வெள்ளி, 31 ஜனவரி, 2014

ஃப்ரூட் சாலட் – 78 – சாதனை – பெப்சி – வாசகர் கூடம் – அடையாளம்




இந்த வார செய்தி:

வினோத் குமார் சிங் – பீஹார் மாநிலத்தில் உள்ள சிவான் மாவட்டத்தில் பாராசிக்வாரா எனும் கிராமத்தினைச் சேர்ந்த 33 வயது இளைஞர். பீஹார் மாநில அரசில் வேலை பார்க்கும் இவர் ஒவ்வொரு வார இறுதியிலும், நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக தனது ஊரிலிருந்து கொல்கத்தா செல்வார். தனது ஊரில் நீச்சல் பயிற்சிக்கு போதிய வசதி இல்லை என்பதால் வாராவாரம் இப்படி பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

தேசிய அளவில் பல நீச்சல் போட்டிகளில் வென்றுள்ள இவர், உலகளவிலும் சில போட்டிகளில் பங்குபெற்ற சிறப்பான தகுதிகளை அடைந்துள்ளார்.  இவரது நீச்சல் திறமையின் காரணமாகவே இவருக்கு பீஹார் மாநில அரசில் வேலை கிடைத்தது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.  இப்போது இவர் நீச்சலில் இன்னும் ஒரு மகத்தான சாதனை படைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.

என்ன சாதனை? புகழ் பெற்ற English Channel ஐ நீந்திக் கடக்கும் சாதனை, அதுவும் எப்படி, தனது கண்களை கட்டிக் கொண்டு, கால்களை இரண்டையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு நீந்திக் கடக்கும் சாதனை செய்ய முயற்சி செய்ய இருக்கிறார்.  நீச்சலில் ஒரு வகையான Butterfly Stroke இவருக்கு மிகவும் சுலபமாகவும், இயற்கையாகவும் வருகிறது என்கிறார் இவரது பயிற்சியாளர். 

கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியராக இருக்கும் இவரது தந்தை இவருக்கு நல்ல படிப்பினைக் கொடுத்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கொல்கத்தாவிலே படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற இவர் மேல்படிப்புக்காக பீஹார் வந்தாராம்.  ஆனாலும், படிப்பினை விட நீச்சலில் இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து அதில் ஈடுபட்ட அவருக்கு அந்த நீச்சல் காரணமாகவே வேலையும் கிடைத்திருக்கிறது. 

ஏற்கனவே இந்த English Channel-ஐ குற்றாலீஸ்வரன் போன்றவர்கள் கடந்திருக்கிறார்கள். இவரை மட்டும் இங்கே சிறப்பாகக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு – பிறவியிலேயே இவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. தனது குறையை பெரியதாக எடுத்துக் கொள்ளாது, வாழ்க்கையில் சிறப்பான செயலை செய்ய நினைக்கும் வினோத் குமார் சிங் அவர்களை வாழ்த்துவோம். அவரது முயற்சி வெற்றி அடைய உங்கள் சார்பில் எனது வாழ்த்துகளும்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்துடன் அமர்வதில்லை. ஏன் என்றால் பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, தனது சிறகுகளை.

இந்த வார குறுஞ்செய்தி

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத பூந்தோட்டம் போன்றது. ஆனால் என்னிடம் பல சிறப்பான மலர்கள் கொண்ட அழகான பூந்தோட்டம் இருக்கிறது. அப்படி ஒரு சிறப்பான பூ ஒன்று இப்போது இந்த குறுஞ்செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிறது!

இந்த வாரத்தின் புகைப்படம்: 


என் இலைகள் எங்கே?
மீண்டும் நான் துளிர்ப்பது எப்போது?

ரசித்த காணொளி:

பெப்சியும் கோகோ கோலாவும் போட்டிப் போட்டுக்கொண்டு பல விளம்பரங்களைச் செய்வதுண்டு.  அப்படி ஒரு பெப்சி விளம்பரம் இன்றைய ரசித்த காணொளியாக உங்கள் பார்வைக்கு......



