எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 24, 2015

ஃப்ரூட் சாலட் – 133 – திரும்பக் கிடைத்த பணம் – ஆண்ட்ராய்டு - தமிழமுது

இந்த வார செய்தி:

நல்ல மனம் வாழ்க!பங்களூரு நகரில் வோல்வோ பேருந்தில் பயணம் செய்தபொழுது 420 ரூபாய் திரும்ப வாங்கிக்கொள்ளாது இறங்கி வந்துவிட்டாராம்.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து இது தெரிந்த அவர், அப்பேருந்தில் கொடுத்த பயணச் சீட்டு மூலம் பேருந்து எண்ணையோ, நடத்துனரையோ கண்டுபிடிக்க முடியுமா என முயன்று இருக்கிறார். நண்பர்கள் அனைவரும் அவருக்கு பணம் திரும்பக் கிடைக்காது என்று சொன்னாலும் அவர் மனம் தளராது அருகில் இருக்கும் டிப்போவிற்குச் சென்று விசாரித்து இருக்கிறார்.

அவர்கள், தங்களது டிப்போ பேருந்து அல்ல என்று சொல்லி, பொது விசாரணை எண்ணைத் தந்து அங்கே விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். பல முறை தொடர்பு கொண்டும், பதில் வராத பின்னர் அன்று விடுமுறை என்று தெரிந்திருக்கிறது.  அடுத்த நாள் காலையில் தொலைபேசி மூலம் விசாரிக்க, சீட்டு எண் விவரங்களை வாங்கிக் கொண்டு நடத்துனரின் பெயரையும், அலைபேசி எண்ணையும் தந்திருக்கிறார்.

அலைபேசி மூலம் நடத்துனரைத் தொடர்பு கொள்ள, அவரும் மதியம் இத்தனை மணிக்கு இந்த வழிப் பேருந்தில் வருவேன் என்று சொல்லி, பேருந்தில் சந்தித்து பணத்தினையும் திரும்பத் தந்திருக்கிறார். அத்தனை நண்பர்களும் திரும்பக் கிடைக்காது என்று சொன்ன பணம்....  தனக்கும் நம்பிக்கை இல்லாது முயற்சிக்க, கிடைத்த பணம்.... 

இன்னும் சில நல்லவர்களும் இங்கே உலவுகிறார்கள் என்று நமக்கு நம்பிக்கை தரும் செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாசுகி நந்தன் என்பவர்.  ஆங்கிலத்தில் The Logical Indian பக்கத்தில் இந்தச் செய்தியை பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி.  நல்ல மனம் கொண்ட இந்த நடத்துனருக்கு இந்த வாரப் பூங்கொத்து!


இந்த வார முகப்புத்தக இற்றை:எனக்குள்ளே ஒரு மிருகமுண்டு
அதை உன்னிடம் சொல்வதெப்போ

எனத் தொடங்கும் ஒரு கவிதை பாலகுமாரனின் நாவல் ஒன்றில் படித்திருக்கிறேன். அது போல எப்போதும் நல்லவனாகவே இருந்து விடமுடியுமா? வார இறுதி விடுமுறை விடக்கூடாதா? எனக் கேட்கிறதே இக்குழந்தை! குழந்தை கேட்பது பெரியவர்களுக்கும் பொருந்தும் தானே!


இந்த வார குறுஞ்செய்தி:

யானையைக் கட்டித் தீனி போடறதும், ஆண்ட்ராய்டு ஃபோனை வைச்சு சார்ஜ் போடறதும்.....  ஒண்ணு தான்!

இந்த வார காணொளி:

மனதைத் தொட்ட காணொளி.  நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கலாமே!
ரசித்த பாடல்:

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விழாவில் சில மாணவ/மாணவியர்கள் சேர்ந்து பாடிய பாடல் – தமிழுக்கு அமுதென்று பேர்!  கேட்டு ரசிக்கலாமே!

