திங்கள், 18 ஏப்ரல், 2011

சொர்க்கம்!

நம்மில் அனைவருக்கும் நாம் பிறந்த ஊர், வளர்ந்த ஊர் அல்லது வேலை நிமித்தமாய் தங்கிவிட்ட ஊர், சுற்றுலா சென்று வந்த ஊர், அல்லது சொந்தக்காரர்கள் இருக்கும் ஊர் என்று ஏதோ ஒன்று மிகவும் பிடித்த ஊராக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஊர் என்று சொன்னால் நான் பிறந்த நெய்வேலியைத் தான் முதலில் சொல்வேன்.

அதற்கு அடுத்தது திருச்சி-கோவை நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருப்பராய்த்துறை தான். அகண்ட காவிரியின் கரையில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அங்கே இருக்கும் ராமகிருஷ்ண மடம் மற்றும் தபோவனம், அவர்கள் நடத்தும் பள்ளி ஆகியவை மூலம் இந்த இடம் தமிழகத்தில் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கலாம்.

தில்லியில் இருந்து இரண்டு மூன்று வாரங்கள் விடுமுறையில் திருச்சிக்கு சென்றால் கூட திருப்பராய்த்துறையிலிருக்கும் என்னுடைய பெரியம்மாவின் வீட்டில் குறைந்தது இரண்டு-மூன்று தினங்களாவது தங்கிவிடுவேன். இருக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் பொறுமையாய் துயிலெழுந்து நல்ல ஃபில்டர் காபியில் தொடங்கும் இனிய நாள். எட்டு மணி சுமாருக்கு கொஞ்சமாய் சிற்றுண்டியும் இன்னொரு டம்ளர் காபியும். பின் தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு கையில் சோப்புடன் கிளம்பிப் போய் அகண்ட காவிரியில் சுகமான குளியல்.

அதுவும் சாதாரணமான குளியல் அல்ல! காவேரியில் முங்கி முங்கி ஒரு மணி நேரமாவது ஆசை தீர குளியல். பிறகு குளித்த அசதியில் பசியுடன் வீடு வரும்போதே தெரு முனையிலேயே பெரியம்மாவின் சமையல் மணம் நாசியை வந்து “சீக்கிரமா வாயேன்” என்று வாஞ்சையுடன் அழைக்கும். வாசனை பிடித்தபடியே விரைவாக வீடு சென்று தயாரானால், பெரியம்மா ”சாப்பிட வாடா!” என்று அழைக்கும் குரல் தேனாய் காதினில் ஒலிக்கும்.

இந்த இடத்தில் என் பெரியம்மாவின் [அம்மாவின் அக்கா] சமையல் பற்றி சொல்லியே ஆகவேண்டும். நல்ல காரசாரமாய் சுவையாக இருக்கும் அவர்கள் சமையல். நமக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருந்து தினம் தினம் ஒவ்வொரு வகையாக சமைத்துத் தருவார்கள். நான் என்று அல்ல, வீட்டிற்கு வரும் யாரும் ”எனக்கு இது பிடிக்கும்” என்று சொல்லிவிட்டால், எத்தனை நாட்கள் கழித்து திரும்ப வந்தாலும் மறக்காமல் அவருக்குப் பிடித்த அந்த உணவினை சமைத்துத் தருவார். செய்யும் ஒவ்வொரு உணவு வகையும் நேர்த்தியாகயும், சுவையாகவும் இருக்கும். அப்புறம் என்ன, சுவையான உணவினை உண்ட மயக்கத்தில் தூக்கம் கண்ணைத் தழுவ சிறிது நேரத்தில் நித்திராதேவியின் வசப்பட்டு மாலையில் எழுந்தால் மீண்டும் சுடச்சுட காபி, கொரிக்க எதாவது கிடைக்கும்.