புதிய வலைப்பூ:

வாசகர் கூடம் – புத்தகம் சரணம் கச்சாமிஎன்ற தலைப்பில் நம்ம பதிவுலக வாத்யார் கணேஷ், அவரது சீடர்களான திடம் கொண்டு போராடும் சீனு, நஸ்ரியா புகழ் பரப்பும் கோவை ஆவி, வேலையில் சேர்ந்து விட்டாலும் இன்னமும் பள்ளி மாணவனாகவே நினைக்கும் ஸ்.பை. சரவணன், அலைகளை கரை சேர விட மறுக்கும் அரசன் மற்றும் கனவுகளை மெய்யாக்க நினைக்கும் ரூபக் ராம் ஆகியோருடன் சேர்ந்து புதியதாக ஒரு தளம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் படித்த புத்தகங்களில் ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும் என்று புத்தகங்களுக்காக தனியான தளம்துவங்கியிருப்பதாக சொல்கிறார்கள். 

முதல் பதிவாக பரபரப்பின் பெயர் துளசிதளம்! என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசிதளம் கதை பற்றி எழுதி இருக்கிறார்கள். சிறப்பான இவர்களது சேவை தொடர நீங்களும் ஆதரவு தரலாமே!


படித்ததில் பிடித்தது!:

அன்புருவமாய்
அமைதிப் பூங்காவாய்
கருணைக் கடலாய்
பண்புப் பெட்டகமாய்
தியாகச் சுடராய்
அழகுச் சிலையாய்
போகப் பொருளாய்
வரையறுக்கப்பட்ட அடையாளங்களில்
தொலைந்தே போனது
எம் ஆதி அடையாளம்!

-   கிருட்டினம்மாள். [சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் தொகுப்பிலிருந்து!]
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 30 ஜனவரி, 2014

அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவாள்......



உங்களுக்கு ஜாதகம், எண் ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டா? எனக்கு கிடையாது! அதற்காக அதில் நம்பிக்கை உள்ளவர்களை பழிப்பதும் கிடையாது. அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது பார்க்கிறார்கள், நமக்குப் பிடிக்கவில்லை, பார்க்கவேண்டாம்என்ற எண்ணம் தான். ஆனால் பல சமயங்களில் இந்த அதிர்ஷ்ட எண்கள், ஜோதிடம் போன்றவை நம் மீது திணிக்கப்படுவதுண்டு.

இப்படி அதிர்ஷ்ட எண்கள் பற்றிய விஷயம் தான் இன்றைய பதிவு. சில வருடங்களுக்கு முன்னர் நான் ஏர்டெல் அலைபேசி எண்ணை புதிதாக வாங்குவதற்கு கடைக்குச் சென்றேன். புதிய எண் வேண்டும் எனக் கேட்டபோது நான்கைந்து எண்களை எடுத்துக் கொடுத்து எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்ல, 4566 என முடியும் ஒரு எண்ணை எடுத்துக் கொண்டேன் – கொஞ்சம் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதால்!

 பட உதவி: கூகிள்

எடுத்துக் கொடுத்தவுடன் அந்த கடைக்காரர் சொன்னது – “கடைசி நாலு நம்பர் கூட்டுனா 3 வருது.  நல்ல ராசியான எண்! உங்களுக்கு நல்ல செட் ஆகும்!என்றார். அடடா, சாதாரணமா எடுத்தா, இப்படி சொல்றாரே, வேற நம்பர் எடுக்கலாமா?என நினைத்தேன். பிறகு சரி இருக்கட்டும் என விட்டு விட்டேன்.  எல்லா நண்பர்களுக்கும் இந்த எண் கொடுத்தாயிற்று, உறவினர்களுக்கும் கொடுத்து நல்லபடியாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆரம்பித்தது தொல்லைகள்! மாலை, இரவு என பார்க்காது பல சமயங்களில் அலைபேசி அடிக்கும் – தெரியாத எண்ணாக இருந்தால் பொதுவாக எடுப்பதில்லை – இருந்தாலும் சில சமயங்களில் எடுக்க வேண்டியிருப்பதால் எடுத்தால், எதிர் முனையிலிருந்து ஒரு குரல் – “சாயங்காலத்திலேருந்து கேபிள் வேலை செய்யலை, சீக்கிரமா வந்து கொஞ்சம் சரி பண்ணுங்க! முக்கியமான மேட்ச் இருக்கு!என்று சொல்லும் ஒரு ஆண் குரல்! அவரிடம் நான் கேபிள் ஆபரேட்டர் இல்லை என்று புரியவைப்பேன்.

