திங்கள், 29 ஏப்ரல், 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 7 – மன்காமேஷ்வர் மந்திர் – சில உணவு வகைகள்....


மஹா கும்பமேளா ஒரு பயணம்பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6





இத்தொடரின் சென்ற பகுதியான மஹா கும்பமேளா ஒரு பயணம் பகுதி 6 ஜோதா அக்பர் மற்றும் ராமர் பதிவினை இப்படிச் சொல்லி முடித்திருந்தேன்.



என்ன நண்பர்களே பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியினை ரசித்தீர்களா? இன்னும் என்னென்ன இடங்களைப் பார்த்தோம், அடுத்த பகுதியில் பார்க்கலாமா? அது வரை உங்களுக்கு என்ன தேவை என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்க வழி என்ன என அடுத்த பதிவில் சொல்கிறேன். சரியா?



யோசித்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்! அது கிடைக்கவேண்டுமானால் நீங்கள் ஒரு முறை அலஹாபாத் நகருக்குச் செல்ல வேண்டும்! இல்லையெனில் கீழுள்ள விஷயத்தினைப் படித்து விடுங்களேன்.





மன் காமேஷ்வர் மந்திர்



யமுனைக் கரையோரமாகவே வரும்போது உங்களுக்குத் தெரியும் இன்னுமொரு இடம் தான் நீங்கள் மேலே பார்க்கும் மன்காமேஷ்வர் மந்திர்.  இந்தக் கோவிலில் வழிபட்டால் நீங்கள் நினைக்கும் நல்ல விஷயங்கள் நடக்குமாம். யமுனையில் படகில் சென்று கொண்டிருந்ததால் நாங்கள் அங்கிருந்து பார்த்து விட்டோம். மனதில் என்ன நினைத்தேன்! :) ஒன்றும் பெரிதாக நினைத்து விடவில்லை. வேண்டிக்கொள்ளவும் இல்லை! நமக்கு என்ன தர வேண்டுமென எல்லாம் வல்லவனுக்குத் தெரியும் என்ற நினைப்பு தான்!







எருமைக் குளியல்!



நாங்கள் குளித்து விட்டு படகில் வந்து கொண்டிருந்தபோது 15-20 எருமைகளும் “இவங்களே குளிக்கறாங்க! நாம ஏன் குளிக்கக் கூடாது?என்ற எண்ணத்தோடு யமுனையில் கரையோரமாகவே இறங்கி குளித்துக் கொண்டிருந்தன! அவற்றை ஓட்டிக் கொண்ட மனிதர் கரையோரமாகவே நடந்து வந்தார்! அவருக்கு குளிப்பது பிடிக்காது போல! இல்லை எருமையோட எருமையா குளிக்கறான் பாருன்னுயாராவது சொல்லிடுவாங்களோன்னு பயமா தெரியல!





தேங்கா-மாங்கா பட்டாணி சுண்டலை நினைவு படுத்துகிறதோ!



கரையில் இறங்கி முந்தைய பதிவில் சொன்னது போல படகோட்டிக்கு கூலியைக் கொடுத்து விட்டு கொஞ்சம் நடந்து முக்கிய சாலைக்கு வந்தோம். அங்கே வெளியே சுடச் சுட சன்னா சுண்டல் – தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாம் துண்டு துண்டாக வெட்டி அதில் போட்டு விற்றுக் கொண்டிருந்தார். நிறைய முளை விட்டிருந்தது பார்த்தால் பழசாக இருக்குமோ என்ற ஒரு பயம் நெஞ்சில். பக்கத்திலேயே கொய்யாப் பழம் விற்க, அதை வாங்கி உண்டபடியே நடக்க ஆரம்பித்தோம். பத்து நிமிட நடையில் நாங்கள் தங்கியிருந்த வேணி மாதவ் கோவிலை அடைந்தோம்.







மட்டி!



