வெள்ளி, 31 அக்டோபர், 2014

ஃப்ரூட் சாலட் – 112 – மனைவி – கதவை மூடலாமே! - [B]பாஜ்ரா



இந்த வார செய்தி:

குப்பை பொறுக்கும் சிறுவர்களை கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்தி அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்றும் நல்ல பணியைச் செய்து வரும் Sylvester Peter என்பவரைப் பற்றி இந்த வாரம் படித்தேன். மகத்தான பணியைச் செய்து வரும் அவர் பற்றிய முழு கட்டுரையும் இங்கே நீங்களும் படிக்கலாம்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!!  இங்க பாருங்க.

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா................   பயம்..! 
எலிக்கு பூனையக் கண்டா ..............................பயம்..!
பூனைக்கு நாயக் கண்டா .................................பயம்..!
 
நாய்க்கு மனுஷனைக்கண்டா .....................  பயம்..!
மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! 
அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா....   பயம்..!!   

இப்ப நம்பறீங்களா...

இந்த வார காணொளி:

கதவைத் திற காற்று வரட்டும்! என்று நான் சொல்லப் போவது கடைசியில். இங்கே கதவை மூடுங்கள் லிஃப்ட் பயணிக்கட்டும் என்று தான் சொல்லப் போகிறேன் – நான் பார்த்து ரசித்த இந்தக் காணொளி மூலமாக! 
 


இந்த வார உழைப்பாளி/புகைப்படம்:



குஜராத் மாநிலத்திலுள்ள நாகேஷ்வர் எனும் ஜோதிர்லிங்க ஸ்தலம். அங்கே கோவிலின் வெளியே பிரம்மாண்டமான சிவன் சிலை அமைத்திருக்கிறார்கள். சிவன் சிலை மேலும், அக்கம்பக்கத்திலும் நிறைய புறாக்கள். கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் புறாக்களுக்கு தானியங்களை இறைக்கிறார்கள் – குறிப்பாக ஹிந்தியில் “[B]பாஜ்ரா என அழைக்கப்படும் கம்பு புறாக்களுக்குப் போடுகிறார்கள்.  ஒரு சிறிய டப்பாவில் பாதி நிறைத்து 10 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார் இந்த சிறிய உழைப்பாளி. அப்படி ஒரு சுறுசுறுப்பு. ஒரு டப்பா காலியானவுடன் மீண்டும் நிறைத்து வைத்து அடுத்த வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் அவரை நான் எடுத்த புகைப்படம் மேலே! சிவன் சிலையின் புகைப்படம் பிறிதொரு சமயத்தில்!

ராஜா காது கழுதை காது:
 
இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு தொழிலாளி தனது சக தொழிலாளியிடம் சொல்லும்போது கேட்டது!

“ஏண்டா குளிக்கக் கூடாதா?அப்படின்னு என் பையன்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் லீவு நாள்ல குளிக்கிறேன்னு.  இவனோ வேலைக்கும்போல, படிப்பும் முடிஞ்சாச்சு. வீட்டுல சும்மா இருக்கான் – அப்புறம் எங்கேந்து லீவு! குளிக்காம இருக்க இப்படி ஒரு பதில்.  என்னத்த சொல்ல! :(

படித்ததில் பிடித்தது:

ஒரு ஜென் ஞானி, மலையையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார். அந்த நதிக்கரையோரத்தில், துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவன், குடிசையில் அடைந்து கொண்டு வாழ்க்கை துக்ககரமானது! வாழ்க்கை துக்ககரமானது! என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

இதைக்கேட்ட ஞானி, “இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமானது. குடிசையைவிட்டு வெளியே வந்துபார். உனக்குத் தெரியும் என்றார். துறவியின் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.

முதலில் கதவைத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடி வரும் தென்றல் உன்னை வெளியே கொண்டு வரும் என்று சொன்னார் ஞானி. அதையும் அவன் கேட்கிற மாதிரி இல்லை.

உடனே அந்த ஞானி, அடடே…. ஆபத்து! ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக்கொண்டு அவன் வெளியே ஓடி வந்தான்.

வந்தவனைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும், நட்சத்திரங்கள் மின்னுவதையும், அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றான்.

குடிசையை விட்டு வெளியே வாஅழகைக் கண்டு ஆராதிக்கலாம் என்று அழைத்தபோது அவன் கேட்கவில்லை. அவனோ கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எனவே, ‘பரம்பொருளைக் காணலாம் மோட்சம் அடையலாம் என்று அவனிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவனை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?

அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்திய வழிதான், “ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது என்று கத்தியது.

விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது.
புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது.
நீரில் குதிக்க பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.
கதவைத் திறக்க பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது.
கதவைத் திறந்து வையுங்கள். காற்று உள்ளே வரட்டும்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 29 அக்டோபர், 2014

பாத்ரூம் பாடகரும் எனது காலையும்



நன்றி: இணையம்.....



