எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, May 1, 2013

அப்பக்குடத்தானும் வெண்ணைக்குடமும்திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்ல இரண்டு வழிகள் – ஒன்று வல்லம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்வது. மற்றொன்று கல்லணை வரை வந்து ஆற்றுப் பாலத்தினைக் கடந்து அங்கிருந்து திருக்காட்டுப் பள்ளி வழியாக செல்வது. திருக்காட்டுப் பள்ளி செல்வதற்கும் இரண்டு வழிகள் உண்டு – ஒன்று நேமம் வழி மற்றொன்று கோவிலடி வழி. இப்போது உங்களை கல்லணை வரை சென்று அங்கிருந்து உங்களை கோவிலடி எனும் ஊருக்கு அழைத்துச் செல்வது தான் இப்பகிர்வின் உத்தேசம்.கோவில் கோபுரம் – கோணம் 1

கோவில் கோபுரம் – கோணம் 2
  கோவில் கோபுரம் – நுழைவாயில்


கல்லணையிலிருந்து கோவிலடி எனும் கிராமம் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. கோவிலடி எனும் இடத்தில் என்னதான் இருக்கிறது? ஆதிகாலத்தில் திருப்பேர் நகர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தான் அப்பக்குடத்தான் எனும் பெயர் பெற்ற திவ்யதேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். 108 திவ்யதேசத் தலங்களில் எட்டாவது திவ்யதேசம். முதலாம் திவ்யதேசமான திருவரங்கத்தினை விட பழைய கோவில்.உற்சவர் வெண்ணைத்தாழி அலங்காரத்தில்
  தவழும் கிருஷ்ணர் – பாதங்கள் மற்றும் கூந்தல் அலங்காரம்
 


பங்குனி மாதத்தில் நடக்கும் சேர்த்தி திருவிழாவன்று தான் இங்கே சென்றோம். நாங்கள் சென்ற அன்று உற்சவர் அப்பால ரங்கநாதர் வெண்ணைக் குடத்தோடு வெண்ணைத் தாழிஅலங்காரத்தில் சேவை சாதித்தார். திவ்யமான தரிசனம். மூலவர் அப்பக்குடத்தான், தாயார் கமலவல்லி நாச்சியாரோடு காட்சியளிக்கிறார். புஜங்க சயனத்தில் வலது கையால் அப்பக் குடத்தினை அணைத்தபடி இருக்கிறார்.


பக்கத்திலேயே மார்க்கண்டேயன் அமர்ந்திருக்க, எதிரே கமலவல்லி நாச்சியார் அமர்ந்திருக்கிறார். தாயாரின் இருகண்களும் பெருமாளை நோக்கி இருக்க, பெருமாள் ஒரு கண்ணால் தாயாரையும் மறு கண்ணால் தரிசிக்க வரும் பக்தர்களையும் பார்த்துக் கொண்டிருப்பதாக கோவில் பட்டர் பெரிய விளக்கினைக் கையில் வைத்துக் கொண்டு சிறப்பாக தரிசனம் செய்து வைக்கிறார்.

திருப்பதி போல ஜருகண்டியோ, திருவரங்கம் போல தள்ளுமுள்ளோ கிடையாது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று தரிசனம் செய்யலாம்! கண்ணாரக் கண்டு திரும்பிய எங்களை பட்டர் இன்னும் வேண்டுமானாலும் சேவித்துக் கொள்ளுங்கள் என்கிறார்....

சரி கோவில் வரலாற்றினைப் பார்க்கலாமா? துர்வாச முனிவரின் கோபம் உலகறிந்தது. இவரது கோபத்திற்கு ஆளாகாதவர் யார். அப்படி அவரது கோபத்திற்கு ஆளாகி அவர் கொடுத்த சாபத்தினால் தனது பலத்தினை இழந்த ஒரு மன்னன் உபமன்யு. சாபம் என்றாலே பரிகாரமும் உண்டல்லவா? துர்வாச முனிவரிடமே இதற்குப் பரிகாரம் கேட்க, திருப்பேர் நகர் என்று வழங்கப் பெற்ற இத்தலத்தில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என வழி சொல்கிறார்.

மன்னனும் இவ்விடத்திலே ஒரு அன்னதானக் கூடத்தினை ஏற்படுத்தி, தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறார். நீண்ட நாட்களாக தொடர்ந்து அன்னதானம் செய்து வந்தபோது வைகுண்டநாதனாகிய நாராயணன் இங்கே ஒரு அந்தணர் வேடத்தில் வந்து அன்றைக்குத் தயாரான எல்லா உணவுப் பண்டங்களையும் சாப்பிட்டு விடுகிறார். இன்னும் என்ன வேண்டுமெனக் கேட்க, “ஒரு குடம் அப்பம் வேண்டும்எனக் கேட்டு அதையும் உண்டு மன்னனுக்குண்டான சாபத்தினையும் தீர்க்கிறார்.


