புதன், 13 ஜூலை, 2011

தீன்….. [அட அதான்பா மூணு] - தொடர் பதிவு



The Three Musketeers என்ற நாவலை நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ ஆங்கிலப் பாடத்தில் படித்திருப்போம். அது போல 16 கேள்விகள் கேட்டு ஒவ்வொரு கேள்விக்கும் மும்மூன்று பதில்கள் எழுதச் சொல்லியிருக்கிறார் நமது மன்னை மைனர். இது தொடர்பதிவுகள் சீசன் போலிருக்கிறது. ஒரு வாரம் முன்பு தான் “நண்பேன்டா” தொடர்பதிவு எழுதினேன். இப்போது இந்த மூணு.... திருவிளையாடல் தருமி போல “எனக்குக் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்” என்று தப்பிக்க ஆசையிருந்தாலும் அதைவிட பதில் சொல்லும் ஆசையே வென்றது. [பதிவு எப்படியெல்லாம் தேத்துறீங்கன்னு யாரோ அங்கே சொல்றமாதிரி இருக்கே!]

ஏற்கனவே வலையுலக நண்பர்கள் ரிஷபன், சுந்தர்ஜி, A.R. ராஜகோபாலன், மற்றும் ராஜராஜேஸ்வரி ஆகியோர் இந்த தொடர்பதிவினை தொடர்ந்திருக்கின்றனர். இதோ “என் கேள்விக்கென்ன பதில்?” என்று கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

• தொல்லைகளில்லா எனது குழந்தைப் பருவம் மீண்டும் வேண்டும்.
• மூன்று விரும்பிய விஷயங்கள் எனும்போது என் மூன்று வருட கல்லூரி வாழ்க்கை அதில் நிச்சயம் ஒன்று.
• சில நேரங்களில் தனிமை அதுவும் மனித நடமாட்டமே இல்லாத, இவ்வுலகத்தின் எந்தத் தொடர்புமே இல்லாமல் இருக்கும் ஒரு வனாந்திரத்தில் இருக்கும் தனிமை.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

• சக மனிதனுக்குத் தொந்தரவு என்று தெரிந்தும் தன்னுடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிப்பவர்கள்.
• தனக்காக ஓட்டு போட்ட மக்களை தினம் தினம் ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலி அரசியல்வாதிகளும் அவர்களது அழுக்கு அரசியலும்.
• நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு விடும் சிலரின் செயல்கள்.


3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

• சிறு வயது முதலே ஊசி போட்டுக் கொள்ள பயம் [ எங்க ஊர் நெய்வேலி மருத்துவமனையில் முதலில் ஊசி போட்ட 120 கிலோ குண்டான நர்சம்மாதான் அதற்குக் காரணமாக இருந்திருப்பார்களோ என்று இப்போதும் நினைக்கத் தோன்றுகிறது ].
• நடைபாதையில் நடந்து செல்லும் போது எதிரே அசுர வேகத்தில் வந்து கொண்டு இருக்கும் இருசக்கர வாகனம். [எப்ப வேணா யார் மேலாவது மோதவேண்டும் என்றே எருமை மேலே எமன் வருவது போல இருக்கும்].
• சில சமயங்களில் என்னை நினைத்தாலே பயம் [நான் அடாவடியா சில விஷயங்களைச் செய்துடுவேனோன்னு]

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?

• மரணம் [என்றாவது ஒரு நாள் மரணம் நிச்சயம் என்றாலும் மரணம் சம்பவித்த பின் நடப்பது என்ன என்பது இன்று வரை புரியாத புதிர்].
• பெண்களின் மனசு [மனசுக்குள்ள என்னதான் நினைக்கிறாங்கன்னு இன்னும் புரியல...]
• இயற்கை – ஒரு நாள் அமைதியாக இருக்கும் கடல், அடுத்த நாள் கொந்தளிக்கும் நிலைக்குச் செல்வது ஏன்!

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

• இரண்டு சிறிய பூந்தொட்டிகள்.
• நண்பர் அகஸ்டஸின் “டீக்கடைச் சூரியன்” கவிதைத் தொகுப்பு.
• பதிவர் புதுகைத் தென்றல் தில்லி விஜயத்தின் போது அளித்த ஒரு அழகிய பிள்ளையார் பொம்மை.
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?

