வெள்ளி, 22 ஜூலை, 2011

தலைநகரிலிருந்து - பகுதி 16




தலைநகரிலிருந்துதொடரில் வெளியே செல்ல முடியாத சூழல்களினால் இடைவெளி விழுந்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை. இதில் சில மாற்றங்களோடு இனி தொடரலாம் என்ற ஒரு எண்ணம்.  இதுவரை பார்க்க வேண்டிய இடம், உணவு வகை, ஹிந்தி என்று எழுதிக் கொண்டு இருந்ததிலிருந்து மாறுபட்டு நான் சந்திக்கும் பலவிதமான மனிதர்கள், பலதரப்பட்ட நிகழ்வுகள், வித்தியாசமான சில விஷயங்கள் என்று ஒரு கலவையாகத் தரலாம் என எண்ணியிருக்கிறேன்.  தலைநகரிலிருந்து தொடருக்கு தந்த ஆதரவு இப்பவும் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு.

பெயர் தெரியாத பூ: இப்போது இருக்கும் வீட்டின் அருகே நிறைய பூ மரங்கள் இருக்கின்றன.  அதில் ஒரு மரத்தில் உள்ள பூவின் வாசனை தெரு முழுவதும் காற்றிலே தவழ்ந்து வந்து நமது நாசியை முத்தமிட்டுச் செல்கிறது.  கொத்துக்கொத்தாக மரம் முழுவதும் பூத்துக் குலுங்குகிறது.  சிகப்பு வண்ணத்தில் இருக்கும் பூக்களின் நடுநடுவே அதே கொத்தில் சில வெள்ளைப் பூக்களும் இருக்கின்றன. ஆண்டவனின் படைப்பில்தான்  எத்தனை எத்தனை அதிசயங்கள்? ஒரே மரத்தில் இரு வித நிறங்களில் பூக்கள்.  பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது இது.  அந்தப் பூக்களின் சில புகைப்படங்கள் கீழே...




ஆலும் வேலும் பல்லுக்குறுதி:  இந்தியாவின் தலைநகர், மாநகரம் என்று அழைக்கப்பட்டாலும் இங்கே இன்னும் சில மனிதர்கள் தங்களுடைய வேர்களை மறந்து விடாமல் இப்போதும் காலையில் பல் துலக்குவது வேப்பங்குச்சியில்தான் என்று இருக்கிறார்கள்.  நான் இங்கே சொல்லப்போவது அதை பயன்படுத்துவர்களைப் பற்றியோ அல்லது அதன் லாப-நஷ்டங்களைப் பற்றியோ அல்ல.  இது வேப்பங்குச்சிகளை எடுத்து, 1/2 அடி அளவுக் குச்சிகளாக வெட்டி,  தினமும் நடைபாதையில் வைத்து விற்றுக் கொண்டு இருக்கும் ஒரு பெரியவரைப் பற்றியது.   






நான் பால் வாங்க "Mother Dairy" செல்லும்போது அதன் அருகே உள்ள நடைபாதையில் இந்த பெரியவரை தினமும் காலையில் பார்க்கிறேன்.  அவரின் கடையே ஒரு கிழிந்த சாக்குப் பைதான்.  அதன் மேல் குச்சிகளை அடுக்கி வைத்து, கேட்போருக்குக் கொடுத்து காசு பெறுகிறார்.  வயதான காலத்திலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருப்பதற்காகவே பாராட்டலாம்.  சென்ற மூன்று மாதங்களாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.  அவர் அங்கு இல்லாத நாள் இல்லை.  அத்தனை கடமை உணர்வு.  ”பாபுவும் அப்பாவும்சினிமா நட்சத்திர விளம்பரங்கள் ஏதும் இல்லாத, உழைப்பினால் தொடரும் வியாபாரம்.     நான் உபயோகிக்கிறேனோ இல்லையோ, அவருக்கு உதவி செய்த மாதிரி இருக்குமே என்று அவரிடம் வாங்க தினமும் தோன்றும்.  ஆனாலும் இது வரை வாங்கவில்லை.  நாளையாவது வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.  [23.07.2011 - இன்று அவரிடம் இரண்டு வேப்பங்குச்சிகள் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டேன்.  மனதிற்கும் அவருக்கு உதவிய ஒரு நிம்மதி].





