எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, March 15, 2014

மறுவாழ்வும் மறுமணமும்......நேற்றைய ஃப்ரூட்சாலட் பதிவில் விருந்தாவனத்தில் கணவனை இழந்த பெண்களை கொண்டு விட்டுச் செல்வது பற்றி எழுதி இருந்தேன். பொதுவாகவே வங்க மாநிலத்தினைச் சேர்ந்த பலர் இப்படி விட்டுச் செல்வதை பல வருடங்களாக செய்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தவும் யாரும் முன்வருவதில்லை.  பணம் படைத்த சிலர் அங்கே இருக்கும் விதவைகள் ஆஸ்ரமத்தில் விட்டு மாதக் கட்டணத்தினையோ, மொத்தமாக ஒரு தொகையையோ கட்டி விட்டுச் செல்வார்கள்.

பணம் இல்லாதவர்கள், அதாவது கணவன் மனைவிக்கென்று சொத்து/பணம் எதுவும் விட்டுச் செல்லாத நிலையில் நிராதரவாக விருந்தாவனில் விட்டுச் செல்லும் உறவினர்கள் உண்டு. இப்படிப் பட்டவர்கள் விருந்தாவனிலோ அல்லது அதை அடுத்த கோவர்த்தனிலோ தினசரி வாழ்க்கையை மற்றவர்களின் ஆதரவில் – அதாவது அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஆதரவில் தனது வாழ்நாளை கடத்த வேண்டியிருக்கிறது.

இங்கே இப்படி இருக்க, இன்னொரு வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்கள். நமது தமிழக மக்கள் இப்படிப் பட்ட விஷயங்களை கேட்டிருக்க முடியாது என நினைக்கிறேன். ஒரு உதாரணத்தோடு ஆரம்பிக்கிறேன்.

ஹரியானாவின் ஒரு கிராமம். அங்கே ஒரு பெரிய குடும்பம். மொத்தம் ஆறு ஆண்கள் 2 பெண்கள் உள்ள வீட்டில் கடைசி ஆண்மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. பொதுவாகவே வட மாநிலங்களில் 18 வயதுக்குள் ஆண்களுக்கும், 16-17 வயதுக்குள் பெண்களுக்கும் திருமணம் நடத்தி விடுவார்கள்.  நமது ஊர் மாதிரி 25-30 வயது வரை திருமணங்கள் நடத்தாமல் இருப்பதில்லை. முதிர்கன்னிகள் இங்கே இருப்பதில்லை....

திருமணம் முடிந்து ஒரு வருடமும் சில மாதங்களும் ஆன நிலையில் அந்த இளைஞர் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அவரை மணம் புரிந்த பெண் வயிற்றில் நான்கு மாதக் கர்ப்பம். இந்த நிலையில் என்ன செய்வார்கள் பொதுவாக? அந்தப் பெண் தனது பெற்றோர்களின் வீட்டிற்குச் செல்வார் அல்லது வங்காளப் பெண்மணியாக இருந்தால் நிராதரவாக விருந்தாவனில் விட்டுச் சென்றிருக்கலாம்.

மேலே சொன்னபடி இந்த பெண் இருப்பது ஹரியானாவின் ஒரு கிராமத்தில். பொதுவாகவே இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது அப்பெண்மணியை அக்குடும்பத்திலே இருக்கும் மற்ற ஆண்கள் – அதாவது இறந்து போன அவளது கணவனின் அண்ணன் தம்பிகளில் யாராவது திருமணம் புரிந்து கொள்வார்கள், அவர்களுக்கு திருமணம் ஆகாத பட்சத்தில்! [அ] திருமணம் ஆனபின் மனைவியை இழந்தவராக இருந்தால் – இதற்கு வளையல் சூட்டுவது எனப் பெயரும் உண்டு.

 பட உதவி: கூகிள்....

மேலே சொன்ன பெண் மணம் புரிந்ததோ வீட்டின் கடைசி மகனை. அதனால் வீட்டிலுள்ள பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம். வீட்டின் மூத்த மகன் திருமணம் முடித்து அவரது மனைவி இறந்திருக்க, அவர் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அவருக்கு மனசில்லை – ஏனெனில் பெண்ணுக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட பதினெட்டு வயது வித்தியாசம். அதனால் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தமிழகத்திலே வசித்துக் கொண்டிருக்கும் பலர் கேள்விப்பட்டிராத முடிவு!........

