வெள்ளி, 29 ஜூன், 2012

ஃப்ரூட் சாலட் – 3 -அரசியல் - குட்டிக்கதை

[பட உதவி: கூகிள்]


இந்த வார செய்தி: சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலுக்குப் பின் உத்திரப் பிரதேச மாநில ஆட்சி மாயாவதியிடமிருந்து சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் வசம் வந்தது. முன்பு முலாயம் சிங் யாதவ் ஆட்சியிலேயே அவர் கட்சி உறுப்பினர்களின் அடாவடித் தனங்கள் மிக மிக அதிகம். தேர்தலில் அப்போது தோற்றதற்கு அது காரணமாக அமைந்தது. இப்போது இரண்டு தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தும் அப்படியே தான் இருக்கிறார்கள். 

பதிவியேற்ற பிறகு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அடாவடிகள் தாங்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு Height என்று உண்டல்லவா? லக்னோவிலிருந்து தியோரியாவிற்கு ட்ரயின் மூலம் வந்து சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை வரவேற்க நானூறுக்கும் மேற்பட்ட அடிப்பொடிகள் வந்து காத்திருந்தனர். கூடவே ஒரு குதிரையும் நடைமேடையில் காத்திருந்தது.

சட்டமன்ற உறுப்பினர் வந்து சேர்ந்ததும், பேண்ட் வாத்தியங்கள் முழங்க, அவர் குதிரையில் அமர்ந்து, நடைமேடையிலேயே குதிரை சவாரி செய்திருக்கிறார். ஸ்டேஷனில் இருந்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளைப் பற்றி அவருக்கோ, அவரது அடிப்பொடிகளுக்கோ என்ன கவலை? தட்டிக்கேட்ட ஒரு இளைஞரை அவரது அடிப்பொடிகள் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். அடித்தது மட்டுமல்லாது அவருக்கு ’பிக்பாக்கெட்’ பட்டமும் கட்டி விட்டார்கள். 

இவர்களது தொல்லை தாங்கவில்லை! அரசியலில் இருப்பதால் என்ன செய்தாலும் தாங்கிக் கொள்ளவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் திருவாளர் பொதுஜனம்! சில நாட்களாகவே இதைப் பற்றி எழுத நினைத்தாலும், தள்ளிப் போட்டு வந்தேன். கொஞ்சமாக எழுத நினைத்ததால் இந்தப் பகுதியிலே எழுதினேன். எப்போதுதான் இவர்கள் மாறுவார்களோ! அவர்களுக்கும் ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

முகப்புத்தகத்தில் ஒரு தோழி இருக்கிறார். தினம் ஒன்றிற்கு குறைந்தது ஏழெட்டு முறையாவது “Status Message” மாற்றிவிடுகிறார். சில நாட்களில் போடும் இற்றைகள் பற்றி நாம் சொன்னால் அடி விழும். அந்த தோழியின் ஒரு இற்றையினை இந்த பகிர்வில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 



[பட உதவி: கூகிள்]

மருத்துவர்: உங்களுக்கு மூணு பல்லு எப்படி உடைஞ்சது?
கணவர்: என் மனைவி செய்த பர்ஃபி சாப்பிட்டதால்!
மருத்துவர்: பர்ஃபி வேண்டாமென மறுத்திருக்கலாமே?
கணவர்: மறுத்திருந்தால் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும் :(
இந்த வாரக் காணொளி:

சில சமயங்களில் மருந்து மாத்திரைகள் அவசியமல்ல என்பதை அழுத்திச் சொல்லும் விளம்பரம்….




இந்த வார குறுஞ்செய்தி: 


[பட உதவி: கூகிள்]


மனைவி: என்னங்க சொர்க்கத்திலே கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே?

கணவன்: அதனால தான் அதை சொர்க்கம்-னு சொல்றாங்க!

மனைவி: ??????

