எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 6, 2012

ஒரு பயணமும் அதன் நினைவுகளும்
உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக சென்னை செல்ல வேண்டியிருந்தது.  தில்லியிலிருந்து சென்னை செல்லும் துரந்தோ விரைவு வண்டியில் சனிக்கிழமை [10.12.2011] அன்று செல்வதற்காக  பயணச்சீட்டு பதிவு செய்து வைத்திருந்தேன்.  அன்று காலை சென்னையிலிருந்து தில்லி வந்து சேரவேண்டிய அதே வண்டி மெதுவாக மாலை 04.15 மணிக்கு வந்து சேர்ந்ததால், நான் செல்ல வேண்டிய வண்டி இரவு 09.45 மணி அளவில் சுமார் 6 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது. 

துரந்தோ விரைவு வண்டி ”[D]தீ[D]தி” [அக்கா] என செல்லமாக அழைக்கப்படும் மம்தா பேனர்ஜி ரயில்வே துறை மந்திரியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இந்த (விரைவு[!]) வண்டியில் சாதாரண பெட்டிகளும், குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இருக்கின்றன.  உணவுக்கும் சேர்த்தே பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்றனர்.  அது என்ன பாரபட்சமோ தெரியவில்லை – சாதாரண பெட்டிகளில் வரும் சாப்பாட்டிற்கும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வரும் சாப்பாட்டிற்கும் நிறைய வித்தியாசம்.

அதுவேனும் பரவாயில்லை – 25 ரூபாய் வாங்கிக் கொண்டு சாதாரண பெட்டிகளில் கொடுக்கும் படுக்கைகளில் –  அழுக்கான ஒரு தலையணையும் ஒரு சாதாரண படுக்கை விரிப்பும் மட்டுமே – கம்பளி கிடையாது.  ஆனால் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் சலவை செய்யப்பட்ட இரண்டு படுக்கை விரிப்புகளும், சுத்தமான தலையணையும், ஒரு கம்பளியும் [சென்னை – தில்லி வந்த போது குளிரூட்டப்பட்ட பெட்டியில் தான் பயணம் செய்தேன்.  அதனால் இந்த இரண்டிலும் இருக்கும் வித்தியாசங்கள் புரிந்தது!]  ஏனிந்த பாரபட்சமோ தெரியவில்லை.  வட இந்தியாவில் தப்போது இருக்கும் அதீதமான குளிரில் சாதாரண பெட்டிகளில் தான் கம்பளியின் தேவை அதிகம் என்னும்போது இந்த பாரபட்சம் இன்னும் அதிகம் துக்கப்படுத்துகிறது. 

அதே போல சாதாரண பெட்டிகளில் ஒவ்வொரு 8 இருக்கைகளுக்கும் அலைபேசி/மடிக்கணினி மின்னூட்டல் செய்ய வசதிகள் இருக்கின்றன.  ஆனால் ஒன்று கூட வேலை செய்யவில்லை.  பானிபத் நகரில் வேலை செய்யும் என்னுடன் பயணித்த ஒரு தமிழ் மின்சாரவியலாளர் அதைத் திறந்து பார்த்தபோது அதற்கு மின்சார இணைப்பே இல்லை என்பது தெரிந்தது.  அதுவே குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வேலை செய்கிறது.  எதற்கு இந்த தனி கவனிப்பு!

இன்னுமொன்றை  இந்த ரயில் பயணத்தின் போது அனுபவித்தேன்.  நீண்ட பயணம் என்பதால் அவரவர் தங்களது கை பேசியில் பாட்டு கேட்டபடி வந்தனர்.  சிலர் பரவாயில்லை காதில் ’ஹியரிங் எய்ட்’ போல மாட்டியபடி கேட்டனர்.  ஆனால் நான் சொல்ல வந்தது அவர்களைப் பற்றி அல்ல.  சத்தமாக பாட்டு கேட்டபடி வந்த சிலரைப் பற்றியே.  இரவு 09.30 மணிக்கு மேல் தான் வண்டி கிளம்பியது என எல்லோரும் நொந்து கொண்டிருக்க, ஒருவருக்கு என்ன கவலையோ[!] தெரியவில்லை – அவர் கேட்ட பாட்டு அப்படி – என்ன பாட்டுன்னு கேட்கறீங்களா? இரவு 11.30 அளவில் அவர் சத்தமாக வைத்து கேட்ட பாட்டு – கேப்டனின் “ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி!”.  கொடுமைடா சாமி!

