புதன், 23 மார்ச், 2011

ஃபட்-ஃபட்டியா!




தலைநகர் தில்லிக்கு 10-15 வருடங்களுக்கு முன் வந்திருந்த நண்பர்களுக்கு இந்த ”ஃபட்-ஃபட்டியா” என்பது என்ன என்று தெரிந்திருக்கும்! மற்றவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இதில் பயணம் செய்வது ஒரு சுகானுபவம்!

தில்லி மற்றும் மற்ற வட இந்திய நகரங்களில் “ஜுஹாட்” [Jugaad] என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார்கள். எதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்வது ஜுஹாட். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் தந்துவிட்டு தமது நாட்டுக்குச் செல்லும் முன்னர் அவர்கள் வைத்திருந்த ஹார்லே-டேவிட்சன் வாகனங்களை கிடைத்த விலைக்கு விற்றுச் சென்றுவிட்டனர். அப்போதைய இந்தியாவில் இருந்த போக்குவரத்துப் பற்றாக்குறையைச் சமாளிக்க இங்கிருந்த சர்தார்ஜிகள் இந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி தேவையான மாற்றங்கள் செய்து, பயணிகள் ஏற்றிச் செல்ல வசதியாக உருவாக்கிய ஜுஹாட் வண்டியே இந்த ஃபட்-ஃபட்டியா.

டீசலில் ஓடக்கூடிய இந்த வண்டியை இயக்க, ஜெனரேட்டர்கள் போல, அதற்கான கயிற்றை ஐந்தாறு முறை மெதுவாக இழுத்து, பின்னர் வேகமாக ஒரு இழு இழுத்தவுடன், “ஃபட்-ஃபட்-ஃபட்” என்ற சத்தத்துடன் இயங்க ஆரம்பிக்கும் இந்த வண்டியின் இன்ஜின். அதனால் இந்த வண்டியின் பெயர் ஃபட்-ஃபட்டியா! இன்ஜின் வேலை செய்யத் துவங்கியவுடன் அந்த கயிற்றினை அழகாய் சுறுக்குப் போட்டு வண்டியில் கட்டி விடுவார்கள் – அடுத்த முறை இழுக்க வேண்டுமே!

தில்லியின் பிரதான பகுதியான கன்னாட் ப்ளேஸில் இருந்து சாந்த்னி சௌக் செல்லும் வண்டிகளும், ஷிவாஜி ஸ்டேடியத்திலிருந்து கரோல் பாக் செல்லவும், செங்கோட்டையிலிருந்து காந்தி நகர் செல்வதற்கும் இந்த வண்டிகள் பயன்பட்டன. கட்டணம் 0.50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய் என அதிகரித்து கடைசியாக 5 ரூபாய் வரை வசூலித்துக் கொண்டிருந்தனர். இதில் 10 லிருந்து 12 பேர் வரை பயணம் செய்யலாம்!

வண்டியில் இருந்து வரும் ஃபட்-ஃபட் சத்தம் ஏரியா முழுதும் கேட்கும். இந்த ஒலி எப்படி இருக்கும் என்றால், என்ஃபீல்ட் புல்லெட் சாதாரணமாக ஓடினால் வரும் சத்தத்தின் மூன்று-நான்கு மடங்கு எப்படி இருக்குமோ அப்படி. வண்டியில் பயணம் செய்யும்போது ராஜ பவனி வருவது போல ஒரு உணர்வு வரும்! மேலே கூரையிருந்தாலும், இரண்டு பக்கங்களிலும் திறந்திருப்பதால் காற்றாட பயணிக்கலாம். எதிர்ப்புறமாய் வீசும் காற்று முகத்தில் அறைய ஓட்டுனரின் பின்னே உட்கார்ந்து இந்த வண்டியில் செல்வது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.