இந்த வாரக் குட்டிக்கதை:

ஒரு முனிவர் தனது சிஷ்யனைப் பார்த்துக் கேட்டாராம் “கோபத்திலிருக்கும் இரு நபர்கள், தங்களுக்குள் மிக சத்தமாகக் கத்திப் பேசுவது ஏன்?” சில நிமிடங்கள் யோசித்தபிறகு அவருடைய ஒரு சிஷ்யர் சொன்னாராம், கோபத்தில் இருக்கும்போது நிதானத்தினை இழந்துவிடுகிறோம். அதனால் தான் இப்படி சத்தமாகப் பேசுகிறோம். அதற்கு முனிவர் ”சரிதான். ஆனால் அந்த நபர் பக்கத்திலேயே இருக்கும்போது இத்தனை சத்தமாக ஏன் பேசவேண்டும். மெதுவாகப் பேசினாலே அவருக்குக் கேட்குமே?” என்று கேட்டாராம். ஒவ்வொரு சிஷ்யரும் ஒரு பதில் சொல்ல, அதையெல்லாம் கேட்ட முனிவர் இதெல்லாம் இல்லை. இதைவிட ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்று சொன்னாராம். 

அந்த விஷயம் என்னவென்றால், ”அந்த இரு நபர்களும் கோபத்தில் இருக்கும் போது, அவர்களது இதயம் வெகுதொலைவிற்குச் சென்று விடுகிறது. அதனால் தான் அவர்கள் இத்தனைச் சத்தமாகப் பேசுகிறார்கள். எத்தனை கோபமாக இருக்கிறார்களோ அத்தனை தொலைவு அவர்களது இதயம் சென்றுவிட, இன்னும் அதிகமாகக் கத்துகிறார்கள். அதுவே இரண்டு நபர்கள் ஒருத்தரை ஒருவர் விரும்பினால் அவர்களது இதயங்களுக்கு இடையே இருக்கும் தூரம் குறைய கிசுகிசுவெனவே பேசுகிறார்கள். இன்னும் நெருக்கமானால், பேசக்கூட தேவையில்லை, பார்வையிலேயே பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது.”

எவ்வளவு உண்மையான விஷயம்!

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.



புதன், 27 ஜூன், 2012

காட்டுக்குள் ஹரி-ஹரன்


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 10]


இன்றாவது புலியைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி விட்டேன். காடுகள் நிறைந்த பகுதி என்பதால் குளிர் கடுமையாகத் தெரிந்தது. வெளியே வந்தால் பற்கள் கிடுகிடுவென அடித்துக் கொள்ளும் அளவுக்குக் குளிர். குளிரிலிருந்து காத்துக்கொள்ள தலையில் குல்லாய், காலுறை, ஸ்வெட்டர், லெதர் ஜாக்கெட் என்று போட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் ஐந்து கிலோ எடை கூடியிருந்தோம்!

அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாகனங்களில் ஏறி அமர்ந்து சரியாக 5.45 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். ஜீப் மெதுவாகச் சென்றாலும், அடிக்கும் குளிர்க்காற்று அத்தனை உடைகளையும் தாண்டி நரம்புகளில் அதிர்ச்சியை உண்டாக்கிற்று.  நேற்று சென்றதை விடஇன்று சென்ற வனப்பகுதி இன்னும் அடர்த்தியானதும், மலைகள் அதிகம் கொண்டதுமாகும். 

[காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே….  :)]

வனத்தினை நான்கு பகுதிகளாகப் பிரித்திருப்பதாக முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அந்த நான்கு பகுதிகள் கிதோலி, மகதி, பான்பத்தா மற்றும் தாலா எனப் பெயர் கொண்டவை. இந்த நான்கில் மிக முக்கியமானது தாலா எனப்படும் பகுதி தான்.  இங்கே தான் கோட்டையும் இருக்கிறது. 32 மலைகள் சூழ்ந்த காடுகளை இந்தப் பகுதியில் சென்றால் நன்கு ரசிக்கலாம். மேலும் இந்தப் பகுதியில் தான் புலிகள் உங்கள் கண்களுக்கு தட்டுப்பட வாய்ப்புகள் அதிகம். மேலே செல்லுமுன் சில உபயோகமான தகவல்களைப் பார்க்கலாம்.

நீங்கள் இந்த வனப்பயணம் செய்ய ஆசைப்பட்டால் முன்பதிவு செய்து வைத்துக்கொள்வது அவசியம். இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை இணையதளத்தின் மூலமோ அல்லது மற்ற தனியார் துறை தங்கும் விடுதிகள் மூலமோ நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு குழுவிற்கு எட்டு பேர்கள் வரை ஜீப்பில் பயணிக்கலாம். யார் பெயரில் முன்பதிவு செய்கிறீர்களோ அவரது அடையாள அட்டை எடுத்துச் செல்வது மிக மிக அவசியம். முன்பதிவு செய்யும்போது கொடுத்த அடையாள அட்டை எண்ணை வனத்திற்குள் செல்லுமுன் சரி பார்ப்பார்கள். சரியாக இல்லையெனில், உள்ளே யாரையும் விடுவதில்லை.

தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உடைகள் எடுத்துச்சென்றால் நல்லது. சூழலுக்குத் தகுந்த உடைகள் [சிவப்பு, ஆளை அடிக்கும் ராமராஜன் போட்டுக்கொ[ல்லும்]ள்ளும்] வண்ண உடைகளைத் தவிர்த்தல் நலம்!

பீடி, சிகரெட், பான், சாக்லேட் போன்ற எதுவுமே வனத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

தகவல்கள் நீங்கள் செல்லும் நேரத்தில் நிச்சயம் பயன்படுமென நினைக்கிறேன். 

[படி குஃபா – உட்தோற்றம்]

[படி குஃபா…. வெளித் தோற்றம்]

சரி வனத்திற்குள் செல்லலாம் வாருங்கள். இரண்டாம் நாள் நாங்கள் சென்றது தாலா பகுதிக்கு. இங்கே கோட்டையும், 39 குகைகளும் இருக்கின்றன. இவைகள் ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைகள் எனச் சொல்கிறார்கள். குகைகளில் பிராம்மி எழுத்துகள், புலி, பன்றி, யானை, குதிரை மேல் மனிதன் என்று நிறைய வரையப்பட்டிருக்கிறது. ”[B]படி [G]குஃபா” என்று இருப்பதிலேயே பெரிய வாசல் இருக்கும் குகையை மட்டும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க அனுமதிக்கிறார்கள். இந்த குகைக்குள் 9 சிறிய அறைகள் இருக்கின்றன. குகையை பார்க்க மனிதர்களை அனுமதிப்பதால் விலங்குகளுக்கு அனுமதி இல்லை!  எப்போதும் ஒரு கதவு போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். மனிதர்கள் மட்டும் திறந்து உள்ளே செல்ல முடியும்!

[காட்டுப் பன்றி…. எத்தனை ஃபோட்டோ வேணும்னாலும் எடுத்துக்கோ!]

[ஃபோட்டோ எடுக்கறாங்க டோய்….  பறந்துடுவோம்….]

இந்த [B]படி குஃபாவை பார்த்து விட்டு வனத்திற்குள் எங்கள் புலிவேட்டைத் தொடர்ந்தது. வனத்திற்குள் இருக்கும் குறுகிய பாதைக்குள் எங்கள் ஜீப் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. நிறைய மான்கள், காட்டுப் பன்றி, சில பறவைகள் என கண்களுக்குத் தென்பட்டது. புலி மட்டும் கிடைக்கவில்லை. அதற்குள் நடுவே ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் எங்களது வாகன ஓட்டுனரும், வன இலாகா ஊழியரும். அந்த இடம் சேஷ்நாக் மீது படுத்துக் கொண்டிருக்கும் சேஷையாவையும் சிவனையும் பார்க்கத்தான்.

[சேஷையா…..]

[ஷிவ்ஜி]

மலைகளுக்கு ஊடே சென்று ஒரு குறுகிய பாதையில் வண்டி நின்றது. சில படிகள் ஏறிச் சென்றால் ஒரு பெரிய ஐந்து தலை நாகத்தின் மீது சேஷையா எனும் விஷ்ணுபகவான் படுத்துக் கொண்டிருக்கிறார். பக்கத்திலேயே ஒரு பெரிய சிவலிங்கமும் இருக்கிறது. நமது கிராமங்களில் ஒன்று சொல்வார்கள் – “அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு!” என்று.  அதை நிரூபிக்கும் வண்ணம் இங்கே இருவரும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கிறார்கள். அங்கே இருவரின் தரிசனமும் கண்டபின் எங்கள் புலி வேட்டைத் தொடர்ந்தது. 

அது பற்றி அடுத்த பகுதியில்..

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.



பின் குறிப்பு: 22.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.


திங்கள், 25 ஜூன், 2012

என்னோட நியூயார்க் வந்துடும்மா...


