எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 21, 2011

சலவைத் தாள் - மனச் சுரங்கத்திலிருந்துவீட்டைச் சுற்றி   பெரிய தோட்டம் இருந்து அதிலே நிறைய மரம், செடி கொடிகளும் இருந்துவிட்டால் அதனை  பராமரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அந்த வீட்டுக்காரர்களுக்குத்தான் தெரியும்நெய்வேலியில் நாங்கள் இருந்தபோது எங்கள்  வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம் இருந்தது

இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தோட்டம் முழுவதையும் பெருக்கி குப்பைகளை எடுக்காவிட்டால் நிறைய பூச்சி, பாம்பு போன்றவை அண்டுமே என்பதால் அவ்வப்போது அம்மாவும், நாங்களும் [நான் மற்றும் சகோதரிகள்] சேர்ந்து சுத்தம் செய்வோம்.  சில சமயங்களில் அது முடியாத போது தோட்ட வேலை செய்யும் சிலரை வைத்து சுத்தம் செய்வோம்.

அப்படி எங்கள் வீட்டுக்கு வரும் ஒரு வேலைக்காரர் தான்சலவைத்தாள்”.  மிகவும் சாதாரணமான உடைஇடையில் ஒரு கோமணம், காலில் கம்பூட்ஸ், கையில் யூரியா சாக்கில் தைத்த ஒரு பை.  அவருடைய பெயர் என்ன என்றெல்லாம் நெய்வேலியில் பெரும்பாலோருக்குத் தெரியாது. அவரை எல்லோரும்சலவைத்தாள்என்றே அழைத்தனர்.  “சலவைத்தாள்என்ற நாமகரணம் அவருக்கு ஏன் வந்தது என்பதற்கு ஒரு காரணம் இருக்கு.

தோட்ட  வேலை செய்ய அவர் போடும் சில நிபந்தனைகள்வாழையிலை போட்டு சுடச்சுட மதிய உணவு, மாலை நேரத்தில் முதல் டிகாக்ஷனில் புதிய பாலில் ஒரு காபி, மற்றும் செய்த  வேலைக்குக் கூலியாய் பத்து ரூபாய் காசு.  அந்த பத்து ரூபாயும் ஒரு ரூபாய் சலவைத்தாளாக, புதிய வாசனையுடன், மொடமொடவெனத் தர வேண்டும்.  அப்படி இல்லையெனில் ஒரே ரகளை தான்விட்டெறிந்து விட்டுஒரு ரூபாய் சலவைத்தாள், சலவைத்தாள்என்று கூச்சலிட்டபடியே சென்று விடுவார்.  பிறகு அந்த வீட்டில் இருப்பவர் யாராயிருந்தாலும்  எத்தனை முறை அழைத்தாலும் வேலை செய்யவே  வரமாட்டார்

நீங்கள் ஒன்றுமே அவரிடம் சொல்ல வேண்டியதில்லைஅவர் செய்யும் வேலை அத்தனை சுத்தமாய் இருக்கும்.   அதனால் அவருக்குக் கொடுப்பதற்காகவே ஒரு ரூபாய் சலவைத்தாளாக வங்கியிலிருந்து  நாங்கள் வாங்கி  எப்போதுமே வைத்திருப்போம்.

இப்போது கூட எப்போதாவது சலவைத்  தாள் ரூபாய் நோட்டைப்  பார்த்தால், எனக்கு அந்தசலவைத்தாள்தான் நினைவில் வருவார்.

27 comments:

 1. வித்தியாசமான மனிதரா இருக்கார். நல்ல நிபந்தனைகள் :)

  ReplyDelete
 2. கிராமத்து மனிதர்கள் நகரத்தவர்களால் புரிந்து கொள்ள முடியாத ரகசியங்களை எப்போதும் கொண்டிருப்பவர்கள்.

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு.இப்படி பெயர் விசித்திரமாய் சிலர் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. வித்யாசமான நபர்

  ReplyDelete
 5. சரிதான்! சில நேரங்களில் சில மனிதர்கள்! :-)

  ReplyDelete
 6. நானும் கூட சலவைத்தாள் ஆசாமி தான். அவர் வாங்குவதில் அவ்வாறு இருந்தார். நான் கொடுப்பதில் அவ்வாறு இருக்கிறேன். நான் கூடுமான வரை எல்லா நோட்டுக்களுமே [ஆயிரம் முதல் ஒன்று வரை] சலவைத்தாளாகவே வாங்குவேன் / சேகரிப்பேன் / செலவழிப்பேன். அதில் என்னவோ எனக்கும் அதை என்னிடமிருந்து பெறுபவர்களுக்கும், ஒரு தனி மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உறவையும் வலுப்படுத்தும். கோடிக் கணக்காக பணம் புழங்கும் இடத்தில், அதன் பொறுப்பதிகாரியாக இருந்ததனால் அவ்வாறெல்லாம் செய்யவும், பிறருக்கு உதவவும் முடிந்தது. இன்று என் வீட்டு விசேஷங்களுக்கு, எப்போதாவது தேவைப்பட்டாலே, பிறரிடம் (பேங்கரிடம்) போய்க் கேட்க கூச்சமாகவும் உள்ளது. பழசோ, புதுசோ எல்லாம் மதிப்பு ஒன்று தான் என்ற பக்குவத்திற்கு வந்து விட்டேன்.