சுத்தம் என்றால் என்னவென்று இந்தத் துறைக்கு யாரேனும் சொல்லித்தரவேண்டும். பயணம் செய்யும் நபர்களை விட எலிகளும், கரப்பான் பூச்சிகளும் அதிகமாகவே இருக்கின்றன!  ஒரு வேளை அவைகளும்  மாதாந்திர பயணச் சீட்டுகள் வாங்கி வைத்திருக்கின்றனவோ என்னவோ…

இப்படியாக பயணம் செய்து, 6 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதன் விளைவு அதை அப்படியே பராமரித்து சென்னையில் அகால வேளையில் அதாவது இரவு 02.50 மணிக்கு கொண்டு தள்ளியது துரந்தோ!  இறங்கிய உடன் கேட்ட பாட்டு – ”ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா!”  பாடியவர் – வண்டியிலிருந்து பெட்டிகளை இறக்கிக் கொண்டு இருந்த ஒரு கூலி!  ஆஹா என்ன ஒரு பாடல்…  சரியாக சேர்ந்திருந்தால் திருச்சி செல்ல மலைக்கோட்டை விரைவு வண்டி பிடித்திருக்க முடியும்.  சேராததால், அதில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை இரத்து செய்துவிட்டு பேருந்து மூலம் பயணம் செய்ய வேண்டியதாயிற்று.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 08.00 மணிக்கு புறப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்தில் திருச்சிக்குப் புறப்பட்டேன்.  துரந்தோவில் தான் சுத்தம் இல்லையென்றால் கோயம்பேடும் அப்படியே!  அங்கிருந்த பொதுக் கழிப்பறை – மூக்கை மொத்தமாக அடைத்துக் கொண்டோ அல்லது அறுத்து எறிந்துவிட்டோ தான் பயன்படுத்த வேண்டும்…சமீபத்திய பயணச்சீட்டுகள் விலையேற்றமோ என்ன காரணமோ தெரியவில்லை – பேருந்தில் மொத்தமாகவே 10-12 பயணிகள் தான் – அதுவும் கோயம்பேடு நிலையத்திலிருந்து திருச்சி சென்றது நான் மட்டுமே – மற்றவர்கள் வழியில் இறங்குபவர்கள்…  பேருந்து பயணத்தில் ரசித்த ஒரு விஷயம் – புதியதாய் [எனக்கு!] இருக்கும் நெடுஞ்சாலையில் நடுவே இருக்கும் பூச்செடிகள்….  கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்ததை ரசித்தேன். 

இந்த பயணத்தில் எனக்குப் பிடித்த விஷயம் திருச்சியிலும் சென்னையிலும் சில வலைப்பதிவர்களை சந்திக்க முடிந்ததுதான்.  திருச்சியில் திரு ரிஷபன், திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி மற்றும் திரு வை. கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் சென்னையில் திரு மோகன் குமார் மற்றும் திரு ஆர்.வி.எஸ். அவர்களையும் சந்தித்து அவர்களுடன் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.  இன்னும் சில பதிவர்களை சந்திக்க நினைத்திருந்தும் நேரப் பற்றாக்குறையின் காரணமாக முடியவில்லை.  அடுத்த பயணத்தின் போது பார்க்கலாம்!


மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

55 comments:

 1. இந்த பயணத்தில் எனக்குப் பிடித்த விஷயம் திருச்சியிலும் சென்னையிலும் சில வலைப்பதிவர்களை சந்திக்க முடிந்ததுதான்.

  வாழ்த்துகள்..

  பயணம் கசந்தாலும் இனிய பதிவர் சந்திப்பு..