க்ளஸ்டர் பஸ்:  தில்லியில் பல வருடங்களாக ரெட், ப்ளூ, ஒயிட் லைன் என்ற பேர்களில் இயங்கி வந்த தனியார் பேருந்துகளால் நிகழ்ந்த மோசமான உயிர் குடிக்கும் விபத்துகளால் மொத்தமாக முடக்கப்பட்டு அதற்குப் பதிலாகக்ளஸ்டர் பஸ்என்று புதிதாக ஒன்றை இப்போது தொடங்கி யிருக்கிறார்கள்.  தில்லியை சில க்ளஸ்டர்களாகப் பிரித்து ஒவ்வொரு க்ளஸ்டருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தினை டென்டர் மூலம் தேர்வு செய்து, அவர்கள் மூலம் பேருந்துகளை இயக்கப் போகிறார்களாம்.  இப்போதைக்கு ஒரு க்ளஸ்டர் பஸ் சேவையை தொடங்கியாகிவிட்டது.  ஏற்கனவே இருக்கும் DTC பச்சை நிற சாதாரண பேருந்துகள், சிவப்பு நிற குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இல்லாமல் இந்த க்ளஸ்டர் பேருந்துகள் ஆரஞ்சு நிறத்தில் தில்லியை வலம் வருகின்றன.   இப் பேருந்தில் பல வசதிகள் இருக்கின்றன.  இவை யாவுமே தாழ்தள பேருந்துகள். ஒவ்வொரு நிறுத்தம் வரும் முன் பேருந்திலேயே அடுத்த நிறுத்தம் என்ன என்கிற அறிவுப்புகள், டிக்கட் வழங்க நடத்துனருக்கு மெஷின்  [பார்க்கிங் டிக்கட் கொடுப்பவை போல], அவைகளிலிருந்து பெறப்படும் அச்சடித்த சீட்டுகளில், அந்த பயணம் எந்த நிறுத்தத்திலிருந்து எந்த நிறுத்தம் வரை செல்லலாம் என்ற விவரங்கள் என்று அசத்தலாக இருக்கிறது.  இந்த பேருந்துகள் எல்லாமே கதவுகள் மூடியபின் செல்வதால் படிகளில் தொங்கியபடி செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது.  பொதுவாகவே புதிதாக வரும்போது இருக்கும் வசதிகள் நீண்ட நாட்கள் தொடருவதில்லை.  ஆரம்பித்து மூன்று மாதங்களாக இது தொடர்ந்து இருக்கிறது என்பதே நல்ல விஷயம் தானே!

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கலாம்....

நட்புடன் 

வெங்கட்
புது தில்லி

56 கருத்துகள்:

  1. முத்தான மூன்றும் மனம் கவர்ந்தன. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் பாராட்டும்படியான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  3. எங்க தலையின் அபார நடையில்
    தலைநகரைப் பற்றி,
    தரும்
    தங்க
    தகவல்கள்
    அனைத்துமே
    அருமை.
    தலைநகர் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.
    நன்றி அன்பரே பகிர்ந்தமைக்கு

    பதிலளிநீக்கு
  4. இன்றாவது அந்த முதியவரிடம் அந்த குச்சிகளை வாங்கிவிடுங்களேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. # A.R. ராஜகோபாலன்: தங்களது அருமையான கருத்துரையால் மகிழ்ந்தேன் நண்பரே. நாளை கண்டிப்பாக வாங்கி விடுவேன்....

    தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. முதியவர் நெஞ்சைத் தொடுகிறார்.

    புட்போர்ட் பயணம் இந்நாளில் கிடையாதோ?

    பதிலளிநீக்கு
  7. நல்ல தகவல்கள். நல்ல பதிவு. நன்றி.
    Voted 4 to 5

    பதிலளிநீக்கு
  8. தலை நகரை எங்கள் ஊரிலிருந்தே
    மிகச் சிறப்பாக அறியச் செய்வதற்கு நன்றி
    நான் இரண்டு மாதங்களுக்கு முன்புதான்
    தலை நகர் வந்து திரும்பினேன்
    அந்த மெட்றோ ரயில் பயணமும்
    பாதுகாப்பு ஏற்பாடுகளும் என்னை மிகவும் கவர்ந்தன
    தொடர்ந்து தலை நகர் குறித்த தகவல்களை
    அறிய ஆவலாக உள்ளோம்
    நல்ல பயனூள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நீண்ட இடைவெளிக்குப் பிறகு "தலைநகரிலிருந்து"...தொடருங்கள் நண்பரே....

    முன்பு Blueline செய்த வேலையை இப்போதெல்லாம் கிராமின் சேவா என்ற பெயரில் இயங்கும் ஷேர் ஆட்டோக்கள் செய்கின்றன....