  ReplyDelete
 7. சிலருக்கு ஒரு ரூபாய் காயின் கலெக்‌ஷன் மாதிரி இவருக்கு சலவைத்தாள் போல இருக்கு.

  ReplyDelete
 8. நிச்சயமாக மன ரீதியாக ஏதோ ஒரு
  பெரிய காரணமிருக்கும்.நீங்கள் அவரை
  மனம் ஒன்ற சந்தித்தால் ஒருவேளை அது
  தெரியக்கூடும் .வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வித்தியாசமான மனிதர்தான்..

  ReplyDelete
 10. சிலருக்கு சில வித்தியாசமான விருப்பங்கள்.விசித்திரமான மனிதர்தான்

  ReplyDelete
 11. அட! அவர் நம்மாளு!!!!!!

  நான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த காலத்தில் சம்பளப்பணத்தில் கட்டாயமா ஒரு மூணு கட்டு ஒரு ரூபாய்த்தாள் இருக்கணும் என்று நிர்பந்தம். கேஷியர் ஒரு சில மாதங்களிலேயே நம்மைப் புரிஞ்சுக்கிட்டுத் தனியா எடுத்துவச்சுருப்பார்.

  அப்பெல்லாம் சம்பளம் வங்கிக்கு எல்லாம் நேரடியாப் போகாது. அப்பப்ப சலவைத்தாளை எடுத்துச் செலவளிக்கும்போது ஏதோ பெரிய சாம்ராஜ்யத்தையே ஆட்சி செய்யும் பெருமிதம் முகத்துலே ஒட்டிக்கும்.

  இதையெல்லாம் இப்போவரை மனசில் வச்சுருக்கும் கோபால் அந்தக் காலத்து நோட்டு 1, 2, 5 ன்னு சலவைத்தாள் கிடைச்சால் பத்திரமாக் கொண்டுவந்து என் சேமிப்புக்குன்னு கொடுக்கராருன்னா பாருங்களேன்:-))))

  பழைய நினைவுகளை உசுப்பிட்டீங்க...... எங்கெ போய் நிக்கப்போகுதோ:-)))))

  ReplyDelete
 12. சலவை நோட்டு எப்பவும் ஒரு தனி மகிழ்ச்சியைத் தரும்.

  ReplyDelete
 13. சலவைத்தாள்....கேரக்டர் பெயருக்கு எற்றார் போல் பணியிலும் சுத்தமாக இருப்பார் என்பது புரிகிறது..கண்டிப்பாக அவரது உறுதி மெச்சத்தகுந்தது....

  ReplyDelete
 14. இப்போதும் சிலர் சலவை நோட்டுகளின் மேல் அதீதப் பிரியம் வைத்திருக்கிறார்கள். ரொம்ப அழுக்கான நோட்டைக் கண்டால் அலர்ஜிதான்! அந்த கேரக்டர் அப்படியே கண் முன்.. உங்கள் வார்த்தைகளால்.

  ReplyDelete
 15. வெங்கட் அவர்களே,
  பதிவை படித்தேன். மனம் கனத்தது. கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை. அந்த தொழிலாளியின் மூளை சலவை செய்யப்பட்டது வறுமையினால் இருக்கலாம் என நான் எண்ணுகிறேன். நல்லிதயம் படைத்த தாங்கள் அவரை எள்ளி நகையாடாமல், அவருக்கு வேலையை கொடுத்து, உணவிட்டு அவர் விருப்பப்படியே சலைவை தாள்களை வழங்கியது தங்களின் இரக்க குணத்தினை எடுத்துக் காட்டியது. பிறர் துன்பத்தில் குளிர் காயும் மூட மதி படைத்தோர் நடுவில் உங்களைப் போன்ற நல்லிதயம் படைத்தோரும் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 16. வித்தியாசமானவர் தான்
  ஆனால் அது போல் சுத்தபத்தமான ஆட்களை பார்ப்பதும் அரிது தான்
  பழைய நினைவுகள் நினைகக் நினைக்க அருமையாக் இருக்கும்

  ReplyDelete
 17. சலவைத் தாட்களுக்குப் பின்னே சலவை செய்யப் படாத எதோ ஓர் கறை அத் தோட்டக்காரரின் வாழ்வில்.

  நெகிழ்ச்சியும் ஆச்சர்யமும் வெங்கட்.

  ReplyDelete
 18. Interesting personality. I am sure he has an interesting story behind it.

  ReplyDelete
 19. வேலை சுத்தம் என்பதால் வாங்குகிற காசும் சுத்தமாக சலவை செய்திருக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்திருக்க கூடும்...நல்ல நினைவு மீட்டல் தோழரே..

  ReplyDelete
 20. சலவை நோட்டு கேட்கும் அவர் சலவைத் துணி போட்டிருப்பாரா வெங்கட்? சில பழக்கங்களில் சில மனிதர்கள்!!! ;-)

  ReplyDelete
 21. மனச்சுரங்கம் தொடர் நன்றாக இருக்கின்றது.