தமிழுக்கு ....
Posted by அ முதல் ஃ வரை செய்திகள் on Wednesday, April 15, 2015இந்த வார புகைப்படம்:சமீபத்தில் நண்பரின் வீட்டில் நடந்த விழாவிற்கு வந்திருந்த குட்டிப் பெண்! கண்களில் ஒருவித குறும்பு குடிகொண்டிருக்கிறது! இக்குட்டிப் பெண்ணின் செல்லப் பெயர் “பண்டூ!  அதாவது பழம்....


படித்ததில் பிடித்தது:

புத்தர் தனது சீடர்களுடன் ஒரு நகரிலிருந்து அடுத்த நகருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வழியே ஒரு ஏரி தென்பட, அங்கே ஓய்வெடுக்கலாம் என சிறிது தங்கினார்கள். அப்போது புத்தர் தனது சீடர் ஒருவரிடம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்து வரச் சொன்னாராம். சீடரும் ஏரியின் அருகே சென்று பார்க்கும்போது அங்கே சிலர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார்களாம். அதே சமயத்தில் ஏரியின் உள்ளே ஒரு மாட்டுவண்டியும் இறங்கி ஆற்றைக் கடக்க, தண்ணீர் முழுவதும் கலங்கலாகி விட்டது.

இத்தண்ணீர் அருந்த இயலாத அளவிற்கு இருக்கிறதே என தண்ணீரை எடுக்காமல் வந்து புத்தரிடம் சொன்னாராம், இந்த ஏரியில் இருக்கும் தண்ணீர் மண் கலங்கலாக இருக்கிறது! இதை அருந்த முடியாது”. 

சிறிது நேரம் கழித்து அதே சீடரை ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துவரப் பணித்தார் புத்தர். இப்போது அவர் சென்று பார்த்தபோது ஏரியில் மண் எல்லாம் தரையில் படிந்து, தண்ணீர் சுத்தமாக இருக்கவே ஒரு பானையில் தண்ணீர் எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தாராம்.

தண்ணீரைப் பார்த்த புத்தர், “ஏரித் தண்ணீரை சுத்தமாக்க நீர் என்ன செய்தீர்? அதை அதன் போக்கிலே விட, சிறிது நேரத்தில் மண் எல்லாம் தரையில் தங்கிவிட, தண்ணீர் சுத்தமானது!  அதே போலத் தான் நமது மனதும். மனதில் ஏதோ ஒருவித குழப்பம் இருக்கும் போது, அதற்கு சிறிது நேரம் கொடுத்து அதை தொந்தரவு செய்யாமலிருந்தால், குழப்பம் தானாகவே அகலும்!என்று சொன்னாராம்.


மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. // யானையைக் கட்டித் தீனி போடறதும், ஆண்ட்ராய்டு போனை வைச்சு சார்ஜ் போடறதும்..... ஒண்ணு தான்!//

  இந்த வாரம் மிகவும் ரசித்தது இந்த குறுஞ் செய்தியைத்தான். வெளியூர் போனால் ஆண்ட்ராய்டு போனோடு பழைய போனையும் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது.

  புத்தருடைய போதனையும் சிந்தனையைத் தூண்டியது.
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 2. வணக்கம்
  ஐயா
  முதலாவது உள்ளது காணொளி மனதை நெருடி விட்டது...குறுஞ்செய்தி மற்றும் பேருந்து நடத்துனரின் நல்ல மனதை கண்டு மகிழ்ந்தேன்... இப்படியான நல்லவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.. பகிர்வுக்கு நன்றி த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. The supposed Madras University performance seems to be an ad. Kindly check.Anyway, it was enjoyable.

  ReplyDelete
  Replies
  1. Anyway, it was enjoyable.... and that is the reason for sharing!

   Thanks for your visit and sharing your comments Mr. Chandrasekharan.

