எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 14, 2013

காவியத்தில் ஓர் ஓவியம் – சாண்டில்யன்

சில நாட்களுக்கு முன் கவிதை எழுதுங்க... என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவொன்றில் ஓவியம் ஒன்றினைக் கொடுத்து கவிதை எழுத அழைப்பு விடுத்தேன். பின்னூட்டத்திலேயே சுப்புதாத்தா, ஸ்ரீராம், கவிஞர் கி. பாரதிதாசன் ஆகியோர் கவிதைகளை எழுதி இருந்தனர். கே.பி. ஜனா சார் ஓவியத்திற்கு எழுதிய கவிதையை தண்ணென்று ஒரு காதல் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன். அப்பதிவில் அருணா செல்வம் பின்னூட்டத்தில் கவிதை எழுதி இருந்தார். நண்பர் முரளிதரன் அவரது தளத்தில் ஒரு வெண்பா வடித்திருந்தார்.  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இனி ஓவியம் பற்றி எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் கட்டுரையை இங்கு பார்க்கலாம்! இக்கட்டுரை 1957-ஆம் ஆண்டு வெளிவந்த சுதேசமித்திரன் தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்தது – இங்கே பொக்கிஷப் பகிர்வாக!

இடை இடையே எழுந்து நின்ற கற்பாறைகளைச் சுற்றி வளைத்து ஓடிய கோதாவரியின் நீல நிறப் பளிங்கு நீரிலே உதயகால சூரியாச்மிகள் கலந்து விளையாடியதால், நீர் மட்ட்த்தில் தெரிந்த சுழல்களும் கரை ஓரத்தில் தாக்கிய சிற்றலைகளும் அநேக கண்ணாடிகளைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கற்பாறைகளில் பிரவாகம் வந்து தாக்கிய வேகத்தினால் ஆகாயத்தில் எழுந்த நீர்த் திவலைகளிலே ஊடுருவிய கதிரவனின் இளங் கிரணங்கள், ஜலப் பிரதேசத்தில் ஆங்காங்கு சின்னஞ்சிறு வானவிற்களின் வர்ண ஜாலங்களை சிருஷ்டித்துக் கொண்டிருந்தன. கரையோரமாக நின்ற மரங்கள் வண்ண மலர்களைத் தண்ணீரில் உதிர்த்து ‘வானவில்லின் வர்ணங்கள் அதிக அழகா, தங்கள் மலர்கள் அதிக அழகாஎன்பதை ஆராய்வன போல் கிளைகளை நன்றாகத் தாழ்த்தி நதியின் ஜல மட்டத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றன. கரைக்கு அருகே வளர்ந்திருந்த கோரைப் புற்களுக்கிடையே தங்கியிருந்த ஹம்சப் பட்சிகளும் இந்த வேடிக்கையைப் பார்த்து ஓரிரு முறை சப்தித்தன. வானவில்லின் அத்தனை வர்ணங்களும் தன் மேனியிலிருக்கும் காரணத்தால் ஆண் மயிலொன்று கரையோரமாக கர்வ நடை போட்டுக் கொண்டிருந்தது.

இயற்கை அன்னையின் இந்த இந்திரஜாலக் காட்சியிலே மற்றொரு தெய்வீகக் காட்சியும் கலந்தது. ஆயிரமாயிரம் வயிரங்கள் மின்னுவது போல பளபளத்து நின்ற கோதவரியின் நீல நிற நீருக்குள்ளே மின்னலொன்று அதிவேகமாக ஊடுருவிச் சென்றது. அதற்குப் பின்னே நீல நிற வீச்சொன்றும் நீரில் தொடர்ந்தது. அந்த நீல நிறத் தோற்றத்தில்தான் எத்தனை பிரகாசம்! நீரின் நீலமே மறையத்தக்க அந்த கருப்பும், ஒளியும், நீலமும் கலந்த வண்ணத்தின் விந்தையைப் பார்த்து, சூழ்ந்திருந்த இயற்கையே மலைத்தது. இயற்கையை அனுபவித்த கவிகள் மலைத்திருக்கின்றனர். வேதாந்த விசாரத்தில் ஆழ்ந்த முனிவர்களும் மலைத்திருக்கின்றனர். முன்னால் நீரிலே ஊடுருவிச் சென்ற மின்னலும், பின்னால் அதைத் தொடர்ந்த கார்வண்ண மாய உருவமும் பலப்பல காவியங்களுக்கு நிலைக்களன்களாக விளங்கியிருக்கின்றன.