சில சமயங்களில் அலைபேசியை எடுத்தால் எதிர் முனையிலிருந்து பெண் குரல் – ‘அட என்னப்பா உங்கூட ரோதனையா போச்சு! நல்ல விறுவிறுப்பான கட்டத்துல Kyunki Saas Bhi Kabhi Bahu Thi சீரியல் நல்ல கட்டத்துல போயிட்டு இருக்கும்போது கேபிள் கட் பண்ணிட்டயே”.  அவங்களுக்கு மாதாஜி, நான் கேபிள் ஆபரேட்டர் இல்லை, தப்பான எண்ணுக்கு ஃபோன் பண்ணிட்டீங்கன்னு சொன்னா நம்ப மாட்டாங்க!. நம்ம கட் பண்ணாலும், திரும்பவும் ஃபோன் பண்ணுவாங்க!

கிட்டத்தட்ட மூணு நாலு வருஷமா இந்த எண் தான் இருக்கு, அப்பப்ப இந்த மாதிரி கேபிள் வரலைன்னு வர அழைப்புகளும் வந்தபடியே தான் இருக்கு. பல பேர் கிட்ட இந்த நம்பர் இருக்கறதால மாத்தணும் நினைச்சா முடியல! சரி இந்த அலைபேசி விவகாரம் தான் இப்படி இருக்குன்னு பார்த்தா MTNL [அதாங்க நம்ம ஊரு BSNL-க்கு ஒண்ணு விட்ட தம்பி!] தரும் தொலைபேசி சேவையிலும் சில தொல்லைகள்!

இதுல நமக்கு தேவையான எண்ணை எல்லாம் தேர்ந்தெடுக்க முடியாது. அவங்க என்ன எண் கொடுக்கறாங்களோ அது தான்.  இப்படி அவங்களா கொடுத்த நம்பர் மூலம் தான் அழைப்புகளும், இணைய இணைப்பும். வந்து கொஞ்ச நாள் வரை எந்த பிரச்சனையும் இல்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரு இரவு வேளை! சமையல் அறையில் குக்கர் விசில் வந்தவுடன் நிறுத்த காத்திருக்கையில் மணி அடித்தது! சரின்னு சின்னதா வைச்சுட்டு ரிசீவரை கையில் எடுத்து காதில் வைத்தேன் – அங்கிருந்து ஒரு பெண் குரல் – 5 கிலோ ஆட்டா [கோதுமை மாவு] வீட்டுக்கு அனுப்புங்க!என்று கேட்க, அவரிடம் “நீங்க அதுக்கு மளிகைக் கடைக்கு ஃபோன் பண்ணுங்க!ன்னு சொல்லி வைச்சுட்டேன்.

அப்பப்ப இந்த மாதிரி அழைப்பு வரும், நான் இது கடை இல்லைன்னு சொல்லி வைச்சுடுவேன். ஒரு நாள் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன்.  பாதி குளித்துக் கொண்டிருந்த போது ட்ரிங்.... ட்ரிங்!க அப்போது இங்கே வந்திருந்த என் அப்பா, எடுத்து, ‘ஹலோ சொல்ல, வழக்கம்போல அங்கிருந்து ஹிந்தியில் ஏதோ பேச, அப்பாவுக்கு ஹிந்தி தெரியாததால், ஆங்கிலத்தில், ”ஒரு நிமிஷம் ஹோல்ட் பண்ணுங்க, நான் என் பையனை கூப்பிடறேன்ன்னு சொல்லி என்னை சீக்கிரமா வாடா எனக் கூப்பிட, பாதிக் குளியலில் என்ன அவசரமோ என வந்தேன்!

ரிசீவரை எடுத்து காதில் வைக்க, அந்தப் பக்கத்தில் ஒரு பஞ்சாபி பெண்மணி, பஞ்சாபியில் பேசுகிறார்! கடையில நீ இருக்காம, வேற யாரையோ ஆங்கிலத்தில் பேச வைக்கிறயே, எழுதிக்கோ, 10 கிலோ ஆட்டா, 3 கிலோ கடுகு எண்ணை, சன்னா மசாலா.....என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார்.  நான் சொல்வதைக் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை! சரி சொல்லி முடிக்கட்டும் என காத்திருந்து பின்னர் அவரிடம் சொன்னேன் – மாதாஜி, இது கடையல்ல, நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்க, கடைக்கு சொல்லுங்க!ன்னு சொன்னா, அதான் வீட்டுல சொல்லிட்டேனே, நீயே கடைக்கு சொல்லிடு, சாயங்காலத்துக்குள்ள சாமான் அனுப்பிடுந்னு சொல்ல, ஒரே களேபரம்.

