எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, August 19, 2015

காக்கா முட்டை....


மனச்சுரங்கத்திலிருந்து....


படம்: இணையத்திலிருந்து....

நெய்வேலி நகரத்தில் இருந்த போது கிடைத்த அனுபவங்களை “மனச்சுரங்கத்திலிருந்துஎன்ற தலைப்பில் பகிர்ந்து கொள்வது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். இன்றைக்கு அந்த வரிசையில் ஒரு பகிர்வு காக்கா முட்டை!  சமீபத்தில் வெளி வந்த காக்கா முட்டை படமும் [சனிக்கிழமை சுதந்திர தினத்தினை முன்னிட்டு விஜய் டிவியில் காண்பிக்கும்போது கூட பாதி திரைப்படம் தான் பார்க்க முடிந்தது! நடுவில் மழை பெய்ததால் TATASKY காலை வாரிவிட்டது! தில்லி வந்த பிறகு திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதே அரிதாகிவிட்டது!] நண்பர் துளசிதரன்/கீதா ஜி! அவர்களின் தளத்தில் எழுதிய காக்கா முட்டை பதிவும் இப்பதிவிற்கு வித்திட்டன!

வீட்டைச் சுற்றி பல மரங்கள் என்பதால் பறவைகளின் கூடுகளும் இங்கே அதிகம்.  சிகப்பு எறும்பு [கட்டை எறும்பு அளவிற்கு இருக்கும்] – பொதுவாக மாமரத்தின் கிளைகளில் இருக்கும் சில இலைகளைச் சேர்த்து கூடாகக் கட்டும்.  தப்பித்தவறி அந்த கூடு இருக்கும் கிளைகளில் தெரியாமல் சென்றுவிட்டால் கால்களை குதறி விடும். கடிக்க ஆரம்பித்தால் அவை நம் தோலை விட்டு விலகாது – பிய்த்து தான் எடுக்க வேண்டியிருக்கும்! அப்படி இருக்கிற கூடுகளை, அவற்றை கட்டிய சிகப்பு எறும்புகளிடமிருந்து தப்பித்து சற்றே அருகில் சென்று பார்த்ததுண்டு.  மாங்காய் பறிக்கும் போது இந்த வேலையும் நடக்கும்!


படம்: இணையத்திலிருந்து....

கொஞ்சம் தப்பினாலும் எறும்புகள் கூட்டமாக உடலில் கதகளி ஆடிவிடும் என்று தெரிந்தாலும் இப்படி அருகில் சென்று பார்ப்பதில் எந்த தயக்கமும் பயமுமோ அப்போது இருந்ததில்லை! இப்போது நினைத்தாலே மனதுக்குள் நடுக்கம்.  சில சமயங்களில் கொத்தாக சிகப்பு எறும்புகள் கைகளில்/கால்களின் ஒட்டிக்கொள்ள நான் கதகளி ஆடியதும் நடந்திருக்கிறது!

அதே போல, புளிய மரத்தில் வருடா வருடம் புளி காய்க்கும் நாட்களில் மரத்திலேறி கிளைகளை உலுக்குவது என்னுடைய வேலை தான். அது தான் பெரிய வேலை என அதிகம் அலட்டிக்கொண்டதுண்டு! அதன் பிறகு இருக்கும் நச்சு வேலைகள் அனைத்தையும் [காய வைத்து, ஓடுடைத்து, அதிலிருந்து விதைகளையும்,  நார்களையும் நீக்கி மீண்டும் காய வைத்து] செய்யும் அம்மாவும் நான் செய்யும் வேலை தான் அதிக கஷ்டமானது, உடம்பு சூடாயிடும் பாவம் என்று சொல்லி அங்கலாய்ப்பார்.  புளி உலுக்க மட்டுமே நான் மரம் ஏறுவதில்லை. இன்னும் சில ஆசைகளும் அதற்குக் காரணம்!

வருடா வரும் புளிய மரத்தில் ஏதேனும் ஒரு கிளையில் தேன்கூடு கட்டிவிடும். அந்த கிளைப்பக்கம் செல்வது ஆபத்து என்றாலும், தேன்கூட்டை அருகிலிருந்து பார்க்கும் ஆசையினால் அந்த கிளை நோக்கிச் செல்லும் போது அம்மா கீழிருந்து சத்தம் போடுவார். சில சமயங்களில் தேன் எடுக்க முயற்சித்ததும் உண்டு!  அதிலிருக்கும் ஆபத்துகள் தெரியாத வயது அது! ஒரே ஒரு முறை கொட்டும் வாங்கியதுண்டு! அதை விட அதிகம் நினைவிலிருப்பது தென்னை மரத்திலிருக்கும் வண்டால் பட்ட அவஸ்தை!