[பட உதவி: கூகிள்]


புது தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் T3 ஓய்விடத்திலிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்திருந்தார் அந்த வயதான பெண்மணி. வாழ்வில் பெற்ற அனுபவங்கள் வரிவரியாக சுருக்கங்களை அவரது தோலில் ஏற்றியிருந்தது. பலவித நாடுகளிலிருந்து வந்த/செல்லும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு நடுவே இந்தப் பெண்மணி எங்கே பயணம் செய்யக் காத்திருக்கிறார்? அவரது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள்தான் என்ன? பார்ப்போமா?


“அப்பாடி…. எவ்வளவு வருடங்கள் ஆயிற்று இப்படி நிம்மதியாய் உட்கார்ந்து. வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஓடி ஓடி, மணமுடித்து, “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என ஒரு மகனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி என ஓட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஒரு வருடமா, இரண்டு வருடமா, கடந்த 72 வருடங்களாக ஓடிட்டே தான் இருந்திருக்கேன்….

ஆச்சு, ஒரே பையனும் கல்யாணம் பண்ணி நியூயார்க்-லயே செட்டிலாயிட்டான். ஆனாலும் எனக்கென்னமோ இந்த தில்லியை விட்டு போகணும்னு நினைச்சுக்கூட பார்க்கமுடியல. வயசு தான் ஏறிட்டு போகுதே, எப்படி தனியாக இருக்க முடியும்னு அப்பப்ப மனசுல தோணிட்டே இருந்தாலும், ஏனோ போக மனசு வரல. ஆனா இந்த ஒரு வருஷமா உடம்பு ரொம்பதான் படுத்துது. எவ்வளவு நாள் தான் ஓட முடியும், என்னிக்காவது ஒரு நாள் உட்கார்ந்து தானே ஆகணும்.

இப்படி ஒரு நாள் உடம்பு சரியில்லாம பக்கத்து வீட்டுக்காரங்க துணையோட ஆஸ்பத்திரி போன போதுதான் என் பையன் அமெரிக்காவிலிருந்து ஃபோன் பண்ணான். “ஏம்மா, இன்னும் எத்தனை நாள் தான் தனியா கஷ்டப்படுவே, இங்கேயே வந்துடேன்னு” கூப்பிட்டான். உடம்பு சரியில்லாத கஷ்டத்திலேயே சரின்னு சொல்லிட்டேன்.

அவனும் அங்கே இருந்தே, இன்டர்னெட் மூலமா நான் இருந்த எங்க சொந்த வீட்டை விக்கிறதுக்கும், பாஸ்போர்ட், விசா, எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, என்னை அழைச்சிட்டுப் போக ஒரு மாசம் முன்னாடி வந்தான். எல்லா வேலையும் கடகடன்னு முடிச்சு, இதோ இங்கே ஏர்போர்ட் வரைக்கும் வந்தாச்சு, அடுத்து நியூயார்க் தான்.”

அவரோட எண்ண ஓட்டத்தை தடை செய்யறமாதிரி, பாதுகாப்பிற்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரர், அந்தப் பெண்மணியை “மாதாஜி ரொம்ப நேரமா இங்கே உட்கார்ந்து இருக்கீங்களே, ஏதாவது உதவி வேணுமா?”ன்னு கேட்டார். அட பழைய நினைவுகளில் மூழ்கியதில் நேரம் போனதே தெரியலையேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டே, “என் பையனோட நியூயார்க் போகக் காத்திருக்கேன், உள்ள போய் போர்டிங் பாஸ் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வரேன்னு போயிருக்கான், இப்ப வந்துடுவான்”_னு சொல்ல, அவர் விடாம “உங்க பையன் பேர் சொல்லுங்கம்மா, நான் விசாரிச்சு சொல்றேன்னு” பேர் கேட்டுட்டு உள்ளே போனார். 

[பட உதவி: கூகிள்]

உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து வந்த போலீஸ்காரர் முகத்தில் ஒரு வித அதிர்ச்சியும், அயர்ச்சியும். ”ஏம்மா, நல்லாத் தெரியுமா, உங்க பையன் உங்களுக்கும் டிக்கெட் வாங்கி இருக்காரான்னு?, ஏன்னா அவர் ஒரு மணி நேரம் முன்பு கிளம்பின நியூயார்க் விமானத்திலே போய்ட்டாரே…”  ன்னு சொன்னதைக் கேட்ட பெண்மணிக்கு மாத்திரமல்ல, நமக்கும் அதிர்ச்சி.

