செவ்வாய், 1 அக்டோபர், 2013

சபரியை நோக்கி.....

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]


எனது கேரள நண்பர் இன்னும் வராததால், அவருக்கு அலைபேசியில் அழைத்து மலையாளத்தில் சம்சாரித்து வந்து சேர்ந்த விஷயத்தினைச் சொன்னேன். அவர் வரும் வரை அக்கம்பக்கத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்த்தபடி பொழுது போனது. பார்த்த விஷயங்களும், சபரி நோக்கிய பயணமும் அடுத்த பகுதிகளில்.....

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.


படம்: இணையத்திலிருந்து.....

அக்கம் பக்கத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்ததை படித்த எனது தில்லி நண்பர் ஒருவர் “அங்கே நடந்து கொண்டிருந்த கேரள நாட்டிளம் பெண்களைபார்த்ததாக நினைத்தாராம்! அப்படியே அதை மேலிடத்தில் சொல்லி விடப்போவதாகவும் மிரட்டி இருக்கிறார்.....  அட எல்லாத்தையும் தப்பாகவே புரிஞ்சிக்கிடுதாரே அவரு!

என்னை அழைத்துப் போக வந்த நண்பர் பல்சரில் சீறி வர, அவரின் பின்னமர்ந்து அவரது வீட்டை நோக்கி பயணித்தோம். வீடு சென்று பயண அலுப்பு தீர குளித்து விட்டு காலை உணவாக சுடச்சுட ஆப்பமும் பழங்களும், பாலும் எடுத்துக் கொண்டு சற்றே இளைப்பாறினேன்.  நண்பர் அலுவலகத்திற்குச் சென்று அன்றைய வேலைகளை பங்களித்துக் கொடுத்து விட்டு 11.30 மணிக்கு வீடு திரும்பினார். அவரும், நானும் காரில் கிளம்பினோம். வழியிலே கைரலி தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பரது நண்பர் பாலுவும் ஏறிக்கொள்ள சபரிகிரி வாசனை நோக்கி மானசீகமாக வணங்கிவிட்டு சபரியை நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது.

திருவனந்தபுரத்திலிருந்து பத்தனம்திட்டா வழியாக பம்பை வரை வாகனத்தில் சென்று அங்கிருந்து நடந்து செல்வதாக திட்டம். கேரளாவில் உள்ள சாலைகள் பொதுவாகவே குறுகிய சாலைகளாகவே இருக்கின்றன. அந்த குறுகிய சாலைகளிலும் பேருந்துகளை ஓட்டும் ஓட்டுனர்கள் மிகவும் வேகமாகச் செலுத்துகிறார்கள். ஜாங்கிரி ஜாங்கிரியாக பலகைகளில் மலையாளத்தில் எழுதி இருப்பதை எழுத்துக் கூட்டி தப்பு தப்பாக நான் படிக்க, நண்பர் அதை திருத்திக் கொண்டே வந்தார். :)

அவர் தமிழ் படிக்க, நான் மலையாளம் படிக்க என பயணம் முழுவதும் கலகலப்பு. இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பயணம் செய்து திருவனந்தபுரத்திலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்தனம்திட்டா நகரை அடைந்தோம். அதற்குள் மணி இரண்டரை ஆகிவிடவே அங்கேயே மதிய உணவை முடித்துக் கொள்ள நினைத்து சைவ உணவகத்தினைத் தேடினோம்.

கேரளத்தில் அசைவ உணவுப் பிரியர்களுக்கு இருக்கும் உணவகங்கள் போல, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கான உணவகங்கள் மிகவும் குறைவு – அதிலும் நம் ஊரில் கிடைக்கும் வெள்ளை சாதம் அங்கே கிடைக்காது – சிகப்பரிசி சாதம் தான். இந்த பயணத்தில் சென்ற நாங்கள் மூவருமே சைவம் என்பதால் எங்களது வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தி சைவ உணவகம் இருக்கும் இடத்தினை ஒரு கடைக்காரரிடம் கேட்க, எங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு ஹோட்டல் ஆர்யாஸ் எனச் சொல்லி இடத்தைச் சொன்னார்.

