புதன், 31 ஜூலை, 2013

ஹர்ஷ் கா டிலா – ரத்த பூமி பகுதி 9

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....












ரத்த பூமி தொடரின் சென்ற பகுதியினை முடிக்கும் போது நான் பார்க்க நினைத்தும் மாலை ஆகிவிட்டபடியால் பார்க்க முடியாது போன இடம் எனச் சொல்லி இருந்தது [ராஜா] ஹர்ஷ் கா டிலா எனும் இடம் தான். அகழ்வாராய்ச்சி மூலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட ஆறு விதமான காலகட்டங்களில் இருந்தவற்றை கண்டுபிடித்து அதை இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.




ஹர்ஷ் கா டிலா பற்றிய அறிவிப்பு பலகை
 
கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் நீளமும் 750 மீட்டர் அகலமும் உள்ள இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பொருட்கள் பற்றியும் கட்டிட அமைப்பு பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.  அகழ்வாராய்ச்சி பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் இங்கே சென்றால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.



அங்கே இருந்த நண்பர்களிடம் கேட்டபோது பல பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை என்று சொன்னார்கள். ரத்த பூமி தொடரின் பகுதி 7 – ல் பார்த்த ஷேக் சஹேலியின் கல்லறையினை அடுத்த இடம் தான் இந்த ஹர்ஷ் கா டிலா.....



என்னால் இப்பயணத்தின் போது இங்கே செல்ல முடியவில்லை என்பதால் அடுத்த முறை அந்த வழியே செல்லும் போது, தேவையான முன் அனுமதி பெற்று இங்கே சென்று பார்க்க நினைத்திருக்கிறேன். இணையத்தில் தேடியபோது ஷேக் சஹேலியின் கல்லறை பற்றிய காணொளி ஒன்று கிடைத்தது. இந்த காணொளியில் ஹர்ஷ் கா டிலா பற்றிய ஒரு சில படங்களும், அங்கே அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த சில பொருட்களும் இருக்கின்றன.  அந்த காணொளி இங்கே உங்கள் பார்வைக்கு......





அடுத்ததாக நாம் காணப் போவது ஒரு கோவில். பத்ரகாளி மாதாவின் கோவில் இது. ஐம்பத்தியோரு ஷக்திபீடங்களில் ஒன்று எனக் கருதப்படும் இந்த கோவிலில் தான் சதி தேவியின் வலது கணுக்கால் விழுந்தது.  கோவிலின் வாயிலில் இப்போதும் சதி தேவியின் வலது கணுக்கால் இங்கே விழுந்ததை நினைவுபடுத்தும் விதமாக சலவைக்கல்லால் செய்யப்பட்ட சதி தேவியின் வலது கணுக்காலை இங்கே பதித்து வைத்திருக்கிறார்கள்.







பிரதான சாலையில் இருக்கும் வரவேற்பு வளைவு.....
 
நாங்கள் சென்ற அன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இரண்டொரு தினங்களில் நமது குடியரசுத் தலைவர் அங்கே செல்ல இருந்ததால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் என அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள்.  கோவிலின் வாசலிலேயே நிறைய கடைகள் – கோவிலுக்குச் செல்லும்போது பத்ரகாளிக்கு சமர்ப்பிக்க நினைக்கும் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.  தேவிக்கு படைக்க சர்க்கரை உருண்டைகள், பூ, பழம், தேங்காய், சரிகை போட்ட சிகப்பு துப்பட்டாக்கள் என அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.




கோவிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து தெரியும் ஒற்றை கோபுரம்


இங்கே இன்னுமொரு விசேஷ காணிக்கையும் தருகிறார்கள். டெரக்கோட்டாவில் செய்யப்பட்ட குதிரை பொம்மைகளை இந்த காளி கோவிலில் மக்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.  மேலே சொன்ன தேவியின் சலவைக்கல்லால் ஆன கணுக்கால் அருகிலும், கோவில் கர்ப்பக் கிரகத்தின் அருகிலும் நிறைய டெரக்கோட்டா குதிரைகள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கோவிலின் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை.



கோவில் பின்புறத்திலிருந்து எடுத்த மூன்று கோபுரங்கள் படம்.....
 
அதிக அளவில் மக்கள் கூட்டம் இல்லாத காரணத்தினால் விரைவில் தரிசனம் செய்து விட்டு நான் வெளியே வந்துவிட்டேன். கோவிலைச் சுற்றி வந்து சில புகைப்படங்கள் எடுத்து பிரதான சாலைக்கு வந்து சேர்ந்தேன். சுற்றிலும் மக்கள் தத்தமது நினைவுகளில் உழன்று கொண்டிருக்க, அவர்களை கவனித்தபடியே மற்ற பயணிகளுக்கான காத்திருப்பில் நானும்.......



ரத்த பூமி தொடரில் இது வரை என்னுடன் பயணித்த வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.  அடுத்த பகுதியில் இத் தொடர் நிறைவு பெறும் என்ற சந்தோஷமான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.....



மீண்டும் அடுத்த பகிர்வில் சந்திக்கும் வரை.....



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.