இதன் பின்னர் மீண்டும் காவேரியில் மாலை நேரக் குளியல் முடித்து, நேராக பராய்த்துறைநாதர் குடிகொண்டு இருக்கும் கோவில் [இந்தக் கோவில் பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்] சென்று திவ்யமாய் தரிசனம் முடித்து வீடு வருவேன். வீட்டின் வாசலில் உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. இரவு உணவு முடித்து மீண்டும் சிறிது நேரம் பெரியம்மாவுடன் உட்கார்ந்து பழங்கதைகள் பேசிக்கொண்டே உறங்கப் போவேன். இது அங்கிருக்கும் வரை தினம் தினம் தொடரும். அனுதினமும் சொர்க்கம்தான்!

ஊர் மக்களும் பாசமாய் இருப்பார்கள்! நான் வருகிறேன் என்று பெரியம்மாவிடம் சொன்னவுடனே எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் – “பையன் டில்லிலேருந்து வரான்!” அவர்களும் நிலத்தில் விளைந்த விதவிதமான வாழைப்பழங்கள், அன்றே பறித்த காய்கறிகள், கீரைகள் என்று எதையெதையோ கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்! ம்… நல்ல மனிதர்கள்!!!

தமிழகம் வந்து நெடு நாட்களாகிவிட்டது. வரவேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கத்தொடங்கி விட்டது. பார்க்கலாம் பராய்த்துறைநாதரிடம் இருந்து அழைப்பு வருகிறதா என்று!

மீண்டும் சந்திப்போம்!


வெங்கட்.

28 கருத்துகள்:

  1. அற்புதமான ஊர் அது. ஒரு முறை சென்று இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. என்ன இருந்தாலும் சொந்தஊரை விட்டுதர முடியுமா?

    பதிலளிநீக்கு
  3. ஏக்கமேற்படுத்திய பதிவு வெங்கட். சீக்கிரம் வாருங்கள் நம்ம ஊருக்கு இளைப்பாறிச் செல்ல.

    பதிலளிநீக்கு
  4. திருபராய்த்துறை தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். நான் இன்னும் பார்க்கவில்லை. நிச்சயம் வருவேன். வந்தால் உங்களுக்கு ஃபோனுகிறேன். ;-))
    காவேரித் தண்ணீரின் மகிமை அது. ;-)))
    பூலோக சொர்க்கம் நன்றாக இருந்தது. பழங்கதைகள் இனிக்கும் பழக் கதைகள். சரிதானே!
    (அடிக்கடி பழங்கதை என்று எழுதாதீங்க.. உங்களை பெருசுன்னு சொல்லி கும்மியடிப்பாங்க... )

    பதிலளிநீக்கு
  5. எல்லாத்தையும் போல்டா எழுதலாம். ஆனால் ஃபான்ட் போல்டா இருக்கனும்ன்னு அவசியம் இல்லை. ;-)))
    ப்ளீஸ் கண்ணை உறுத்துது... மாத்திடுங்க..

    பதிலளிநீக்கு
  6. (திருச்)சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
    (திருப்)பராய்த்துறை மேவிய பரனே போற்றி!!

    என்ற பாடல் திருச்சி மலைக்கோட்டையில் அந்தக்காலத்திலெல்லாம் ஒலிப்பதுண்டு.

    நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

    [திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் மிகவும் ஒழுங்கு, கட்டுப்பாட்டு, தெய்வபக்தியுடன் படித்த எவ்வளவோ நண்பர்கள் வாயிலாக அந்த ஊரையும், அந்தப்பள்ளியையும் பற்றி கேள்விப்பட்டதுண்டு. நான் நேரில் சென்றதில்லை.]

    பதிலளிநீக்கு
  7. ஊர் மக்களும் பாசமாய் இருப்பார்கள்! நான் வருகிறேன் என்று பெரியம்மாவிடம் சொன்னவுடனே எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் – “பையன் டில்லிலேருந்து வரான்!” அவர்களும் நிலத்தில் விளைந்த விதவிதமான வாழைப்பழங்கள், அன்றே பறித்த காய்கறிகள், கீரைகள் என்று எதையெதையோ கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்! ம்… நல்ல மனிதர்கள்!!!