• என் மகள் [தவறு செய்துவிட்ட பின் ஒன்றுமே தெரியாத மாதிரி ஒரு தோற்றத்தினை முகத்தில் கொண்டு கண்ணிலேயே கள்ளத்தனம் காட்டும் போது சிரிக்கத்தானே தோன்றுகிறது.]
• எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகத் தன்னை கற்பனை செய்து கொண்டு எதிரில் இருப்பவருக்கு இது புரிந்தாலும் மேலும் மேலும் அந்த கற்பனையிலேயே திளைக்கும் மனிதர்கள்.
• இப்பவும் எப்பவும் டாம் அண்ட் ஜெர்ரி…. அதுவும் பூனையாரை பார்த்தாலே சிரிப்புதான் [அது என்ன குழந்தை மாதிரி எப்பவும் அதையே பார்த்துக்கிட்டு என்ற கேள்வி ஊட்டுக்காரியிடமிருந்து வந்தாலும்].

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

• அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப் போகும் ஒரு பயிற்சி வகுப்பிற்கான தயாரிப்பு [பல ஆண்டுகள் கழித்து வகுப்பறையில் உட்கார்ந்து படிக்கப்போகிறேன் என்ற படபடப்புடன்…]
• படிக்க வேண்டிய சில புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறேன் [எப்படியும் படித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன்].
• ”மூன்றாவதா கேள்விகளுக்கு மூணுமூணு பதில் எழுதிட்டு இருக்கேன் ” அப்படின்னு மொக்கையா எழுதலாமான்னு யோசிக்கிறேன்… :)

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

• இந்தியாவில் இது வரை செல்லாத மாநிலங்களுக்கு பயணம் செய்யவேண்டும்.
• காவிரிக்கரை ஓர கிராமத்தில் தோட்டத்துடன் கூடிய வீடு வாங்கி அங்கேயே வாழ்க்கையின் எல்லை வரை இருக்க வேண்டும்.
• முடியும் போதே அமர்நாத் பயணம், பனிலிங்கம் காணும் நோக்கம் மட்டுமே இல்லாமல், இயற்கை அன்னையின் எழிலைக்காணும் நோக்கத்துடனும் ஒரு வித சாகசப் பயணமாகவும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

• வருடத்திற்கு ஒரு முறையேனும் இல்லாத 100-200 ஏழைகளுக்கு வயிறார உணவு அளிக்கவேண்டும்.
• வருடத்திற்கு இரண்டு சிறுவர்களுக்கான படிப்பு செலவினை ஏற்றுக் கொண்டு அவர்கள் படிக்க உதவ வேண்டும்.
• முயன்றால் இன்னும் ஓரிரு மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் முயற்சி தான் செய்வதில்லை.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

• எந்த வீட்டிலும் அழுகை ஒலி... அது மரண வீடாக இருந்தாலும். [ஆசை தான் ஆனால் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது].
• எத்தனை பணம் இருந்தாலும், வசதி இருந்தாலும் “இல்லை பாட்டு” பாடுபவர்களின் புலம்பல்.
• மொழி மாற்றம் என்ற பெயரில் வேறு மொழி படங்களில் தமிழ் டப்பிங்-ல் பார்க்க/ஹாலிவுட் நடிகன் “இன்னா நைனா, நம்ம கிட்டயே ராங் காட்டறியே!” என்று பேசுவதை.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

• கோபத்தினை அடக்குவது எப்படி?
• இத்தனை வயசாச்சு, உனக்கு “சொடுக்கு” போட கூட வரல என்று கிண்டல் கேட்க முடியவில்லை. அதனால, இப்பல்லாம் சும்மா இருக்கிற நேரத்தில் கட்டை விரலையும் மோதிர விரலையும் சேர்த்து சொடுக்க முயற்சிக்கிறேன்... இரண்டு விரலும் தேய்ந்தது தான் மிச்சம்....
• எப்பவும் மனதினை லேசாக, கவலையின்றி வைத்துக் கொள்வது எப்படி?

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?

• அம்மா ஆசையோடு கொஞ்சமாய் அரிசிமாவு, கொஞ்சம் மோர், மோர் மிளகாய் போட்டு நிறைய பாசத்தோடு செய்து தரும் குழமா உப்புமா.
• சின்ன வெங்காயத்தினை சிறிது சிறிதாக வெட்டி கடலைமாவு, பச்சைமிளகாய், கொஞ்சமாய் இஞ்சி, உப்பு சேர்த்து செய்யும் மொறுமொறு பக்கோடா...
• சுடச்சுட கடலைப் பருப்பு போளி, மேலே நெய் ஊற்றி, வாயில் வைத்தவுடன் அப்படியே வயிற்றினுள் போகும் ஆனந்தம். மீண்டும் மீண்டும் வேண்டும் என சொல்ல வைக்கும்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

• பட்டு வண்ணச் சேலைக்காரி எனைத் தொட்டு வந்த சொந்தக்காரி.... [எங்கேயோ கேட்ட குரல் படத்திலிருந்து] [கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்பவே முணுமுணுத்தது....]
• அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் [கல்யாணம் ஆன அடுத்த நாளிலிருந்து....]
• செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்.... [என்ற அம்மணி பத்தி தான் சொல்றேனுங்க!]