இந்த வண்டியை ஓட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் சர்தார்ஜிகள். சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது என்று தில்லியில் இது போன்ற வண்டிகளுக்குத் தடை விதித்து சுத்தமாக அப்புறப்படுத்தியபின் சாதாரண மஹிந்த்ரா ஜீப்புகள் ”ஃபட்-ஃபட் சேவா” என்ற பெயரில் இயங்கினாலும் பழைய ஹார்லே-டேவிட்சன் வண்டியில் போவது போன்ற ஆனந்தம் இதில் கிடைப்பதில்லை. ஒரு சில வண்டிகள் பக்கத்து நகரங்களுக்குச் சென்றுவிட்டாலும், பெரும்பாலானவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் துருப்பிடித்து காயலான் கடைகளுக்குச் சென்று விட்டது என்பதில் எனக்கு மிக மிக வருத்தம்!

“பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே” என்பது உண்மையாக இருந்தாலும், இது  போன்ற சிலவற்றை மறக்க முடிவதில்லை!

வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.

வெங்கட்.



38 கருத்துகள்:

  1. இந்த ஃபட்ஃபட் வண்டி எனக்குப் புதுத் தகவல். நல்லாருக்கும் போலவே இந்த சவாரி...

    பதிலளிநீக்கு
  2. ஃபட்ஃபட்டியாவை பார்த்தது இல்லை. பட்பட் சேவாவும், இப்போது வந்திருக்கும் கிராமின் சேவாவும் பார்த்ததுண்டு. இதில் எரிச்சலானது என்னவென்றால் ஒரே நேரத்தில் எவ்வளவு பேரை அடைக்க முடியுமோ அவ்வளவு பேரை அடைப்பார்கள். ( ஒருவர் மடி மேல் ஒருவர் கூட)

    பதிலளிநீக்கு
  3. பட் பட் நல்லாருக்கு..

    இப்ப இந்த க்ராமின் சேவா வண்டிகள் 5 பத்துக்கு சீக்கிரமா கொண்டு விடறாங்கன்னு ஒரு பாட்டியம்மா சொன்னாங்க.. ஆமா சீக்கிரமா மேலயே கொண்டுவிட்டுர்வான் போல பலரையும் அடைச்சிக்கிட்டு நிறுத்த சொல்றவங்க இடத்துல எல்லாம் டபால்ன்னு லேன் சேஞ்ச் செய்து ரோட்டோரத்துக்கு வருவது திகிலைக் கிளப்புது.. :(

    பதிலளிநீக்கு
  4. //“பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே” என்பது உண்மையாக இருந்தாலும், இது போன்ற சிலவற்றை மறக்க முடிவதில்லை!//

    ஆமாம். நூற்றுக்கு நூறு உண்மை தான்.

    எனக்கு அது போல அந்தக்காலத்தில் என் சின்ன வயதில் குதிரை வண்டியில் சென்றது ஞாபகம் வருகிறது.

    நான் பொடியன் (சின்னப்பையன்) என்பதால் நிறைய பேர்கள் ஏறிக்கொண்டு, என்னை குதிரை வண்டி ஓட்டுபவருக்கு அருகில் அமர வைத்து விட்டனர்.

    அவர் சாட்டையால் குதிரையை ஹை ஹை என்று அடிக்கும் போதெல்லாம், அது என் மீதும் பட்டு லேசாக வலிக்கும்.

    அது மட்டுமல்லாமல் அந்தக்குதிரை அடிக்கடி தன் வாலை சுழட்டிச்சுழட்டி ஆட்டிக்கொண்டே என் மீது சாமரம் வீசுவதும் என்னை என்னவோ தவிக்கச் செய்யும்.

    வண்டி போகும் வேகத்தில் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயமும் ஏற்படும்.

    குதிரை லத்தி வாடை வேறு குடலைப்புடுங்கும்.

    பேசாமல் இதைப்ப்ற்றியெல்லாம் நகைச்சுவையாக, நான் தனியே ஒரு பதிவாகவே போட்டிருக்கலாம்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினனே/
    மிக சரிதான்.
    நிறைய விஷயங்கள் இன்று அப்படித்தான் ஆகி விட்டது.