வரும் வழியில் ஒரு சிறிய வீடு. வீட்டு வாசலிலேயே விறகு அடுப்பு. அடுப்பின் மேல் ஒரு பெரிய வாணலி. எண்ணை நிரம்பியிருக்கிறது. சுடச் சுட இருப்பது அதிலிருந்து வரும் ஆவியிலேயே தெரிகிறது. அப்படி என்ன தான் இங்கே பொரித்து எடுக்கிறார்கள் என ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தார்கள் கூட வந்தவர்கள் [நானும் தான்!] அங்கே செய்து கொண்டிருந்தது மட்டி [அ] மட்ரி என அழைக்கப்படும் ஒரு தின்பண்டம்! மைதா, கொஞ்சம் அரிசி மாவு, ஓமம், உப்பு மற்றும் வெண்ணை சேர்த்து கரகரன்னு இருக்கும் ஒரு தின்பண்டம். சாதாரணமாக சிறிய வடிவில் இருக்கும் மட்டி இங்கே அலஹாபாத் நகரில் பெரியதாக செய்கிறார்கள். அதுவும் அவ்வளவு க்ரிஸ்பியாக.....  உடனே 10 மட்டியை வாங்கிக் கொண்டு வந்தோம். நீங்க மட்டும் சாப்பிட்டீங்களே, எங்களுக்கு கண்ணுல காட்டினீங்களா?அப்படின்னு யாரும் நாக்கு மேலே பல்லு போட்டு கேட்டுட கூடாது பாருங்க! அதனால தான் அந்த மட்டியோட படத்தை போட்டு இருக்கேன்! :)



சரி சரி எல்லாருக்கும் பசி வந்துருக்கும்....  அதனால என்ன திட்டாம, ஒழுங்கா சாப்பிட்டு வாங்க, அதுக்குள்ள நான் இந்த தொடரோட அடுத்த பகுதிய எழுதி முடிச்சுடறேன்... 



மீண்டும் அடுத்த வாரம் திங்கள் கிழமை தொடரின் அடுத்த பகுதி மற்றும் கடைசி பகுதியில் சந்திக்கும் வரை.....



நட்புடன்



வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

ஃப்ரூட் சாலட் – 43 - ஷம்ஷாத் பேகம் – கெய்ல் புயல் - சபலம்



இந்த வார செய்தி:

திரையுலகிற்கு பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் இழப்பின் வருத்தம் தீர்வதற்குள் இன்னுமொரு இழப்பு. 1919-ஆம் வருடம் பிறந்த ஷம்ஷாத் பேகம் அவர்கள் தனது 94-ஆவது வயதில் சென்ற செவ்வாய்க் கிழமை மரணமடைந்தார். பல பிரபலமான பாடல்கள் பாடியிருக்கும் இவர் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி 1919 ஆம் வருடம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் பிறந்தவர்.

அவரது அறிமுகப் பாடல் 1947 ஆம் ஆண்டு பெஷாவர் ரேடியோவில் ஒளிபரப்பாகியது. அவர் பாட்டு பாடுவதில் அவரது தந்தைக்குச் சிறிதும் விருப்பமில்லை. அதனால் சில கட்டளையோடு தான் பாடல்கள் பாட அனுமதி தந்தாராம் – அவரது முகத்தினை எப்பொழுதும் வெளி உலகிற்குக் காட்டக்கூடாது – புகைப்படங்கள் வெளியிடக் கூடாது என்பது தான் அந்தக் கட்டளைகள். அதை பல வருடங்கள் கடைபிடித்து வந்தாராம் பேகம் அவர்கள்.

இந்திய சுதந்திரத்தின் பிறகும், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளிலும் பிரபலமாக இருந்தது இவரது பாடல்கள். கஜ்ரா மொகப்பத் வாலா, லேகே பெஹ்லா பெஹ்லா ப்யார், மேரி பியா கயே ரங்கூன் போன்ற சில பாடல்களை பல முறை கேட்டிருக்கிறேன் – தில்லி வந்த பின்பு! தமிழகத்தில் இருந்தவரை ஹிந்தி பாடல்களில் அத்தனை ஈர்ப்பு இல்லை.