14) பிடித்த மூன்று படங்கள்?

• குணா
• மௌனராகம்
• மணல்கயிறு

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

• மன அமைதி
• உடல் ஆரோக்கியம்
• போதிய உணவு

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

• சிறுமுயற்சி என்று தொடங்கி பல பதிவுகள் எழுதி விட்ட முத்துலெட்சுமி [அமெரிக்கப் பயணம் பற்றி எழுதும் முன் இதை எழுதி விட வேண்டும் என்ற விருப்பத்துடன்]
• என்னை வலையுலகுக்கு அறிமுகம் செய்த பதிவர் ரேகா ராகவன்.

அப்பாடா ஒரு வழியா 16 * 3 = 48 பதில்கள் சொல்லிவிட்டேன். நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் போட்டுடுவீங்க தானே…

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்…

நட்புடன்
வெங்கட்.


45 கருத்துகள்:

  1. மனதை மயக்கிய அற்புத பதில்கள் அன்பரே
    இன்னொரு சந்தோஷம் நம்மில் பல விஷயங்கள் வெவ்வேறு வர்ணங்களில் ,பிம்பங்களில் ஒத்துப்போவது
    அமர்க்களமான பதிவு
    தொடர்பவர்களுக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. @ A.R. ராஜகோபாலன்: தங்களது விரைவான கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே. நிறைய விஷயங்கள் ஒத்துப் போவதினால்தானே நாம் நண்பர்கள்.... :)

    பதிலளிநீக்கு
  3. சபாஷ். க.மு, க.பின்னு ரகம் பிரிச்சு பாட்டு கேக்குறீங்களா? நல்லா இருக்கு. ;-)

    பதிலளிநீக்கு
  4. @ RVS: க.மு..., க.பி... ஆமாம்.... அதானே நல்லது மைனரே.... :) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மன்னை மைனரே...

    பதிலளிநீக்கு
  5. மூன்று என்று கூறியதால் பிடித்தமான அதிரசம் விடுபட்டுவிட்டதோ?

    பதிலளிநீக்கு
  6. பதிவுலகில் பரிட்சை எழுதி ரொம்ப நாளா ஆச்சு வந்துடுச்சுய்யா அடுத்த பரிட்சை.. மூணு மூணு ஆன்ஸ்வரா ..ஆகா..

    இதுல பாருங்க கோவை டு தில்லிய மார்க்கை குறைப்பாங்க போலயே அதிரசத்தைக்காணோம்ன்னு..:)

    நன்றிங்க எழுதறேன்..

    இங்க பல பதில்கள் நான் சொன்னா எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறதே..

    மணல்கயிறெல்லாம் பாத்துட்டே இருக்கலாம் சிரிச்சிட்டே இருக்கலாம்..:))

    பதிலளிநீக்கு
  7. @ கோவை2தில்லி: அதிரசம்... ம்.... அது நாலாவது....

    # முத்துலெட்சுமி: அட ஆமாம் பரீட்சையை விட மோசமா இருக்கு இது.... மணல் கயிறு.... எப்பவும் பார்க்கலாம்... :) தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. தொடருங்களேன்... நேரம் கிடைக்கும்போது....

    @ மாதேவி: அட 48 :)ம் படித்தமைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பொதுவா இந்த தொடர் பதிவு எழுத கூப்பிட்டா தொடை நடுங்கும் எனக்கு..
    வரிசையா படிக்கும்போது அட.. நம்ம மனசை நமக்கே அடையாளம் காட்டுதேன்னு சந்தோஷமாயிடுது இப்ப.
    உங்க பங்குக்கு நீங்களும் ஜமாய்ச்சிட்டிங்க..
    உங்களுக்கு அமர்நாத். எனக்கு மானசரோவர்.
    ரேகா ராகவனைக் கூப்பிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.. எப்ப போடுவாரோ..

