எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, October 10, 2015

என் அழகின் ரகசியம்......ஒவ்வொருத்தருமே அழகு தான்! எல்லா தாய்க்கும் அவரது குழந்தைகள் அழகு தானே! காதலிக்கும் போது உலகத்திலேயே அழகு நம் காதலி தான் என்று, காதலர்கள் வரிந்து கட்டிக்கொண்டு காதலியின் அழகு பற்றி கவிதைகள் எழுதித் தள்ளுவார்கள்! அப்படி நிறைய கவிதைகள் படித்துக் கொண்டே தான் இருக்கிறோம்! உதாரணத்திற்கு இங்கே இரண்டு!

பூக்கள்தான் அழகு
என்று
இறுமாந்திருந்தேன்....!
உன் பூமுகம்
காணும் வரை...!!

யாருமே எழுதியிராத
அழகான கவிதையை
உனக்கு தர வேண்டும் என ஆசை
ஆனால்....
உனக்காக எழுதும்...
எழுதப் போகும் அனைத்துமே
அழகாகி விடுகிறது......

டிஸ்கி-1:  கவிதைகள் எழுதியது சத்தியமாக நான் இல்லை!

சரி என்னிக்கும் இல்லாத திருநாளா இன்னிக்கு எதுக்கு அழகு பற்றிய ஒரு பதிவு! இருக்கிற அழகுக் குறிப்புகள் போதாதா? ஏற்கனவே அதுக்காக நாங்க பண்ணும் செலவு பத்தாதா?  என்றெல்லாம் ஆதங்கம் வேண்டாம்! இன்றைக்கு நாம் பார்க்கப் போவது சில விளம்பரங்கள்! அதுவும் மிகவும் பழைய விளம்பரங்கள். அழகிலிருந்து ஆரம்பிக்கலாமே என்பதால் இப்படி!

லக்ஸ்: சினிமா நட்சத்திரங்களின் அழகு தரும் சோப்!
இந்த சோப்புக்கு விளம்பரம் தராத நடிகையே இல்லை போல!  இங்கே பாருங்களேன் – தவமணி தேவி எனும் நடிகை கூட விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த தவமணி தேவி எந்தப் படத்தில் நடித்தார்கள் என மூத்த பதிவர்கள் சொல்லலாம்!

பியர்ஸ்: அழகிய நங்கையாக விளங்குவதற்கான முயற்சி!
இந்த விளம்பரம் வெளிவந்த வருடத்திலேயே தலைமுறைகளாக அழகிய மாதர் உபயோகிப்பதுஎன்று சொல்லி இருக்கிறார்கள்! அப்படி என்றால் முதன் முதலில் பியர்ஸ் சோப் எப்போது தயாரித்தார்கள்?

ரெக்சோனா: நாளுக்கு நாள் அதிக தெளிவானதும் அழகானதுமான சருமம்
நாளுக்கு நாள் அழகு கூடிக்கொண்டே இருக்கும் என்பதைக் காண்பிக்க மூன்று புகைப்படங்கள் – ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக!  இன்னமும் அதே பழைய யுக்தி தானே பயன்படுத்துகிறார்கள்.... 

ஹிமாலயா புக்கே ஸ்னோ:  உயர் ரகமான க்ரீம் என்பதைக் காண்பீர்கள்!
இப்படி ஒரு க்ரீம் இருந்ததை நான் கேள்விப்பட்டதில்லை. என் வீட்டுப் பெரியவர்களும் சொன்னதாய் நினைவில்லை.  மூத்த பதிவர்களில் யாராவது பயன்படுத்தி இருக்கிறீர்களா? :)

கேரளா சாண்டல்வுட் சோப்:  வனப்பை அடையுங்கள்
மைசூர் சாண்டல் சோப் – இது கேள்விப்பட்டிருக்கிறேன். பயன்படுத்தியதும் உண்டு. இப்போதும் கிடைக்கிறது. ஆனால் கேரளா சாண்டல்வுட் சோப்! உங்களில் யாரேனும் கேள்விப்பட்டதுண்டா?

அந்த காலத்து ஆண்கள் எல்லோருமே அழகு போல! ஒரு சோப்பு கூட ஆண்களுக்கானது என்று விளம்பரப்படுத்தவில்லையே! சிறுவர்களுக்கான சோப்பு என்று கூட ஒரு விளம்பரம் உண்டு!

லைப்பாய் சோப்: இச்சிறு கைகள் விளையாடுகின்றன... ஆனால்!
லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்யம் அவ்விடமே பாடலைக் கேட்காதவர்கள் யார்?  இருந்தாலும் இங்கே கொடுத்திருக்கும் விளம்பரம் சிறு குழந்தைகளுக்கு உகந்த சோப் என்றே தந்திருக்கிறார்கள்!

டிஸ்கி-2:   இந்த விளம்பரங்கள் எல்லாமே மிகப் பழைய விளம்பரங்கள். அதாவது 64 வருடங்கள் பழையவை. அதாவது 1951-ஆம் ஆண்டு வந்த விளம்பரங்கள். கலைமகள் 1951-ஆம் வருட தீபாவளி மலரிலிருந்து எடுக்கப்பட்டவை.  மேலும் சில விளம்பரங்களும், கட்டுரைகளும் உண்டு.  அதைத் தவிர, இப்புத்தகத்தில் அகிலன், தி.ஜ.ர., தி.ஜானகிராமன், அனுத்தமா, பெ. தூரன், மாயாவி போன்ற சிறந்த எழுத்தாளர்களின் கதைகளும் உண்டு! உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரும் சனிக்கிழமைகளில் ஒவ்வொன்றாய் வெளியிடுகிறேன்.....