திவ்யதேசங்களிலேயே ஒவ்வொரு இரவும் அப்பம் படைக்கப்படும் ஒரே ஸ்தலம் இது தான். இப்போதும் அப்பம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது. நாங்கள் சென்ற அன்று ஒரே ஒரு அப்பம் தான் இருக்கிறது என தந்தார்கள். கோவிலில் தற்போது சில மராமத்து வேலைகளும், இந்த காலத்து டைல் தரை பதிப்பதும் செய்து கொண்டிருக்கிறார்கள். 

திருவரங்கத்தினை விட பழைய கோவில் என்று சொல்கிறார்கள். எப்படி சிவஸ்தலங்களில் பஞ்சபூத ஸ்தலங்கள் உண்டோ அது போலவே பஞ்சரங்க ஸ்தலங்கள் என உண்டு. ஆதிரங்கம் [ஸ்ரீரங்கப்பட்டிணம் (மைசூர்)], அப்பாலரங்கம் [திருப்பேர்நகர்], மத்தியரங்கம் [ஸ்ரீரங்கம்], சதுர்த்த ரங்கம் [கும்பகோணம்], பஞ்சரங்கம் [இந்தளூர், மயிலாடுதுறை] ஆகியவற்றுள் இது இரண்டாவது ரங்க ஸ்தலம்.

கோவில் தினசரி காலை 08.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் மாலை நேரத்தில் 04.30 மணி முதல் 08.00 மணி வரையும் திறந்திருக்கும். கோவில் பூஜை செய்யும் பட்டர் தினமும் திருவரங்கத்திலிருந்து வருவதால் இப்படி என்று சொல்லிக் கொண்டிருந்தார் அங்கே சந்தித்த ஒரு பெரியவர். 
கோவில் தேர்
 

தேரின் இன்னொரு தோற்றம்
 

தேரில் உள்ள சிற்பங்கள்


வாசலில் ஒரு தேர் அழகாய் நின்று கொண்டிருந்தது. ஊர் மக்கள் அனைவருமாகச் சேர்ந்து உற்சவர் அப்பால ரங்கனை வெண்ணைத்தாழி அலங்காரத்தில் வாகனத்தில் புறப்பாடு செய்து வந்தது நன்றாக ரசிக்க முடிந்தது.  கோவில் இருக்கும் தெருவில் முதல் வீட்டில் தான் தினம் தினம் இவருக்கு அப்பம் செய்து தருகிறார்கள்.

கல்லணையிலிருந்து அரை மணி நேரத்திற்கு கோவிலடி வழியாக செல்லும் பேருந்துகள் இருக்கின்றன. பேருந்து நிற்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. சொந்த வாகனத்தில் செல்பவர்கள் கோவில் வரை வாகனத்திலேயே செல்ல முடியும்.

சிறிய கிராமம் – மக்களும் நன்றாகவே பழகுகிறார்கள். நாங்கள் பேருந்துக்குக் காத்திருந்தபோது ஒரு மீசைக்கார குடிமகன் பஸ் வர இன்னும் பத்து நிமிஷம் ஆகுங்க, அப்படி நிழல்ல உட்காருங்க!எனச் சொல்லியபடியே போனார். அப்போது தான் அடித்துவிட்டு மீசையைத் தடவியபடியே வந்திருப்பார் போல! பேசும்போதே வாசம்!

அன்று பங்குனி உத்திரத் திருநாள் என்பதால் வழியெங்கும் உள்ள கிராமத்துக் கோவில்களில் திருவிழாக் கோலம். பல இடங்களில் ஒலிபெருக்கிகளில் பரவை முனியம்மா பாடிக்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் ஏதோ கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. அங்கே ஒலிபெருக்கியில் ஓடிக்கொண்டிருந்த பாட்டு இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்ன பாட்டு? மாமியாரைத் திட்டாதடி, மாமனாரத் திட்டாதடி, நாத்தனார திட்டாதடிஎன்று ஒரு கருத்தாழமிக்க பாடல்!

இப்படியெல்லாம் இருந்தாலும் கோவிலடி சென்று அப்பால ரங்கனை மனம் குளிர தரிசித்து வந்தது மனதில் பசுமையாய்... கும்பல் இல்லாது, நிம்மதியாய் பெருமாளைத் தரிசிக்க உகந்த இடம் இது. எட்டாவது திவ்யதேசமான இத்தலத்தினை நீங்களும் சென்று தரிசித்து வாருங்களேன்..... 