அந்த வயதான பெண்மணிக்கு உட்கார்ந்திருந்தாலும், தரை கீழே நழுவி உள்ளே விழுந்துவிட்டது போன்ற உணர்வு.  “நல்லா விசாரிச்சீங்களா, என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டானேன்னு” கேட்க, ”நல்லா விசாரிச்சேம்மா, அந்த விமானத்துல அவருக்கு மட்டும் தான் டிக்கெட் வாங்கி இருக்காரு, உங்களுக்கு வாங்கவே இல்லை, விமானம் போயிடுச்சேம்மா” என்று சொல்லி, ”உங்களுக்கு வீட்டுக்கு போகணும்னா சொல்லுங்க, வண்டி ஏற்பாடு பண்ணித் தரேன்னு” சொல்லியிருக்கார்.

இத்தனை வருடம் கஷ்டப்பட்டு, வளர்த்து ஆளாக்கி விட்ட மகன் பணத்திற்காக இப்படிச் செய்வான்னு எதிர்பார்க்காத அந்த பாட்டி அதிர்ச்சியில் அங்கேயே மயங்கிச் சரிந்தார். செல்வதற்கு வீடும் இல்லாமல், கையில் பணமும் இல்லாது என்ன செய்ய முடியும் அந்த மூதாட்டியால்? 

பணத்திற்காக பெற்ற தாயையே இப்படி நட்டாற்றில் விட்டுச் சென்ற அவலம் இந்தத் தலைநகர் தில்லியில் உண்மையாகவே நடந்தது. வடக்கு தில்லியில் நிறைய அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒன்றில் இருந்த ஒரு பெண்மணிக்கு நேர்ந்த கதி இது. விஷயம் கேள்விப்பட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த சில பெரியவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து வந்து மேற்கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தார்கள். இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெற்ற தாயை இப்படி நடுத்தெருவில் விட்டுப்போன அந்த படுபாவியை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்.
புது தில்லி.


வெள்ளி, 22 ஜூன், 2012

ஃப்ரூட் சாலட் – இரண்டு.


[பட உதவி: கூகிள்]


இந்த வார செய்தி: மனிதர்களுக்கு பொறுமை என்பதே  இல்லாமல் போய்விட்டது. சாதாரண விஷயத்திற்கு கூட   கோபமும், ஆத்திரமும் வந்து என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செயல்படுகிறார்கள். தில்லி சாலைகளில் ”ரோட் ரேஜ்” என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. சாலையில் செல்லும் போது சக மனிதர் ஓட்டும் வாகனத்தினால் தனது வாகனத்தில் ஒரு சிறிய கீறல் ஏற்பட்டால் கூட துப்பாக்கி எடுத்து சுடுவதோ, கத்தியால் குத்தி காயப்படுத்துவதோ அதிகமாகி விட்டது. இந்த வெறியும், கோபமும் இப்போது வீடுகளிலும் பரவி வருவது நிச்சயம் கவலைக்குரியது. 

தில்லியை அடுத்த காஜியாபாத் பகுதியில் உள்ள ஒரு பெண் – ஒரு வயதுக் குழந்தைக்குத் தாய். மாமியாரிடம் ஏற்பட்ட வாய்த் தகறாரில் தனது ஆண் குழந்தையை இரண்டாவது மாடியில் இருந்து வீசியிருக்கிறார். குழந்தையை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாலும் குழந்தை இறந்து விட்டது என்று தினசரியில் படித்த போது மனது பதறியது.  அந்தத் தாய்க்கு மனத்தளர்வு இருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்றும் நாளிதழில் படித்தேன். 


 [பட உதவி: கூகிள்]

இது நடந்த இரண்டொரு நாட்களிலேயே, தொழிற்சாலையில் வேலை செய்யும் பதினைந்து வயது இளைஞன் பற்றிய செய்தி பதற்றத்தினை அதிகப் படுத்தியது. அவன் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஐம்பது ரூபாய் முன்பணம் வாங்கி செலவு செய்திருக்கிறான். தாய் அதனைக் கண்டிக்கவே, பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கடன் வாங்கி தாயிடம் கொடுத்திருக்கிறான். கடன் வாங்கிய விஷயத்தினை பக்கத்து வீட்டு பெண்மணி இளைஞனின் விதவைத் தாயிடம் சொல்ல, அவள் மகனை அடிக்க, வந்தது விபரீதம். 