  ReplyDelete
 2. உள்ளதை உள்ளபடி விரிவாகச் சொல்லி விட்டீர்கள். இதுதான் நம் இந்திய ரயில்வேயின் நிலை!
  நன்று

  ReplyDelete
 3. உள்ளதை உள்ளபடி........

  ஹூம்..... நம்ம மக்கள்ஸ்க்கு சுத்தம் என்ற சொல்லே புரியலைபோல:(

  தெருவில் நடக்கமுடியுதா? மூக்கை அறுத்துதான் எறியணும்:(

  ReplyDelete
 4. பதிவர்களை சந்தித்தது மட்டுமே மனதுக்கு சந்தோஷம் தந்த விஷயம். குளிரூட்டப்பட கம்பார்ட்மென்களில் நானும் நிறைய அவஸ்தைகள் பட்டிருக்கேன் குறுக்கும் நெடுக்கும் ஓடு குட்டி எலிகளை விட்டுட்டீங்களே. அதுதான் பாதுகாப்பானபயணமாக இருக்கும் என்று அதில் போனால் மற்ற அசௌக்ரியங்களை சமாளிக்கத்தான் வேண்டி இருக்கு.

  ReplyDelete
 5. இரயில்வே துறை குறித்து பலருக்கும் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

  சந்திப்புகள் அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 6. இம்புட்டு கஷ்டப்பட்டு வந்தீங்களா? சொல்லவே இல்லை?

  உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நீங்கள் வந்ததால் தான் அடுத்த தெருவில் இருக்கும் RVS-ஐயும் முதல் முறையாக சந்திக்க முடிந்தது :))

  ReplyDelete
 7. //இந்த பயணத்தில் எனக்குப் பிடித்த விஷயம் திருச்சியிலும் சென்னையிலும் சில வலைப்பதிவர்களை சந்திக்க முடிந்ததுதான்.// பாராட்டுக்கள்!

  ReplyDelete
 8. Didi வண்டியில் Didi வீட்டுக் கல்யாணத்துகான பயணமா?

  பேருந்துகளிலும் பெரும்பாலும் video coach வண்டிகள் தான் இருக்கின்றன. அதில் வரும் தலைவலி தனியாக சொல்ல வேண்டும். நல்ல வேளை, video coach இல்லை போலிருக்கிறது.

  ReplyDelete
 9. இதுபோன்ற பயண அனுபவங்கள் நிறையவே அனுபவித்து விட்டதால் தான், நான் இப்போதெல்லாம், பயணம் செய்யவே விரும்புவது இல்லை.

  அப்படியே தவிர்க்க முடியாத நிலமைகளில், தமிழ்நாட்டுக்குள் என்றால், அதிக பணம் ஆனாலும், மிகவும் செளகர்யங்கள் உள்ளதாக இருக்கும் தனி AC வண்டியை புக் செய்து கொள்வேன், அதுவும் போக வர என்று பேசிக்கொள்வேன்.

  அதுவும் 7 பேர்கள் அமரும் வண்டியாக (டாடா சுமோ போல) எடுத்து 4 அல்லது 5 பேர்கள் மட்டுமே பயணம் செய்வோம்.

  எப்போதும் 2 இருக்கைகளாகவது எனக்குக் காலியாக இருக்கணும். ஒருவர் மேல் ஒருவர் உரசியபடி சென்றால் AC வண்டியாக இருந்தாலுமே எரிச்சல் தான் அதிகமாகும்.

  மற்ற மாநிலங்களுக்குச் செல்வதை கடந்த 5 வருடங்களாக சுத்தமாக நிறுத்தி விட்டேன்.

  ஒருவேளை போக நேர்ந்தால் கட்டாயம் விமானத்தில் தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாச்சு.

  இவ்வளவு கஷ்டப்பட்டு தாங்கள் சென்னைக்கும் திருச்சிக்கும் வந்துள்ளீர்களே! பாவம்!

  நம் நாடு இன்னும் சுத்தம்+சுகாதாரத்தில் நிறையவே வளர வேண்டும் தான். மறுப்பதற்கு இல்லை.