    பதிலளிநீக்கு
  9. // அப்பாடா ஒரு வழியா 16 * 3 = 48 பதில்கள் சொல்லிவிட்டேன். நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் போட்டுடுவீங்க தானே… //

    நோ.. நோ..
    அஞ்சு மார்க் கட்.
    நீங்க யாரையும் தொடர அழைக்காம இந்தப் பதிவு சங்கிலிய கட் பண்ணிட்டீங்களே, அதான்.

    பதிலளிநீக்கு
  10. # ரிஷபன்: நமக்கும் அதே தொடை நடுக்கம்தான்.... :)

    இந்தப் பக்கம் வரும்போது வாங்க.... அப்படியே இமயமலை சாரலிலே அப்படியே ஒரு நடை போயிட்டு வரலாம்.... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. # மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: அச்சசோ... நீங்க கடைசி கேள்விக்கான பதிலை ஒழுங்கா படிக்கலை... மூணு பேரை கூப்பிட்டு இருக்கேன். - சிறுமுயற்சி, ரேகா ராகவன், புதுகைத்தென்றல்.... லிங்க் குடுக்கல... :) அதுனால எனக்கு 100 மார்க் தான்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அனைத்தும் அருமையான, சிந்திக்கத்தக்க பதில்கள்!

    பதிலளிநீக்கு
  13. சரி.. சரி..
    லிங்க் (மூணு ) கொடுக்காததுக்கு மூணு மார்க்கு கட்.

    பதிலளிநீக்கு
  14. மாட்டி விட்டுட்டீங்களா சகோ!!!! :)))

    சரி நாளை பதிவு போடறேன். சொல்ல மறந்துட்டேனே உங்க பதில்களை ரசிச்சேன்.

    பதிலளிநீக்கு
  15. எல்லா பதில்களும் நல்லாயிருந்தது..

    பதிலளிநீக்கு
  16. 48க்கு 96 மார்க் தான். 4 மார்க் குரை(றை)ச்சலா பெஞ்ச்மேலே ஏறி நில்லுங்க.

    அருமையாய் பகிர்விற்கு பாராட்டுக்கள்.

    இம்போசிசனா இன்னும் 4 எழுதுங்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  17. முத்தான மூன்று பதில்கள்

    பதிலளிநீக்கு
  18. @ மனோ சாமிநாதன்:
    # பத்மநாபன்:
    @ அமுதா கிருஷ்ணன்:
    # ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி:
    @ கோமா:

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. @ சென்னைபித்தன்:
    # மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்:
    @ ராஜராஜேஸ்வரி:

    ஐ... எல்லாரும் மார்க் போட்டுட்டாங்க. நான் பாசாயிட்டேன்.... :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. @ புதுகைத்தென்றல்: தொடருங்கள் சகோ.... அதுக்குத்தானே இந்த அழைப்பே...

    தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. எங்க ஊர் நெய்வேலி மருத்துவமனையில் முதலில் ஊசி போட்ட 120 கிலோ குண்டான நர்சம்மாதான் அதற்குக் காரணமாக இருந்திருப்பார்களோ //
    :-))

    பதிலளிநீக்கு
  22. http://pudugaithendral.blogspot.com/2011/07/blog-post_14.html

    பதிவு போட்டாச்சு

    பதிலளிநீக்கு
  23. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்களைப்பத்தி மனசாட்சிக்கு பங்கமில்லாம சொன்னதுக்காகவே நூத்துக்கு நூறு மார்க் கொடுக்கறேன் :-))))

    பதிலளிநீக்கு
  24. @ நிலாமகள்: உண்மைதான் சகோ... அவங்ககிட்ட ஒரு தடவை ஊசி குத்தி அவஸ்தை பட்டுருக்கேன்... :) தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    # புதுகைத்தென்றல்: அழைப்பினை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சகோ...

    @ அமைதிச்சாரல்: உண்மைய சொல்றதுக்கு எதுக்கு அச்சம் சகோ.... :)))) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. //தீன்…//
    ஓகே வெங்கட் நீங்க தலைநகரில்தான் இருக்கீங்கன்னு ஒத்துக்கறேன்..

    அற்புதமான பதில்கள்.
    நீங்க 100/100 வாங்கிட்டீங்க...

    பதிலளிநீக்கு
  26. @ Ramvi: ஹையா... 100/100 வாங்கிட்டேனே.... எல்லாரும் மூணுன்னே எழுதினா... அதான் தீன்... :) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. //தனக்காக ஓட்டு போட்ட மக்களை தினம் தினம் ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலி அரசியல்வாதிகளும் அவர்களது அழுக்கு அரசியலும்//

    வெங்கட்...நானும் உங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன்..:)
    105/100...உங்களுக்கு...
    இப்படி தான் என் பொண்ணுக்கு மார்க் கொடுக்கிறாங்க பள்ளிக்கூடத்திலே..

