எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 8, 2013

ஃப்ரூட் சாலட் - 32 – மாத சம்பளம் 15 ரூபாய் 18 பைசா – கையளவு யானை

இந்த வார செய்தி:

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1971-ஆம் ஆண்டிலிருந்து துப்புரவுத் தொழிலாளிகளாக தற்காலிகப் பணியில் வேலை செய்பவர்கள் அக்கு மற்றும் லீலா ஷேரிகர். வேலை செய்ய ஆரம்பித்த போது அவர்களுக்கு நிர்ணயிக்கப் பட்ட ஊதியம் 15 ரூபாய் 18 பைசா. பணி நியமனம் செய்த பின் அவர்களை நிரந்தரமாக்காதது மட்டுமின்றி அவர்களது ஊதியமும் இதுவரை உயர்த்தவே இல்லையாம்.

2001 ஆம் ஆண்டு வரை பொருத்துப் பார்த்த இந்தப் பெண்மணிகள் வழக்கு தொடரவே இந்த மாத ஊதியமும் நிறுத்தப்பட்டது.  ஆனாலும் தொடர்ந்து அவர்கள் இந்த பள்ளியிலுள்ள 21 கழிப்பறைகளையும் சுத்தம் செய்து வருகிறார்கள். வழக்கு தொடர்ந்து ஒவ்வொரு நீதிமன்றமாக இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவும், ஊதிய உயர்வு வழங்கவும் சொன்னாலும் இதுவரை எந்த விதமான பலனுமில்லை.

குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் என்ற பெயரில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டுமென தற்போது விண்ணப்பித்துள்ளார்களாம், இந்த இரண்டு பெண்களும்.  60 வயது ஆவதற்கு இன்னும் சில மாதங்களே  இருக்கும் நிலையில் இவர்களுக்கு நீதி கிடைக்குமா?

இந்த வார முகப்புத்தக இற்றை:

மனிதன் வீட்டை மாற்றுகிறான், உடையை மாற்றுகிறான், நட்புகளை மாற்றுகிறான் – ஆனாலும் துக்கத்தில் மூழ்கி இருக்கிறான் ஏன் தெரியுமா? அவன் தனது சுபாவத்தினை மாற்றிக் கொள்வதில்லை.....


இந்த வார குறுஞ்செய்தி


பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளைச் சொல்லுங்கள், அது போதும்.... – புத்தர்.

ரசித்த புகைப்படம்: தலைப்பில் சொன்னது போல கையளவு தானே இருக்கிறது இந்த யானை?  என்ன ஒரு நேர்த்தி இந்த படத்தில்.
  
சந்தேகம்:

சமீப நாட்களா பெர்க் சாக்லேட்டுக்கு ஒரு விளம்பரம் வருது பார்த்தீங்களா? ஒரு ரவுண்ட் ஓடி முடித்த பின் பூங்காவில் உட்காரும் அப்பாவிடம் பெண் பெர்க் சாக்லேட் கொடுக்கிறாள். சாக்லேட் சாப்பிட்ட அப்பா, இன்னும் இரண்டு ரவுண்டு ஓட வேண்டுமென ஓட, இவள் விசிலடித்து தனது நண்பனை அழைக்கிறாள்.  இந்த விளம்பரம் மூலமா என்ன சொல்ல வராங்க – பெர்க் சாக்லேட் கொடுத்தா அப்பாவ சுலபமா ஏமாத்த முடியும்னு சொல்றாங்களா?


ரசித்த காணொளி:

ஒரு பஞ்சாபி சிறுவன் நமது தேசிய கீதம் பாடுகிறார் கேளுங்கள்.....  
படித்ததில் பிடித்தது:

குருவும் சீடனும்

அந்தக் குருகுலத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் மாணவர்கள் தவறாது கலந்து கொள்வார்கள். ஒரு நாள் பிரார்த்தனையின் போது ஒரு மாணவன் தட்டில் சாம்பிராணியை அதிகம் போட்டுப் புகைத்துக் கொண்டிருந்தான். புகை அறையெங்கும் நிறைந்து மண்டியிருந்தது.

ஆசிரியர் அந்த மாணவனைப் பார்த்து ‘தம்பி, தற்போது சாம்பிராணி நம்மிடம் குறைந்த அளவே உள்ளது. சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பிற்காலத்தில் இத்தகைய நறுமணப் பொருட்கள் விளையும் நாடுகளைக் கைப்பற்றும்போது, மனம் போல வேண்டிய அளவு புகைத்துக் கொள்ளலாம்என்று கூறினார்.

ஆசிரியர் கூறியது போலவே, அந்த மாணவன் பின்னாளில் சிரியா நாட்டைக் கைப்பற்றினான். அப்போது அங்கு சாம்பிராணி, குங்குலியம் போன்ற நறுமணப் பொருட்கள் ஏராளமாக்க் கிடைத்தன. அப்பொருட்களைப் பார்த்தபோது தமது மாணவ பருவத்தில் ஆசிரியர் கூறியது நினைவிற்கு வந்தது.