பள்ளிக்கு குறுக்கு வழிகளில் – பலரின் வீட்டுத் தோட்டங்கள் வழியே செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தென்னை மரத்தின் வழியே செல்ல, அங்கே கூடு கட்டிக்கொண்டிருந்த பெரிய வண்டு ஒன்று பறந்து, போகிற போக்கில் என் உதட்டில் ஒரு உம்மா கொடுத்து விட்டுப் போனது.  கொடுத்தது தெரியாத அளவிற்கு கொடுத்த உம்மா, சற்று நேரத்தில் அதன் வேலையைக் காண்பிக்க, என் உதடு கழுத்து வரை வீங்கிப் போனது! நாலு நாளுக்கு பள்ளிக்கு போகவில்லை [ஹையா ஜாலி!] என்பது தேவையில்லாத செய்தி!


படம்: இணையத்திலிருந்து....

சரி தலைப்புக்கு வருவோம்!  புளிய மரத்தின் கிளைகளில் காக்காய்களும் கூடு கட்டி வைத்திருக்கும்.  மரத்தில் ஏறியவுடனேயே அங்கும் இங்கும் பறந்து சத்தமிட்டபடியே இருக்கும். அதற்கு அதன் பயம்...  எங்கே கூட்டைக் கலைத்து விடுவோமோ, அதன் முட்டைகளை அழித்து விடுவோமோ என பயந்து கூச்சல் போட்டபடி இருக்க, நானோ, அந்தக் கிளையில் முன்னேறிக் கொண்டிருப்பேன்.  சில நாட்கள் உணவு தேடி காகங்கள் போயிருக்க, நான் கூட்டின் வெகு அருகில் சென்று அதில் இருந்த காக்காய் முட்டைகளை கையில் எடுத்துப் பார்த்து, மீண்டும் வைத்ததுண்டு! ஒரு சமயம் அப்படி வைக்கும்போது கை தவறி கீழே விழுந்து உடைந்ததும் உண்டு!

இரண்டொரு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் அரச மரத்தில் காக்காய் கூடு கட்டி இருக்கும் போல! அதைக் கட்டிய காகம் நான் அவ்விடத்தைக் கடக்கும் போது, தலையில் தட்டும் அளவு கிட்டே வர முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக குனிந்து கொண்டேன். நல்ல வேளை தலையில் அதன் அலகால் கொத்தாமல் போயிற்றே!

ஒரு வேளை முன் ஜென்ம பகை இருக்குமோ அதற்கு! என்னைப் பத்தி பழைய காக்கா போட்டுக் கொடுத்திருக்குமோ! இல்லை இது அதே காக்கவோட அடுத்த ஜன்மமோ! என என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டிருக்க, அந்த மரத்தின் அருகே இருக்கும் வீட்டில் வசிக்கும் நண்பர் சொன்னார் – இரண்டு மூணு நாளா யாரும் இந்தப் பக்கம் வர முடியல! எல்லார் தலையிலையும் இறக்கைகளாலோ, அல்லது கால்களாலோ தட்டி விடுகிறது!”.

நல்ல வேளை அன்று அதனிடமிருந்து தப்பிய நான் அதற்கடுத்த நாள்களில் அலுவலகம் செல்லும் போது வேறு பாதையை பயன்படுத்தினேன்! எதுக்கு அந்த காக்கா கிட்ட மாட்டிக்கணும் அப்படிங்கற எண்ணம் தான்!

மனச்சுரங்கத்திலிருந்து வேறு சில நினைவுகளோடு பிறிதொரு சமயத்தில் சந்திக்கும் வரை....

நட்புடன்30 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. காக்காவிடம் கொட்டு வாங்கிய அனுபவம் உண்டு. மற்றபடி காக்கா முட்டை பார்த்தது (படமும்தான்) இல்லை!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. பல சமயம் காக்கா கொத்து பட்டவன்
  என்கிற வகையிலும் பதிவு மிக
  சுவாரஸ்யமாக இருந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete

 4. "ம்ம்ம்ம், அந்த பயம் இருக்கட்டும்", என காக்கா சிரிப்பதுபோல் தெரிகிறதே !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 5. சுரங்கத்தில் தோண்டத்தோண்ட ஏராளமான (நினைவு) பொக்கிஷங்கள் வருதே! ஆஹா:-)

  ReplyDelete
  Replies
  1. நினைவுகள்..... நிறையவே உண்டு. அவ்வப்போது இப்படி எழுதி விடுகிறேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 6. தங்களின் மனச் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்த சுவாரஸ்யமான நினைவுகளை இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. இனிய மலரும் நினைவுகள்..