தில்லி வந்த பிறகு பழைய ஹிந்தி பாடல்கள் கேட்பதில் நாட்டம் ஏற்பட்டு, ஷம்ஷாத் பேகம், சேகல், முகம்மது ரஃபி, என பல பாடகர்களின் பாடல்களைக் கேட்டதுண்டு. அதுவும் ஷம்ஷாத் அவர்களின் கஜ்ரா மொஹப்பத் வாலா பாடலை மிகவும் ரசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த அவரது இரண்டு பாடல்களை நீங்களும் ரசிக்க இங்கே இணைத்திருக்கிறேன்.



ஆரம்பகாலத்தில் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரது பிந்தைய நாட்களில், அதுவும் சென்ற இரண்டு மூன்று ஆண்டுகளாக மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்தபோது சினிமா உலகம் அவரை அவ்வளவாக கவனிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.

சில நல்ல நபர்களின் முயற்சியால் இந்திய அரசாங்கம் அவருக்கு கொஞ்சம் பண உதவி செய்தது. இருந்தாலும் அவரது திறமைக்கு இந்த உதவி கொஞ்சமே....

திருமதி ஷம்ஷாத் பேகம் அவர்களது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
     
இந்த வார முகப்புத்தக இற்றை:

வாழ்க்கை – நாம விரும்பற பாட்டை போட்டுக் கேட்க வாழ்க்கை ஒண்ணும் MP3 ப்ளேயர் இல்லை. அது FM RADIO மாதிரி. அதுவா போடற பாட்டை ரசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த வார குறுஞ்செய்தி

YOU CAN MAKE MORE FRIENDS IN TWO MONTHS BY BECOMING INTERESTED IN OTHER PEOPLE THAN YOU CAN IN 2 YEARS BY TRYING TO GET OTHER PEOPLE INTERESTED IN YOU –DALE CARNEGIE.

ரசித்த புகைப்படம்: 



இன்னும் எவ்வளவு நாளுக்கு இந்த கஷ்டம் என யோசிக்கிறாரோ இந்த மூதாட்டி....

ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலும் ஷம்ஷாத் பேகம் அவர்களின் பாடல் தான்...



ஐ.பி.எல். கார்னர்:

ஐ.பி.எல். 2013 – ல் கெய்ல் எனும் புயல் அடித்தது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். என்னவோர் ஆட்டம்! கடைசி மூன்று ஓவர்களில் தான் அவரது ஆட்டத்தினைப் பார்க்க முடிந்தது. இதில் மகிழ்ச்சி இருந்தாலும், 24-ஆம் தேதி 40 வயதினைத் தொட்ட நமது சச்சினுடைய தற்போதைய விளையாட்டு “அவர் எப்போது விளையாடுவதை விட்டு விலகுவார் என்ற கேள்வியை அதிகப் படுத்தி வருகிறது. பார்க்கலாம் விரைவில் விலகுவாரா என.


படித்ததில் பிடித்தது:

சபலம்

காலக் கிழவா பொறுத்திடுவாய்!
கால்க்ஷணம் சகடம் நிறுத்திடுவாய்!
பாலரென் மைந்தர் மழலையினைப்
பரிவுடன் இன்னும் செவியுறவென்
சாலவும் வளர்ந்து தெளிவுற்றுச்
சளசளப் பேச்சை யவரிழந்தால்
ஞால மீ தெளியென் செவிக்கின்பம்
நல்கிட வேறென் கிடைக்குமையா?

சிறியதன் பாதம் நடைதடுக்கச்
சிரித்துப் பின்னால் பதுங்கிவந்தே,
அறியுமுன் கண்ணை அவள்கரத்தால்
அணைத்துப் பொத்தி விளையாட்டாய்
‘தெரியுமோ அம்மா?என விளம்பும்
சிறுமியும் விரைவில் வளர்ந்துவிட்டால்,
பெரியதோர் இன்பம் போய்விடுமே
பிறகெவ்விதம் நான் களித்திருப்பேன்?

