எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 6, 2012

தலைநகரிலிருந்து – பகுதி 17


சற்று அதிகமான இடைவெளிக்குப் பிறகு தலைநகரிலிருந்து தொடரின் ஒரு பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.  வெளியிடக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை என்றாலும் ஏனோ அப்படியே விடுபட்டுவிட்டது.  தில்லியில் இருக்கும் ஒரு அருங்காட்சியகம் பற்றிய பகிர்வு இப்பகுதியில்.

காந்தி [Dha]தர்ஷன்:


தில்லி ராஜ் [G]காட் என்கிற இடத்தில் தான் காந்தி சமாதி இருக்கிறது என்பது தில்லி வந்திருக்காத நபர்களுக்குக் கூட தெரிந்திருக்கும் – அதான் ஒவ்வொரு காந்தி பிறந்த – இறந்த நாட்களிலும், எந்த வெளிநாட்டு தலைவர் வந்தாலும் அந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதையும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் காட்டுகிறார்களே.  ஆனால் தில்லியில் இருப்பவர்களுக்குக் கூட அந்த ராஜ் [G]காட் எதிரே இருக்கும் “காந்தி [Dha]தர்ஷன்” என்ற இடம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே…

இது ராஜ் [G]காட் வரும் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குப் பக்கத்தில் சுமார் முப்பத்தி ஆறு ஏக்கர் பரப்பளவில் 1969-ஆம் வருடம், அவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அமைக்கப்பட்டது.  இந்த இடத்தில் ஆறு பார்வை மண்டபங்கள் இருக்கிறது.  இந்த கண்காட்சி அமைக்கப்பட்டதன் நோக்கமே அவருடைய வாழ்க்கையையும் அவர் சொன்ன நற்செய்தியையும் பரப்புவதே என்பது  அங்கே இருக்கும் காந்தியின் பெரிய சிலைக்குக் கீழே எழுதி இருக்கும் வாசகத்திலிருந்தே உங்களுக்குப் புரியும் – அந்த வாசகம் “MY LIFE IS MY MESSAGE”.

ஒரு அரங்கத்தில் திரு நந்த்லால் போஸ் அவர்கள் வரைந்த காந்தியின் பெரிய படம் உங்களை வரவேற்கிறது.  இந்த அரங்கத்தில் காந்தி பிறந்ததிலிருந்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள், பத்திரிக்கைச் செய்திகள் என எல்லாவற்றையும் வரிசைக் கிரமமாக வைத்திருக்கிறார்கள்.  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர் ‘மகாத்மா காந்தி’ என்று ஆனது எப்படி என்பது இங்கே பார்த்தால் புரியும்!

உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் போது 79 சத்யாகிரகிகளுடன் மாஹி ஆற்றினைக் கடந்த படகும் குஜராத் மாநிலத்தின் வேஜல்பூர் என்ற இடத்தில் எந்தப் பலகையில் அமர்ந்து ஒரு கூட்டத்தின் முன் பேசினாரோ அந்தப் பலகையையும் இங்கே காண முடியும்.

ஒரு பார்வை அரங்கம் முழுதும் இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பற்றி களிமண் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள் மூலம் பார்வையாளர்களுக்கு விளங்கும்படி செய்து வைத்திருக்கிறார்கள்.
1948–ஆம் வருடம் ஜனவரி 30-ஆம் தேதி மாலை 05.17 காந்திஜி சுடப்பட்ட நேரம்.  அதன் பின்னர் அவரது உடலைத் தாங்கி ராஜ் [G]காட் வந்த இந்திய ராணுவத்தின் Gun Carriage வண்டியைக் கூட நீங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.

தற்போது இந்த இடத்தில், காந்தி பற்றி ஆய்வு செய்ய வரும் இந்திய-வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவும் வகையில் International Centre of Gandhian Studies and Research என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது.


இங்கே இத்தனை இருந்தும் இந்த இடத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. ராஜ் [G]காட் வருபவர்கள் கூட இங்கே வருவதில்லை.  காந்தி சிலைக்குக் கூரை இருந்தும், அவர் சிலையில், தலையிலிருந்து வழிந்து இருக்கும் பறவை எச்சங்களே இதற்குச் சாட்சி!

நிறைய பார்வையாளர்கள் வராத காரணமோ என்னமோ இந்த இடத்தின் பராமரிப்பும் சரியாக இல்லை. 