நான்கு மாத கருவினைச் சுமந்து கொண்டிருக்கும் அப்பெண் தனது குழந்தையை பெறும் வரை காத்திருக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகு அப்பெண்ணை வீட்டின் மூத்த மகனின் மகன், பதினெட்டு வயது நிரம்பிய இளைஞனோடு திருமணம் செய்து வைப்பது – அதாவது அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளப் போவது தனது சித்தியை..... 

வீட்டிற்கு வந்த பெண் தனது கணவனை இழந்தாலும் தங்களது வீட்டினை விட்டு வெளியே போய் உணவுக்கு கஷ்டப்படுவது இவர்கள் குடும்பத்திற்கு அவமானம் என்று கருதுகிறார்கள் இவர்கள்.   அதனால் தான் இந்த மாதிரி முடிவு. ஹரியானாவில் மிகவும் பிரபலமான காப் [KHAP] பஞ்சாயத்துகளும் இந்த மாதிரி திருமணங்களை ஆதரிக்கின்றன.

இங்கே சில விநோதமான பழக்கவழக்கங்களும் உண்டு – ஆணும் பெண்ணும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் – அவர்கள் அண்ணன் தங்கை முறை – அதனால் திருமணம் செய்து வைப்பதில்லை! மாமன் மகளும், அத்தை மகளும் தங்கை முறை....  அவர்களுடனும் திருமணம் செய்துகொள்வதில்லை! – நமது ஊரில் அத்தை மகள், மாமன் மகள் என்றால் திருமணம் செய்து கொள்ள சண்டையே நடக்கிறது! இங்கே நேரெதிர்! அம்மா வழிச் சொந்தமோ, அப்பாவழிச் சொந்தமோ, திருமணம் செய்து கொள்வதில்லை.

மேலும், அம்மா வேறு கிராமம், அப்பா வேறு கிராமம். திருமணம் ஆன பின் அம்மாவும் அப்பாவின் கிராமத்திற்கு வந்து விடுகிறார். இவர்களுக்குக் குழந்தை பிறந்து அக்குழந்தை வளர்ந்து திருமணத்திற்குத் தயாராகும் காலத்தில், தனது கிராமத்திலிருக்கும் பெண்கள் மட்டுமல்ல, அம்மாவின் கிராமத்தில் இருக்கும் பெண்களையும் திருமணம் செய்து கொள்ள முடியாது! ஏனெனில் அவர்களும் இவருக்கு தங்கை முறை!

இந்த மாதிரி பல கட்டுப்பாடுகள் இங்கே உண்டு. இந்த கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்துகொண்டவர்களை பஞ்சாயத்தினர் மட்டுமல்ல, பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் கூட அழித்து அதாவது கொல்லக் கூடத் தயங்குவதில்லை. 

ஒரு விதத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் மேலே சொன்னது போல கணவனை இழந்த பெண்களுக்கு மறு விவாகம் அதுவும் மேலே சொன்னது போல ஒரு இளைஞர் தனது சித்தியையே மறு விவாகம் புரிந்து கொள்வதும் நடந்து கொண்டிருக்கிறது. 

விருந்தாவனில் விட்டுச் செல்வதை விட இது பரவாயில்லை என்று தோன்றுகிறதல்லவா..... ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படி பல பழக்க வழக்கங்கள்.....  புரியாத விஷயங்கள்......  தொடர்ந்து மேலும் சில விஷயங்களை வரும் நாட்களில் பார்க்கலாம்.....

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


68 comments:

 1. படிக்கவே கஷ்டமா இருக்கு. வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ முன்னேறிவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஒரு சாரார் தங்களுக்கு சாதகமாக & பாதுகாப்பாக‌ சட்டதிட்டங்களை உருவாக்கிக்கொண்டனர், அவ்வளவே. என்றைக்கு இதிலிருந்து வெளியே வருவது. கல்வியால் மட்டுமே முடியும். முடிந்தால் அங்குள்ள பெண்களின் கல்வியைப் பற்றியும் எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வட மாநிலங்களில் இருக்கும் பல பழக்க வழக்கங்கள் நம்மால் ஒத்துக் கொள்ளவே முடியாதவை...... மேலும் சில விஷயங்களை வரும் நாட்களில் எழுத நினைத்திருக்கிறென்..... நேரமும் மனதும் ஒத்துழைத்தால்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 2. வியப்பூட்டும் தகவல்கள்! பல ஆச்சரியமாக உள்ளது!