முதலில் கண்ட ஹோட்டல் ஆர்யாஸில் நுழைந்து மூன்று சாப்பாடு எனச் சொல்ல, “தோசை, பரோட்டா, சப்பாத்திதான் இருப்பதாகச் சொல்லிவிடவே அடுத்த உணவகத்தினைத் தேடினோம். பேருந்து நிலையத்தின் அருகே இன்னுமொரு ஆர்யாஸ் இருப்பதாக ஒரு காவலர் சொல்லவே அங்கே சென்றோம். உள்ளே நுழைந்து கடையைப் பார்க்கும்போதே சுமாராகத் தோன்றியது. உள்ளே சென்றபிறகு பார்த்தால் அது தமிழர்கள் நடத்தும் உணவகம் எனத் தெரிந்தது. ஆனாலும் வெள்ளை சாதம் கிடையாது – சிகப்பரிசி சாதம் தான் – என்ன விற்குமோ அதைத் தானே வைத்துக் கொள்ள முடியும்?


 படம்: இணையத்திலிருந்து.....

சரி என மூன்று பேருக்கும் சாப்பாடு சொல்லி விட்டு கைகளை கழுவி விட்டு வந்தோம். அதற்குள் தட்டில் கிண்ணங்களில் ரசம், பொரியல், ஒரு கூட்டு, தண்ணியாக சேமியா மிதந்த ஒரு வெள்ளை நிற திரவம் [கேட்டால் பாயசம் என்றார்!, கேட்ட பிறகு சாப்பிட மனசு வரவில்லை!] மற்றும் ஊறுகாய், பப்படம் இருப்பதை கொண்டு வைத்தார். அதில் தேவைக்கு அதிகமாகவே சிகப்பரிசி சாதம் கொட்டினார்கள்.... 

சுவையாக இல்லை என்றாலும் மதிய உணவு சாப்பிட வேண்டுமே என்ற காரணத்திற்காகவே முதல் முறை போட்ட சாதத்திலேயே சாப்பிட்டதாக முடித்துக் கொண்டேன்.  பக்கத்து டேபிளில் பார்வையை ஓட்டினேன். அங்கே கண்ட காட்சி என்ன? [பதிவர் என்றால் இப்படி அடுத்தவன் சாப்பிடறதைக் கூட விடாம பார்க்கணுமா என்ன!] அடுத்த பதிவில் பார்க்கலாமா?

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 கருத்துகள்:

  1. .சுவாரஸ்யம்தான். பக்கத்து டேபிளில் என்னதான் நடந்தது? :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த டேபிளில் நடந்தது என்ன.... விரைவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. Dear kittu,

    Adutha table il yenna nadandhadhu ? Adutha padhivu varai kathirukka porumai illai.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த டேபிளில் நடந்தது என்ன.... விரைவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  3. பக்கத்து டேபிளைப் பார்க்க ஆவலாய் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த டேபிளில் நடந்தது என்ன.... விரைவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  4. //கேரளத்தில் அசைவ உணவுப் பிரியர்களுக்கு இருக்கும் உணவகங்கள் போல, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கான உணவகங்கள் மிகவும் குறைவு – அதிலும் நம் ஊரில் கிடைக்கும் வெள்ளை சாதம் அங்கே கிடைக்காது – சிகப்பரிசி சாதம் தான்.//

    உண்மை. நாங்களும் குருவாயூர் போனப்போ ரொம்பவே கஷ்டப்பட்டோம். டீ கூடக் குடிக்க முடியாதபடி டீக்கடைகளிலும் அசைவம். :( நாம வேண்டாம்னு வந்தா அதைக் கேலியும் செய்தாங்க. அதனாலேயோ என்னமோ இன்னமும் கேரளப் பக்கம் போகணும்னு தோணலை. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்குமே அசைவம் தான்... சின்னச் சின்ன கடைகளில் கூட.... உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  5. கேரளத்தில் அசைவ உணவுப் பிரியர்களுக்கு இருக்கும் உணவகங்கள் போல, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கான உணவகங்கள் மிகவும் குறைவு //

    பெண்ணை கேரள எல்லையில் படிப்புக்காக சேர்த்துவிட்டு நாங்கள் படும் பாடு... அப்பப்பா...