அலைபேசியில் கேபிள் கனெக்‌ஷன், தொலைபேசியில் மளிகை சாமான்கள் என இரண்டிலுமே தொந்தரவு! சில சமயங்களில் பேசாம இரண்டு இணைப்புகளையும் தூக்கி எறியலாமா, தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லாம இருக்கலாமான்னு கூட தோணும்!”.  ஆனா பழகிடுச்சே!

நேற்று கூட சாலையைக் கடக்கும்போது அலைப்பேசியில் அழைப்பு – சாலையைக் கடந்ததும், எடுத்து பேசினால் – ஒரு ஆண் குரல் – கோபத்துடன் – “உடனே வந்து கேபிள் கட் பண்ணிடு – நீ கொடுக்கற சர்விஸ் ரொம்பவே மோசம், மாசத்துக்கு நாலு தடவை கட் ஆகுது!என்று தொடர்ந்து நடுநடுவே தில்லியின் புகழ்பெற்ற வசவுகளை கொட்ட, எனக்கும் கடுப்பு! நானும் இரண்டு வசவுகள் சொல்லி, முதல்ல நம்பரை சரியான்னு பாருடா என் வென்று!என அவன் தப்பான எண்ணுக்கு அழைத்ததை புரிய வைத்தேன்! ஒரு சாரி கூட சொல்லாது இணைப்பை துண்டித்தது அந்த குரலுக்குரிய ஜென்மம்!

அதென்னமோ எனக்கும் இந்த தொலை/அலைபேசிகளுக்கும் ஒத்தே வருவதில்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த தொலைபேசி எண்ணிலும் நிறைய பிரச்சனைகள்.  அப்போது நடந்த விஷயங்கள் பற்றி முன்பே பதிவில் எழுதி இருக்கிறேன் – யாரடி நீ மோகினி? நல்ல வேளை அந்த மோகினியால் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை!  ஏன்னு கேட்காதீங்க, படிக்காதவங்க படிச்சுப் பாருங்க!

இப்ப எனக்கு ஒரே ஒரு ஆசை. அது “ரொம்ப அதிர்ஷ்டமான எண்எனச் சொன்ன அந்த கடைக்காரரை தேடிப் பிடித்து திட்ட ஆசை!  என்ன பண்ணலாம்னு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


புதன், 29 ஜனவரி, 2014

திறந்த ஜன்னல் – குறும்படம்





சில வாரங்களாக புதன் கிழமைகளில் குறும்படம் பற்றிய பகிர்வு எழுதுவது நின்று விட்டது. இன்று ஒரு குறும்படம் பற்றிப் பார்க்கலாம்!

சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது Khulli Khidki” என்ற ஒரு குறும்படம் – ஹிந்தி மொழியில் பார்த்தேன்.  அதாவது “திறந்த ஜன்னல்!என்பது தான் குறும்படத்தின் தலைப்பு. இது உண்மைச் சம்பவத்தினை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம்.


ப்ரேர்ணா என்ற ஒரு பெண் – தனது கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அன்றொரு நாள் – எங்கள் இல்லத்தின் ஜன்னல் கதவு திறந்தது. திறந்த ஜன்னல் வழியே என் கணவர் எப்போதும் வரும் ஜீப்பின் ஒலிப்பான் வெகுதூரத்தில் ஒலிப்பது எனக்குப் புரிந்தது. நான் அவருக்காகக் காத்திருந்ததால் வெளியே ஓடினேன். என் கணவர் – மேஜர் ப்ரசீன் சிங் ராதோர். அவருக்கு அப்போது நாகலாந்து மாநிலத்தில் தான் பணியில் நியமனம் செய்திருந்தார்கள்.


இப்படி ஆரம்பிக்கும் கதை நிகழ்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் மாறி மாறி பயணிக்கிறது.  நாமும் பயணிக்கிறோம் – கதை கூடவே.