உடனே ஏராளமான நறுமணப் பொருட்களை ஆசிரியருக்கு அனுப்பி வைத்தான். அத்துடன் தனது ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினான்.

‘வணக்குத்துரிக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, தங்களுக்கு வேண்டுமட்டும் சாம்பிராணியும், குங்குலியமும் அனுப்பி வைத்துள்ளேன். இனி பிரார்த்தனையின் போது, சிக்கனம் காட்ட வேண்டியதில்லைஎன்று அதில் குறிப்பிட்டிருந்தான்.

அந்த முன்னாள் மாணவன் யார் தெரியுமா? உலகப் புகழ் பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டர்.

-          தினமணி 03.02.2013 நாளிதழிலிருந்து.இந்த நாள் இனிய நாள்:

இன்று கஜல் பாடகர் ஜக்ஜீத் சிங் பிறந்த நாள். 1941 ஆம் வருடம் இந்த நாளில் பிறந்த இவர் பல சிறப்பான பாடல்களை பாடி இருக்கிறார். இன்று இருந்திருந்தால் தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். அவரது நினைவாக இதோ அவர் பாடிய ஒரு பாடலை நீங்களும் ரசியுங்களேன்.

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. ரிடையராகும் வயதை நெருங்கிய சமயமும்கூட மிகமிகமிகக் குறைந்த சம்பளத்தில் இருக்கும் அவர்களை நினைத்தால் மனம் துயரடைகிறது. இந்நிலையிலும் வேலையை தொடர்ந்து சரிவர அவர்கள் செய்வதை நினைத்தால் மகிழ்வாக இருக்கிறது. யானைய கையில அடக்கின படம் சூப்பரு! விளம்பரங்கள்னாலே அதுல நிறைய மிகைப்படுத்தல் சேர்ந்துடுது வெங்கட்! காஜல் தெரியும்.... ஹி... ஹி... அதென்ன கஜல்? நான் இப்பத்தான் கேக்கறேன். சூப்பரு! சுவைமிக்க ஃப்ரூட் சாலட்டை ரசித்துச் சுவைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கஜல் (Gazal என்று உச்சரிக்க வேண்டும்; Gajal அல்ல)என்பது ஒரே அளவுள்ள (இதை பெஹர் என்று சொல்வார்கள்) உடைய இரண்டு வரிகளைக் (இதை ஷேர் என்று கூறுவர்; ஷேர் எழுதுபவர் ஷாயர்- அதாவது கவிஞர்) கொண்ட ஒரு கவிதைகளை உள்ளடக்கிய பாடல். பொதுவாக இரண்டு இரண்டு வரிகளைக் கொண்ட மொத்த பாடலின் பெஹர் ஒரே அளவு இருக்க வேண்டும். சாதாரணமாக இது சோக ரசத்தை வெளிப்படுத்த இசைப்பர்.

   [இதைத் தவிர ரதீஃப், மக்தா, காஃபியா என்ற technical இலக்கணச் சமாசாரங்களும் உள்ளன. அவற்றை விவரிக்க தனி பதிவு தான் எழுத வேண்டும். அப்படி எழுதினால் நீங்கள், கமல் சொன்னா மாதிரி பழமொழிய அனுபவிக்கனும் ஆராயக் கூடாது என்பது கவிதை, கஜல் ஆகியவற்றுக்கும் பொறுந்தும் என எனக்கு அறிவுரைக் கூறும் வாய்ப்பு இருக்கிறது]

   தமிழில் ஜாதிமல்லி என்ற படத்தில் ‘மறக்க முடியவில்லை’ என்ற பாடல் இந்த கஜல் பாடலின் முயற்சி என்று கூறலாம்

   Delete
  2. சிறந்த விளக்கம்.

   Delete
  3. அருமையான விளக்கம்.
   தெரிந்து கொண்டோம்.
   நன்றி !

   Delete
  4. கணேஷ் அண்ணே Gazal என்று எழுதுவதைத் தவிர்க்கவே கஜல் என எழுதினேன்.... நீங்க உடனே காஜல் அகர்’வால்’ ஆ[க்]கிட்டீங்களே! :)   Delete
  5. விரிவான விளக்கத்திற்கு நன்றிடா சீனு.

   நான் பாடலை ரசிப்பதோடு சரி.... :)

   Delete
 2. அந்தப் பெண்கள் வேலையைத் துறந்துவிட்டு வேறு வேலைக்குச் சென்றிருக்கலாம். எதற்காக இந்த வயதிலும் போராட வேண்டும்?