    சென்னையில் கூட ட்ராம் எனற வண்டி வெள்ளைக்காரர்கள் விட்டுச் சென்றது
    ஓடிக் கொண்டிருந்தது.இப்பொழுது பார்க்க முடியாது.

    திருவல்லிக்கேணியில் இது அதிகம் புழங்கப் பட்ட இடம் இன்றும் ட்ராம் ரோட் என்று
    அழைக்கும் வழக்கம் உள்ளது(Triplicane high road)

    பதிலளிநீக்கு
  6. இங்க இப்ப இருக்கற ஷேர் ஆட்டோ மாதிரி இருக்கும் போலயே ??

    பதிலளிநீக்கு
  7. @@ விக்னேஷ்வரி: நல்லாத்தான் இருக்கும் விக்கி! நான் நிறைய நாட்கள் இந்த வண்டிகளில் பயணித்திருக்கிறேன் கரோல் பாகில் இருக்கும்போது. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## கோவை2தில்லி: :))))) வலைமூலம் சொன்ன கருத்துக்கு நன்றி!!!!!

    @@ முத்துலெட்சுமி: தில்லியில் எல்லா வண்டிகளுமே இப்படித்தான் திடீரென லைன் மாறும்போது நிறைய பேரோட லைஃப் லைனே மாறிடுது!!!! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

    ## வை. கோபாலகிருஷ்ணன்: குதிரை வண்டி, மாட்டு வண்டி பயணங்கள் நல்ல அனுபவம். எனக்கும் ஓரிரு முறை இந்த அனுபங்கள் கிடைத்திருக்கின்றன. தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

    @@ ராஜி: புதிது புதிதாய் வந்தாலும் பல சமயங்களில் பழமைக்கு மதிப்பு அதிகம்தான். தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜி.

    ## ரத்னவேல்: மிக்க மகிழ்ச்சி ஐயா! படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

    @@ எல்.கே.: இல்லை கார்த்திக். இப்ப இருக்கிற ஷேர் ஆட்டோவினை விட இது பெட்டர்!! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  8. தில்லியில் இதுலே போகலை. ஆனால் தாய்லாந்து, கம்போடியாவில் போயிருக்கோம்.

    குஜராத் ராஜ்கோட் பக்கம் சக்கடான்னு ஒன்னு இருக்கு. போயிருக்கீங்களா:-))))

    இதே மாதிரிதான் ஆனா நீட்டா இருக்காது. கொஞ்சம் கச்சடாவா இருக்கும்:-)

    பதிலளிநீக்கு
  9. “பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே” என்பது உண்மையாக இருந்தாலும், இது போன்ற சிலவற்றை மறக்க முடிவதில்லை!//
    உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  10. நிறைய தகவல்களுடன் ஃபட்டையை ....சாரி பட்டையை கிளப்பிட்டீங்க.....

    பதிலளிநீக்கு
  11. இங்கு ஹார்லி டேவிட்சன் ஷோ ரூமை பார்த்தால் பட் பட் வண்டி தான் இனி நினைவு வரும்.புதிய தகவல்.

    பதிலளிநீக்கு
  12. @@ துளசி கோபால்: சக்கடா - கச்சடா - வார்த்தை விளையாட்டினை ரசித்தே. குஜராத் பக்கம் போனதில்லை. ஹரியானா- உத்திரப்பிரதேசத்தில் ஓடும் ஜுஹாட் வண்டிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கேயும் அழுக்கு தான்!! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## இராஜராஜேஸ்வரி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ மோகன் குமார்: வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி மோகன்.

    ## சித்ரா: உங்கள் கருத்தும் பட்டையைக் கிளப்பியது! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ ஆசியா உமர்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா.....குஜராத் பக்கம் போனதில்லையா!!!!!! நல்லா மாட்டிக்கிட்டீங்க:-) நேரம் இருந்தால் இந்தச்சுட்டியைப் பாருங்கள்.

    http://thulasidhalam.blogspot.com/2010/01/7.html

    பதிலளிநீக்கு
  14. மும்பையின் புற நகர்ப்பகுதிகள்லயும் இதுமாதிரி 'டுக்கர்'ன்னு ஒரு வண்டி ஓடுது :-)

    பதிலளிநீக்கு
  15. டெல்லி என்றதும் ஞாபகம் வருவது பட்பட்டியாவும்தான். முழு விவரம் இப்போதுதான் அறிந்தேன்..