    பதிலளிநீக்கு
  10. @ அப்பாதுரை: இன்று அந்த முதியவரிடம் இரண்டு வேப்பங்குச்சிகள் வாங்கினேன். இரண்டு ரூபாய்தான்... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. # வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @ ரமணி: நீங்கள் தலைநகர் வந்திருந்த விஷயம் சொல்லவே இல்லையே... முன்னரே சொல்லி இருந்தால் சந்தித்து இருக்கலாமே...... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. # கலாநேசன்: தொடர்ந்த தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே. இப்போது DTC-இன் பேருந்துகளும் நிறைய விபத்துகளை உண்டாக்குகின்றன. ம்... பேருந்தின் நிறத்தினை மாற்றிவிட்டால் மட்டும் போதுமா, மனிதர்களின் மனநிலை மாறாதவரை ஒன்றும் திருந்தப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
  14. தலை நகர் பற்றி தகவல்கள் ..
    பகிர்வுக்கு நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  15. @ வேடந்தாங்கல் கருண்: தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

    பதிலளிநீக்கு
  16. தில்லிக்கு வரும்போதெல்லாம் என் பொறுமையை சோதிப்பது பேருந்துப் பயணங்கள்தான்! அதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி! நல்ல பகிர்வு வெங்கட்ஜீ!

    பதிலளிநீக்கு
  17. # சேட்டைக்காரன்: சில மாற்றங்கள் செய்து இருந்தாலும் இன்னமும் மாறவேண்டும் என்பதே எனது விருப்பமும் நண்பரே.. அரசு செய்வது மட்டுமல்லாது பயன்படுத்தும் நாமும் சில சமயங்களில் மாற வேண்டும்...

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை.

    பதிலளிநீக்கு
  18. ஃபுட்போர்ட் பயணங்கள் தவிர்க்கப்படுவதே ரொம்ப நல்லவிஷயம்,.. விபத்துகள் தவிர்க்கப்படுமே.

    பதிலளிநீக்கு
  19. பஸ்களில் கூட்டம் எப்படி இருக்கிறது?

    பதிலளிநீக்கு
  20. இங்கு இந்தப் பூவை ரங்கூன் மல்லிகை என்று அழைப்பார்கள்.கிராமங்களில் இருக்கிறது சிலர் குடை மல்லிகை என்றும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  21. இதுவரை பார்க்க வேண்டிய இடம், உணவு வகை, ஹிந்தி என்று எழுதிக் கொண்டு இருந்ததிலிருந்து மாறுபட்டு நான் சந்திக்கும் பலவிதமான மனிதர்கள், பலதரப்பட்ட நிகழ்வுகள், வித்தியாசமான சில விஷயங்கள் என்று ஒரு கலவையாகத் தரலாம் என எண்ணியிருக்கிறேன்.//

    அசத்துங்க அசத்துங்க மக்கா..........!!!

    பதிலளிநீக்கு
  22. உங்க பதிவைப் படிச்சுட்டு தில்லி வந்தா ஏதோ பழகின ஊருக்கு வந்திருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றும்!அருமை.

    பதிலளிநீக்கு
  23. என் சார்பாகவும் அந்த முதியவரிடம் ஒரு அணிந்து ஐந்து ரூபாய்க்கு குச்சிகளை வாங்குங்கள்..
    உங்களை அடுத்த முறை நேரில் சந்திக்கும் பொது ஐந்து ரூபாயை கொடுத்து விடுகிறேன்..
    (நவம்பர் மாத ஒன்பதாம் தேதி நான் தில்லியில் இருக்க வாப்புள்ளது.. )

    பதிலளிநீக்கு
  24. மூன்றும் அருமையான தகவல்கள். தலைநகரின் பேருந்து பற்றியும் அறிந்து கொண்டேன். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  25. @ அமைதிச்சாரல்: ஆமாம். தொங்கியபடி பயணம் செய்து ஆபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. # Dr.P.Kandaswamy: காலை, மாலை [அலுவலக] நேரங்களில் கூட்டம் சற்று அதிகமாகத் தான் இருக்கிறது. மற்றபடி பரவாயில்லை. தற்போது நிறைய பேருந்துகள் குளிரூட்டப்பட்ட பேருந்துகள் என்பதால் சற்று வசதியாகவும் இருக்கிறது.