  கல்யாண விஷயம் கொஞ்சம் உறுத்தலாக்த்தான் இருக்கிறது! டெக்னாலஜியில் ஒருபக்கம் கொடி கட்டுகிறோம், சந்திராயன், மங்கள்யான் என்று பறக்க விடுகின்றோம்! ஆனால் இது போன்ற மங்கள்யான்கள் ஏனோ இன்னும் அப்படியே இருக்கின்றன!

  நல்லதொரு பதிவு!
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 3. பாரம்பர்யங்கள் , பழக்க வழக்கங்கள்.....
  புரியாத பல விஷயங்கள்.. வியப்பளிக்கின்றன..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. பதைக்க வைக்கும் செய்தி. உறவுக்குள் திருமணம் என்பதே அறிவியல் ரீதியாக தவறானது என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில். இது போன்ற தகவல்கள் நிலைகுலைய செய்கின்றன. பெண்கள் சுயமாக நிற்கும் காலம் வரை இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். உங்கள் பயண அனுபவம் இன்னும் பல வெளிவராத தகவல்களுடன் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. பல விஷயங்கள் இப்படி இங்கே உண்டு. நம்மால் ஒப்புக்கொள்ள இயலாத விஷயமாகத் தான் இருக்கின்றன......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிகுமார்.

   Delete
 5. என்ன கொடுமை... கொல்லக் கூடத் தயங்குவதில்லை என்றால் மனிதர்களே அல்ல...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   காப் பஞ்சாயத்துகள் பற்றி நிறையவே சொல்லலாம்...... பிறிதொரு சமயத்தில் அதுபற்றி விரிவாக எழுதுகிறேன்.

   Delete
 6. தெரிந்திராத விவரங்கள் வெங்கட். ஆச்சர்யமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. எதிர்பாராத நிலையில் கணவனை இழந்த பெண்ணுக்கு - தங்கள் உறவு வட்டத்துக்குள் தகுந்த இளைஞனை மணம் முடித்து வைப்பது - இங்கே சில சமுதாயங்களில் வெளியே தெரியாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
  ஆனால் - மற்ற செய்திகள் - ...? நம்மால் ஏற்றுக் கொள்ள இயலாதவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ......

   Delete
 8. பழக்க வழக்கங்களை படிக்கும் போது பெண்ணின் நிலையை எண்ணி மனது கஷ்டப்படுகிறது.
  பாரதிக்குமார் சொல்வது போல் பெண்கள் சுயமாய் முடிவு எடுக்கும் நிலை வந்தால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. பொதுவாகவே ஹரியானாவில் - அதுவும் அங்கே உள்ள கிராமங்களில் பெண்கள் சுயமாக முடிவு எடுக்க உரிமையே தருவதில்லை...... இன்னும் பல கொடுமைகள் அங்கே உண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 9. கணவனை இழந்த பெண்ணை நிராதரவாக விடாமல் இப்படியாவது ஒரு மறுமணம் முடிப்பதில் தவறேதும் படவில்லை !khap பஞ்சாயத்தால் சில நல்லதும் இருக்கின்றதே !
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. //இங்கே சில விநோதமான பழக்கவழக்கங்களும் உண்டு – ஆணும் பெண்ணும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் – அவர்கள் அண்ணன் தங்கை முறை – அதனால் திருமணம் செய்து வைப்பதில்லை! மாமன் மகளும், அத்தை மகளும் தங்கை முறை.... அவர்களுடனும் திருமணம் செய்துகொள்வதில்லை! – நமது ஊரில் அத்தை மகள், மாமன் மகள் என்றால் திருமணம் செய்து கொள்ள சண்டையே நடக்கிறது! இங்கே நேரெதிர்! அம்மா வழிச் சொந்தமோ, அப்பாவழிச் சொந்தமோ, திருமணம் செய்து கொள்வதில்லை.//


  இது மற்ற வடமாநிலங்களிலும் உண்டு. ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், உத்திரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களிலும் இம்மாதிரி வழக்கம் உண்டு.

  விதவை மறுமணம் என்பது பஞ்சாபிலும் உண்டு. ஹரியானாவிலும் உண்டு. கணவனின் தம்பி அண்ணியைத் திருமணம் (வயது வித்தியாசம் பார்க்காமல்) செய்து கொள்வது சர்வ சகஜம். ஹேமமாலினி, ரிஷிகபூர், பத்மினி கோலாபுரி நடித்த ஒரு படம் கூட இருக்கே. பஞ்சாபில் இதை "சதர்" போடுவது என்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   ஹரியானாவில் இவ்விஷயங்களை கடுமையாக கடைபிடிக்கிறார்கள் இன்னமும்.....

