எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 22, 2011

எப்போது மாறும் இந்த காட்சிகள்?தில்லி-ஹரித்வார் நெடுஞ்சாலை.  ஹரித்வார் செல்லும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் இன்னோவா, மாருதி, டவேரா, பேருந்துகள் மற்றும் லாரிகள் என்று பலவிதமான வாகனங்கள் மணிக்கு 80-100 கிலோ மீட்டர் வேகத்தில் சர்ரென்று  பறந்து கொண்டிருக்கும் ஒரு சாலை.  சாலையின் இரு மருங்கிலும் நிறைய [Dhabha]தாபாக்கள் அதாவது உணவகங்கள்.

இத்தனை உணவகங்கள் இருந்தால் அத்தனையிலும் வியாபாரம் ஆகுமா என்னஅதனால் அவ்வழியே  செல்லும் வாகனங்களை நிறுத்தி அதில் பயணிக்கும் பயணிகளை அழைக்க இந்த உணவகங்கள் பணிக்கு அமர்த்தி இருப்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? பெரும்பாலும் சிறுவர்கள்தான்.

அதுவும் அவர்கள் சாலையின் ஓரத்திற்கே  வந்து கையை ஆட்டி அழைக்கும் போது வேகமாக வரும் வாகனங்கள் அவர்கள் மேல் மோதி அடிபட்டால் அவர்கள் கதி அதோகதிதான்.

சில நாட்களுக்கு  முன்பு  ஒரு நண்பருடன் ஹரித்வார் சென்றபோது சாலையின் இருமருங்கிலும் இப்படிப் பல சிறுவர்களைப் பார்க்க முடிந்தது.  ஒவ்வொரு சிறுவனும் பயணிகளை அவன் வேலை செய்யும் உணவகத்திற்கு அழைக்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறான்.  

நானும் நண்பரும் அப்படி ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிடும்போது பார்த்தால், வெளியே இருக்கும் சிறுவனைப் போலவே இன்னொரு  சிறுவன் கையில் நீண்ட குச்சியுடன் நின்று கொண்டிருந்தான்.  அவனது வேலை என்னன்னு பார்த்தா பக்கத்திலிருக்கும் மரத்தில் அமர்ந்திருக்கும் நான்கு குரங்குகள்  சாப்பிடும் நபர்களிடமிருந்து உணவைப் பறித்துக்கொள்ளாமல் தடுப்பதுதான்.  அந்தச் சிறுவனுக்கு இதுவும் கஷ்டமான வேலை தான்

மொத்தத்தில் அந்த உணவகத்தில் நான்கைந்து சிறுவர்கள் இது போல பல வேலைகள் செய்து கொண்டு இருந்தனர்.  இதையெல்லாம் யாரும் கேட்கவும் மாட்டேன் என்கிறார்கள்.  ஒரு சிறுவனை அழைத்துபடிக்கவில்லையா, இப்படி சிறு வயதில் வேலைக்கு வந்து விட்டாயே?” என்று கேட்டவுடன் அவன் கண்களில் ஒருவித  மிரட்சியுடன்  வேகமாக அடுத்த வேலையை கவனிக்கச்  சென்று விட்டான்

வெளியே இருந்த சிறுவனிடம் கேட்கலாம் என்றால் அவனும் வாகனங்களை நிறுத்துவதில் கவனமாய் இருக்க, உணவகத்தின் உரிமையாளர் வேறு  எங்களையே  முறைத்துக் கொண்டு இருக்கிறார் – “வந்தமா, சாப்பிட்டமா, போனமான்னு இரு!” என்று சொல்லாமல் சொல்லி.

இரண்டொரு நாட்களுக்கு முன்பு பேப்பரில் ஒரு செய்தி.  தில்லியில் உள்ள ஒரு தோல் பதனிடும்  தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த 40 சிறுவர்கள் மீட்கப்பட்டிருப்பதாக. தோலைப் பதப்படுத்தப்படும் போது வெளியாகும் அனைத்து நச்சுப் பொருட்களும் இந்த சிறார்களின் உடல் நிலையை எவ்வளவு பாதித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ!