    ...so sweet! நல்ல பகிர்வுங்க.... :-)

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு. தொடர்ந்து இளமை நினைவுகளை அழகுற எழுதுகிறீர்கள். மலரும் நினைவுகள், மறக்க முடியாத சிறு சிறு ரசனைகள், நிகழ்வுகள் மறுபடியும் வந்து அலை மோதச் செய்ததற்கு அன்பு நன்றி!‌

    பதிலளிநீக்கு
  9. பசுமை நிறைந்த குளித்தலை ரோடும் திருப்பராய்த்துறையும் நினைத்தாலே ஒரு குளிர்ச்சி பரவும்..... பெரு வாய்க்காலும் காவிரி ஆறும் இணையாக செல்லும் அந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொழுது நம் மாநிலமும் செழிப்பானது தான் எனும் நம்பிக்கை பெருகும்...சொர்கமே என்றாலும்.... நம் மாநிலம் போலாகுமா.... நல்ல பகிர்வு...

    பதிலளிநீக்கு
  10. அகண்ட காவேரி ,அதில் சுழித்தோடும் குளிர்ந்த பளிங்கு போன்ற நீர, நேரம் போவதே தெரியாமல் அதில் ஒரு சுகமான குளியல், பசித்து வரும் தனயனுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாது, அவனுக்கு பிடித்த வித விதமான சுவையான உணவு படைத்திடும் தாய், இவற்றிக்கு முத்தாய்ப்பு வைத்தால் போல் ,.நமது மண்ணின் மைந்தன் வருவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு காய் கனிகளை தம் சக்திக்கு ஏற்றாற்போல் கொடுத்து ,கள்ளம் ,கபடமற்ற பாசத்தை பொழியும் ஊர் நன்மக்கள் இவற்றை மீண்டும் , மீண்டும் அனுபவித்திட, இந்த சுகானுபவத்தில் என்றும் மூழ்கி கிடந்திட, அதை அவ்வாறு அனுபவித்தவர்களுக்கே, திரு வெங்கட் கூறியது போல், மீண்டும் இவற்றை அனுபவித்திட மனம் விழையத்தான் செய்யும். இந்த அவசரமான உலகில் நல்லிதயம் படைத்தோரை நினைவுக்கு கொண்டு வந்து, பாரறிய நன்றி நவிர்ந்தமைக்கு எமது பாராட்டுக்கள், திரு வெங்கட் அவர்களே. வாழ்க, வளர்க.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  11. மிக நல்ல பகிர்வு, பகிர்ந்த விதம் அருமை,அப்படியே நாங்களும் காவேரியில் முங்கி குளித்து பெரியம்மாவின் சமையலை ருசித்த அனுபவம் கிடைக்கப் பெற்றோம்,எனக்கும் என் ஊரும் மக்களும் என்றால் கொள்ளைப் பிரியம் சகோ.

    பதிலளிநீக்கு
  12. கொடுத்து வைத்தவர்! அனுபவியுங்க! என் நண்பர் ஒருவர் பக்கத்தில் இருக்கும் அல்லூரில் போய் செட்டில் ஆகி விட்டார்!

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வுங்க.. மலரும் நினைவுகள்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வாசிக்கும்போதே.......... சுகமான குளியலும் கண்ணைக் கட்டிக்கிட்டு வர்ற தூக்கமுமா மனசுலே குளிர்மை!

    இப்படி ஒரு பெரியம்மா கிடைச்ச நீங்க ரொம்பக் கொடுத்துவைச்சவர்!!!!!

    ரொம்ப வெய்யில் ஏறுமுன் சட்னு போயிட்டு வாங்க. இந்தக் கோடை மிகவும் கடுமையா இருக்கப் போகுதுன்னு ஒரு பட்சி சொல்லுது!

    பதிலளிநீக்கு
  15. அங்கு போக தூண்டுகிறது உங்கள் பதிவு..