   Delete
 11. மதுரைப்பக்கம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்விப்பது உண்டு. விவாகம் பஞ்சாயத்து மூலம் ரத்தானாலும் அந்தப் பெண் மறுமணம் செய்து கொள்ளலாம். இங்கே அதிகம் வெளியே தெரிவதில்லை என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவலுக்கு நன்றி கீதாம்மா....

   Delete
 12. உறவுக்குள் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கச் சொல்கின்றனர். ஆனால் என் மாமனார், மாமியார் இருவரது குடும்பத்திலும் உறவில் தான் திருமணங்களே. என் மாமனார் வீட்டில் அந்நிய ரத்தம் என்பதே நான் மட்டும் தான். என் ஓரகத்தி கூட உறவு தான்.:)))))

  ReplyDelete
  Replies
  1. உறவுக்குள் திருமணம் என்பது தற்போது வெகுவாகவே குறைந்து விட்டது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
  2. ம்ஹூம், இல்லை, இன்னமும் இருக்கு. இப்போல்லாம் வெளியே அந்நியத்தில் பெண் எடுத்து கஷ்டப்படறதுக்குத் தெரிஞ்ச இடம் பரவாயில்லைனு பிள்ளை வீட்டுக்காரங்க நினைக்கறாங்க. :)))))

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 13. வித்தியாசமான தகவல் சார்.. தகவலை எங்கிருந்து பிடித்தீர்கள் என்பதையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வலை வீசிப் பிடிக்கவில்லை சீனு! :)

   எங்கள் அலுவலகத்தில் இருக்கும் சக பணியாளர் ஒருவரின் வீட்டில் நடந்தது இவ்விஷயம். பல ஹரியானா மாநிலத்த்வர்கள் தில்லியில் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 14. கொண்டுவிடுவதோ.. இப்படி கட்டி வைப்பதோ.. எதோ ஒன்னு பெண்ணுக்கு முடிவெடுக்கும் தகுதியும் வாழத்தகுதியும் இல்லாத வகைக்கு எல்லாம் ஒண்ணு தான்.

  ReplyDelete
  Replies
  1. நான் குறிப்பிடாமல் விட்ட விஷயமும் இது தான்..... அந்தப் பெண்ணிடம் இவர்கள் யாரும் கேட்பதில்லை என்பது தான் சோகம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 16. நடைமுறை வழக்கம் வித்தியாசமாக இருந்தாலும் வாழ்க்கையுடன் பொருந்திப்போகிறது. இதை அநாகரிகம் என்று சொல்பவர்கள் தங்கள் சமூகத்தின் இளம் விதவைகளுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். எதார்த்தத்தை ஒட்டி அமைந்த ஒன்றாக இதை பார்க்க வேண்டும்

   சிவா

   சென்னை

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
  3. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை சிவா.

   Delete
 17. வினோதமான கிராமங்களாய்த்தான் இருக்கின்றது! ஒருவகையில் விதவைத்திருமணம் வரவேற்கக்கூடியதாய் இருந்தாலும் உறவு முறையில் என்பதுதான் கஷ்டமாயிருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. இதில் தவறு ஒன்றும் இல்லை. சித்தி தாயுடன் பிறந்த ரத்த தொடர்பில் வந்த சித்தி அல்ல. சம அளவு வயதில் இருந்தால் ஒன்னும் பிரச்னை இல்லை. அவங்க லாஜிக் படியே தாயின் கிராமத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் என படுவதால் அவர்கள் தாயுடன் பிறந்த சித்தியுடன் மனம் முடித்து வைக்க வில்லை.

  நம்மைப்போல் இல்லாதவர்களிடம் இருக்கும் சில பண்புகள் நமக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சூழ்நிலை கலாச்சாரப்படி நாம் தான் பக்குவமுடன் புரிந்து கொள்ள வேண்டும்.

  விஞ்ஞானம் நவீனம் என்று எல்லாம் பார்த்தால் நாம் எல்லோருமே வெள்ளைக்காரர்களை விட பல நூறு ஆண்டுகள் பின்னால் தான் உள்ளோம். ஏன் அறிவியல் , வரலாறு மற்றும் கலை படிப்புகளை நம் தமிழ் நாட்டில் கல்லுரி அளவில் யாரும் விரும்பி படிப்பதே இல்லை. கூலி மனோபாவத்துடன் வேலை தேடிகளை உருவாகும் பொறியியல் படிப்பை தானே அதிகம் விரும்புகின்றனர்.