குழந்தைத் தொழிலாளிகள் இல்லை என்று  நிறைய பேர் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்னமும் நமது நாட்டில் நிறைய குழந்தைகள் இப்படிப்பட்ட  உணவகங்களிலும் தொழிற்சாலைகளிலும், தீப்பெட்டி, பட்டாசு தயாரிக்கும் இடங்களிலும் வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்அவர்களது சிறு வயது ஆசைகளை, கல்வியை, விளையாட்டை பறித்து... ச்சே! நினைக்க நினைக்க மனசு வலிக்கிறதுஎப்போது மாறும் இந்த நிலைஎன்ன செய்யப் போகிறோம் நாம்என்னதான் செய்யப் போகிறார்கள் இந்த ஆட்சியாளர்களும், அரசும்? மனதில் அடுக்கடுக்காய் கேள்விகள்.   விடைதான் தெரிந்தபாடில்லை

மீண்டும் சந்திப்போம்.

வெங்கட்.

31 comments:

 1. மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.
  பாவம் அந்தச்சிறுவர்கள்.
  இளமையில் வறுமை மிகவும் கொடியது.
  என்ன செய்வதென்றே புரியாமல் மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ள விஷயம் தான்.
  பதிவுக்கும், அதை பலர் படிக்கச்செய்ததற்கும் நன்றிகள்.

  Voted 1 to 2 in Indli

  ReplyDelete
 2. வருத்தமான விஷயம் தான். தீர்க்க முடியாத பல பிரச்சனைகளில் இதுவும் ஒண்ணா இருக்கு. :((

  ReplyDelete
 3. மனம் வலிக்க வைத்த பதிவு சார்
  கொடுமையிலும் கொடுமை
  இளமையில் வறுமை
  இது மாதிரியான குழந்தைகள் அல்லது சிறுவர்கள் தான்
  அதிக வேலையும் குறைந்த ஊதியமும் பெற்று
  பல தகாத செயல்களை கண்டும் கேட்டும்
  பிஞ்சிலே பழுத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட தயங்குவதே இல்லை, இவர்களை படிக்க வைத்து நல்வழிப் படுத்தினால் தான்
  இளைஞர் சமுதாயம் சிறப்பான நிலையை அடையும்


  இதைப்பற்றியெல்லாம் அரசாங்கத்திற்கு என்ன கவலை இவர்கள் இப்படியே இருந்தால்தான் அவர்கள் ஆட்சிக்கு வரமுடியும் இல்லாவிடில் சமுகத்தில் மாற்றம் வந்து விடுமே விடுவார்களா அவர்கள்

  ReplyDelete
 4. மிகவும் வருத்தமாக இருக்கின்றது...தெரிந்தே இவ்வளவு குழந்தை வேலை செய்கின்றனர்...நமக்கு தெரியாமல் எவ்வளவு குழந்தை வேலை செய்வார்கள்....

  ReplyDelete
 5. இதை முற்றிலும் அழிக்க முடியாதா?மிக பாவம் அந்த குழந்தைகள்.

  ReplyDelete
 6. இன்றைய சமூக அவலங்களில் முக்கியமான ஒன்றை
  பதிவாக்கியது பாராட்டுக்குக்குரியது
  சட்டப்படியான நடவடிக்கைககள்
  ஆயிரம் இருந்தாலும்
  குடும்பச் சூழலே இந்த அவலத்திற்கு
  பிரதான காரணமாக இருக்கிறது
  சிந்திக்கவைக்கும் சிறப்பான பதிவு

  ReplyDelete
 7. சமீபத்தில் வறுமையைப் பற்றி படித்த ஒரு விஷயம் :

  அரசாங்கம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்க உருப்படியான வழி செய்யாமல் (அல்லது) தெரியாமல், வறுமைக் கோட்டின் அளவை(BPL index) உயர்த்தி விட்டார்களாம்...இப்படியாப்பட்ட சிந்தனை சிகர அரசுஅதிகாரிகளும் அமைச்சகங்களும் இயங்கும் வரை யதார்த்தம் நம்மை வேதனைப் படத்தான் செய்யும்.