    அந்த சிவப்பரிசி சாதம் குழம்பு ரசத்துடன் சேராமல் விரைத்துக் கொண்டு... அதிலும் நாகர்கோயிலிலிருந்து மார்த்தாண்டம் வரை நம் புழுங்கலரிசி போல் ஒன்று போடுவாங்க பாருங்க... ஒவ்வொன்று அரிசியும் கோதுமை சைசில் வாயில் போட்டால் ரப்பர் மாதிரியே இருக்கும்... மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவப்பரிசி சாதம் குழம்பு ரசத்துடன் ஒட்டவே ஒட்டாது - இதில் இருக்கும் கஷ்டமே இது தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  6. நானும் கேரள பயணத்தின் போது
    இந்தச் சிவப்புச் சோறு பிரச்சனையில்
    மாட்டித் தத்தளிக்கிறேன்
    டிஃபனாகவே இரண்டு நாள் சாப்பிட்டும்
    கடத்தி இருக்கிறேன்
    பயண அனுபவம் சுவாரஸ்யம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சில வேளைகள் டிஃபனாகவே உண்டு காலத்தைக் கழித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. கேரள பயணம் என்றால் பழங்களோடும் , சிற்றுண்டிகளோடும்
    உணவை தேர்ந்தெடுப்பது உசிதம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  10. சிகப்பரிசி என்பது நம்ம சம்பா அரிசிதானே ? நல்ல பதமாக வேகவைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்குமே...!

    மலையாளிகளுக்கு சாப்பாட்டில் கொஞ்சம் மீனாவது இருக்க வேண்டும் எனவேதான் சைவ சாப்பாடு அங்கே இல்லை போல....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  11. கேரளாவில் அசைவம் பக்கம் போகாமல் இருப்பதே நலம். நம்ம ஊர் எருமைகளுக்கும் பசுக்களுக்கும் அங்கேதான் கபால மோட்சம் அளிக்கப் படுகிறது.

    (என்ன உலகமய்யா இது! சிகப்புத்தோல் பொண்ணுங்க ஓகேயாம்! சிகப்புத்தோல் அரிசின்னா ஓவேயா!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  12. பயணம் மிக அருமை. சுவாரஸ்யம். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  13. கேரளா போய் சிகப்பரிசி சாதம் சாப்பிடலை அப்படின்னா சாமி கண்ணை குத்தும் :-)....... சைவ சாப்பாடு தேட இவ்வளவு கஷ்டமா என்ன !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிகப்பரிசி சாதம் சாப்பிட்டாச்சு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

      நீக்கு
  14. கல்லும், முள்ளும் மட்டுமல்ல இதுப்போன்ற உணவுகள் கூட மனிதனை பக்குவப்படுத்தி கடவுளை தரிசிக்கும் நொடியை ஆராதிக்க வைக்குது போல! அடுத்த டேபிள்ல இருக்குறவர் ரெண்டு ஆள் சாப்பாட்டை வளைத்து கட்டி சாப்பிட்டாரா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி....

      நீக்கு
  15. உணவில் சுவையில்லாவிடினும் அனுபவம் சுவையானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.....

      நீக்கு
  16. ஒரு முறை திருவனந்தபுறத்தில் கசப்பான சைவ உணவு அனுபவம் கிடைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

      நீக்கு
  17. கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தைசபரி பயண அனுபவம் அருமை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  18. // கேரளத்தில் அசைவ உணவுப் பிரியர்களுக்கு இருக்கும் உணவகங்கள் போல, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கான உணவகங்கள் மிகவும் குறைவு – அதிலும் நம் ஊரில் கிடைக்கும் வெள்ளை சாதம் அங்கே கிடைக்காது – சிகப்பரிசி சாதம் தான்.//

    பயணத்தில் எல்லாவற்றையும் தேடித் தேடியே சென்று இருக்கிறீர்கள். அப்படி தேடியும் சிகப்பரிசி சாதம்தான். சிகப்பரிசி சாதம் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....