எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 25, 2010

10-10-10

தில்லியில் கடந்த 10-10-10 அன்று நிறைய திருமணங்கள் நடைபெற்றது – காரணம் அந்த தேதி! அது போலவே 20-10-2010 அன்றும் நியூமராலஜி படி, 2 மற்றும் 6 எண்களைக் கொண்டவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும் என சொல்லுகிறார்கள். கொஞ்சம் பொறுங்கள் – இந்தப் பதிவில் நியூமராலஜி பற்றி ஒன்றும் எழுதப் போவதில்லை – நான் எழுதப் போவது வேறு ஒரு விஷயம்.

10-10-10 என்ற நாள் எனக்கும் ஒரு முக்கியமான நாள். எனது தாத்தா [அப்பாவின் அப்பா] பிறந்த தினம் அது. இப்போது அவர் இருந்திருந்தால் அவருக்கு 100 ஆண்டுகள் ஆகி இருக்கும். 30-10-1982 இல் எங்களை விட்டுப் பிரிந்த அவரின் நினைவுகள் எனக்கு இப்போதும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருக்கிறது.

அவர் பி.ஏ.பி.எல் படித்து விழுப்புரத்தில் வக்கீலாக பணியாற்றியவர். நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கெல்லாம் அறிவியல் பாடத்தில் வரும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். சில நாட்களில் எங்களை பள்ளியிலிருந்து வீடு அழைத்துச் செல்லவும் அவர் வருவதுண்டு. எங்களுக்கு அறிவியல் நோட்டுகளில் படங்களை வரைந்து கொடுப்பார். எனது மூத்த சகோதரிக்கு அப்படி அவர் 81-82 ல் வரைந்து கொடுத்த சில படங்கள் கீழே.நெய்வேலியில் எங்களுடன் அவர் இருந்த நாட்களில் அவரை தினமும் நூலகத்திற்கு அழைத்துச் செல்வது எனது வேலைகளில் ஒன்று. நூலகத்திற்கு வரும் எல்லா ஆங்கில நாளிதழ்களையும் அவர் படிக்கும் வரை எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் அவரை நான் நூலகத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு காரணம்.

எனக்கு பத்து வயதுக்குள் இருக்கும் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வு இன்னமும் நினைவில் உள்ளது. ஒரு நாள் இரவு உணவு உண்டுவிட்டு அவர் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்துத் தூங்கி விட்டார். நான் உறங்கும் வேளை வந்தபோது, அவரை தாத்தா, தாத்தா” என்று தட்டி எழுப்ப அவரும் என்னடா பேரா?” என்று பாசத்துடன் வினவ, ”ஒண்ணுமில்ல, நீங்க போர்த்தியிருக்கிற போர்வை என்னுடையது, அதை குடுத்துட்டு நீங்க தூங்குங்க!” என்று சொல்லி போர்வையை எடுத்துக்கொண்டேன். பாதித் தூக்கத்தில் எழுந்து விட்டாலும் பாவம் ஒன்றும் சொல்லாமல், சிரித்தபடியே இருந்து விட்டார்.

எத்தனையோ விஷயங்களில் தாத்தா, பாட்டி குழந்தைகளுடன் இருப்பதில் உள்ள சுகம் அவர்கள் எப்போதாவது வந்து பார்த்து விட்டுச் செல்வதில் இருப்பதில்லை என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. இன்றைய காலகட்டத்தில் நிறைய வீடுகளில் கூட்டுக்குடித்தனம் என்பது இல்லாமலேயே போய்விட்டது என்பதை நினைக்கும் போது மனதில் வருத்தமே மிஞ்சுகிறது. ஒரே ஊரில் இருந்தாலும் கூட வேறு வேறு வீடுகளில் இருக்கும் நிலையையும் இங்கே பார்க்க முடிகிறது.

எனக்கு இன்னமும் அவரின் நினைவு இருப்பதற்குக் காரணம் அவர் எங்களிடம் காட்டிய பாசமும் பரிவும் தான். அவர் எங்களோடு இப்போது இல்லாவிடிலும் அவரின் ஆசியும் அன்பும் எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

17 comments:

 1. உண்மைதான் நண்பா

  ReplyDelete
 2. நல்ல பதிவு வெங்கட். உறவுகள் என்றென்றும் மேன்மையானவை. உங்கள் பதிவு மனதை தொடுகிறது.

  ReplyDelete
 3. நினைத்தால் நெகிழவைக்கின்ற விசயங்கள்..

  ReplyDelete
 4. @ LK: நன்றி நண்பா.