நாகலாந்து – அருமையானதோர் ஊர். எங்களது ஊராம் ராஜஸ்தானிற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த ஊர்.  அந்த மலைப்பிரதேசத்திற்குச் சென்றவுடன் எனது மனதில் அமைதி குடிகொள்ளும். மலை உச்சியில் தான் எங்கள் வீடு.  அங்கே சின்னச்சின்னதாய் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். ப்ரசீன் கோல்ஃப் நன்றாக விளையாடுவார்.  எனக்கென்னமோ இந்த விளையாட்டு வயதானவர்களுக்கானது என்று தோன்றும். ஆனாலும் ப்ரசீன் இந்த விளையாட்டில் இருக்கும் சிறப்பைச் சொல்லுவார். தனக்குத் தானே ஒரு இலக்கினை நிர்ணயித்து அதை அடைவது இந்த விளையாட்டின் சிறப்பு என்பார்.

நான் துக்கமாக இருக்கிறேனா? வருத்தத்தில் மூழ்கிவிட்டேனா? எப்படிச் சொல்வேன். தெரியவில்லை. என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.

அன்று சமைத்த உணவு மிக நன்றாக இருந்தது. நான் எப்போதும் அவரை மதிய உணவினை எடுத்துச் செல்லும்படி வற்புறுத்துவேன். அதுவும் அன்று சமைத்தது அவரல்லவா. அதனால் மிகவும் நன்றாகவே இருந்தது.  

நான் கனவில் ஒரு நாள் அவரைக் கண்டேன்.  அவரைப் பார்க்க முடிகிறது. எப்போதும் என்னை ஏ பெண்ணே என அழைத்து கிண்டல் செய்வார். ஆனால் அவரது குரல் எனக்குக் கேட்பதில்லை. வெளியே இருக்கும் சத்தத்தில் பல சமயங்களில் எனக்குக் கேட்பதில்லை. இப்போதெல்லாம் அவர் எனது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் குரல் மட்டும் இன்றைய தினம் முழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த அறையில் இருக்கிறாரோ, இல்லை எனது நெற்றியில் வைக்கும் பொட்டில்?

அன்றும் இப்படித்தான் நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே ஒரு நதி அழகாய் சுழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே அவரது ஜீப் வரும் சத்தம். அந்த நதியின் அருகில் வரும் போது ஒரு பெரிய வெடிச் சத்தம். அந்த வெடி வெடித்ததில் ஒரு 27-28 வயது இளைஞர் இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் யாரோ தெரியாத ஒருவரின் இறப்புச் செய்தியை எனக்கு ஏன் சொல்கிறார்கள். என் ப்ரசீன் என்னுடன் இன்று கூட இருக்கிறாரே...... 


இப்படி முடிகிறது இந்த குறும்படம். ப்ரேர்ணாவும் இந்திய ராணுவத்தில் தான் பணி புரிகிறார். ஆதித்ய ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பின்னால் இருக்கும் இசை மிகச் சிறப்பாக இருக்கிறது.  ஹிந்தி என்பதால் இங்கே அவர்கள் பேசிய வசனங்களை மொழிபெயர்த்து தந்திருக்கிறேன் – ஹிந்தி தெரியாதவர்களின் வசதிக்காக.  ஹிந்தி புரிந்தவர்கள் இன்னும் இந்த படத்தினை ஆழமாக அனுபவிக்க முடியும் என நம்புகிறேன்.

நீங்களும் பாருங்களேன் இந்த குறும்படத்தினை....



மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

வெட்கம் கொண்ட மான்களும் வெட்கமில்லாத மனிதர்களும்......



தலைநகரிலிருந்து..... பகுதி-26

இந்த ஞாயிறன்று தலைநகரை வாட்டிக் கொண்டிருந்த கடும் குளிர் கொஞ்சம் கருணை காட்டியது. சூரியன் கொஞ்சம் கண் திறக்கவே தில்லி வாழ் மக்களில் பலர் புகுந்து கொண்டிருந்த ரஜாயிலிருந்து வெளியே வந்து கொஞ்சம் சூரிய ஒளி உடம்பில் பட தில்லி நகரத்தின் சாலைகளுக்கு வந்தனர்.  வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து வீடு வந்த பின் வெளியே இறங்காத நானும் ஞாயிறன்று மதியம் கையில் காமெராவுடன் வெளியே வந்தேன்.