    நீண்ட இடைவெளிக்குப் பின் எனது பக்கத்தில் தங்களது கருத்துரை. மிக்க மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு
  27. @ மாதேவி: ரங்கூன் மல்லிகை/குடை மல்லிகை. பெயர் சொன்ன உங்களுக்கு ஒரு கூடை பூக்கள் தரலாம் என என் துணைவி சொல்கிறார். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. # MANO நாஞ்சில் மனோ: அசத்திடுவோம் மக்கா! தங்களது வருகைக்கும் அசத்தும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  29. சென்னை பித்தன்: உங்களுக்கு இது பழகிய ஊர்தானே.... நீங்கள் எத்தனை வருடங்கள் இங்கு இருந்தீர்கள்?

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: வாங்கி விடுகிறேன்...

    நவம்பரில் தில்லி பயணமா? நல்லது. முன்கூட்டியே சொல்லுங்கள். சந்திக்க ஏதுவாக இருக்கும்.

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. # ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. தலைநகரைப் பற்றிய அருமையான மூன்று விஷயங்களை சொல்லியிருக்கீங்க.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. @ ஜிஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.. தில்லிக்கு திரும்பி வந்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  34. கேப் விட்டது பற்றி கவலை படாது மீண்டும் விடாது தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  35. # மோகன் குமார்: உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி மோகன். வேலைப்பளு சற்று அதிகம் இப்போது.

    பதிலளிநீக்கு
  36. தலைநகர் விஷயங்கள் உங்கள் பாணியில். பெரியவரை ஏனோ எல்லோர்க்கும் பிடித்திவிட்டது போலும்..

    பதிலளிநீக்கு
  37. @ மோகன்ஜி: பெரியவரை ஏனோ எல்லோர்க்கும் பிடித்து விட்டது :) உண்மை தான்..

    தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்ஜி!

    பதிலளிநீக்கு
  38. இங்கு ப‌ட‌ரும் கொடியாக‌ அப்பூச்செடி. ப‌க்க‌த்தில் ம‌ர‌மிருந்தால் ஏறிக்கொண்டு தொங்க‌விடும் கிளைக் கொடிக‌ளில் க‌ண்ணிக‌ள்தோறும் பூக்க‌ள் கொத்துக் கொத்தாக‌ தொங்குவ‌து வெகு அழ‌கு. ம‌ர‌மாக‌ ஆகியிருக்கிற‌தென்றால் அத‌ன் வ‌ய‌தை எண்ணி விய‌ப்ப‌டைகிறேன் ச‌கோ. அத‌ன் நீண்ட‌ காம்பை ச‌ற்று கிள்ளி ம‌ற்றொரு பூவித‌ழ் ந‌டுவிருக்கும் துளையில் செறுகி கோர்த்துக் கோர்த்து மாலை, தோர‌ண‌ங்க‌ளென‌ உருவாக்கி விளையாடும் எங்க‌ வீட்டுப் பொடிசுக‌ள். மாதேவி வ‌ழி நானும் அத‌ன்பெய‌ர‌றிந்தேன்... ந‌ன்றி, அவ‌ருக்கும் உங்க‌ளுக்கும்!
    உங்க‌ பெண்ணுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌வாவ‌து உத‌விய‌தே அவ்வ‌ய‌தான‌வ‌ரின் உழைப்பும் ந‌ம்பிக்கையும்... அவ‌ரின் வ‌ழுவ‌ழு த‌லை அதிக‌ வ‌சீக‌ர‌மாய்! ப‌ழ‌மையாகிப் போன‌வ‌ற்றை அழியாம‌ல் காப்பாற்ற‌வேனும் இத்த‌கைய‌ ந‌ப‌ர்க‌ள் வேண்டியிருக்கிறார்க‌ள்.
    க்ளாஸ்ட‌ர் ப‌ஸ் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் வெகு சுவை!

    பதிலளிநீக்கு
  39. # நிலாமகள்: தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி சகோ. அந்தப் பூக்களில் அப்படி ஒரு மணம், அதில் நடுநடுவே இருக்கும் வெள்ளை மலர்கள் என எல்லாமே ரசித்தேன் நான். பெயர் தெரிந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.

    பெரியவர் வழவழ தலை - :)

    தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  40. இட்லி பூ என்று இங்கே சொல்வார்களே... அது போல் உள்ளது...