  அறிவியலையும் , வரலாற்றையும் புறந்தள்ளும் தமிழ் நாட்டை விட வாடா மாநிலங்கள் எவ்வளோவோ மேல்.

  சிவா.

  சென்னை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை சிவா.

   Delete
 19. எங்க ஊரில் முன்னெல்லாம் (பாட்டி காலத்தில்) விதவைகள், விவாகரத்தானவர்கள்னு பெண்களில் யாரையும் தனியாகப் பார்க்கவே முடியாது. ஆனால், அதன் பிறகு இப்பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முன்வருபவர்கள் மிகவும் குறைந்து போய், ஒரு கட்டத்தில் அறவே இல்லாமல் போனது. தற்போது அதிகரித்துள்ள விழிப்புணர்வு காரணமாக, இப்பெண்களுக்கும் மறுமணங்கள் நடைபெறுவது அதிகரித்துள்ளன.

  இது குறித்து நான் ஒரு கதை எழுதி, அது ஒரு பத்திரிகையில் பிரசுரமும் ஆனது. இங்கே பகிர்கிறேன்

  http://www.samarasam.net/01-15_Oct_13/index.htm#52 (பக்கம் 52)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா....

   நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி வேலை செய்யவில்லை.... :(

   Delete
  2. துளசி டீச்சர் & வெங்கட்!! ரொம்ப நன்றி.

   இந்த லிங்கைக் கிளிக் பண்ணி, வரும் முகப்புப் பக்கத்தில் 52-ம் பக்கத்தில் இருக்கு கதை.
   http://www.samarasam.net/2013/01-15_Oct_13/index.htm#52

   Delete
  3. தகவலுக்கு நன்றி ஹுசைனம்மா... படிக்கிறேன்.

   Delete
 20. வினோதமான கல்யாணம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 21. வியப்பை ஊட்டும் தகவல்கள் எனினும் பெண்களின் பாதுகாப்பும்
  எதிர்காலமும் கருதி எடுக்கப்படும் முடிவுகள் பிறரைப் பாதிக்காத வரைக்கும்
  வரவேற்கத் தக்க முடிவுகளே .அருமையான புதிய தகவல் .பகிர்வுக்கும்
  தொடரவும் என் இனிய வாழ்த்துக்கள் சகோதரா த .ம .7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 22. கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்துகொண்டவர்களைக் கொல்வதா
  எந்த காலத்தில் நாம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே புரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 23. Replies
  1. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா...

   Delete
 24. வடபகுதி செய்திகள் இன்னும் எந்தகாலத்தில் நாம் இருக்கின்றோம் என்று சிந்திக்க வைக்கும் பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 25. ஹுசைனம்மா

  ,'லிங்க்; வேலை செய்யலைப்பா:(

  ReplyDelete
  Replies
  1. அதே அதே...... நானும் பார்த்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 26. இன்னாபா இத்து இவ்ளோ அநியாயமா கீது...? இப்புடிக்கா கூட நட்க்குதா...? சோ சேடு...
  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா...

   Delete
 27. ஒரே நாட்டில் எத்தனை விதம் விதமான வாழ்க்கை முறைகள்.மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது தென் இந்திய பெண்களின் நிலா பரவாயில்லை போல் இருக்கிறது. ஆச்ச்ரயமான தகவல்கள். தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 28. Sambandhappatta pennin alosanayai petrapirage mudivu yedukka vendum. Idhellam paarkkumbodhu naam yevalavo thevalam yendru irukku.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 29. ஊருக்குஊர் பழக்கவழக்கங்களில்வேறுபாடு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி!

   Delete
 30. வியப்பூட்டும் தகவல்கள்! பல ஆச்சரியமாக உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 31. அதிர்ச்சிக்கரமான தகவல்கள். அந்த பெண்ணை பெற்றவர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டால், வேறு யாராவது நல்ல குணம் படைத்த ஒருவர் அவரை மறு மனம் செய்துக்கொள்ள வாய்ப்பு இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் விட்டுவிடுவதில்லை... அந்தப் பெண்ணிடம் அவளது விருப்பத்தை கேட்பதும் இல்லை! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....