தற்போதைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் பலவற்றிலும் ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் இடையே பெரும்பாலும் ஒற்றைக் கல் வைத்த சுவர் தான்.  நம் வீட்டில் பெருமூச்சு விட்டால் கூட அடுத்த வீட்டில் கேட்குமோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. இப்படி இருக்கையில் உங்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் தன்னை ஒரு பாடகராக நினைத்துக் கொண்ட ஒருவர் இருந்து விட்டால்.....  உங்கள் நிலை என்னாவது?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எனக்கு அந்த நிலை தான் இப்போது.  சமீபத்தில் எனது அடுத்த வீட்டிற்கு ஒரு மனிதர் குடிவந்திருக்கிறார்.  அவர் பெயரோ, ஊரோ, எங்கு வேலை செய்கிறார் என்பது போன்ற எந்த விவரங்களும் எனக்குத் தெரியாது. அவரது வீட்டில் எத்தனை நபர்கள் என்பதும் தெரியாது. ஒரு சில முறை அலுவலகம் செல்லும்போது வாய் நிறைய [G]குட்[kha]கா போட்டுக்கொண்டு அன்னாந்து பார்த்தபடி என்னிடம் ‘ழீக்கே?என்பார் – அதாவது டீக் ஹேஎன்று கேட்கிறாராம்!  எங்கே அவரது வாயில் பொங்கி வழியும் பான் பராக் கங்கா ஜலம் போல என் மேல் தெளித்து விடுமோ என்ற பயத்தினால் கொஞ்சம் தள்ளியே நானும் டீக் ஹூன் என்பேன்!

 நன்றி: இணையம்.....

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் [காலை ஆறு மணி தான் எனக்கு அதிகாலை என்பதை புரிந்து கொள்க!] எழுந்திருப்பதற்கு அலைபேசியில் அலாரம் வைத்துக்கொள்வேன்.  ஆனாலும் இவர் பக்கத்து வீட்டிற்கு வந்தபிறகு அப்படி அலாரம் வைத்துக்கொள்ள அவசியமே இல்லாது போய்விட்டது! தில்லியில் வீடுகளில் சேவல் வளர்ப்பதில்லை – சேவல் கூவும் குரலும் கேட்பதில்லை - சேவல் கூட சில நாட்களில் தூங்கி எட்டு மணிக்கு கூவலாம் – ஆனால் இவர் நாள் தவறாது ஐந்தரை மணிக்கு எழுந்து விடுகிறார். 

அவர் எழுந்துவிட்டுப் போகட்டும் – அதில் எனக்கு என்ன ஆட்சேபணை இருக்கப் போகிறது.  ஆனால் எழுந்ததிலிருந்து பாட ஆரம்பித்து விடுகிறார் – அதுவும் ஒரு கட்டைக் குரல் – கரகரப்ப்ரியா ராகமே இவரிடம் இருந்து தான் தோன்றியிருக்குமோ என்று ஒரு சம்சயம் எனக்கு வந்துவிட்டது!  புரியாத ஒரு மொழி – ஹிந்தி போன்று தெரியவில்லை!  திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தினமும் சுப்ரபாதம் பாடித் தான் திருப்பள்ளி எழுச்சி.  இங்கே இந்த வெங்கடராமனுக்கும் திருப்பள்ளி எழுச்சி பக்கத்து வீட்டு பாடகர் பாடும் பாட்டுகள் தான் என்று சொன்னால் மிகையாகாது! 

தீபாவளிக்கு இரண்டொரு நாட்கள் முன்னர் அதிகாலையில் பாடிக்கொண்டிருக்கிறார் – ஹோலி ஆயி ரே ஆயி ஆயி ஹோலி ஆயிஎன்று. “அடேய், இப்பதான் தீபாவளியே வந்திருக்கு! ஹோலி வர இன்னும் நான்கு மாசம் ஆகும்அப்படின்னு எனது வீட்டிலிருந்து குரல் கொடுக்கலாமா என நினைத்துக் கொண்டிருந்தேன்.  என்னடா இது காலங்கார்த்தால “ஆய் ஆய்னு அசிங்கமா பேசிக்கிட்டு இருக்கான் என்று ஒரு சிலர் எண்ணக்கூடும்! இது ஹிந்தி ஆயி!

திங்கள் முதல் வெள்ளி வரை இப்படி எழுப்பி விட்டால் பரவாயில்லை.  விடுமுறை நாட்களிலும் இவர் அதிகாலையில் எழுந்து விடுகிறார் – அதுவும் மற்ற நாட்களை விட இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து விடுகிறார்.  “டேய் கொஞ்சம் மனுஷன தூங்க விடுடா! என்று கத்தலாம் போலத் தோன்றும்!  இல்லைன்னா நானும் சத்தமா எங்க வீட்டு பாத்ரூம்ல ஒரு டண்டணக்கா தமிழ் பாட்டு பாடலாமான்னு தோணும்! ஃபாஸ்ட் பீட் தமிழ் பாட்டு – பொருத்தமான பாட்டு ஒண்ணு சொல்லுங்களேன்!

