திங்கள், 15 ஜூன், 2015

பைஜ்னாத் [அ] வைத்யநாதன்!



தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 20

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

 பயணித்த சாலை..... ஆஹா என்னவொரு அழகு

சென்ற பகுதியில் சொன்னது போல Dhauladhar Zoo பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்திற்குச் சென்றோம். அந்த இடம் ஒரு புராதனமான சிவன் கோவில்.  [B]பைஜ்னாத் மந்திர் என அழைக்கப்படும் அக்கோவில் Dhauladhar Zoo-விலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  மிருகக் காட்சி சாலையில் இருந்த மிருகங்களைப் பார்த்து விட்டு, அவை சிறையில் அடைபட்டிருக்கும் நிலை பற்றிய எண்ணங்களுடனே பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் கண்ட அருமையான காட்சிகள் சிலவற்றை கண் பார்த்தாலும் மனம் இன்னும் அந்த மிருகங்களையே நினைத்துக் கொண்டிருந்தது.

 பிரசாதம் விற்கும் பெரியவர்

அவற்றுக்கு ஏன் இந்நிலை என்ற எண்ணத்துடனேயே கோவிலை சென்றடைந்தோம். கோவில் வாசலிலேயே ஒரு பெரியவர் தள்ளாத வயதிலும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நமது ஊர் போல, வடக்கில் இருக்கும் கோவில்களில் பிரசாதங்கள் இருப்பதில்லை. சர்க்கரை மிட்டாய்கள், உலர் பழங்கள் போன்றவை தான் பெரும்பாலும் ஆண்டவனுக்கு படைப்பார்கள். எந்த இடத்தில் என்ன கிடைக்கிறதோ அதையே ஆண்டவனுக்குப் படைப்பது தானே நல்லது.  அந்த பெரியவரும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை மிட்டாய் பிரசாதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.


 தலைக்கு வைக்கும் குஞ்சலமோ இல்லை எனில் [dh]துப்பட்டாவோ!

பெரும்பாலும் நான் கோவிலுக்குச் செல்லும் போது எந்த விதமான பிரசாதமோ, அர்ச்சனை தட்டுகளோ வாங்குவதில்லை.  என்னுடன் வருபவர்கள் வாங்கி அர்ச்சனை செய்வது மட்டும் தான். ஏனோ இந்தப் பெரியவரிடம் வாங்க வேண்டும் எனத் தோன்றவே ஒரு சர்க்கரை மிட்டாய் பை ஒன்றை பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டேன்.  அவருக்கு விற்பனை ஆன மகிழ்ச்சி, எனக்கு ஏதோ ஒரு பெரியவருக்கு உதவி செய்த திருப்தி.

 மலையடிவாரத்தில் இப்படி ஒரு வீடு அமைந்து விட்டால்!

மேலே நடந்து கோவிலின் அருகே சென்றோம். பக்தர்கள் அதிக அளவில் இல்லை என்றாலும் அப்போது தான் வந்திருந்த பேருந்து ஒன்றிலிருந்து சில பள்ளிச் சிறுவர்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அனைவரையும் அழைத்து வந்த ஆசிரியர்கள் ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்க நாங்கள் முன்னேறினோம்.

 எத்தனை பெரிய கல்லாக இருந்தாலும் உருட்டிக்கொண்டே சென்று விடுவேன்.....  ஆனாலும் இப்போது தண்ணீர் கொஞ்சமாகவே இருக்கும் ஒரு ஆறு!

உள்ளே நுழையுமுன்னர் அக்கோவில் பற்றிய தகவல்களை பார்க்கலாம். பிந்துகா எனும் நதிக்கரையில் அமைந்திருக்கிறது இக்கோவில். ராஜா ஜெயச்சந்திரா என்பவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்றாலும் 1783-ஆம் ஆண்டு கோவிலில் சில புனரமைப்பு வேலைகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்ததாக தெரிகிறது.

 கோவில் வெளிப்புறத்திலிருந்து எடுத்த ஒரு புகைப்படம்.

மலைகளின் அழகு ஒரு பக்கத்தில் இருக்க, கோவிலின் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களின் அழகு உங்களை நிச்சயம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு இருக்கும். சிவபெருமான் தான் இங்கே முக்கிய தெய்வம் என்றாலும் சுற்றுச் சுவர்களில் மற்ற தெய்வங்களுக்கும் இங்கே சிற்பங்கள் உண்டு.  இக்கோவிலில் வீற்றிருக்கும் லிங்க வடிவமான சிவபெருமானுக்கும் ஒரு கதை சொல்கிறார்கள். 

 அழகிய சிலை ஒன்று - என்னவொரு ஒய்யாரப் படுக்கை!

சிவபெருமானின் மிகச் சிறந்த பக்தனான ராவணன் கைலாச பர்வதத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தது மட்டுமன்றி,  ஒரு பெரிய யாகமும் செய்தாராம். சிவ பெருமானின் அருளைப் பெற தனது பத்து தலைகளையும் கொய்து யாகக் குண்டத்தில் போட்டு விட்டாராம். அவரது தவத்திலும், அவர் செய்த யாகத்திலும் மகிழ்ந்த சிவபெருமான் ராவணுனுக்கு தலைகளை மீண்டும் வரச் செய்தது மட்டுமின்றி, யாராலும் அழிக்க முடியாத வரங்களையும் கொடுத்தாராம்.

 சிதிலமடைந்த சிவன் -  பார்வதி சிலையொன்று.