கோபத்தில் அந்த இளைஞன் பக்கத்து வீட்டு பெண்மணியை கத்தியால் குத்த, அதைத் தடுக்க வந்த வேறு இரண்டு பெண்களையும் குத்தி மூவரும் இறந்து விட்டனர்.

கோபத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே செய்யும் செயலால் எவ்வளவு உயிரிழப்பு, எத்தனை குடும்பங்கள் தவிக்கின்றன. எங்கே தான் போய்க்கொண்டிருக்கிறோம்? 

இந்த வார முகப்புத்தக இற்றை:

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் பல மணி நேர மின்சார நிறுத்தமும், நிறைய பேரை நல்லாவே யோசிக்க வைக்கிறது போல! அப்படி ஒரு இற்றை:

விக்கிபீடியா: “எனக்கு எல்லாம் தெரியும்!”
முகப்புத்தகம்: “எனக்கு எல்லோரையும் தெரியும்!”
கூகிள்: “என்னிடம் எல்லாம் இருக்கிறது!”
இணையம்: “நான் இன்றி நீங்கள் மூவரும் இல்லை!”

மின்சாரம்: “என்ன அங்கே சத்தம்….  குரலை ரொம்ப உசத்தாதீங்க!”

இந்த வாரக் காணொளி:




இந்த வார குறுஞ்செய்தி: 

நீ மட்டும் நடந்து சென்றால் யாரும் உன்னை திரும்பிப் பார்க்க மாட்டார்கள். என்னையும் அழைத்துச் செல். இந்த உலகமே உன்னை உற்றுப் பார்க்கும் – தன்னம்பிக்கை.


மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 20 ஜூன், 2012

மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும்



[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 9]



காட்டுக்குள்ளே நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று போன பதிவில் சொன்னேன். இங்கே 2001 – ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அறுபதிற்கும் மேலான புலிகள் இருக்கின்றன என்ற தகவலையும் சொன்னார் வன இலாகா அதிகாரி.

முதல் நாளில் மூன்று மணி நேர வனப் பயணம் சென்று காணக் கிடைக்காத புலியை அடுத்த நாள் காலையில் நான்கு மணி நேரம் செல்லப்போகும் பயணத்திலாவது பார்த்துவிட மாட்டோமா என்ற எண்ணத்தோடு காட்டிலிருந்து வெளியே வரும்போதே இருட்டி விட்டது. குளிர் காலம் என்பதால் ஆதவன் சீக்கிரமே மறைந்து விடுகிறான். வேறு எந்த வேலையுமில்லை என வந்ததால் எங்களுக்காக ஒரு ஆவணப் படம் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் விடுதி மேலாளர்.




[”இவ்வளவு கிட்டக்க எடுத்தீங்களா, தைரியம் தான்” என்று சொல்வோருக்கு, ஆவணப்படத்தில் வந்த புலியை எடுத்த புகைப்படம் இது என்று சொல்லி விடுவது நல்லது - இப்படிக்கு உண்மை விளம்பி!]


பாந்தவ்கர் காடுகளில் உள்ள விலங்குகள், அதிலும் குறிப்பாக, புலிகள் பற்றிய ஆவணப்படம் இது. ஒரு யானைப்பாகன் மற்றும் அவனது மகன் மூலம் கதை சொல்லிப் போகிறார்கள். ஒவ்வொரு புலியும் தனது அதிகாரப் பரப்பு என்று வைத்துக்கொள்ளுமாம்.  அதற்காக மரங்களில் தனது கூரிய நகம் கொண்டு அடையாளம் செய்து வைக்குமாம். அந்த அடையாளம் பார்த்து மற்ற புலிகள் பெரும்பாலும் வருவதில்லை. மீறி சில மூர்க்க புலிகள் வந்தாலும் அவற்றுக்குள் பயங்கர சண்டை வரும் என்றும் சொல்கிறார் யானைப் பாகன். 