  இருப்பினும் உங்களை சந்தித்ததில் எங்களுக்கும், மிகுந்த சந்தோஷமே. குறிப்பாக எனக்கு அளவிட முடியாத சந்தோஷமே ஏற்பட்டது. அன்புடன் vgk

  ReplyDelete
 10. பல இன்னல்களுக்கு நடுவிலும் நட்பின் சந்திப்பு இன்பத்தை தந்திருக்கும் அளவில் சந்தோசம் நல்ல பகிர்வு

  ReplyDelete
 11. //”[D]தீ[D]தி” [அக்கா] என செல்லமாக அழைக்கப்படும் மம்தா பேனர்ஜி//

  எதுக்கு initial. அவங்க Didi இல்ல, தீ! தீ! இப்போ காங்கிரசையே சுட்டுக்கிட்டிருக்காங்க.

  //எலிகளும், கரப்பான் பூச்சிகளும் அதிகமாகவே இருக்கின்றன!//

  உயிர்களிடத்தில் அன்பு வேணும்!
  தெய்வம் உண்மையென்று தானுணர்தல் வேணும்!

  ரயிலில் சாதாரணப் பெட்டியில் செல்வதன் சுகமே, அந்தக் கலவையான மனிதர்கள்தானே! 2AC- ல் இந்தக் கலவையை miss செய்கிறீர்களா! இல்லையா?

  6 மணி நேரத் தாமதம் உங்களை இவற்றை ரசிக்க விடாமல் செய்து விட்டதோ! இப்படிப்பட்ட கலவையான அனுபவம்தானே இந்தப் பதிவுக்கு காரணம்.

  (மவனே! துரந்தோ ரயிலில் (D)தீரே (D)தீரே சலோ! அதுவும் சாதா(ரண) வகுப்பில் போய்ப் பாருன்னு சொல்வது கேட்கிறது!)

  ReplyDelete
 12. ரயில்வே துறையினர் மீது
  நமக்கு இருக்கும் அவநம்பிக்கைகள்
  ஏராளம் ஏராளம்..
  அதைக் கட்டுரையில் அழகாக
  கொண்டு வந்திருக்கிறீர்கள் நண்பரே.

  ReplyDelete
 13. அழகான ஒப்பீட்டு பதிவு பணத்தின் பயனால் வரும் ஏற்றத்தாழ்வுகளை சொன்னது.

  ReplyDelete
 14. சுத்தமா இருங்கன்னு சொன்னாலே ஏதோ சொல்லக்கூடாததை சொல்லிட்ட மாதிரி அலறுறாங்க மக்கள். ரயில் பயணத்தின் சங்கடங்களை உள்ளபடியே சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 15. நல்ல பயணக்கட்டுரை பாஸ்

  ReplyDelete
 16. இரவு 11.30 அளவில் அவர் சத்தமாக வைத்து கேட்ட பாட்டு – கேப்டனின் “ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி!”. கொடுமைடா சாமி!//

  ஐயோ இந்த கொடுமை எனக்கும் நடந்து இருக்கு, மும்பை டூ நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்'ல போகும்போது நடு இரவு ஒருத்தன் சத்தமா பாட்டு போட்டு கேட்டுட்டு இருந்தான், சத்தத்தை கம்மி பண்ணுன்னு சொன்னதும் சத்தத்தை குறைத்தவன், மீண்டும் கொஞ்ச கொஞ்சமாக பழையபடி கூட்டிவிட்டான், அடிக்க பாய்ந்து விட்டேன், சகபயணிகள் எல்லோரும் அவனை திட்டினபின்புதான் அடங்கினான்...!!!

  ReplyDelete
 17. ரயில்வேதுறைக்குன்னு தனியா சுகாதாரதுறை அமைச்சாலும் உருப்படாது...!!!

  ReplyDelete
 18. நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்றால் சும்மாவா எலியார், கரப்பார் :(( எல்லாரையும் தாண்டித்தான் போகவேண்டும் :))

  ReplyDelete
 19. நல்ல அனுபவம்.அந்த பாட்டு விசியம்,அதான் சதிங்கிறது.அன்ரிச்ர்வ்டில் போறவங்களையும்,அந்த ரயில் பெட்டிகளையும் பார்த்தா இந்தியாவின் நிலையை உலகம் தெரிந்துகொள்ளும்.