  ஆனாலும் புளிய மரத்தில் எல்லாம் ஏறியதில்லை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 8. மனச் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுத்தது கட்டித் தங்கம் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. காக்கை கூடு பார்த்திருக்கிறேன்! முட்டை பார்த்தது இல்லை! விஜய் டீவி புண்ணியத்தில் காக்கா முட்டை படம் பார்த்தேன்! படம் அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை! சிறுவர்களில் இயல்பான நடிப்பும். அந்த பாட்டி, அம்மாவாக நடித்தவர்களின் நடிப்பும் பிடித்து இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 10. தப்பிக்க புதிய வழியாகச் செல்லும் அளவு உங்களது மனதில் தாக்கம் ஏற்பட்டதை அறிந்து வியந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 11. வணக்கம்
  ஐயா
  தங்களின் மனதில் தேன்றிய நினைவு சுவாரஸ்யமாக உள்ளது.... வாழ்த்துக்கள் த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 12. அட சூப்பர் மனச்சுரங்கம்! இது போன்றவை எல்லாம் செய்ததுண்டு....எறும்புக் கடி முதல், காக்கா கொட்டு வரை....சிறிய வயதில்...நல்ல மலரும் நினைவுகள்...

  கீதா: ஹஹஹ் உங்கள் உயரத்தைக் காக்காயால் தொட முடியலையா...!!!
  நானும் சிறு வயதில் மாங்காய் மரம், புளியமரம் ஏறியதுண்டு. எறும்புக் கடி, காக்கா அலகால் கொத்தியது, பூனை என் மேல் பாய்ந்தது...மரத்தில் பச்சைப்பாம்பு இருந்தது தெரியாமல் அருகில் சென்றுவிட்டது...என்று பல....எழுத வேண்டும்....இப்போது சமீபத்தில் கூட சென்ற வருடம் துளசி குடும்பத்தாருடன் சைலன்ட் வேலி சென்றிருந்த போது ஒரு மரத்தில் குழந்தைகளுடன் நானும்??? ஏறியது பழைய நினைவுகள் வந்தது..இப்போது தங்கள் பதிவு மீண்டும்..
  எங்கள் பதிவையும் இங்கு சொல்லியதற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. பழமையான நினைவுகள் சுகமானதே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. ஹாஹா காக்கா முட்டை பட விமர்சனம் என்று வந்தேன்

  கதகளி ஆடியது சூப்பர். ஏன்னா நானும் தரையில் விதம் விதமா (கட்டை,சிவப்பு) எறும்பு கடித்து ஆடி இருக்கேன். :) புளிய மரத்தில் எப்பவோ ஏறியதுண்டு. அதில் புளியம் பிஞ்சையும் பழத்தையும் சுவைத்ததுண்டு, ஆறாவயலில் எங்கள் பாட்டி வீட்டில்

  ஆமா அடிக்கடி நெய்வேலி வருதே. அது நீங்க பிறந்த ஊரா. இல்ல வளர்ந்த ஊரா. நாங்க 2 வருஷம் நெய்வேலியில் இருந்தோம் பசங்க அங்கே படிச்சாங்க. பூலோக சொர்க்கம் - குவார்ட்டர்ஸ் இருந்தது. :)

  ReplyDelete
  Replies
  1. பூலோக சொர்க்கம்..... அதே தான்! எனது வலைப்பூவில் Sidebar-l "நான் யாரு?” என்று எழுதி இருப்பதை பார்த்ததில்லை எனத் தெரிகிறது! - அங்கே சொன்னது இது தான் - “பிறந்ததும் வளர்ந்ததும் நெய்வேலியில். தற்பொழுது இருப்பது தலைநகர் தில்லியில்.” கிட்டத்தட்ட 20 வருடம் நெய்வேலியில் இருந்த பிறகு தலைநகர் தில்லி வாசம்! அதனால் தான் மனச்சுரங்கத்தில் நிறைய நெய்வேலி நினைவுகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 15. மாமரத்தில் பெரிய சிவப்பு எறும்புகள் கூடு கட்டி சமயத்தில் நம்மையும் கடிக்கும். அவற்றின் மேல் சாம்பலைத் தூவினால் அவை ஓடிவிடும் சில இறந்தும் விடும் என் மச்சினன் பிஎச் இ எல் ல் நெய்வேலியில் பணியிலிருந்தபோது நெய் வேலி வந்திருக்கிறேன் மனச்சுரங்கமும் ஆழமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள். .

  ReplyDelete
  Replies
  1. சிகப்பு எறும்புகள் கடிக்காதிருக்க, நான் கூட வீபூதியோ, சாம்பலோ தடவிக்கொண்டு மரம் ஏறுவதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....