    பதிலளிநீக்கு
  41. இந்த பஸ்ஸை இன்னும் பார்க்கவில்லை.. நல்லா நடந்தா இன்னும் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  42. @ ஸ்வர்ணரேக்கா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்களது கருத்துரை. மிக்க நன்றி சகோ. இட்லிபூ இன்னும் கொத்தாக இருக்கும் என நினைவு.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  43. # முத்துலெட்சுமி: ஒரு கிளஸ்டர் தானே ஆரம்பித்து இருக்கிறது. மற்ற கிளஸ்டர்கள் ஆரம்பிப்பதில் உள்ள பிரச்சனை - அந்த பேருந்துகளை நிறுத்த இடம் தேடிக்கொண்டு இருக்கிறார்களாம் :( தில்லி முழுவது சீக்கிரம் வந்துவிடும் என நம்புவோம்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. ஒரு நாள் வேப்பங்குச்சியில பல் விளக்கிப் பாருங்க தல. டேஸ்ட் நல்லா இருக்கும்.
    நல்ல பகிர்வு. தொடருங்கள். :-)

    பதிலளிநீக்கு
  45. நல்ல பதிவு. பிடியுங்கள் 100 மதிப்பெண்கள்.

    அந்தப் பூவினைப் பார்த்தால் பரவசமாய் வாசம் தரும் பன்னீர்ப்பூவிற்க்கும் கொத்தாய்ப் பூத்திருக்கும் தெத்திப்பூவிற்க்கும் பிறந்த கலப்பூ மாதிரி இருக்கு.

    உண்மையிலேயே தற்போதெல்லாம் தில்லியில் பேருந்துப் பயணம் இனிமையாகவே உள்ளது. கொஞ்சம் ‘Time Management' மட்டும் சரியானால் DTC - க்கும் லாபம் தரும்.

    அப்புறம் வேப்பங்குச்சிகளைப் பயன்படுத்தி விட்டீர்களா? எங்கே “ஈ...” காட்டுங்கள்.பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  46. நல்ல பதிவு...
    தொடர வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  47. பெரியவரின் கடமை உணர்வு பாராட்டுக்குரியது...பூக்களின் வண்ணம் அருமை

    பதிலளிநீக்கு
  48. @ RVS: வாங்க மைனரே... அலுவலகத்தில் ரொம்ப வேலை அதிகம் போல.... வேப்பங்குச்சியில் பல் துலக்கி இருக்கிறேன். அதன் சுவை தனிச் சுவைதான். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  49. # ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி. உங்க ட்ரேட் மார்க் பதில்..... :) இவ்வளவு யோசிக்கிற நீங்க பேசாம வலைப்பூ ஆரம்பிச்சிடலாம். எவ்வளவு நாளுக்குத் தான் கமெண்ட் மட்டும் போடுவோர் சங்கத் தலைவராகவே இருப்பீங்க.... :)))) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  50. @ Reverie: வாருங்கள் நண்பரே... உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  51. # பத்மநாபன்: வாருங்கள் நண்பரே.. பெரியவரின் கடமை உணர்வு நிச்சயம் பாராட்டுக்குரியது தான். வண்ணப்பூக்களையும் ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  52. விருட்சி பூ பிச்சிப் பூ இட்லி பூ ஒன்றுதான்

    குற்றாலம் போனபோது இட்லிபூ என்று ஒரு செடியை வாங்கினேன். அது வீட்டில் வந்ததும் பூத்தது. கிராமத்தில் பிச்சிப் பூ என்பார்கள். அதுபோல் இருந்தது. ஆனால் அது சிறு மரமாக இருக்கும். இது ரொம்ப குட்டி செடியாக உள்ளது. நெட்டில் தேடினேன். விருட்சி பூ பிச்சிப் பூ இட்லி பூ எல்லாம் ஒன்றுதான் என்று தெரிந்தது. ஆங்கிலத்தில் ixora என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  53. @ அசோகா: எனது வலைப்பூவில் தங்களது முதல் வருகை. அதுவும் நல்ல விஷயங்கள் சொல்ல வந்த வருகை. மிகவும் நன்றி நண்பரே. விருட்சி, பிச்சி, இட்லி பூ ஆகிய மூன்றுமே ஒரே மாதிரி என்பது ஆச்சரியம்...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  54. தாங்கள் குறிப்பிட்டுள்ள பூவை ஹிந்தியில் மதுமாலதி என்றும் தமிழில் கொலுசு பூ என்றும் கூறுவார்கள்.
    முதல் முறையாக உஙகள் வலைப்பூவை பார்த்தேன். எளிய நடையில் அழகாக எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  55. # சரஸ்வதி ரங்கநாதன்: தங்களது முதல் வருகை. மதுமாலதி... நல்ல பெயர் தான் இந்த பூவிற்கு. இதுவரை கேட்டதில்லை.

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....