அது மட்டும் போதாது என்று சொல்லி, சிவபெருமானையும் தன்னுடனேயே இலங்கைக்கு அழைத்துச் செல்ல விரும்பினாராம் ராவணன். அவனது வேண்டுகோளுக்கு இணங்கிய சிவபெருமான் லிங்க ரூபம் கொள்ள, ராவணன் அதனை எடுத்துக் கொண்டுச் சென்று கொண்டிருந்தாராம். வழியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டியிருந்ததால் இப்போதைய பைஜ்னாத் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் கீழே வைத்து விடாதே என்று சொல்லிக் கொடுத்துச் செல்ல, சிவலிங்கத்தின் பாரம் தாங்காது அங்கேயே வைத்துவிட்டாராம் அந்த இளைஞர்.

 ஒரு செங்கல் அளவு இருக்கும் இக்கல்லில் எத்தனை நுணுக்கமான வேலைப்பாடு....

அந்த சிவலிங்கத்தினை எடுத்துச் செல்ல முடியாததால் அங்கேயே கோவில் அமைத்ததாகவும் ஒரு கதை உண்டு.  பின்னர் வந்த மன்னர்களால் புனரமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். மிகவும் பழமையான கோவில் என்பதை நீங்கள் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடியும். பிரம்மாண்டமான இக்கோவில் தற்போது தொல்பொருள் இலாக்காவின் வசம் இருக்கிறது.


 இதுவும் ஒரு சிறிய அளவு கல்தான். அதில் எத்தனை நகாசு வேலைகள்

பொதுவாகவே வடக்கில் தசரா திருவிழா சமயத்தில் “ராம் லீலாகொண்டாடுவார்கள்.  அப்போது ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேக்நாத் ஆகிய மூவரின் உருவ பொம்மைகளை எரித்து ராவண தகனம் என்று கொண்டாடுவார்கள்.  ராவணனின் சிவபக்தியை மெச்சும் இந்த ஊரில் ராவண தகனம் கொண்டாடப்படுவதில்லையாம்.

 சிதிலமடைந்த மற்றொரு சிலை

கோவிலில் இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.  சில சிற்பங்களை பார்க்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், காலத்தின் பிடியில் சிக்கி அழிந்த நிலையில் இருக்கும் பல சிற்பங்களைப் பார்க்கும் போது அவற்றை பாதுகாத்து வைக்க தவறிவிட்டார்களே என்றும் தோன்றியது.  சில சிற்பங்களின் பகுதிகள் உடைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கவே மனதை ஏதோ செய்தது.

 கோவில் இன்னுமொரு தோற்றம்

சிவபெருமானை தரிசனம் செய்து பிரகாரத்தில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து ரசிக்கலாம் என்று பிரகாரத்தில் வலம் வந்தோம். அப்பப்பா எத்தனை சிற்பங்கள், பிள்ளையார், முருகர், ஹரிஹரன், பிரம்மா என நிறைய சிற்பங்கள்.  ஒவ்வொரு சிற்பங்களும் நுணுக்கமான முறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அக்கால சிற்பிகளின் திறமை நம்மை வியக்கச் செய்யும் வகையில் இருக்கிறது. 

 வழியில் பார்த்த ஒரு பூ!

அங்கே இருக்கும் சிற்பங்கள், அவை பற்றிய தகவல்கள் மட்டுமே ஒரு பகுதியில் எழுத வேண்டிய அளவிற்கு இருக்கின்றன.  எடுத்த புகைப்படங்களும் உண்டு.  ஆகையால் அடுத்த பகுதியில் அச்சிற்பங்களையும் அவற்றின் தகவல்களையும் சொல்கிறேன்.  நீண்ட இடைவெளி இல்லாது நாளை மறு நாளே வெளியிட்டு விட எண்ணம். பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

24 கருத்துகள்:

  1. மிக மிக அருமையான தகவல்கள்! நாங்களும் கூட கோயிலுக்குச் செல்லும் போது பிரசாதங்கள், அர்ச்சனைத்தட்டுகள் வாங்குவதில்லை....

    படங்கள் அருமை! அந்த ஆறு குறிப்பாக...ரொம்ப அழகாக இருக்கின்றது. மிகவும் ரம்மியமான சூழல் என்று சொல்லுங்கள்! மலையும் ஆறும் இருக்கும் இடத்தில் அழகிய கோயில்.....மலையடிவார வீடு ரொம்ப அழகாக இருக்கின்றதே! பைஜ்நாத் கோயிலின் கதை வாசித்திருக்கிறோம். அனைத்தையும் ரசித்தோம்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி வெங்கட் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே ரம்மியமான இடம் தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  2. அழகான படங்கள்... என்னவொரு அழகான வீடு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான வீடு தான். தூரத்தில் இருந்து பார்த்தபோதே பிடித்ததால் எடுத்த புகைப்படம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. வித்தியாசமான கதைகளை அறிந்தேன். படங்கள் அற்புதம். உடன் வந்த நிறைவு ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. கோவிலின் கொள்ளை அழகு தங்களின் கேமரா உபயத்தால் மேலும் ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. பழமையான கோவில் ஒன்றைப் பார்த்ததோடு, எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. கோவிலை நாங்களும் தரிசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  7. அந்த மாதிரியான வீடுகளில் வசிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட கிடைக்காதபல அசௌகரியங்களை நினைக்க வைக்கிறது. சிற்பங்களை என்னதான் பராமரித்தாலும் இயற்கையின் சீற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. அழகான சிற்பங்கள்! சிறப்பான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    கண்ணுக்குவிருந்தான படங்களுடன்பதிவை அசத்தி விட்டீர்கள் த.ம 6 பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  10. அருமையான சிற்பங்கள். தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. முதல் படமே மிகவும் கலக்கலாக உள்ளது. அனைத்து விஷயங்களும் அருமை. நேரில் சென்று வந்ததுபோல திருப்தியாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. ரொம்பவே அழகான சிற்பங்கள் தான் டீச்சர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....