice Cream; கோண்டிட்டா – Bournvitta; இங்கேர் – இங்க பாரு.

அவள் சொன்ன வார்த்தைகளில் எங்களுக்கு அர்த்தம் தெரிந்தது இவ்வளவு. அர்த்தம் தெரியாத வார்த்தைகள் எண்ணிலடங்கா. இன்று வரை புரியாத ஒரு சொற்றொடர் – “இசீசா…. அக்கூக்கா…. குய்…..” இதை சொல்லிவிட்டு “ஹாஹா…..ஹாஹா” என்று வேறு சிரிப்பாள். இன்னொரு சொல் – “இட்டி பண்டு”. தெலுங்கில் “பண்டு” என்றால் பழம். ஆனால் “இட்டி பண்டு” என்று ஏதாவது இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இப்போது ஐந்து வயதில் மகளின் மழலை கொஞ்சம் மாறி இருந்தாலும், நிறைய பேசுகிறாள். சென்ற வருடம் பள்ளியில் சேர்த்த பிறகு தமிழிலும் ஹிந்தியிலும் மாற்றி மாற்றி எதையாவது பேசிக்கொண்டே இருப்பதை அவள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளாள்.

பேசமாட்டாளா என்று குறைபட்ட என் மனைவி இப்போதெல்லாம் என் பெண்ணிடம் “கொஞ்ச நேரம் பேசாம, வாய்மேல விரல் வைச்சுகிட்டு கம்முன்னு உட்காரமாட்டே!” என்று சொல்லுவது வேறு விஷயம்!

டிஸ்கி: ஆங்கிலம் கற்கணுமா? ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவேண்டுமா? பிரெஞ்சு, ஜப்பான், சீன மொழி கற்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள் (உங்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக்கொண்டு) அயல் நாட்டு மொழிகளை முழுமையாக (அரை குறையாக) சொல்லிக் கொடுக்கிறோம் என்று ஊருக்கு ஊர் திறந்து வைத்திருக்கும் சென்டர்கள் நடத்துபவர்கள், உங்கள் குழந்தையின் மழலை மொழிக்கு நாங்கள் அர்த்தம் சொல்லுகிறோம். கட்டணம் ஒவ்வொரு மழலை வார்த்தைக்கும் நூறு ரூபாய் என்று இன்னும் விளம்பரம் செய்யாததுதான் பாக்கி.