[புலியைத் தேடும் பணியில் யானைப் பாகன்]


அவரது மகனையும் யானை மீது உட்கார வைத்து தனது தொழிலைப் பழக்குகிறார். யானையைக் குளிப்பாட்டுவது முதல் எல்லாவற்றிலும் மகன் கூடவே இருக்கிறார். புலிகளைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிப்போனது ஆவணப் படம். படம் பார்த்த பிறகு, இரவு உணவு உண்டு அடுத்து என்ன என்று யோசனையுடன் அறைக்குச் செல்லும் போது பார்த்தால் விறகுகளை குமித்து வைத்து மகிழ்ச்சித் தீக்கான [அதாங்க! BONFIRE] ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.

அன்று லோடி [Lohri] எனும் பண்டிகை என்பதால் கூடுதல் சந்தோஷம். நமது ஊரில் போகி கொண்டாடுவது போலவே வட இந்தியாவில் லோடி கொண்டாடுவர். நிலவொளியில் இப்படி விறகுகளை குமித்து வைத்து, அதற்குத் தீமூட்டி, வேர்க்கடலை, ரேவ்டி [எள்ளும், வெல்லமும் கலந்த மிட்டாய்] போன்றவற்றை அக்னிதேவனுக்குப் படைத்து தீயைச் சுற்றி வலம் வந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று களிப்படைவார்கள். அதனால், நிறைய ரேவ்டி, வேர்க்கடலை, எல்லாம் வாங்கி வைத்து தீ மூட்டி, தீயைச் சுற்றி வந்து ஆட்டமும் கொண்டாட்டமும் ஆரம்பித்தது.



[கடும் குளிருக்கு இதமாய்....]

எல்லோரும் ஏதாவது ஒரு பாடல் பாடியோ, நகைச்சுவை சொல்லியோ, மிமிக்ரி செய்தோ அந்த மாலைப் பொழுதை இனிமையாக்க வேண்டுமென முடிவு செய்தோம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தினைச் செய்தார்கள். பல பழைய ஹிந்திப் பாடல்கள், ஒரு மலையாளப் பாடல், பஞ்சாபி பாங்க்ரா நடனம், பல நகைச்சுவை துணுக்குகள் பரிமாற்றம் என நேரம் போவது தெரியாமல் மகிழ்ச்சி பரவிக் கொண்டிருந்தது. 

அந்தத் தீயும் குளிருக்கு இதமாக இருந்ததால் அறைக்குள் செல்ல எவருக்கும் மனமில்லை. ஒரு வழியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு அவரவர் அறைகளுக்குச் சென்றோம். காலை 06.00 மணிக்கே காட்டுக்குள் மீண்டும் செல்ல வேண்டும் என்பதால் நான் சென்று சற்று நேரமாவது உறங்குகிறேன். நீங்களும் வருவதென்றால், குளிருக்குத் தகுந்த உடையோடு காத்திருங்கள் – காட்டிலே குளிர் நடுக்கி எடுத்துவிடுமாம்! :)

மீண்டும் காலையில் புலிவேட்டையில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.



பின் குறிப்பு: 15.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.

வெள்ளி, 15 ஜூன், 2012

பராய்த்துறை நாதர்



[திருப்பராய்துறை கோவில் கோபுரம்]



தமிழகத்தில் தில்லி பதிவர்கள் – ஏக், தோ, தீன் என்ற பதிவில் இந்த கோபுரத்தின் படத்தை வெளியிட்டு, பாடல் பெற்ற சிவஸ்தலம் எது என்ற கேள்வியைக் கேட்டிருந்தேன். இந்த இடம் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறையும் தாருகாவனேஸ்வரர் திருக்கோவில். காவேரி நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த திருக்கோவில். 

எப்போது தமிழகம் வந்தாலும் இங்கே செல்லத் தவறுவதில்லை. எனது பெரியம்மாவும் இதே ஊரில் இருப்பதால் அங்கே தங்கி, தினமும் அகண்ட காவிரியில் குளித்து பராய்த்துறை நாதரை வழிபட்டு வருவேன். இத்திருத்தலத்தைப் பற்றிப் பார்ப்போமா?