    பதிலளிநீக்கு
  16. @@ துளசி கோபால்: மாட்டவில்லை டீச்சர்! உங்கள் நல்லதொரு பதிவுக்கு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

    ## அமைதிச்சாரல்: டுக்கர்..... இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே போல ஜுகாட் வண்டிகள் பெயர் மற்றும் எத்தனை விதம் – ஃபட்-ஃபட்டி, ஜுகாட், சக்கடா, டுக்கர் எத்தனை பெயர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    @@ ரிஷபன்: அட நீங்க அதில் பயணம் செய்ததுண்டா! நல்ல அனுபவம் இல்லையா அது :) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    ## அமுதா கிருஷ்ணா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இதுபோல பழைய பயணம் என்றால் எங்க கிராமத்தில் மாட்டுவண்டி, பூனாவில் டாங்காவண்டி,ஜபல்பூரில் டெம்போவண்டி பாம்பேயில்லோக்கல் காடி என்று போகாத ட்ரான்ஸ்போர்ட்டே
    கிடையாதி. லாரி, ஹெலிகாப்டர், கப்பல் கூட போயாச்சு. ஒன்னொன்னும் ஒவ்வொரு மறக்கமுடியாத அனுபவம்தான்.

    பதிலளிநீக்கு
  18. அருமையான பகிர்வு பாஸ் எனக்கு இப்போதான் இப்படி ஒரு வண்டியிருப்பதே தெரியும்..!

    பதிலளிநீக்கு
  19. @@ லக்ஷ்மி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா. பயணங்கள் என்றுமே இனிமையானவை தான்!

    ## ப்ரியமுடன் வசந்த்: எனது வலைப்பக்கத்தில் தங்களது முதல் வருகை என்னை மகிழ்வித்தது நண்பரே. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. நம்ம ஊர் பக்கம் ரிக்க்ஷா வண்டி போலவோ... அதிலும் எழுப்பும் ஒலி இப்படித் தான் இருக்கும். குதிரை வண்டிக்காரர் சாட்டைக் கழியை வண்டிச் சக்கரத்தில் நுழைத்து எழுப்பும் கடகட ஒலி இப்பவும் மனசில்... கூடவே குதிரைக் குளம்பின் சீரான டக் டக் ஒலிகள் ...ஊர்க் கதைகள் கேட்க எப்பவும் சுவாரஸ்யம் தான் சகோ...

    பதிலளிநீக்கு
  21. நல்ல பகிர்வு ப்ரோ. ;-))
    இது எங்க ஊரு ஷேர் ஆட்டோ..,. இங்க மூடியிருக்கும் அங்க தொறந்து இருக்கு...

    பதிலளிநீக்கு
  22. பழமையான எத்தனையோ நல்ல விஷயங்கள் மதிப்பிழந்ததுபோல, இதுவும் ஒன்றாகி விட்டது வருத்தமாக இருக்கிறது! இருந்தாலும் தகவலும் புகைப்படமும் அருமை!
    தாய்லாந்திலும் இதுபோல பட் பட் வண்டிகள் உண்டு.

    பதிலளிநீக்கு
  23. இது பற்றி கேட்ட நினைவு... இத்தனை விரிவாய் படித்ததில்லை... இதுவும் ஒரு சரித்திர சின்னம் தான் போலும்... ஆனால் காயலான் கடைகளுக்குச் சென்று விட்டது வருத்தம் தான்... பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  24. 93 இல் தில்லி போன போது ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த இந்த வண்டியைப் பார்த்தேன்.
    பகிர்வுக்கு நன்றி.
    வை.கோ. சார் குதிரை வண்டி இன்னும் பழனியில் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டிலிருந்து அடிவாரம் வரை செல்லலாம். என் மகனுக்கும் மனைவிக்கும் அதில் செல்வதில் கொள்ளைப் பிரியம்.