    பதிலளிநீக்கு
  16. உங்கள் திருப்பராய்த்துறை நாட்கள் பற்றிப் படிக்க படிக்க தேனாக இனிக்கிறது. அங்கு போக தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
  17. //இருக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் பொறுமையாய் துயிலெழுந்து நல்ல ஃபில்டர் காபியில் தொடங்கும் இனிய நாள். எட்டு மணி சுமாருக்கு கொஞ்சமாய் சிற்றுண்டியும் இன்னொரு டம்ளர் காபியும். பின் தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு கையில் சோப்புடன் கிளம்பிப் போய் அகண்ட காவிரியில் சுகமான குளியல்//

    அனுபவி ராஜா அனுபவி!

    //காவேரியில் முங்கி முங்கி ஒரு மணி நேரமாவது ஆசை தீர குளியல்//

    உங்கள் அம்மா சின்ன வயதில் எப்படித் திட்டுவார்கள்?

    பதிலளிநீக்கு
  18. ஹலோ திரு.வெங்கட்,
    நீங்கள் திருப்பராய்த்துறையைப் பற்றி எழுதியதைப் படித்ததும் மெய்,மெய்யாலுமே சிலிர்த்தது.எனக்கும் கூட அந்த ஊர் மிகவும் பரிச்சயம். எனது தாய்மாமர் தபோவனம் ஸ்கூலில் தலைமை ஆசிரியராக 60-களில் பணிபுரிந்தார். அதனால் அவ்வப்போது,அந்த புண்ணிய பூமியில் தவழும் பாக்கியம் எனக்கு கிட்டியது.தபோவனம் ஒதுக்கிய குடியிருப்பிலிருந்துகொண்டு ஓடும் ரயிலையும்,ஒய்யாரமாக ஆடும் மயிலையும் வேடிக்கை பார்ப்பதே எம் வாடிக்கை !! மயிலின் அகவல்கள் இப்போதும் காதில் ஒலிக்கிறதே...ஆஹா...அகண்ட காவிரியில் குளித்த அனுபவம்...அந்த ஊர் சத்திரம் ஒன்றில் நடந்த என் சித்தியின் திருமண வைபவம்..எதையுமே மறக்கமுடியாது...மீண்டும் ஒரு முறை திருப்பராய்த்துறை நினைவுகளில் என்னை முக்குளிக்க வைத்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி.(அடியேன் அவதரித்த ஜன்ம பூமியும் திருப்பராய்த்துறைதான் என்பதில் சிறிய கர்வமும் எனக்குண்டு!)

    பதிலளிநீக்கு
  19. முக்கொம்பு, குணசீலம் கோவில் எல்லாம் ஞாபகம் இருக்கா!!!

    திருப்பராய்த்துறை பள்ளி பற்றி அப்பா சொல்லக்கேள்வி. அந்தப் பக்கம் போகும்பொழுது பார்த்தும் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. திருப்பராய்த்துறை இயற்கை எழில் கொஞ்சும் இடம்.

    உங்கள் மலரும் நினைவுகள் அருமை.

    திருப்பராய்த்துறை இறைவன் உங்கள் ஆசையை நிறைவேற்றுவார்.

    பதிலளிநீக்கு
  21. /அதுவும் சாதாரணமான குளியல் அல்ல! காவேரியில் முங்கி முங்கி ஒரு மணி நேரமாவது ஆசை தீர குளியல்.//

    அட ஏங்க சென்னைவாசிங்களோட கடுப்பை கிளப்பறீங்க..

    பதிலளிநீக்கு
  22. @@ எல்.கே.: ஓ நீங்கள் போய் இருக்கீங்களா கார்த்திக். நல்ல ஊர். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக்.

    ## வேடந்தாங்கல் கருண்: அதுதானே. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

    @@ முத்துலெட்சுமி: நன்றி சகோ.