    பதிலளிநீக்கு
  28. 333 சித்திரம் ஷவர் கர்டனாகவோ புடவைத் தலைப்பாகவோ அமையும்படி நல்ல டிசைன் போல் வந்திருக்கிறது.
    காவிரிக்கரையோரம்.. எனக்கும் ஏக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  29. பதில்கள் நன்று.லேட்ட வந்துட்டேன் இருந்தாலும் ஃபுல் மார்க்
    போட்டுடறேன்.உங்க பதிவுக்கு எக்ஸ்ப்லோரர் மூலமா கமென்ட்
    போட முடியல.

    பதிலளிநீக்கு
  30. //இப்பவும் எப்பவும் டாம் அண்ட் ஜெர்ரி…. அதுவும் பூனையாரை பார்த்தாலே சிரிப்புதான்//

    ஆமாம். ஆமாம். எலியாருக்கு பூனையாரை பார்த்தால் சிரிப்பு வரத்தான் செய்யும்.

    //அது என்ன குழந்தை மாதிரி எப்பவும் அதையே பார்த்துக்கிட்டு என்ற கேள்வி ஊட்டுக்காரியிடமிருந்து வந்தாலும்//

    புலியின் உறுமலுக்கெல்லாம் எலி பயந்துடுமா என்ன?

    (தீன் என்ற தலைப்பைப் பார்த்ததும் ’பக்ருதீன் - குத்புதீன் - அலாவுதீன்’ என்று மூவர் வரலாறு சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன்.)

    பதிலளிநீக்கு
  31. @ Reverie: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    # அப்பாதுரை: படம் உங்களுக்கும் பிடித்திருக்கிறது.... எனக்கும்.... :) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @ கே.பி.ஜனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    # ராஜி: 100/100 - நன்றி சகோ.... ஓ... ஐ.இ-ல பிரச்சனையா.... நான் கூகிள் குரோம் உபயோகிக்கிறேன்... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @ ஈஸ்வரன்: என்னை எலி யாக்கிட்டீங்களே அண்ணாச்சி... அதுகூட பரவாயில்லை,,, வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு :) தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. தெளிவான பதில்கள்
    ரசித்துப் படித்தேன்
    நிச்சயம் 100\100

    பதிலளிநீக்கு
  33. @ ரமணி: தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  34. http://sirumuyarchi.blogspot.com/2011/07/blog-post_20.html பதிவு எழுதிட்டேன்..:)

    பதிலளிநீக்கு
  35. # முத்துலெட்சுமி: எனது அழைப்பினை ஏற்று இந்த பதிவினைத் தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வருடத்திற்கு ஒரு முறையேனும் இல்லாத 100-200 ஏழைகளுக்கு வயிறார உணவு அளிக்கவேண்டும்.
    • வருடத்திற்கு இரண்டு சிறுவர்களுக்கான படிப்பு செலவினை ஏற்றுக் கொண்டு அவர்கள் படிக்க உதவ வேண்டும்// த‌ம்ப‌திக‌ளுக்கு ஒத்த‌ ம‌ன‌சிருப்ப‌து நெகிழ்வு ச‌கோ. ஒவ்வொருவ‌ரும் த‌ன்னாலிய‌ன்ற‌தை வ‌றுமைக்கும் த‌ள்ளாமைக்கும் அர்ப்ப‌ணித்தால் போதுமே... போதுமென்ற‌ ம‌ன‌சும், பிற‌ர்க்குத‌வும் த‌யாள‌மும் இறைய‌ருளை ஆக‌ர்ஷிக்க‌ வ‌ல்ல‌வை தானே!

    பதிலளிநீக்கு
  37. உங்கள் மூன்று தொடர் பதிவு காணவந்தேன் .ரசித்தேன் ..நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் காரியம் வெற்றியுடன் ஈடேற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  38. @ நிலாமகள்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ. நீண்ட நாள் கழித்து பதில் எழுதியமைக்கு வருந்துகிறேன்..

    பதிலளிநீக்கு
  39. # கோமா: //உங்கள் மூன்று தொடர் பதிவு காணவந்தேன் .ரசித்தேன் ..//

    ரசித்தமைக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களுக்குப் பின் என்னுடைய பழைய பகிர்வுக்கு ஒரு கருத்து வரும் போது ஆனந்தம்... :)

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....