    பதிலளிநீக்கு
  25. வெங்கட்.. பட..பட்டியா நினைவுகள் அழகானவை.. கல்கத்தாவில் டிராம் வண்டியை நிறுத்த அரசாங்கம் நினைத்த போதெல்லாம் அதற்கு பொதுமக்கள் விடவில்லை. ஹைதராபாதின் உயரம் இல்லாத சைக்கிள் ரிக்ஷா,நம்மவூர் குதிரை வண்டி எல்லாம் நினிவிலேயே மட்டும் நிற்கின்றன..

    பதிலளிநீக்கு
  26. Republic Day Parade அட்டெண்ட் செய்ய தில்லி வந்ததோடு சரி. அவ்வப்பொழுது தில்லியில் ட்ரான்சிட் வாங்குவதோடு தில்லிக்கும் நமக்கும் தொடர்பு கம்மியாகிவிட்டது. இன்னுமொரு தடவி குழந்தைகள் பெரியவர்களான பின் வர வேண்டும்!! இன்னும் எழுதுங்கள் தில்லியை பற்றி :)

    பதிலளிநீக்கு
  27. அட, நம்மூரு டீசல் ஷேர் ஆட்டோ!! அதிலயும் இப்படித்தான் சத்தம் கேக்கும். ஆனா, ஆட்களை புளிமூட்டை மாதிரி அடைச்சு கொண்டுபோவாங்க. :-((

    பதிலளிநீக்கு
  28. @@ நிலாமகள்: நல்ல நினைவுகள் என்றுமே சுகமானவைதானே சகோ. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## ஆர்.வி.எஸ்.: வாங்க மைனரே! உங்க ஷேர் ஆட்டோவினை விட இது நல்லாவே இருக்கும்! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ சே. குமார்: நிச்சயமா நல்லா இருக்கும் நண்பரே. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## மனோ சாமிநாதன்: புதியவை பல வந்து கொண்டு இருந்தாலும் நிறைய விஷயங்களை இழந்து வருகிறோம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ அப்பாவி தங்கமணி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## சிவகுமாரன்: 93-ல் எல்லாம் ஓடிக்கொண்டு இருந்தது இந்த வண்டி. 2000-2001ஆம் வருடங்கள் தொடங்கி மெதுவாக எல்லாம் எடுத்து விட்டார்கள். பழைய தில்லியில் இப்போதும் சில இடங்களில் குதிரை வண்டி இருக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ மோகன்ஜி: நினைவில் மட்டுமே இருப்பது இதில் நமக்கு இருந்த விருப்பத்தை வெளிப்படுத்துகிறது என நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## அன்னு: தில்லி எங்கே போய் விடப்போகிறது! வாருங்கள்! சந்திப்போம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    @@ ஹுசைனம்மா: புளிமூட்டை:) தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  30. //பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே” என்பது உண்மையாக இருந்தாலும், இது போன்ற சிலவற்றை மறக்க முடிவதில்லை!//

    சில நேரங்களில் இப்படித்தான் நமக்கு பிடித்தவைகள் கர்நாடகம் என்று ஒதுக்கப்பட்டு விடுகிறது.

    நாளுக்கு ஒரு புது படைப்புகள் வருகிறது.

    பதிலளிநீக்கு
  31. நல்ல ஒரு அனுபவம் அசத்தலா இருக்கு...

    பதிலளிநீக்கு
  32. @@ புதுகைத் தென்றல்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    ## கோமதி அரசு: நல்ல பல விஷயங்கள் கூட “கர்நாடகம்” என் ஒதுக்கப்பட்டு விட்டது உண்மைதான் அம்மா! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

    @@ நாஞ்சில் மனோ: தங்களது முதல் வருகை? மிக்க மகிழ்ச்சி நண்பரே.

    பதிலளிநீக்கு
  33. இந்த "சத்தப்படுத்தும் ஆட்டோ" பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....