  ReplyDelete
 20. இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தீங்களா.. த்சோ.. த்சோ..
  அது துரந்தோ இல்ல.. மூடுயோன்னு பேர் வச்சிரலாம்..

  ReplyDelete
 21. நண்பரே! முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட இரு க்கையில் போனாலும்,வாரணாசியிலும்,போபாலிலும், விஜயவாடாவிலும் பயணச்சிட்டு வாங்கமுடியாத வறுமையில் வண்டியில் ஏறி எப்போது, யார், எங்கே, இறக்கிவிடுவார்களோ என்று பயந்து சாகும் கிழவியின் முகம் பயண சுகத்தைக் கெடுத்துவிடுகிறதே ஐயா! அவர்களும் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய முடியுமா என்று நினைவு வருகிறதே! ---காஸ்யபன்

  ReplyDelete
 22. ஃபாஸ்ட் ரயிலில் இந்த அனுபவமா.எலிகள் நடமாட்டம்!சத்தப் பாட்டு. இதற்கு நாங்கள் இளவயதில் சென்ற மூன்றாம் வகுப்பு மரக்கட்டை சீட் வண்டிகளே தேவலை.:(

  ReplyDelete
 23. பயண அவஸ்தை அனுபங்களைப் படிக்க
  சங்கடமாக இருந்தது
  நீங்கள் குறிப்பிடுவதைப் போல பாரபட்சம்
  இன்னும் எரிச்ச்சலூட்டியது
  விரிவான பகிர்வுக்கு நன்றி
  த.ம 11

  ReplyDelete
 24. @ இராஜராஜேஸ்வரி: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உண்மை தான் பதிவர்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி....

  ReplyDelete
 25. @ சென்னை பித்தன்: உண்மை... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 26. @ துளசி கோபால்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. @ லக்ஷ்மி: கஷ்டம்தான் அம்மா....

  உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 28. @ ராமலக்ஷ்மி: //இரயில்வே துறை குறித்து பலருக்கும் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.// ம்... உண்மை தான் சகோ....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....

  ReplyDelete
 29. @ மோகன்குமார்: //இம்புட்டு கஷ்டப்பட்டு வந்தீங்களா? சொல்லவே இல்லை? // சந்தித்த சில மணித்துளிகளில் அதை சொல்வதில் எனக்கு விருப்பமில்லை :))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

  ReplyDelete
 30. @ கே.பி.ஜனா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: தீதி வீட்டுக் கல்யாணம் :)

  நல்லவேளை பேருந்தில் வீடியோ போடவில்லை... நீ ஒரு முறை திருப்பதி செல்லும்போது “காதலன்” படம் போட்டு வெறுப்பேத்தியதைச் சொன்னது நினைவுக்கு வருகிறது....

  உன்னுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு....

  ReplyDelete
 32. @ வை. கோபாலகிருஷ்ணன்: //இருப்பினும் உங்களை சந்தித்ததில் எங்களுக்கும், மிகுந்த சந்தோஷமே. குறிப்பாக எனக்கு அளவிட முடியாத சந்தோஷமே ஏற்பட்டது. // எனக்கும் அதில் மிகுந்த சந்தோஷம்...

  உங்களது அனுபவங்களையும் கருத்தில் சொன்னமைக்கு நன்றி.

  ReplyDelete
 33. @ சசிகலா: தங்களது முதல் வருகை? உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. @ ஈஸ்வரன்: //(மவனே! துரந்தோ ரயிலில் (D)தீரே (D)தீரே சலோ! அதுவும் சாதா(ரண) வகுப்பில் போய்ப் பாருன்னு சொல்வது கேட்கிறது!)// ஆஹா அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்... நமக்குதான் இப்படி போய் வருவதே வேலையாகிவிட்டதே.... :(

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 35. @ மகேந்திரன்: உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete
 36. @ அமைதிச்சாரல்: உண்மைதான்... சுத்தம் என்றால் நம்மையே சுத்தமாகப் பிடிக்காது போய்விடுகிறது சிலருக்கு..... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 37. @ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 38. @ MANO நாஞ்சில் மனோ: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மக்கா...

