எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 9, 2011

காதலென்பது…


காதலுக்காகவும், காதலிக்காகவும் என்னென்ன செய்யலாம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது – ஏனெனில் கல்யாணத்துக்கு முன் நான் காதலித்ததில்லை. கல்யாணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்கும் போதுதான் அதெல்லாம் எனக்குத் தெரிந்தது.

என்னடா இது என்னிக்கும் இல்லாம இத்தனை பதிவுகளுக்குப் பிறகு இவன் காதல் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே என்று கேட்பவர்களுக்கான பதில் – மேலும் படியுங்க புரியும்.

சென்ற வாரத்தில் அலுவலகத்தில் ஒருவர் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போக, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கவும், நலம் விசாரிக்கவும் சென்றேன். அவருக்கு உடல் நிலை சற்று தேறிவிட்டதாகக் கூறி “பணம், சம்பாத்தியம் என்று எதுவுமே நிலையில்லை, உடல் நிலை கெட்ட பிறகு இப்படிப் படுத்துக் கொள்வது தான் நிலை!” என்றெல்லாம் பேசிவிட்டு, பக்கத்து படுக்கையில் இருந்த ஒருவரைக் காண்பித்தார். அங்கே...

24-25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் – ஜீன்ஸ் பேண்டும், மேலே பட்டன் போடாத சட்டையுமாய் படுத்திருந்தார். உடலில் மூன்று நான்கு இடங்களில் கட்டு, முகத்திலும் தலையிலும் பெரிய கட்டு. அவரைச் சுற்றி உறவினர்கள் அழுதபடி நின்றிருந்தார்கள். அவருடைய தாய் பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி, அவருக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவரைக் காண்பித்து, அவர் கதையைக் கூற ஆரம்பித்தார் – அது அவரது வார்த்தைகளிலேயே...

“ரமேஷ் ஒரு பெண்ணை ஒரு தலையாகக் காதலித்திருக்கிறார் –ஆனால் அந்தப் பெண் இவரைக் காதலிக்கவில்லையாம். ஆனாலும் அவரைத் தொடர்ந்து சென்று தனது காதலை பிரஸ்தாபித்திருக்கிறார்.

இவருடைய தொல்லை தாங்காமல் அந்தப் பெண் தனது சகோதரர்களிடம் விஷயத்தைக் கூற அவர்களும் இவரை எச்சரித்திருக்கிறார்கள். சிறிது நாட்கள் சும்மா இருந்த ரமேஷ் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவில் அந்தப் பெண் வீட்டிற்குச் செல்லும்போது அவரை பின் தொடரவும் பெண்ணின் சகோதரர்கள் இவரைத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

கை, கால்களில் அடித்தது மட்டுமில்லாமல் ஒரு கத்தியை எடுத்து வயிறு, மார்பு, இடுப்பு, முகம், தலை என்று ஐந்து இடங்களில் சரமாரியாகக் குத்தி இருக்கின்றனர். உடல் எங்கும் ரத்தம் அருவியாய்க் கொட்ட, இவர் தடுமாறியபடி விழவும், தாக்கியவர்கள் ஓடி விட்டார்களாம். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த யாரோ காவல்துறைக்குச் தகவல் அனுப்பவே இவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

இத்தனை நடந்தும், அவரின் அம்மா, மற்றும் நண்பர்கள் “அந்தப் பெண் யாருன்னு சொல்லு , பதிலுக்கு நாங்களும் ஏதாவது செய்கிறோம்! " என்று கேட்டதற்கு சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாயிருக்கிறாராம். ஏனென்றால் ”சொன்னால் அவளை கஷ்டப்படுத்துவ தோடல்லாமல், போலீஸ் வேற தொல்லை கொடுப்பானுங்க” என்று காரணம் சொல்கிறாராம் இன்னும் காதலோடு!

அட தேவுடா!

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.31 comments:

 1. நிகழ்கால
  நிகழ்வுகளை
  நிதர்சனமாய்
  நிலை
  நிறுத்திய பதிவு
  நெகிழ்வு

  ReplyDelete
 2. கை, கால்களில் அடித்தது மட்டுமில்லாமல் ஒரு கத்தியை எடுத்து வயிறு, மார்பு, இடுப்பு, முகம், தலை என்று ஐந்து இடங்களில் சரமாரியாகக் குத்தி இருக்கின்றனர்/// அட தேவுடா இவனுங்க திருந்த மாட்டானுன்களா?

  ReplyDelete
 3. அநியாயமா இருக்கு... அந்த பையனுக்கு physical கேர் மட்டும் போதாதுன்னு தோணுது...:((

  ReplyDelete
 4. அய்யோ பாவம்..
  இந்த காதல்தான் என்ன பாடுபடுத்துகிறது..

  ReplyDelete
 5. பாவம் தான் அந்த பையன்.

  ReplyDelete
 6. காதலென்றால் சும்மாவா, இதெல்லாம் சகஜமப்பா.

  காதலுக்கான பரிசு, சற்று மிகையாகவே கிடைத்துள்ளது. கேட்கவே மிகவும் கஷ்டமாகவே உள்ளது.

  இவ்வளவு அடிபட்ட பிறகும், அவர் மனம் “என்னைத்தாலாட்ட வருவாளா! நெஞ்சில் பூமஞ்சம் தருவாளா!” என்று பாடிக்கொண்டுதான் இருக்கும். அது தான் காதலின் சிறப்பு, தெரியுமோ?