  @ சந்தனார்: உண்மை தான் சந்திரமோகன். இனிய உறவுகள் நம்மை மேம்படுத்துகின்றன. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  @ முத்துலெட்சுமி: உண்மை தான். இந்த மாதம் தான் எனது தாத்தாவின் நூறாம் பிறந்த நாள் என்பதும் இப்பதிவினை எழுதக் காரணம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 5. தாத்தா-பாட்டி பேரப்பிள்ளைகள் உறவு அலாதியானது. நிறைய சந்தோஷங்களை உள்ளடக்கியது. வேளை வைத்தால் பதிவிடுகிறேன். இன்னுடைய டேஸ் பதிவில் அடிக்கடி நீங்கள் இதைப் பார்க்கலாம். ;-)

  ReplyDelete
 6. வாய்த்தால் என்று இருக்க வேண்டும். ;-)

  ReplyDelete
 7. இந்த படங்கள் எல்லாம் உங்க தாத்தா வரைந்த படமா? ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
 8. அருமையான பதிவு

  ReplyDelete
 9. தந்தையின் தந்தையை நினைவு கூர்ந்ததோடு அல்லாமல் அவரோடு வாழ்ந்திருந்த நாட்களின் ஓரிரு நிகழ்வுகளை எம்மோடு பகிர்ந்து கொண்ட எமது தங்க மகனுக்கு எமது நன்றி உரித்தாகுக." கூட்டுக் குடும்பங்களை துறந்த அன்றே நமது நிம்மதியை தொலைத்திட்டோம். ஒரே ஊரிலென்ன , ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒரு அன்னியன்போல் பழகிக் கொண்டிருக்கும் அவலத்தை காணும்போது நெஞ்சம் பதறுகின்றதே!! மனிதன் வாழ்ந்திடும்போது அவனை நேசிக்க மறந்த நாம், அவன் இறந்த பிறகு அவனின் அருகாமை நமக்கு கிடைக்காதா என்று காலம் கடந்து ஏங்குவதில் யாதொரு பயனும் கிடைக்காது என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை."

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 10. நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !

  ReplyDelete
 11. உண்மைதான்.. பாசமும் பரிவும் எங்கே கிடைக்குதோ, அவங்களை என்னிக்குமே மனசு மறக்காது..

  ReplyDelete
 12. //அவரின் ஆசியும் அன்பும் எங்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை//
  பொக்கிஷம்!!
  வயது கடந்தவர்களை நெகிழ்த்தியும், வாலிப வயதினருக்கு அறிவுறுத்தியும், உறவுகள் மீதான தங்களின் நேசத்தை வெளிப்படுத்தியும் உள்ள அட்டகாசமான பதிவு!! பாராட்டுகிறேன் வெங்கட்!!!

  ReplyDelete
 13. இனிமையான நினைவுகள்

  ReplyDelete
 14. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து தாத்தான்னா என்னன்னே தெரியாது. ரெண்டு பக்க தாத்ஸூம் நான் பொறக்கறதுக்கு முன்னாடியே எஸ்ஸாகிட்டாங்க. மிஸ்ஸிங் க்ரேண்ட் பேரேண்ட்ஸ். நல்ல நினைவுகள் வெங்கட்.

  ReplyDelete
 15. @ RVS: தங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. இது குறித்த உங்களது அனுபவங்களையும் எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.

  @ சௌந்தர்: ஆமாம் நண்பா. சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தாத்தா வரைந்தது. அதை இத்தனை காலம் பாதுகாத்து வைத்திருந்த எனது அப்பாவுக்குத் தான் நன்றி செலுத்தவேண்டும்.

  @ பொன்ராஜ்: நன்றி நண்பரே, தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும்.

  @ VKN: நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போதுள்ள சூழலில் இழப்பவைதான் அதிகமாய் உள்ளது. தங்களது தொடர்ந்த ஆதரவுக்கும், கருத்து ஊக்குவிற்புக்கும் நன்றி.

  @ ஈரோடு தங்கதுரை: தங்களது முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

  @ அமைதிச்சாரல்: உண்மையான வாக்கு.

  @ நிலாமகள்: நன்றி சகோ, உங்களது பாராட்டுதல்கள் என்னை மேலும் எழுத வைக்கும்.

  @ கலாநேசன்: நன்றி நண்பரே.

  @ விக்னேஷ்வரி: நன்றி. எனக்கும் அப்பா வழி தாத்தா மட்டுமே. அம்மா வழி தாத்தா, என் தாயின் திருமணத்திற்கு முன்னரே காலமாகிவிட்டார்.

  இண்ட்லி தளத்தில் வாக்களித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 16. கிட்டு உனது பதிவினை படித்தேன் .மிகவும் அருமை .தாத்தாவின் குணங்களை மிக அழகாக வருணித்து ஒரு பெரிய மரியாதை செய்து இருக்கிறாய் .நீ சொன்னது போல் தாத்தா ஓவியம் வரைவதில் மிகவும் திறமை
  கொண்டவர் .நான் பள்ளியில் படிக்கும்போது இருந்த ஓவிய ஆசிரியர் தாத்தாவிடம் வந்து சில சந்தேகங்களை கேட்டு செல்வார் அநத அளவிற்கு திறமை கொணடவர்.ஆங்கில பாடத்தில் வரும் சந்தேகங்களை மிக எளிமையாக புரிய வைப்பார்.பள்ளியில் ஆங்கிலத்தில் நான்தான் முதல் மதிப்பெண் .எதை கண்டும் கலங்காத அந்த இரும்பு இதயத்தை இழந்தது ஒரு சின்ன நெருடல் அவர் எல்லோரையும் வாழத நம்முடன் எப்போதும் இருக்கிறார். 10.10.10

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....