முடிந்தால் அடுத்த முறை ராஜ் [G]காட் பக்கம் வந்தால் இங்கேயும் ஒரு முறை சென்று வாருங்களேன்….

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


குறிப்பு:  தமிழ்மணத்தில் வாக்கு அளிக்க இந்த சுட்டியைச் சுட்டுங்கள்....  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138801

36 comments:

 1. நான் ஒரே ஒரு முறை தான் டெல்லிக்கு வந்தேன். நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். இந்த நீங்கள் சொல்லும் இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் அனைத்தையும் பார்த்து வியந்து போனேன்.

  நல்ல பகிர்வு கொடுத்துள்ளீர்கள். படங்களும் அருமை. நன்றி.

  ReplyDelete
 2. அன்பு நண்பரே

  நல்ல பகிர்வு. டெல்ஹியில் வாழும் தமிழர்கள் கூட பலர் இன்னும் இந்த இடத்தை பார்த்தது கிடையாது. காந்தி அடிகளை மறக்காமல் இருந்தால் சரி. வாழ்க ஜனநாயகம். தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 3. தலை நகர் செய்திகள் ரொம்ப நாட்களாக காணோமேன்னு பார்த்தேன். காந்தி சமாதிபற்றி விரிவாக சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 4. பணிக்கரில் போனால் அந்த அவசரத்தில் இதெல்லாம் எங்கே பார்ப்பது!
  மிக நல்ல பகிர்வு வெங்கட்.

  ReplyDelete
 5. “MY LIFE IS MY MESSAGE”/

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. நாம் அங்கு சேர்ந்து போனது ஞாபகம் வருகிறது. பொதுவாகச் சுற்றிப்பார்க்க வருபவர்கள் ராஜ்காட் பார்த்தபின் சாந்திவன், சக்திஸ்தல் (நேரு, இந்திரா நினைவிடங்கள்) என்று மறுபக்கம் (வலதுபக்கம்) சென்று விடுகிறார்கள். இது இடதுபக்கம் அதுவும் தெருவைக் கடந்து (பெரோஷா கோட்லா மைதானம், தில்லி கேட் செல்லும் திசையில்) இருப்பதால் கவனத்தில் படுவதில்லை என்று நினைக்கிறேன். ராஜ்காட்டிலும் பலகைகள் வைத்திருந்தால் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

  ReplyDelete
 7. நல்ல தகவல் வெங்கட்.
  இரண்டு முறை டில்லி வந்திருந்தபோதும்,ராஜ் காட் மாத்திரமே பார்த்தோம்,காந்தி தர்ஷன் சென்றதில்லை.மறுபடி சந்தர்பம் கிடைக்கும் போது தவறாமல் பார்க்கிறேன்.
  நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 8. 'காந்தி தர்ஷன்' சென்றதில்லை -- Noted this now.

  Thanks for sharing, Venkat Sir.

  ReplyDelete
 9. டெல்லிக்கு நான் நிறைய தடவை வந்துள்ளேன்
  உண்மையில் இப்படி ஒரு இடம் இருப்பதை யாரும் சொல்லவில்லை
  எல்லோரும் காந்தி சமாதியைக் காண்பிப்பதோடு சரி
  அடுத்தமுறை அவசியம் பார்க்க உத்தேசித்துள்ளேன்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. @ வை. கோபாலகிருஷ்ணன்: ஓ... நீங்கள் இந்த இடத்தினைச் சுற்றிப் பார்த்து இருக்கீர்களா? நல்ல விஷயம்...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. @ விஜயராகவன்: //வாழ்க ஜனநாயகம். // :))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete
 12. @ லக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா.....

  ReplyDelete
 13. @ சென்னை பித்தன்: பனிக்கர் ட்ராவல்ஸ் மூலம் போனால் இந்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் செல்வதில்லை.... அவர்களுக்கு இருக்கும் ஒரு நாளில் பல இடங்களை அப்படியே விட்டு விடுவார்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 14. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: உண்மை சீனு. காந்தி சமாதி அருகில் இதற்கும் ஒரு அறிவிப்புப் பலகை வைத்தால் இன்னும் நிறைய பேர் இந்த இடத்திற்கும் வரலாம்.... ஆனால் ஏனோ இது வரை செய்யவில்லை..

  உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

  ReplyDelete
 16. @ ராம்வி: இங்கே தில்லியில் உள்ளவர்களே நிறைய பேர் சென்றதில்லை.... :) அடுத்த முறை வந்தால் பாருங்கள்....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 17. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்....

  ReplyDelete
 18. @ ரமணி: முடிந்தால் அடுத்த முறை வரும்போது பாருங்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. வந்தேமாதரம்!

  ReplyDelete
 20. நானும் பார்த்ததில்லை.பார்க்க வேண்டும்.தகவலுக்கு நன்றி சார்

  ReplyDelete
 21. @ ஈஸ்வரன்: வந்தே மாதரம்....

  தங்களது வருகைக்கு மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 22. ஜிஜி: முடிந்தபோது பாருங்கள்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 23. இப்ப நம்மிடையே இல்லாத தேசியத்தலைவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பார்க்கிறப்ப ஏதோ அவங்களையே நேர்ல தரிசிக்கும் உணர்வு ஏற்படும் இல்லியா. இந்த இடுகையை வாசிக்கிறப்பவும் அப்டித்தான் தோணுது. அவர் பயன்படுத்திய, சம்பந்தப்பட்ட பொருட்களின் தரிசனம் கிடைப்பதே பெரும்பாக்கியம்.

  ReplyDelete
 24. சுவாரஸ்யம்...தொடருங்கள் வெங்கட்...

  ReplyDelete
 25. நல்ல பகிர்வு.தொடருங்கள்.

  ReplyDelete
 26. மதுரை,சென்னை காந்தி மியுசியம் பார்த்திருக்கேன்,இரண்டு முறை இங்கு வந்தும் நீங்கள் சொல்லுமிடம் பற்றி இப்பதான் முதன்முறை கேள்விப்படுகிறேன் .தகவலுக்கு நன்றி.தில்லி டூரிஸ்ட் லிஸ்ட்டில் கூட இருக்கான்னு தெரியலையே இந்த இடம்.

  ReplyDelete
 27. @ அமைதிச்சாரல்: //நம்மிடையே இல்லாத தேசியத்தலைவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பார்க்கிறப்ப ஏதோ அவங்களையே நேர்ல தரிசிக்கும் உணர்வு ஏற்படும் இல்லியா.// உண்மைதான்....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 29. @ ஆசியா உமர்: உங்களது கருத்திற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தில்லி டூரிஸ்ட் லிஸ்டில் இருப்பதாகத் தோன்றவில்லை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி...

  ReplyDelete
 31. பகிர்வும் படங்களும் அருமை!!

  ReplyDelete
 32. @ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 33. இந்த மாதிரி தலைதகரைப் பற்றி எழுதினால் பார்க்கணும்கிற ஆசை கிளம்புகிறது. ஏற்கெனவே மத்யபிரதேசம் பெண்டிங்க்!
  நிறைய செலவுக்கு வழி வைக்கிறீர்கள்!

  நல்ல தகவல்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய பக்கட் லிஸ்டில் வைத்தாயிற்று.

  வணக்கம்.

  ReplyDelete
 34. @ வெற்றிமகள்: அச்சச்சோ - நிறைய செலவா? :))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 35. இந்த இடத்தை நான் மிகவும் ரசித்து பார்த்திருக்கிறேன். தற்போது உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் இருவருக்கும் (கோவை 2 டில்லி) சரளமான நடையில் எழுத வருகிறது. Dolls Museum பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றி எழுதுங்கள். பல தேசத்து பொம்மைகள் ஒரே இடத்தில் மிகவும் அருமையாக இருக்கும். அதே இடத்தில் குழந்தைகளுக்காக ஒரு நூலகமும் உள்ளது. என் மகன் சிறியவனாக இருக்கும் போது ஒவ்வொரு சனிக்கிழமையும் அழைத்து செல்வேன். ரோஷணிக்கு நிச்சயம் பிடிக்கும்.

  ReplyDelete
 36. @ சரஸ்வதி ரங்கநாதன்: டால்ஸ் ம்யூசியம் பார்த்திருக்கிறேன். அது பற்றிய பகிர்வு தலைநகரிலிருந்து பகுதியில் இருக்கிறது. அதற்கான லின்க் கீழே....

  http://venkatnagaraj.blogspot.in/2010/02/3.html

  தங்களது வருகைக்கும் எனது வலைப்பூவையும், என் துணைவியின் வலைப்பூவையும் தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....