  ReplyDelete
 8. இதெல்லாம் சரி . இந்த சினிமா / டிராமாவில் நடிப்பவர்களும் இவ்வகைத்தானே ??

  ReplyDelete
 9. பெற்றோர்களுக்கு சரியான வேலை வாய்ப்புக்கு வழி செய்ய வேண்டும் ...சிறுவர்களின் கல்வியோடு சமுகபாதுகாப்பையும் அரசே எற்க வேண்டும்...முயன்றால் முடியாததல்ல

  ReplyDelete
 10. வருத்தமான விடயம். முடிந்தபாடில்லை.

  ReplyDelete
 11. ச‌மீப‌த்தில் என‌து ம‌க‌னை விடுதியுட‌ன் கூடிய‌ ப‌ள்ளியில் சேர்க்க‌ச் சென்ற‌போது அங்கு உண‌வ‌க‌த்தில் மேசை துடைத்துக்கொண்டும், ச‌மைய‌ல‌றையைக் க‌ழுவி விட்டுக் கொண்டுமிருந்த‌ சுறுசுறுப்பும் உற்சாக‌முமான‌ ம‌க‌ன் வ‌ய‌தொத்த‌ சிறுவ‌ன் என்னுள் ஏற்ப‌டுத்திய‌ க‌ழிவிர‌க்க‌மும், இலேசான‌ கையாலாகாத் த‌ன‌த்தின் குற்ற‌வுண‌ர்வும் த‌ங்க‌ள் ப‌திவு வ‌ழி ம‌றுப‌டி ம‌ன‌தின் மேல‌டுக்கில் ப‌ர‌வுகிற‌து ச‌கோ... எழுதியும் பேசியும் ந‌ம‌து அங்க‌லாய்ப்பைக் குறைத்துக் கொள்ள‌ முய‌ல்வ‌தே ந‌ம்மாலான‌தாக‌ உள்ள‌து.விடியும் பொழுதெல்லாம் அனைவ‌ருக்குமான‌தாயில்லை என்ப‌து வேத‌னைக்குரிய‌தே.

  ReplyDelete
 12. வருத்த வைக்கும் விஷயம். யாரேனும் Public Interest Litigation தொடர்ந்தால் பிரச்சனை தீர வாய்ப்புண்டு

  ReplyDelete
 13. உங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் வெங்கட். இந்தக் கொடுமை ஒழிய அரசாங்கம் கடுமையான தண்டனைகள் விதித்தால் பலன் இருக்கலாம்.

  ReplyDelete
 14. இந்த சிறுவர்களின் அதிக் பட்ச தேவையே இரண்டு வேளை வயிறார உணவுதான். அது எங்கு கிடைக்கிரதோ அங்கு ஐக்கியமாகி விடுகிரார்கள்.

  ReplyDelete
 15. ”வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்
  பயிற்றிப் பல கல்வி தந்து இப்பாரை உயர்த்திட வேணும்”
  தொலைதூரக் கனவா?

  ReplyDelete
 16. 14 வயது வரை கட்டாய கல்வி மதிய உணவு இந்த 2 திட்டஙகளும்,மிகச்சரியானமுறையில் எப்பொழுது பராமரிக்கப்படுமோ அப்பொழுதான் இந்த குழைந்தை தொழிளாளர்களுக்கு ஒரு விடிவு வரும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 17. @ வை. கோபாலகிருஷ்ணன்: ”இளமையில் வறுமை என்பது கொடியது” - சத்தியமான வார்த்தைகள். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  # புதுகைத் தென்றல்: :((( சோகமான விஷயம் இளமையில் வறுமை.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 18. @ ஏ.ஆர். ராஜகோபாலன்: //இது மாதிரியான குழந்தைகள் அல்லது சிறுவர்கள் தான்
  அதிக வேலையும் குறைந்த ஊதியமும் பெற்று
  பல தகாத செயல்களை கண்டும் கேட்டும்
  பிஞ்சிலே பழுத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட தயங்குவதே இல்லை, இவர்களை படிக்க வைத்து நல்வழிப் படுத்தினால் தான் இளைஞர் சமுதாயம் சிறப்பான நிலையை அடையும்//