தில்லியின் ராஜபாட்டையின் இரு புறங்களிலும், குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும் விஜய் சௌக் பகுதியில் இந்த மாதங்களில் நிறைய பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகளை வைத்திருப்பார்கள்.  அவற்றில் பல வண்ணங்களில் பூக்கள் இருக்க, அவற்றை புகைப்படம் எடுக்கும் நோக்கத்துடன் சென்றேன்.  என்னை ஏமாற்றாது, நிறைய வண்ணங்களில் பூக்கள் இருக்க, அவற்றை என் காமெராவிற்குள் சிறைபிடித்தேன்.



ஞாயிறன்று வெளியிட்ட ‘ஜனவரி மலர்களே ஜனவரி மலர்களேபதிவில் வெளியிட்ட படங்கள் இங்கே எடுத்தவை தான். பார்க்காவிடில் பார்த்து விடுங்களேன்!



அங்கிருந்து அப்படியே தீன் மூர்த்தி பவன் எனப்படும் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம் சென்றேன். காரணம் அங்கே நிறைய ரோஜாக்கள் வைத்திருப்பார்கள்.   அவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கே இருந்த உணவகத்தில் ராஜ்மா சாவல் சாப்பிட்டு பார்த்தேன். முப்பது ரூபாய்க்கு பரவாயில்லை ரகம். அங்கிருந்து வீடு திரும்பலாமா இல்லை வேறு என்ன செய்யலாம் என யோசித்து, பத்மநாபன் அண்ணாச்சியின் இல்லத்திற்குச் சென்றேன்.



அவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் “நீங்க Deer Park போயிருக்கீங்களா? நான் போனதில்லை.என்று கேட்க, நானும் செல்லாத காரணத்தால் இரண்டு பேரும் அதை நோக்கி பயணித்தோம். பேருந்தில் செல்லும்போது IIT Gate அருகில் இறங்கி பூங்கா நோக்கி நடந்தால் நாங்கள் இறங்கிய இடத்திலிருந்தது “ROSE GARDEN”! மானோ பூவோ எதை பார்த்தால் என்ன, நேரம் போனால் சரி என உள்ளே நுழைந்தோம்.



பெயர் தான் ROSE GARDEN, ஆனால் அதுவோ அடர்ந்த காடு போல இருந்தது அந்த இடம். காட்டுக்கு நடுவே செல்லும் ஒற்றையடி பாதை போல, இங்கே மூன்று நான்கு அடி பாதை – மனிதர்கள் நடக்கவும், jogging செய்யவும் அமைத்திருந்தார்கள்.  அதன் வழியே செல்லும்போது இரு புறத்திலும் மரங்கள், மரங்கள் பலவிதமான மரங்கள். நிறைய பெண் மயில்களையும் ஒரு சில ஆண் மயில்களையும் பார்க்க முடிந்தது. ஒரு ஆண் மயில் அழகாய் நின்று போஸ் கொடுக்க, சரி அதை புகைப்படம் எடுக்கலாம் என காமெராவினை வெளியே எடுப்பதற்குள் அங்கே பக்கத்தில் இருந்த மரத்தின் அருகிலிருந்து சத்தம் வர காட்டுக்குள் ஓடி விட்டது!



என்ன சத்தம் வந்தது?” எனக் கேட்பவர்களுக்கு – முத்தத்தின் சத்தம் தான்! மரத்தின் கீழே ஒரு ஜோடி – சுற்றுச்சூழலில் என்ன நடக்கிறது, யார் வருகிறார்கள் என்பது பற்றி கவலை கொள்ளாது முத்தங்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சரி அவர்களது தேடல்களை நடத்தட்டும் என நகர்ந்தால் பூங்காவில் இருக்கும் பட்சிகளின் ஒலிகளை விட இங்கே மரத்துக்கு மரம் இருக்கும் ஜோடிகளின் சில்மிஷ சத்தமும் முத்த சத்தமும் தான் அதிகம் கேட்கிறது. 