    ## சுந்தர்ஜி: வரவேண்டும்… பார்க்கலாம்….

    @@ ஆர்.வி.எஸ்.: பாடல் பெற்ற ஸ்தலம். கோவிலும் அருமையாய் இருக்கும். ”பெருசுன்னு சொல்வாங்க!” அப்படின்னு சொல்றீங்க! நமக்கு அப்படி என்ன வயசாச்சு? மனசிலே என்னிக்குமே நம்ம குழந்தைதான் மைனரே.. ‘போல்டா’ எழுதியது வேற ஒரு அன்பருக்காக… அது உங்களுக்கு கஷ்டமாப் போச்சு போல! இப்ப இரண்டுமே இல்லாம, வண்ணத்தினை மாற்றி விட்டேன். இது எப்படி இருக்கு? கஷ்டமா இல்லையே…

    ## வை. கோபாலகிருஷ்ணன்: நிறைய பாடல்கள் பெற்ற ஸ்தலம் இது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @@ மோகன் குமார்: நன்றி மோகன்.

    ## சித்ரா: நன்றி சித்ரா. நிறைய மனிதர்கள் மண் மணத்தோடு இருப்பதால் தானே நல்லா இருக்கு.

    @@ மனோ சாமிநாதன்: பல சமயங்களில் நல்ல நினைவுகளை அசை போடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா… வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## பத்மநாபன்: அந்த சாலையில் மாலை வேளைகளில் பசுமையையும், காவிரியில் ஓடும் தண்ணீரையும் ரசித்த படி நடந்து செல்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நண்பரே. நல்ல இடம் அது… வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    @@ ரத்னவேல்: மிக்க நன்றி ஐயா.

    ## மந்தவெளி நடராஜன்: தங்களது நீண்ட கருத்துரைக்கும், சொல்லிய விஷயத்திற்கும் மிக்க நன்றி.

    @@ ஆசியா உமர்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ## சென்னை பித்தன்: ஓ அல்லூரிலா? சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேட்டவாய்த்தலை செல்லும் வழியில் நடுவே வரும் இந்த அல்லூர். எங்கள் பெரியம்மா வீட்டிற்குக் கூட இந்த ஊரிலிருந்து ஒரு பெரியவர் வருவார்… கருத்திற்கு மிக்க நன்றி.

    @@ இராஜராஜேஸ்வரி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## துளசி கோபால்: நினைவுகள் தூண்டில் போட்டு இழுக்கின்றன….
    போகணும்… பார்க்கலாம்… வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ அமுதா கிருஷ்ணா: போய் வாருங்கள்… நல்ல கோவில், போகும் வழியிலேயே சுற்றுலாத் தளமான முக்கொம்பு கூட இருக்கிறது. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ## கே.பி.ஜனா: ஓ அப்படியா.. நீங்களும் சென்று வாருங்களேன்.. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி! உங்களுடைய கருத்துரை இல்லாமத்தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு…. சாயங்கால நேரமா வந்து இப்படி ஒரு கருத்து சொன்னதுக்கு நன்னி ஹை!

    ## லக்ஷ்மிநாராயணன்: ஓ, நீங்கள் பிறந்த ஊரா! ஊரின் பெருமை என்னை விட உங்களுக்கு இன்னும் அதிகமாய் தெரிந்திருக்கும். உங்கள் நினைவுகளைத் தூண்டும் விதத்தில் இப்பதிவு அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

    @@ Adam: உங்களது முதல் வருகை.. உங்களுக்குப் பெட்டவாய்த்தலை என்பது அறிந்து மகிழ்ச்சி.

    ## புதுகைத்தென்றல்: முக்கொம்பு, குணசீலம் எல்லாம் நினைவில் இருக்கிறது. முக்கொம்புதான் இந்த பாதையில் இருக்கிறது. குணசீலம் திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் இருக்கிறது. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @@ கோமதி அரசு: வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றிம்மா.

    ## !சிவகுமார்!: அடடா! அப்படி ஒன்று இருக்கிறதா! பரவாயில்லை.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே….

    இப்பதிவினைப் படித்த, கருத்துரைத்த, இண்ட்லி மற்றும் தமிழ்மணம் தளங்களில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. உங்களின் அழகான நினைவுகள் ஆற்றுக் குளியல் என்ன அனுபவம். எனது கிராமத்து நினைவைக் கிளறியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....