  ReplyDelete
 7. நீங்க தப்பிச்சீங்க!
  கல்யாணத்துக்கு அப்புறம் மனைவியை காதலித்தால் மனைவியின் உடன் பிறப்புக்கள் உங்களை தலையில் வைத்துக் கொண்டாடும்!
  அதனால் காதல் அனுபவம் இல்லையே என்று வருந்த வேண்டாம்!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. இவரை பாராட்டவா? இவர் மேல் பரிதாபப்படவா? ம்ம்ம்ம்ம்ம்......

  ReplyDelete
 9. கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
  மண்ணில் குமரர்க்கு தர்மடியும் கொசுக்கடியாம்.

  ReplyDelete
 10. ஹஹா. காதல் வலையில் சிக்கிவிட்டால் இப்படிதான். நான் கூட உங்க காதல் கதைகளில் ஒன்று சொல்லப் போறீங்களோன்னு நினச்சேன்

  ReplyDelete
 11. காதலித்தவரின் நலன் எண்ணும் காதல் ..ஆகா..

  ReplyDelete
 12. உண்மையான காதலின் ரூபம் அதுதான்.

  நிறைவான காதல் குருதியையோ வலிகளையோ பொருட்படுத்துவதில்லை.

  ReplyDelete
 13. உடல் நிலை தேறியவுடன் மீண்டும் அப் பெண்ணைத்தொடர்ந்து அடி வாங்கத்தான் போகிறார் இந்த ஒரு தலைக் காதலர்!

  ReplyDelete
 14. ரமேஷ் மாதிரி ஆட்கள் அபூர்வமானவர்கள்! அவருக்கு விரைவில் பூரண குணமாக ஆண்டவனை வேண்டுகின்றேன்.

  உண்மையான காதலுக்கு விளக்கம் ஒன்னும் சொல்லமுடியாது. இதுவும் அபூர்வமே!

  ReplyDelete
 15. //கல்யாணத்துக்கு முன் நான் காதலித்ததில்லை.//

  அப்படியா! very bad! very bad!

  //கல்யாணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்கும் போதுதான் அதெல்லாம் எனக்குத் தெரிந்தது.//

  சைக்கிள் gap-ல் லாரி ஓட்டுவது என்பது இதுதானோ! நடக்கட்டும்! நடக்கட்டும்!

  இனி கதைக்கு வருவோம். இந்தப் பசங்களும் ஒரு பெண் மறுதலித்தால் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக இப்படி தாக்குதல் நடத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

  ReplyDelete
 16. காதலுக்குக் கண்ணில்லைங்கறது இது தானோ..

  ReplyDelete
 17. அன்பானவர் உடல் நலம் பெற்று, தன் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு, தாய் தந்தையர் மனம் மகிழும் படி வாழ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
  இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

  http://tamilthirati.corank.com

  ReplyDelete
 19. எல்லாம் காதல் படுத்தும் பாடு! பாவங்க அந்த புள்ளையாண்டான். உடம்பு தேறினபிறகு என்ன பண்ணுவானோ?

  ReplyDelete
 20. ஈஸ்வரனை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 21. ஓ, இதுக்குப்பேரு காதலா?

  ReplyDelete
 22. காயம் ஆறி வீடு திரும்புகையிலாவது
  அவன் மனம் திருந்தினால் நல்லது
  அல்லது சினிமா பாணியில்
  இனி இரக்கப்பட்டாவது காதலிக்கமாட்டாளா என
  நினைப்பானாகில் அவன் பாடுதான் கஷ்டம்
  பதிவும் தலைப்பும் அருமை

  ReplyDelete
 23. பேரைச் சொல்லி அவளையும் கஷ்டப்படுத்த விரும்பாத நல்லவர், விருப்பமில்லையென்று சொன்னபிறகும், ஏன் துரத்தி துரத்தி காதலித்து அப்பெண்ணைக் கஷ்டப்படுத்தினாராம்? கஷ்டம்!!

  ReplyDelete
 24. காதலெனும் காட்டாறு ரத்த ஆறு வரவழைத்துவிட்டது போலும்.

  ReplyDelete
 25. மொத்த பதிவையும் படித்து முடித்ததும்
  மிகச் சரியாக என்ன சொல்லலாம் என யோசிக்கையில்
  நீங்கள் போட்டிருந்த "தேவுடா "என்பதுதான் சரி என்பது போல் பட்டது
  இன்றைய இளைஞர்கள் மன நிலையை மிகச் சரியாகச்
  சொல்லிப் போகும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. பாவம்ங்க அந்த ரமேஷ்.அவரது காதல் மதிக்கப்படக்கூடியது தான்.ஆனால் கட்டாயப் படுத்தி வருவதில்லை காதல். இதை அவரும் புரிஞ்சிக்கணும்.

  ReplyDelete
 27. பெண்ணை தொடர்ந்து போய் தொல்லை படுத்தியது தப்பு. அந்தப் பெண்ணுடைய சகோதரர்கள் அவரை அடித்ததும் தப்பு. இந்த காட்டுமிராண்டித்தனம் எப்போது தான் குறையும்? அந்தப் பையனுக்கு கவுன்சிலிங்க் கொடுக்கணும்.

  ReplyDelete
 28. இந்த பகிர்வுக்கு கருத்துரைத்த அனைத்து நண்பர்கள், இண்ட்லி மற்றும் தமிழ் மணத்தில் வாக்களித்த அனைத்து நண்பர்கள் ஆகியோருக்கு எனது நன்றி…

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....