குளிர் காலம் என்பதால் இங்கே மாலை வேளையிலேயே இருட்டி விடுகிறது.  வீட்டுக்குப் போகத் தோன்றாமல் இங்கே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் முத்தப் பரிமாற்றம் செய்து கொண்டும் பல்வேறு விதமான பரவச நிலையில் இருந்த ஜோடிகள் எண்ணிலடங்கா. ரோஜாவையும் காணவில்லை, மானையும் காணவில்லை, சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் என்ற எண்ணத்தில் இந்த பூங்காவினை விட்டு வேறு வழியில் வெளியே வந்தோம். வரும் வழியில் பார்த்த காட்சிகள் – ஜோடிகள் தான் இவை. அப்படி வரும்போது சில ஆண்கள் குடித்து விட்டு உள்ளே வந்தனர். 



இது போல குடித்துவிட்டு வரும் ஆண்கள், நன்கு இருட்டியபிறகும், பூங்காவின் உள்ளே இருக்கும் பரவச நிலையில் இருக்கும் ஜோடிகளை வம்புக்கிழுத்து சில பல தகறாறுகள் அவ்வப்போது நடப்பதுண்டு என்பதை பூங்காவின் அருகில் வசிக்கும் அலுவலக நண்பர் ஒருவர் அடுத்த நாள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  சமீபத்தில் தனது காதலனுடன் இப்படி வந்த ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட விஷயமும் நாளிதழில் வந்ததே பார்க்கவில்லையா என்கிறார்! என்னவோ போங்கப்பா, என்று வெளியே வந்தால், எதிரே “DEER PARK” – நான் இங்கே இருக்கேன், நீங்க வேற என்னத்தையோ பார்த்துட்டு வரீங்களே என எங்களைப் பார்த்து பல்லை இளித்தது.



சரி மான்களையும் பார்த்து விடலாம் என உள்ளே நுழைந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் – புள்ளி மான்கள் அங்கே இருக்க, காமிராவினை தைரியமாக வெளியே எடுத்து புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். ஒரு ஆண் மானும் பெண் மானும் மூக்கோடு மூக்கை உரசிக் கொண்டிருக்க, அதைப் புகைப்படமாக்க நினைத்தபோது எங்களைப் பார்த்து விட்ட அந்த மான்கள் வெட்கப்பட்டுக் கொண்டு தனித்தனியே வேறு பாதைகளில் சென்றன! மான் கூட்டங்களை புகைப்படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தபோது சிலர் அவற்றிற்கு உணவு கொடுத்தார்கள்!



பட்டாணியின் தோல், பழங்களின் தோல்கள் என சிலர் கம்பித்தடுப்புக்கு அப்பால் போட, ஒரு பெரியவர் பாலிதீன் பையை சேர்த்து உள்ளே போட்டார்.  உணவினை இப்படி பாலீதின் பையில் போட்டால் அந்த மான் எப்படி சாப்பிடும்? அதையும் சேர்த்து சாப்பிட்டு உடல்நலம் கெட்டுப் போகுமே என்ற எண்ணம் கூட இல்லை அந்த பெரியவருக்கு!

 கஷ்டப்பட்டு ப்ளாஸ்டிக் தின்கின்ற மான்....

இப்படியாக மான்களைப் பார்க்கச் சென்று எதை எதையோ பார்த்த அனுபவங்களும் கிடைத்தன அந்த ஞாயிறில். தில்லியில் இது போன்ற பல பூங்காக்களில், நகரின் மையப்பகுதியில் இருக்கும் கன்னாட் ப்ளேஸில் இருக்கும் செண்ட்ரல் பார்க் உட்பட, நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது இந்தியா தானா, இல்லை வேறு ஏதோ வெளிநாடா என்று தோன்றுகிறது. பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் அளவிற்கு இந்தியா முன்னேறிவிட்டதா என்ற எண்ணமும் தோன்றியது. 

இதன் தொடர்புடைய இன்னுமொரு பதிவு இரண்டொரு நாட்களில் வெளியாகும். அதுவும் நான் இதுவரை, இந்த இருபத்தி மூன்று வருடங்களில் பார்த்திராத தில்லி பற்றிய பகிர்வு தான்.  தில்லி நகர் பற்றிய கண்ணோட்டத்தினை மாற்றிக் கொள்ள வைத்துவிட்ட விஷயம் பற்றிய பதிவு அது. விரைவில் வெளியிடுகிறேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.