அந்த மின்னலையும் கார்மேனியையும் இணைத்துப் பேசிய போஜன், சம்பூராமாயணத்தில் ‘லக்ஷ்மியாகிய மின்னலை மார்பிடையே உடைய, கருணையாகிற ஜலத்தைக் கொண்ட காளமேகம் என்று திருமகளையும் திருமாலையும் வர்ணிக்கிறான். ஸ்ரீ ராமபிரான் திருமேனி ஒளியைப் பற்றி விவரித்த அருணாசலக் கவி ‘இரு விழியிலுமுள்ள கரு மணி என வந்த திரு உருவினில் ஒளி பெருகிடஎன்று நீரோட்டமுடைய கண்களின் கருமணிகளைப் போலவும் நீருண்ட மேகம் போலவும் பளபளத்து நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானது திருமேனியைக் கண்டு வியந்து நிற்கின்றான். கம்பர்பிரானும் கரிய செம்மலொருவனைத் தந்திடுதி!என்றே இறைஞ்சுகிறார்.

இயற்கையின் எழிலைப் பழிப்பவர்களும், இயற்கைக்கே காரண பூதர்களாயிருப்பவர்களுமான இறைவனும் இறைவியும் கோதாவரியில் நீரிலே நீந்தி விளையாடின கதையையே மித்திரன் அட்டைப்படம் சொல்லுகிறது. ஆட்சியின் கவலை விட்டு ஆரண்யத்திலே வசித்த காலத்தில் ஸ்ரீ ராமபிரானும், ஜனகன் பெற்ற செல்வியும் கோதவரியிலே துளைந்த ஒரு அற்புதச் சரித்திரத்தை பகவான் வால்மீகி நமது கண் முன்னே நிறுத்துகிறார். இருவரும் கோதாவரியிலே நீராடச் சென்று ஆற்றிலே குதிக்கிறார்கள். பாற்கடலிலே பிறந்த அன்னைக்கு நீர்க்கடலே லட்சியமில்லாதிருக்க, கடலுக்கு நீர் தாங்கிச் செல்லும் கோதவரிப் பிராவாகந்தானா ஒரு பிரமாதம்?  நீரிலே குதித்த சீதை மின்னல் மேகத்தை ஊடுருவது போல் வெகு வேகமாக ஜலத்தில் மூழ்கி நீந்திச் சென்றாள். தசரதன் தனையனும் வெகு வேகமாகத் தான் குதித்தான், நீந்தினான். ஆனால், தேவியின் வேகத்துக்கு முன்னால், பாணங்களை வெகுவேகமாக வர்ஷிக்க வல்ல, ராமபிரானின் வேகம் பலிக்கவில்லை. வளையேந்திய கைகள் வெகு வேகமாக மாறி மாறி நீரில் பாய்ந்து நின்றன. வாளியைத் தொடுக்கும் கரங்கள் அவற்றுக்குச் சளைத்தே பின் சென்றன. தேவி அதிவேகமாக நீந்திச் சென்று ஆற்றின் நடுவேயிருந்த பாறைகளில் ஒன்றில் ஏறி உட்கார்ந்தாள். அண்ணலும் மற்றொரு பாறையில் சற்றே காலூன்றி அவளைப் பிடிக்க முயன்றான். அவள் சிரித்தாள், நீரைக் கையால் வாரி அவன் முகத்தில் இறைத்தாள். அப்படியும் அவன் விடாது பாறை மீது ஏறி உட்கார்ந்தான். மறுபடியும் அவள் தண்ணீரில் மறைந்து வேறொரு பாறையில் ஏறிக்கொண்டாள். ‘சொல்லாக்கும் கடிய வேகச் சுடுசரம்எய்யவல்ல வில்லாளி திணறினான். அன்னை ஆனந்தமாகப் பெருநகை நகைத்தாள். கரை மீது நின்று இந்த வேடிக்கையைப் பார்த்த லக்ஷ்மணனும் நகைத்தான். ‘தம்பி! உங்கள் அண்ணன் பெரிய புருஷ சிங்கம் என்று சொன்னீர்களே! ஒரு பெண்ணைப் பிடிக்க இவருக்குத் திராணி இல்லையேஎன்றாள் தேவி. ஆமாம், அண்ணன் உபயோகமில்லைஎன்று அந்த ஆர்யபுத்திரனும் அவளுடன் சேர்ந்து கொண்டு சிரித்தான்.

பலரையும் கவர்ந்த இந்த சிருங்கார கட்டத்தை ஓவியர் மாதவன் தனது ஓவியத்தில் தத்ரூபமாக நமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். கால வேகத்திலே அசையாது நின்ற ஆதி காவியத்தின் அற்புதக் கட்டமே இந்த ஓவியம்!      