  தங்களது இக்கருத்து என்னுடையதும்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

  ReplyDelete
 19. @ கீதா ஆச்சல்: தெரிந்தும் தெரியாமலும் நிறைய குழந்தைத் தொழிலாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நிறைய குழந்தைகள் இதில் தள்ளப்படுகிறார்கள்... சில குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஓடிவந்து இது போன்று மாட்டிக் கொள்கிறார்கள். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  # அமுதா கிருஷ்ணா: பாவம்தான் அக் குழந்தைகள். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 20. @ ரமணி: தங்களது வருகைக்கும் சிந்தனையைத் தூண்டும் கருத்திற்கும் நன்றி.

  # எல்லென்: எப்படியாவது இந்தியாவினை வல்லரசாக, பணக்கார நாடாக காட்டிக்கொள்ள முயல்கிறது. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @ எல்.கே.: இருக்கலாம் கார்த்திக். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  # பத்மநாபன்: முயன்றால் முடியாததில்லை... அதானே.. அரசாங்கத்தினால் முடியாதது இல்லை... ஆனால் யார் மணி கட்டுவது என்று தான் காத்திருக்கின்றனர். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பத்துஜி!

  ReplyDelete
 21. @ மாதேவி: வருத்தமான விடயம்... உண்மை. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  # நிலாமகள்: உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோ. தினம் தினம் இது போன்ற சிறுவர்களைப் பார்க்கும்போது வருத்தம் தான் மிஞ்சுகிறது..

  @ மோகன்குமார்: பி.ஐ.எல். போடுவது ஒரு சரியான வழி என நினைக்கிறேன்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்...

  # மோகன்ஜி: தங்களது வருகைக்கும் என் எண்ணங்களை ஆமோதிப்பதற்கும் நன்றி மோகன்ஜி!

  ReplyDelete
 22. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மா...

  # சென்னை பித்தன்: தொலைதூரக் கனவாகத் தான் இருக்கிறது அய்யா... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

  @ ராம்வி: 14 வயது வரை கட்டாயக் கல்வி - இது நல்ல யோசனையாக இருக்கிறது சகோ.... தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 23. கொடுமைதான்.. எவ்வளவோ அநியாயங்கள்... பத்தோடு பதினொன்று.... யாரைக் குற்றம் சொல்ல? படிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் வகையிலா இருக்கிறது? ;-))

  ReplyDelete
 24. @ RVS: என்ன மைனரே... பத்தோட பதினொன்றாத்தான் விட்டு விடுகிறோம்... கருத்திற்கு நன்றி.

  # ஹுஸைனம்மா: உண்மைதான்! என்ன சொல்ல என்பதே தெரியாமல்தான் இருக்கு. கருத்திற்கு நன்றி.

  ReplyDelete
 25. மனசு வலிக்கிறது. ஆனால் அம்மாதிரி சூழ்நிலைகளில் எதுவும் செய்ய இயலாது திரும்பும் போது கொஞ்ச நாட்களுக்காவது உறுத்தலைச் சுமக்கிறோம்.

  ReplyDelete
 26. வருத்த வைக்கும் விஷயம்.

  ReplyDelete
 27. என் மனம் கவர்ந்த அன்பருக்கு
  நல்லதை சொல்லும் நண்பருக்கு
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  வாழ்வில் வளம் பல பெற்று
  வாழ மனம் நிறைந்து
  மனம் மகிழ்ந்து
  வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 28. @ ரிஷபன்: ”கொஞ்ச நாட்களுக்காவது உறுத்தலைச் சுமக்கிறோம்” சத்தியமான வார்த்தைகள்… தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரிஷபன் சார்..

  @ சே. குமார்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

  @ A.R. ராஜகோபாலன்: தங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே… உள்ளம் மகிழ்ந்தது…

  ReplyDelete
 29. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

  ReplyDelete
 30. @ கீதமஞ்சரி: தங்களது அன்பிற்கு நன்றி சகோ....

  வலைச்சரத்தில் மீண்டும் ஒரு அறிமுகம். கூடவே மகளின் கைவண்ணம் அறிமுகமும் முதல் முறையாய்... மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....