மீண்டும் வேறொரு கோவில் பற்றிய பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

30 comments:

 1. excellent.also ur thinking about meesai and the wedding song super.
  because SRIRANGM BRAIN. Neyveli water

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.... வீட்டில் அனைவரும் நலமா?

   புது வரவிற்கு வாழ்த்துகள்! :)

   Delete
 2. சாண்டில்யனின் ரா‌ஜபேரிகை நாவலில் இந்த அப்பக்குடத்தானைப் பற்றி நன்றாக எழுதியிருப்பார். பார்க்க வேணுமென்ற ஆவல் உண்டு. சமயம்தான் எனக்கு அமையவில்லை. நேரில் பார்க்காத குறையைச் சற்றே போ்க்கியது தெளிவான படங்களுடனான உங்களின் பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சாண்டில்யன் ராஜபேரிகை நாவலை படிக்கும் ஆர்வம் வந்துவிட்டது. நூலகத்தில் இருக்கா பார்க்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.....

   Delete
 3. தவழும் கிருஷ்ணர் – பாதங்கள் மற்றும் கூந்தல் அலங்காரம்

  அனைத்தும் ரசனை நிரம்பிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. படங்களும் வரலாறும் அரங்கனை நேரில் கண்டதாக உள்ளன்! நன்றி! வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 5. அற்புதமான தரிசனம் பண்ணிவைத்த புண்ணியம் வெங்கட்.. ராஜபேரிகை நாவலை நினைவுறுத்திய பாலகணேஷுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வலையுலகில் உங்கள் பிரவேசம்.... மிக்க மகிழ்ச்சி தந்தது மோகன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. கல்லணையில் இருந்து கோவிலடிக்கு அழைத்துச் சென்று பெருமாளை தரிசனம் செய்து வைத்தீர்கள். வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 7. அருமையான படங்களுடன் அற்புதமான தகவல்கள். பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. எனது சிறு வயதில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள எனது அம்மாவின் ஊருக்கு இந்த கல்லணை, கோவிலடி வழியாக எத்தனையோ தடவை ( இப்போது செங்கிப்பட்டி வழி ) சென்று இருக்கிறேன். ஆனால் அந்த ஊரில் உள்ள அப்பக்குடத்தான் கோவில் சென்றதில்லை. உங்கள் பதிவு அந்த கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றது. மேலும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படங்கள் அருமை. தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எப்போது முடிகிறதோ அப்போது சென்று வாருங்கள் தமிழ் இளங்கோ ஜி! நிச்சயம் நிம்மதியாய் பார்க்க முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 9. பெருமாள் அப்பக்குடத்தானைத் தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை என்றாலும் தங்கள் பதிவின் வழியாக அவரைத் தரிசித்து மகிழ்ந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்.

   Delete
 11. அப்பக்குடத்தானைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தவழும் கிருஷ்ணனின் பின்ன(ல)ழகு ரசிக்கவைத்தது. பஞ்சரங்க ஸ்தலங்கள் பற்றியும் அறிந்துகொண்டேன். நன்றி வெங்கட். புகைப்படங்கள் யாவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி......

   Delete
 12. ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடத்தில் குதித்து நீந்திக் கொண்டே அக்கரை போனால் இந்தக் கோவிலடி வந்துவிடும். கொள்ளிடத்துக்கு அப்பால் - அந்தக் கரையில் இருப்பதால் இவரை அப்பால ரங்கன் என்கிறார்கள். கோவிலுக்கு அருகிலேயே கொள்ளிடம். புகைப்படத்தில் காணோமே!

  கொவிலடிக்குக் கூட்டிப் போனதற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 13. படங்கள் எல்லாம் அழகு தவழும் கிருஷ்ணர் ஜடை அழகு .
  எல்லா படங்களும் செய்திகளும் மிக அருமை வெங்கட்.
  அப்பக்குடத்தானைத் தரிசனம் செய்தேன்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 14. திவ்ய தேச தர்சனம் பெற்றுக்கொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. ஆஹா.... இந்தப்பதிவை இதுவரை பார்க்கலையே:( ஒருவேளை நான் அப்பக்குடத்தானைக் கண்டபின் என் கண்ணில் படவேணுமுன்னு விதி போல:-))))

  சுட்டிதந்த ரோஷ்ணியம்மாவுக்கு நன்றீஸ்.

  படங்கள் சூப்பர் பளிச்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....