   Delete
 4. நல்ல நிகழ்வுகள். குட்டிப் பெண் சுட்டிப்பெண்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. வாழ்க அவர். இந்த வார பாஸிட்டிவ் செய்திகள் பப்ளிஷ் தந்து விட்டு உங்கள் பதிவுக்கு வந்ததால் இவரை எங்கள் செய்திகளிலும் இணைக்க இந்த வாரம் முடியவில்லை. அடுத்த வாரம் முதல் செய்தியாக சேர்த்து விடுகிறேன்.

  இற்றை சூப்பர். குறுஞ்செய்தி உண்மை. அதிலும் சார்ஜர் சீக்கிரம் சீக்கிரம் கெட்டுப்போய் வேறு வாங்க வேண்டி வருகிறது பாருங்கள்... அதுவும் கொடுமை.

  மிக மிக மிக அருமையான காணொளி. ரசித்த பாடல் எனக்கும் வாட்சப்பில் வந்தது.

  ReplyDelete
  Replies
  1. பாசிட்டிவ் செய்தியில் அடுத்த வாரம்..... ஓகே ஸ்ரீராம்.

   என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் கிடையாது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. அனைத்தும் அருமை... முக்கியமாக இற்றையும்... புத்தரும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. உண்மையில் அந்த காணொளி மனதை தொட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. அனைத்துப் பதிவுகளுமே அருமை. தாங்கள் ரசித்த பாடலை நாங்களும் ரசித்தோம். குட்டிப்பெண் மிக அழகு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. நடத்துனருக்கு வாழ்த்துக்கள். எத்துறையிலும் இருக்கின்றனர் இப்படியும் சிலர்! புத்தர் கதை செறிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 10. காணொளி நெகிழ்த்தியது சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 11. காணொளி கண்டு மனம் நெகிழ்ந்தேன்..
  நாம் செய்யும் நன்மைகள் எந்த வடிவிலும் நமக்கு வந்தே தீரும்..

  இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 12. பண்டு கொள்ளை அழகு. சலாட் ரசிக்கும் படி இருந்ததுமுகப்புத்தக இற்றை என் பேரனை நினைவு படுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. 'தமிழுக்கு அமுதென்று பேர்' பாடல் எத்தனை இனிமை! அதை மிக அருமையாக பாடியிருப்பது இன்னும் இனிமை! இளம் தளிர்களின் உற்சாகம் நம்மையும் பற்றிக்கொள்கிறது!

  இந்த வார புகைப்படம் நம்மையும் ரசிக்க வைக்கிறது! அந்தக் கண்கள் அவ்வளவு அழகு!

  புத்தரின் கருத்து அனைவருக்கும் ஏற்ற‌து தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 14. அனைத்து தகவல்களும் அருமை நண்பரே...
  தமிழ் மணத்தில் நுழைக்க... 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 15. முகப்புத்தக இற்றை சிரிக்க வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. ”எனக்குள்ளே ஒரு மிருகமுண்டு
  அதை உன்னிடம் சொல்வதெப்போ”
  அருமையான வரிகள், தாங்கள் சொன்ன குறுஞ்செய்தி, அருமை.புகைப்டங்கள் அத்துனையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி!

   Delete
 17. காணொளி டாப் !!!! இந்த ஃப்ரூட் சாலடிற்கு அழகு சேர்ப்பது !!!!

  தமிழுக்கு அமுதென்று பேர்....ரசித்தோம்.....

  பழம் கொள்ளை அழகு! ...

  இற்றை ஹஹஹஹ் குழந்தை மனம்....ம்ம்ம்ம் நாமும் தான்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 18. நடத்துனருக்கு வாழ்த்துக்கள் புத்தரின் கதை சிறப்பு, மற்றவையும் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 19. காணொளி இன்றுதான் காண முடிந்தது அருமை நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் ஒரு முறை எனது பக்கத்திற்கு வந்து காணொளி கண்டு ரசித்தமைக்கு நன்றி கில்லர் ஜி!

   Delete
 20. இன்னும் சில நல்லவர்களும் இங்கே உலவுகிறார்கள் என்பது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....