[பராய் மரம்]

சைவப் பெரியோர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டிணத்தார் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற சிவஸ்தலம். பராய் மரங்கள் நிறைந்த தலமாக இந்த ஊர் இருந்ததால் பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. தலத்தின் தல விருக்ஷமும் பராய் மரமே. இந்த மரத்திற்கு எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தலபுராணம்:  இந்த தலத்தில் தவம் செய்து வந்த தாருகாவன முனிவர்கள் மமதையினால், இறைவனை துதிக்க வேண்டிய அவசியமில்லை என இருந்தபோது சிவபெருமான் பிக்ஷாடனார் வேடம் பூண்டு அவர்களின் மமதையையும் அகந்தையையும் அழித்து தாருகாவனேஸ்வரராகக் காட்சி தந்தார் என்று தலபுராணம் சொல்கிறது. 

இறைவன் சுயம்பு லிங்கமாக, தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு முகமாகவும், பசும்பொன் மயிலாம்பிகை, ஹேமவர்ணாம்பிகை என்ற திருநாமம் பெற்ற இறைவி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.


[பள்ளி மாணவர்கள் வைத்த கொலு]


[நாங்களும் போஸ் குடுப்போம்ல!]

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் நூறுகால் மண்டபத்தில் தான் தற்போது விவேகானந்தர் தொடக்கப்பள்ளி நடைபெறுகிறது. இந்த மண்டபத்தில் நவராத்திரி சமயத்தில் பள்ளி மாணவர்கள் சேர்ந்து வைக்கும் கொலு அருமையாக இருக்கும். சென்ற முறை சென்றபோது எடுத்த சில படங்கள் கீழே. “படம் பிடிக்கிற மாமா வந்துட்டாருடோய்” எனக் கூச்சல் போட்டு அவர்களையும் படம் பிடிக்கக் கேட்டார்கள். டிஜிட்டலில் எடுத்த படங்களைக் காட்டியபோது அவர்களது முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. 


[கண்களைக் குளமாக்கும் திருக்குளம்]

நூறுகால் மண்டபத்திற்கு எதிரே குளம் உள்ளது. குளத்தினைப் பார்க்கும்போது நமது கண்கள் குளமாவது நிச்சயம். பாசி படிந்து பச்சை நிறத்தில் இருக்கும் தண்ணீரில் பலவண்ணங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள். எப்போது தான் இதற்கு விடிவுகாலமோ :(

ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தின் உள்ளே நுழையும் முன் விநாயகரை தரிசித்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம்.  பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம், நந்தி இருக்கும் இந்த நந்தி மண்டபத் தூண்களில் தலத்தினைப் பாடிய சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உருவச் சிலைகளும், திருப்பணி செய்த புண்ணியவானின் உருவச் சிலையையும் காணலாம்.  ராஜகோபுரத்தினை ஒட்டிய சுவற்றில் “இங்கே நின்றால் ஐந்து கோபுரங்களைப் பார்க்கலாம்” என ஒரு இடத்தில் எழுதி இருப்பார்கள். அங்கே நின்று ராஜகோபுரத்தினையும் சேர்த்து ஐந்து கோபுரங்களைக் காண முடிந்தது.

மூலவர் தவிர, உட்பிராகரத்தில் வலம்புரி விநாயகர், சப்தகன்னியர், அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், மகாகணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிக்ஷாடனார், பிரம்மா, துர்க்கை, கஜலக்ஷ்மி, தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்திகளும் இங்கே அருள்பாலிக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் நாளில் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வார்கள். ஐப்பசி மாதத்தில் முதல் நாளில் இங்கே முதல் முழுக்கு செய்து கடைசி நாளன்று மயிலாடுதுறை காவிரியில் கடை முழுக்கு செய்வது விசேஷம்.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த கோவில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். கோவிலின் உள்ளே அப்படி ஒரு அமைதி. பிரபலமான கோவில்களில் நிறைந்திருக்கும் சப்தம் இல்லாது இறைவனை நிம்மதியாய், மன அமைதியுடன் தரிசிக்க ஏற்ற இடம் இந்த திருப்பராய்த்துறை.

திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் பதினாறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலுக்குச் சென்றால் மனதிற்கு அமைதி கிடைப்பது நிச்சயம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் இருக்கின்றன.  பெட்டவாய்த்தலை செல்லும் டவுன்பஸ்களும் [No. 8, 97], கரூர், குளித்தலை செல்லும் தனியார் பேருந்துகளும் இங்கே நிற்கும். 

அடுத்த முறை திருச்சி வந்தால் சென்று வாருங்களேன்.

மீண்டும் சந்திப்போம்……

வெங்கட்.
புது தில்லி.