  ReplyDelete
 22. வித்தியாசமான நபர்.

  ReplyDelete
 23. மனிதர்களில் தான் எத்தனை விதம். நல்ல பகிர்வு !

  ReplyDelete
 24. நல்ல மனிதர்.தன் வேலை சுத்தம். தான் வாங்கும் பணமும் சுத்தமாய் இருக்க வேண்டும் போலும்.

  நானும் புது 1ரூபாய், புது இரண்டு ரூபாய் எல்லாம் வைத்து இருக்கிறேன்.
  10 ரூபாய் காயின் வைத்து இருக்கிறேன் பத்திரமாய்.

  பழைய நினைவுகள் அற்புதம்.

  ReplyDelete
 25. சலவை நோட்டு கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தனி சந்தோசம் தரும் விஷயம் தான்.

  ReplyDelete
 26. வேலை சுத்தம். வாக்கு சுத்தம் போல நாணயமும் சுத்தமாக இருக்க வேண்டும் நினைத்தாரோ.
  நட்பு படத்தில் செந்தில் எல்லாவற்றிற்கும் ' பத்து காசு கோடு ' ன்று கேட்பார் . வேடிக்கை மனிதரின் பின்னால் என்ன வேதனையோ

  ReplyDelete
 27. @@ முத்துலெட்சுமி: வித்தியாசமானவர் தான்! மிக்க நன்றி.

  @@ விக்னேஷ்வரி: வெள்ளை மனத்தவர்கள். மிக்க நன்றி விக்கி.

  @@ அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி சகோ.

  @@ எல்.கே: ஆம்! மிக்க நன்றி கார்த்திக்.

  @@ சேட்டைக்காரன்: சில நேரங்களில் சில மனிதர்கள் - வித்தியாசமான படம் :) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை.

  @@ வை. கோபாலகிருஷ்ணன்: சலவை நோட்டு எல்லோருக்குமே பிடித்தமான ஒன்றுதான். கிழிந்த நோட்டு கொடுத்தால் வாங்கும்போது நிறைய பேரின் முகமே கிழிந்து தொங்குவது போல இருக்கும்! :) மிக்க நன்றி ஐயா.

  @@ புதுகைத் தென்றல்: கலெக்‌ஷன் விஷயத்தில் இவர் ரொம்ப கறார் பேர்வழி. மிக்க நன்றி!

  @@ ரமணி: உங்களது முதல் வருகை? மிக்க நன்றி சார். இது எனது சிறு பிராயத்தில் நடந்த விஷயம். அப்போதெல்லாம் அவரைப் பார்த்தாலே பயம்! நீங்கள் சொல்வது போல பேசியிருந்தால் பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரிந்திருக்கும்!

  @@ அமைதிச்சாரல்: மிக்க நன்றி.

  @@ ராஜி: மிக்க நன்றி சகோ.

  @@ துளசி கோபால்: எங்கப் போய் நின்றது உங்க நினைவுகள்! சீக்கிரமா உங்க பக்கத்திலே சொல்லுங்க! மிக்க நன்றி!

  @@ DrPKandaswamyPhD: உண்மைதான்.
  மிக்க நன்றி ஐயா!

  @@ பத்மநாபன்: அவரது பணியிலே ஒரு குறையும் வைத்ததில்லை. அதுபோல நாங்களும் அழுக்கு நோட்டு கொடுத்ததில்லை :) மிக்க நன்றி சார்.

  @@ ரிஷபன்: சுவாரசியமான கேரக்டர் அவர். சலவைத்தாள் பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு பரவசம்! மிக்க நன்றி.

  @@ மந்தவெளி நடராஜன்: மிக்க நன்றி.

  @@ ஜலீலா கமல்: மிக்க நன்றி சகோ.

  @@ சுந்தர்ஜி: திரு ரமணி அவர்களுக்குச் சொன்னது போல், அவரிடம் கேட்க எங்களுக்குத் தைரியம் இருந்ததில்லை!

  @@ சித்ரா: மிக்க நன்றி சகோ.

  @@ டக்கால்டி: உங்களது முதல் வருகை என நினைக்கிறேன். மிக்க நன்றி நண்பரே.

  @@ ஆர்.வி.எஸ்.: நல்ல சந்தேகம். அவர் உடம்பில் போட்டிருந்தது ஒரு ஒற்றைக் கோமணம் மட்டுமே. நல்ல மனது கொண்டவர். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ உயிரோடை: மிக்க நன்றி லாவண்யா.

  @@ கலாநேசன்: மிக்க நன்றி கலாநேசன்.

  @@ கனாக்காதலன்: மிக்க நன்றி.

  @@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. எல்லோரும் இதுபோல சலவைத்தாள் மோகத்தில் இருந்திருக்கிறோம் எப்போதாவது!

  @@ லக்ஷ்மி: உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிம்மா.

  @@ சிவகுமாரன்: மிக்க நன்றி சகோ...

  இண்ட்லி, மற்றும் தமிழ்மணம் பக்கங்களில் வாக்கு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....