  புத்தரின் வரிகளைப் படித்ததும் எனக்கு யாரோ எழுதியது ஞாபகம்: "உங்களுக்கு யாருக்காவது பொருளாக உதவி செய்ய முடியவில்லையென்றால் உடல் உழைப்பைக் கொடுங்கள்"

  ReplyDelete
  Replies
  1. இத்தனை வருடம் விடாதவர்கள் இனிமேலா விடப் போகிறார்கள். போராடும் குணம் இருக்கும்வரை போராடுவது நல்லது தானே ஸ்கூல் பையன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகு.

   Delete
 4. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இப்படி ஒரு ஆசையா...?

  மனிதன், மற்றவரின் சுபாவத்தை மாற்ற நினைப்பதால் வரும் பிரச்னை தான் முதலில்...

  ஃப்ரூட் சாலட் - அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.....

   Delete
 5. ஃப்ரூட் சாலட் அருமை .... ஜன கன மன புதிய வடிவம் நானும் வெகுவாய் ரசித்தேன் சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 6. அனைத்துமே அருமை. மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றிய தகவல் மிகவும் சுவாரசியம். காணொளி இரண்டுமே அருமை. ஜக்ஜீத் சிங் பாடலும் அந்த காட்சிகளும் மனதை நெகிழச்செய்தது. சிறப்பான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   பல முறை கேட்டு ரசித்த பாடல் ஜ்க்ஜீத் சிங்கின் இப்பாடல். அவரது பிறந்த நாளில் அனைவரும் கேட்கட்டுமே என இங்கே இணைத்தேன்....

   Delete
 7. 1.60 வயது ஆவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இவர்களுக்கு நீதி கிடைக்குமா?//
  முதிய பெண்மணி களுக்கு நீதி கிடைக்க வாழ்த்துக்கள்.
  2.சுபாவத்தினை மாற்றிக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்
  எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது ”கோலத்தை மாற்றினான், கொள்கையை மாற்றினான் மனிதன் மாறவில்லை அவன் மயக்கம் தீரவில்லை”
  3.குறுஞ்செய்தி சொல்லும் புத்தர் கருத்து திருமூலர் பாடலை நினைவு படுத்துகிறது
  ’யாவருக்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே!’
  4, ரசித்த புகைபடம் கையில் வரைந்த யானை ஓவியம் அருமை. (வெட்டி ஒட்டப்பட்டதா)
  5.சாக்லேட் இரண்டு சுற்று அதிகமாய் ஓட அப்பாவிற்கு தெம்பு தருகிறது, மகளுக்கு தன் நண்பனுடன் பேச கூடுதல் நேரம் கிடைக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிறது விளம்பரம்.
  6.பஞ்சாபி சிறுவன் தன் மழலை குரலில் அழுத்தம் திருத்தமாட் ஓங்கி நமது தேசிய கீதம் பாடுவது அருமை.
  7.குருவின் வார்த்தையை மெய்பித்த சீடன் அருமை.
  8. (இந்தி பாடலை நான் புரிந்து கொண்ட அளவு) சிறுமிக்கு வழித்துணையாக இறைவன் வருவான் பாட்டியின் கதையும், சிறுமியின் நம்பிக்கையும் அதை சோதிக்கும் குருவும் பாடலும் இறை நம்பிக்கையை அதிகமாக்கும். கஜல் பாடகர் ஜக்ஜீத் சிங் குரல் அற்புதம் பாடல் இனிமையாக இருக்கிறது.
  ஃப்ரூட்சாலட் மிக் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஃப்ரூட் சாலட்-ன் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 8. அனைத்தும் மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர்.

   Delete
 9. சாலட் தொகுப்பு மிகவும் அருமை!

  சாக்லேட் சாப்பிடுபவர்கள் ஏமாளிகள்! என்பது விளம்பரத்தின் சாராம்சமோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி [வேங்கட ஸ்ரீனிவாசன்]....

   Delete
 10. “கையை மறைத்தது மாமத யானை!
  கையில் மறைந்தது மாமத யானை!”

  வரைந்த அக்கைக்கு ஒரு “அட்றா சக்கை”


  “பெர்க்” சாக்லெட் சாப்பிட்ட அப்பாவிற்கு மகளின் விஷய(ம)ம் தெரிந்தால் ”ஜெர்க்” ஆயிருவார்.

  ReplyDelete
  Replies
  1. கையிலேயே வரைந்த கைக்கு என்ன கைம்மாறு செய்யலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி [ஈஸ்வரன்]பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 11. இந்த வார ப்ரூட் சாலட் -ஐ ரொம்பவும் ரசித்தேன். குறிப்பாக சிறுமிக்குத் துணையாக ராம் சிறுவனாக வருவது.

  காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்ய ஸ்வாமி பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் சிறுவர்களுக்கென்று எழுதிய கதைப் புத்தகத்தில் இந்தக் கதை இருக்கிறது. அறுபதுகளில் அவர் எழுதிய கதைத் தொகுப்பு இது.சில சில வித்தியாசங்கள். காட்டு வழியில் துணைக்கு வரும் தோழனின் பெயர் 'ராதாரமணன்'. குருவின் பிறந்த நாளைக்கு ஒரு சிறிய பாத்திரத்தில் பால் கொடுப்பான் ராதா ரமணன்.
  குரு கோபத்துடன் அந்தப் பாலை சமையல் கட்டிற்கு அனுப்புவார். பாலை இன்னொரு பாத்திரத்தில் கொட்ட மறுபடியும் சின்னப் பாத்திரத்தில் பால்!
  முடிவும் வித்தியாசமானது தான். கடைசி வரை குருவின் கண்களுக்கு ராதா ரமணன் காட்சி கொடுக்கவே மாட்டான்.
  அஹங்கார, மமகாரம் இருப்பவர்களின் கண்களுக்கு ராதா ரமணன் தென்படமாட்டான். இறுதியில் குரு தன் தவறை உணர்ந்து திருந்துகிறார்.
  என் பேரன்களுக்கு அடிக்கடி நான் சொல்லும் கதை இது! காணொளியாகக் கண்டபோது ரொம்பவும் பிடித்து இருந்தது. பேரன்களுக்கும் இதைக் காட்டுகிறேன்.

  இன்னொரு கதையும் இந்தப் புத்தகத்தில் படித்து ஆச்சர்யப் பட்டேன். ரஜனிகாந்த் படத்தில் வருமே 'மாப்பிளை இவர்தான்; இவர் போட்டிருக்கும் டிரெஸ் என்னுது' கதையும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ஸ்வாமி எழுதியுள்ள கதையில் டிரெஸ்ஸுக்குப் பதில் காது கடுக்கன்!

  இந்தப் படம் வருவதற்கு முன்பே ஸ்வாமி திருநாட்டிற்கு எழுந்தருளிவிட்டார். யார் யாரைப் பார்த்து காப்பி அடித்திருப்பார்கள்?

  ஒரு பதிவு அளவுக்கு எழுதி விட்டேன்.  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரை மூலம் இன்னுமொரு கதை படிக்கக் கிடைத்தது.....

   தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 12. வழக்கம் போல அருமை. புத்தரின் வரிகள் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 13. கையளவு யானை கருத்தைக் கவர்ந்தது ..

  ஃப்ரூட்சாலட் ருசித்தது ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 14. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்-நு சும்மாவா சார் சொன்னாங்க... இந்த பெண்கள் கேட்கவேண்டிய காலம் தாழ்த்திவிட்டு இப்போ கேட்கறாங்க..பொறுமைக்கு ஒரு எல்லை வேண்டாமா?///

  குருவும் சீடனும் - அருமை..

  பெர்க் சாக்லேட் - எனக்கு இந்த சந்தேகம் தான் வந்தது!! நல்ல சொல்லிதரானுங்க...

  ப்ரூட் சலட் - நல்ல டேஸ்ட்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமீரா.

   Delete
 15. வழக்கம் போலவே தொகுப்பு சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. அடுத்த வெள்ளிக்கு இப்போதே ஏங்க வைத்து விட்டது
  தங்களின் இவ்வார ப்ரூட் சலாட் . கஜலும் , தேசிய கீதமும் ,
  யானையும் பட்டையைக் கிளப்புகின்றன. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 17. உங்களுடைய ப்ரூட் சாலட் ஸூப்பர்.
  கையளவு யானை கண்ணைக் கவர்ந்தது.
  ஜனகனமன பார்த்து ரசித்தேன்.
  அலெக்சாண்டர் கதை எனக்கு வேறு கதையை நினைவூட்டியது.

  ஆக மொத்தம் ப்ரூட் மிக்ஸ் சுவையோ சுவை.  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. நீதி என்பது நமது நாட்டைப் பொறுத்த வரை கிடைக்கும்... ஆனா கிடைக்காது...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை அழகு.

   Delete
 19. அனைத்தும் அருமைங்க நாகராஜ் ஜி

  ஜன கன மன அதி அருமையிலும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 20. இந்த ஃப்ரூட் ஸாலட் பலவித ருசியா அமைஞ்சுருக்கு.

  மாசச்சம்பளம்........மனதைப் பிழிகிறது:(

  கையளவு யானையோ....... சூப்பர்!!!!

  எதைச் சொல்ல? எதைவிட?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்....

   பிறந்த நாளுக்கு என்ன ஸ்பெஷல்?

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 23. பெண்களை நினைத்தால் பாவமாக இருக்கின்றது.

  அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 24. கையளவு யானை சூப்பர் ..... கருத்தைக் கவர்வதாக உள்ளது.

  அருமையான ருசியான ஃப்ரூட்சாலட் .. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....