சோலையில் குதித்துப் புழுதியுடன்
சோர்வுற என்றன் மடிவிழுந்து,
காலையே கட்டிக் கதைகேட்போர்,
கண்களின் ஜொலிப்பைப் கண்டிலனேல்,
மாலையென் கால்கள் துடிக்குமையா,
வளர்ந்திடும் வீணே பொழுதனைத்தும்;
வேலை யிலுள்ள துயரமெல்லாம்
வேறெவ் வழியில் விலகிடுமோ?

காலனே! கிழவா? பொறுக்காயோ?
கால்க்ஷணம் சகடம் நிறுத்தாயோ?

-          குமுதினி, பாடல் எழுதப்பட்ட வருடம் 1936. நன்றி ஆ.வி.


என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 25 ஏப்ரல், 2013

சென்று நாளை வா – வேதா. இலங்காதிலகம் [அன்னம் விடு தூது – 16] - நிறைவு

அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். வேதாவின் வலை எனும் வலைப்பூவில் எழுதி வரும் திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்கள் எழுதிய கவிதை இது.

அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் பதினாறாம் பகிர்வாக இங்கே!

 பட உதவி: சுதேசமித்திரன் 1957

சென்று நாளை வா!

அன்னமே நீரில் தோரணமே!

உன் பிரசன்னக் காரணம்
முன்னைத் தூதெனும் ஆரணமோ!
பின்னோக்கம்  சங்ககாலப் புராணம்.

நீள் விசும்பு பிரதிபலிக்கும்
நீருள் நீந்தும் சோடியே!
நீராடுகிறோம் வாழ்விலுன்னைப் போல்
நீளட்டுமெம்மின்பமும் நிலைக்க!

தோதுடன் அன்பன் அருகிருக்க
தூது எனக்கேன் அன்னமே!
சாதுரிய மனித குணத்திற்கு
சாகித்தியத்தில் பேர் கொண்டாயே!

நிறைகுடமாமெனன்பன் வரும் வரை
நின்றிடுவாய்!  நின்றிடுவாய்!  பின்
சென்று நாளை வா!
நன்று நிலவரம் பேசுவோம்!

( ஆரணம் - வேதம்.  தோதுடன் வசதி, பொருத்தம், தொடர்பு.
சாதுரிய திறமை, நாகரிகம்.  சாகித்தியம் இலக்கியம்.)



பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்

என்ன நண்பர்களே இப்பகிர்வினை ரசித்தீர்களா? பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! பகிர்வினை எழுதிய திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!



கடந்த 20.03.2013 அன்று படத்தினை வெளியிட்டு அன்னம் விடு தூது கவிதைகளை எழுதி அனுப்பச் சொன்னதற்கு மொத்தமாக பதினாறு க[வி]தைகள் வந்தன. பதினாறாவது க[வி]தை நான் சொல்லிய கடைசி தேதியாகிய 05.04.2013 க்குப் பிறகு வந்திருந்தாலும், கடைசி பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்.



எனது அழைப்பினை ஏற்று க[வி]தைகளை எழுதி அனுப்பிய அனைவருக்கும் நன்றி. பதினாறாம் கவிதையான இக்கவிதை தவிர வந்த மொத்த கவிதைகளின் சுட்டிகள் கீழே.
















தவிர, படம் கண்ட திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தனது வலைப்பூவில் கீழ்க்கண்ட பகிர்வினை வெளியிட்டு இருந்தார். அவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

அன்பென்பது....!!!


படத்திற்குக் கவிதை எழுதச் சொல்லும் இம்முயற்சி உங்களுக்கு பிடித்திருந்தால், சற்றே இடைவெளிக்குப் பின் எனது பக்கத்தில் தொடரும். [கவிதை அலர்ஜி எனும் நண்பர்கள் பயந்து விடவேண்டாம் – சற்று இடைவெளிக்குப் பிறகே தொடரும்!].

தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்தல்களுக்கும் மிக்க நன்றி நண்பர்களே.

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.