தோ இன்னிக்குக் கூட பாருங்களேன் – வெளியூருக்குப் போறார் போல ஐந்து மணிக்கே எழுந்து விட்டார்! எனக்கு எப்படித் தெரியும்னு கேட்கறீங்களா! அதான் பாட ஆரம்பிச்சிட்டாரே! வழக்கத்தை விட இன்னும் உச்சஸ்தாயியில் ஏதோ ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கிறார்! வெளியே போகும் போது அவர் வாயில் போட்டுக்கொள்ளும் [G]குட்[kha]காவினை காலங்கார்த்தால எழுந்த உடனே போட்டுக்கொண்டால் உடம்புக்கு ரொம்ப நல்லது என்று அவரிடம் ஐடியா சொல்ல இருக்கிறேன் – ஆனால் அதிலும் கொஞ்சம் பயம் இருக்கிறது – இப்பவே உச்சஸ்தாயியில் பாடும் பாட்டு எங்கே நாய் ஊளையிடுவது போல் ஆகிவிடுமோ என்ற பயம் தான்!

பாட்டு பாடறது ரொம்ப புடிக்குமோ? காலங்கார்த்தால பாடறீங்களேஅப்படின்னு நக்கலா ஒரு நாள் கேட்டேன்.  பயபுள்ள ரொம்பவும் சந்தோஷமாகி உங்களுக்குப் பிடிச்சுருக்கா?  நாளைக்கு என்ன பாட்டு பாடட்டும்னு என்னிடம் நேயர் விருப்பம் கேட்க நான் ஆளைவிடுடா சாமின்னு விட்டேன் ஜூட்!

 நன்றி: இணையம்.....

இந்தப் பதிவுக்கு பொருத்தமா படம் ஏதாவது இருக்குமான்னு கூகிளாண்டவரிடம் கேட்க, அங்கே இருந்த ஒரு தளம் கண்களை ஈர்த்தது! Twyford Bathrooms என்ற நிறுவனத்தினர் Twyfords Bathroom Singer of the year 2014 அப்படின்னு ஒரு போட்டி வைச்சுருக்காங்களாம்! பேசாம இந்த பக்கத்து வீட்டு ஆளை அங்கே அனுப்பிடலாம்னு ஒரு யோசனையும் வந்தது! ஆனா பாருங்க! என்னோட துரதிர்ஷ்டம் – அதுக்கு கடைசி தேதி அக்டோபர் 22!

இனிமே காதில் கொஞ்சம் பஞ்சு வைத்துக் கொண்டு தூங்கப் போகலாம்னு இருக்கேன்! அதனால ஒரு கிலோ பஞ்சு பார்சல் ப்ளீஸ்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

மகளின் ஓவியங்கள் – Saturday Jolly Corner




சில வாரங்கள் முன்பு, பதிவர் தேனம்மை லக்ஷ்மணன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அவர்களது Saturday Jolly Corner பதிவுகளில் எனது மகளின் ஓவியத் திறமை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புவதாகச் சொல்லி கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார்கள். அவரது கேள்வி என்ன தெரியுமா?

/// ரோஷிணியின் ஓவியத் திறமையை எப்போது கண்டுபிடித்தீர்கள். அவளுக்கு எவற்றை வரைவதில் விருப்பம் அதிகம்? சில ஸ்பெஷல் ஓவியங்களையும் அவள் திறமையையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ///

இந்த கேள்விக்கு நான் அளித்த பதிலும் எனது மகளின் சில ஓவியங்களையிம் அவரது பதிவில் பார்க்கலாம். இந்த மாதம் நான்காம் தேதியே அவரது பக்கத்தில் வெளி வந்துவிட்டது – இத்தனை தாமதமாக இங்கேயும் ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்! – அதற்கு நானே பதில் சொல்லி விடுகிறேன்!

எனது பக்கத்திலும் ஒரு சேமிப்பாக இன்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கூடவே சமீபத்தில் என் மகள் வரைந்த மேலும் சில ஓவியங்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பதிவு. தினசரி காலண்டரில், புத்தகங்களில் பார்க்கும் படங்களை அவளுக்குத் தோன்றும் சில மாற்றங்களோடு வரைந்து வருகிறாள்.  அப்படி வரைந்த சில படங்கள் கீழே.....









மகளின் ஓவியங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். சமீப காலமாக Quilling தோடுகள் செய்வதிலும் அவளது ஆர்வம் திரும்பி இருக்கிறது. சமீபத்தில் செய்த இரண்டு தோடுகளும் இங்கே உங்கள் பார்வைக்கு!



மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.