  ReplyDelete
 39. @ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.....

  ReplyDelete
 40. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி.

  ReplyDelete
 41. @ ரிஷபன்: //அது துரந்தோ இல்ல.. மூடுயோன்னு பேர் வச்சிரலாம்..// :))))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....

  ReplyDelete
 42. @ காஸ்யபன்: // முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட இருக்கையில் போனாலும், வாரணாசியிலும், போபாலிலும், விஜயவாடாவிலும் பயணச்சிட்டு வாங்கமுடியாத வறுமையில் வண்டியில் ஏறி எப்போது, யார், எங்கே, இறக்கிவிடுவார்களோ என்று பயந்து சாகும் கிழவியின் முகம் பயண சுகத்தைக் கெடுத்துவிடுகிறதே ஐயா! // உண்மை... வண்டியில் மட்டுமல்ல, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இது போன்ற நிறைய பேரைப் பார்க்கும்போது வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது....

  உங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.....

  ReplyDelete
 43. @ வல்லிசிம்ஹன்: //ஃபாஸ்ட் ரயிலில் இந்த அனுபவமா.எலிகள் நடமாட்டம்!சத்தப் பாட்டு. இதற்கு நாங்கள் இளவயதில் சென்ற மூன்றாம் வகுப்பு மரக்கட்டை சீட் வண்டிகளே தேவலை.:(//

  அதில் பயணம் செய்வதும் ஒரு சுகம்தான்... 9-10 வயதில் ஒரு முறையோ என்னமோ பயணம் செய்திருக்கிறேன் - 1980-81 என நினைக்கிறேன்....

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 44. @ அன்புடன் அருணா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. @ ரமணி: //நீங்கள் குறிப்பிடுவதைப் போல பாரபட்சம்
  இன்னும் எரிச்ச்சலூட்டியது//

  நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதால் தான்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 46. பதிவர் சந்திப்புக்கு மகிழ்ச்சி .
  ரயில் அனுபவங்கள் கசப்பாவனைகள்தான்.
  பணத்திற்கு தான் மதிப்பு,

  ReplyDelete
 47. மயிரிழையில் தவறவிட்டுவிட்டேன் வெங்கட். நீங்கள் திருச்சி வந்தபோது நான் தஞ்சையில் இருந்தேன்.ஆனால் ராமமூர்த்தி சார் சொல்லி எனக்குத் தாமதமாகத்தான் தெரியும்.

  ReplyDelete
 48. ஆகா, பதிவர் சந்திப்புலாம் நடந்ததா? ம் ம்ம் நடத்துங்க நடத்துங்க சகோ

  ReplyDelete
 49. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றிம்மா....

  வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் நேரத்திலும் என் பக்கம் வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 50. @ சுந்தர்ஜி: அடாடா! சென்னை வரும்போது உங்களையும் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். சௌகரியம் எப்படி இருக்குமோ என்றுதான் தெரிவிக்கவில்லை. நீங்கள் சொன்ன பிறகு தான் புரிகிறது திருச்சியிலேயே சந்தித்திருக்கலாம் என! பரவாயில்லை அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்.....

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!

  ReplyDelete
 51. @ ராஜி: ம்... நடத்திடுவோம்.... உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 52. ரயில் பயணத்தைப் பற்றி விளாசித் தள்ளிவிட்டீகள்..கோயம்பேடு பேருந்து நிலையம் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் சொன்னது போல சுத்தம் சுத்தமாயில்லை.

  ReplyDelete
 53. @ மது மதி: தங்களது முதல் வருகைக்கு நன்றி நண்பரே.... உண்மை... பேருந்து நிலையம் பெரிதாக இருக்கிறது என்பதற்கு பெருமைப் படலாம் ஆனால் சுத்தம் என்பது நீங்கள் சொன்னது போல சுத்தமாய் இல்லை....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....