என்ன நண்பர்களே, ஓவியர் மாதவனின் ஓவியத்தினையும், அதற்கு சாண்டில்யன் அவர்கள் தந்த விளக்கத்தினையும் ரசித்தீர்களா....

மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 comments:

 1. சரித்திர நாவல்களில் சாதனை படைத்தவர்
  திரு.சாண்டில்யன் அவர்கள்..
  இனிய பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே..
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
  நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 2. சாண்டில்யன் கதைகளில் வர்ணனைகள் மிக சுவாரசியமாக இருக்கும். பகிர்வுக்கு நன்ரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள். என் பக்கமும் வந்து பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர். உங்களது பக்கத்திற்கும் வருகிறேன் விரைவில்....

   உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 3. இனிய பகிர்வுக்கு நன்றி நண்பரே
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
  அன்புடன்
  நாடிகவிதைகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணி....

   உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 4. வர்ணனையில் தலைசிறந்தவர் சாண்டில்யன்- இயற்கையானாலும் சரி, பெண்ணானாலு் சரி... அசத்துபவர்! இந்தக் கட்டுரையு்ம் அதற்குச் சான்று கூறி நிற்கிறது. வெகு ஜோர். இனி்ய இந்த நன்னாளில் அரிய பொக்கிஷத்தை வழங்கியமைக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
  Replies
  1. வர்ணனையில் அவருக்கு நிகர் அவரே தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 5. பொக்கிஷ பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 6. 50 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியமும், அதன் வருணனையும் காலம் கடந்தும் தரத்தில் உயர்ந்து நிற்கின்றன. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன்.

   Delete
 7. பொக்கிஷப் பகிர்வு அருமை ..!

  இனிய பொங்கல் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. வால்மீகி இராமாயணத்தில் வரும் அழகான வர்ணனையை சாண்டில்யன் அவர்களின் கைவண்ணத்திலும், ஓவியர் மாதவனின் தூரிகை வண்ணத்திலும் கண்டு ரசித்தேன்.

  போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 9. சாண்டில்யனின் வர்ணனை அதியற்புதம். படிக்க படிக்க ஆனந்தம். திகட்டவேயில்லை.

  சாண்டில்யனின் நாவல்கள் ஒன்றிரண்டை தவிர நிறைய நான் படித்ததில்லை. இந்த முறை புத்தகத்திருவிழாவில் சாண்டில்யனின் நாவல்கள் ஒன்றிரண்டை வாங்க எண்ணியிருக்கிறேன். சாண்டில்யனின் நாவல்கள், பதிப்பகத்தார் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள் .


  பகிர்விற்கு நன்றி.
  நட்புடன்,
  ராஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே. சாண்டில்யன் புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் தேடி உங்களுக்கு அனுப்புகிறேன் விரைவில்.

   Delete
 10. நீங்கள் கவிதை கேட்டிருக்கக் கூடாது வெங்கட். பெரிய வர்ணனை சாண்டில்யன் கொடுத்திருப்பதால் எங்களையும் வர்ணனை செய்யச் சொல்லிக் கேட்டிருக்க வேண்டும்! என்ன சொல்றீங்க? :))))

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. நீங்க எழுதுங்க.. நாங்க படிக்கிறோம்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   Delete
 11. படத்திற்கு சாண்டில்யன் அளித்த வர்ணனையும் விளக்கமும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்....

   Delete
 12. ரொம்ப நல்லா இருக்கு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர்.....

   Delete
 13. மிக அழகான வர்ணனை. ரசித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி....

   Delete
 14. அருமையான படமும் வர்ணனையும்.

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....

   Delete
 15. அருமையான பகிர்வு ஐயா.
  நான் நேற்றே பாதி படித்தேன்.
  அதற்குள் வேறு வேலை...
  இன்று தான் முழுமையாகப் படித்தேன்.
  சாண்டில்ணன் வர்ணனைகளைக் கெட்கவா வேண்டும்...!!
  பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்.
  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 16. இளம் வயதில் சாண்டில்யனின் நாவல்களை விரும்பிப் படிப்பேன். சாண்டில்யனின் அழகு வர்ணனையை நீண்ட காலத்திற்குப் பின் படிக்கும் வாய்ப்பு தங்களால் கிட்டியது. நன்றி!
  http://www.krishnaalaya.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையோ? தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணா ரவி.

   Delete
 17. // கால வேகத்திலே அசையாது நின்ற ஆதி காவியத்தின் அற்புதக் கட்டமே இந்த ஓவியம்! //

  அருமையான பொக்கிஷம். ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....