என்ன நண்பர்களே, பொக்கிஷம்பகுதியில் வெளியிட்ட பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

30 comments:

 1. ரசித்தென். தவமணி தேவி என்பவர் இலங்கை நடிகை. வனராணி என்ற படத்தில் லேடி டார்ஜான் வேடத்தில் நடித்ததாய்ப் படித்ததாய் நினைவு.

  ReplyDelete
  Replies
  1. இலங்கை நடிகை.... தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. "ரசித்தேன்" என்று திருத்திக் கொள்கிறேன்.

  :)))))

  ReplyDelete
  Replies
  1. :))))

   சில சமயங்களில் இரண்டு முறை ”ஈ” தட்டினாலும் வருவதென்னவோ ஒரு இ!

   Delete
 3. பாராட்டத்தக்க வேண்டிய முயற்சி. இவ்வாறான பதிவுகள் நமது கடந்த காலத்தை, முந்தைய தலைமுறையை, சமூக நிலையை உணர்ந்து கொள்ள வாய்ப்பாக அமையும். விளம்பர உத்தியையும், சொல் பயன்பாட்டு நிலையையும் நாம் அறிந்துகொள்ள உதவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
  2. வணக்கம்
   சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு நன்றி.. ஐயா த.ம 7
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
  3. தங்களது வருrகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 4. பழைய தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 5. ம்ம்ம்ம்ம்ம் எடுத்த உடனே ஒரு தப்பைச் சொல்லிடறேன். அப்புறமா மத்தது! கலைமகள் தீபாவளி மலர் 1951-ஆம் ஆண்டுனு சொல்லி இருக்கணுமோ? அப்போத் தான் 64 வருடங்கள் ஆகும்! ஹிஹிஹிஹி!

  ReplyDelete
  Replies
  1. தவறைச் சுட்டியமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 6. முதலாவது லக்ஸ் விளம்பரம் தவமணி தேவினு ஒரு நடிகை இருந்தாங்கன்னே தெரியாது! :)
  பியர்ஸ் சோப் விளம்பரத்தில் டச்சுக்குழந்தைனு போட்டிருக்கே!
  ரெக்சோனா விளம்பரத்து நடிகை யாரு? தெரிஞ்ச முகமா இருக்கு!
  ஹிமாலயன் ஸ்நோ கேள்விப் பட்டிருக்கேன். அங்கே உள்ள பனிக்கட்டி போல் குழைவாகவும், மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்னு சொல்லாமல் சொல்லி இருப்பதாகச் சொல்வாங்க.
  கேரளா சான்டல் தெரியாது!
  லைஃப்பாயும், சன்லைட் சோப்பும்(துணி வெளுக்க) ஆரோக்கியமான சோப்புனு தெரியும். :)

  ReplyDelete
  Replies
  1. தவமணி தேவியை உங்களுக்கே தெரியாதா? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 7. எல்லோருக்கும் கீ போர்டு பிரச்னை போல! எனக்குச் சில எழுத்துக்கள் விழுவதே இல்லை. :)

  ReplyDelete
  Replies
  1. கீ போர்டு... பல சமயங்களில் இப்படித்தான் படுத்துகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 8. அனைத்தையும் மிகவும் ரசித்தேன்!
  மலரும் நினைவுகள் மாதிரி தான் இதுவும்! என்னிடமும் மிக மிகப்பழைய புத்தகங்கள், அந்தக் காலத்தில் பைண்ட் செய்யப்பட்டது, என் அம்மா காலத்திய கல்கி, கலைமள், விகடன் தொகுப்புகள் உள்ள‌ன!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 9. காலத்தை கடந்தவை... நாம் கண்டிராதவை... இதுபோன்ற பதிவுகள் அவசியம் அண்ணா....
  தொடர்ந்து பகிருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்...

   Delete
 10. அருமை! தங்களின் அயராத தேடல்களும் அறிந்திராத விளம்பர நடிகர்களும்!

  ரசித்தேன்! கவிதைகளும் சிறப்பு!
  வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 11. வணக்கம் ஜி நடிகை வனராணி ஒருகாலத்தில் இனைஞர்களின் கனவுக்கன்னி 80 குறிப்பிடத்தக்கது ஜி பழைமையான விடயங்கள் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete


 12. பொக்கிஷங்களில் வந்தவை உண்மையில் பொக்கிஷங்கள்தான். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடிகை தவமணி தேவி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் 1937 ஆம் ஆண்டு தயாரித்த சதி அகல்யா என்ற படத்தில் முதன் முதல் கதாநாயகியாக நடித்தார். இவர் பாடும் திறமை கொண்டவர். பல பாடங்களில் பாடியிருப்பதால் இவருக்கு ‘சிங்களத்து குயில்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. ராஜகுமாரி படத்தில் திரு எம்.ஜி‌.ஆருக்கு ஜோடி இவர்தான்.

  1914 ஆம் ஆண்டு Kerala Soaps & Oils Limited என்ற பெயரில் கோழிக்கோடில் தொடங்கிய ஒரு நிறுவனம் கேரளா சந்தன சோப் என்ற பெயரில் சந்தன சோப்புகளை விற்பனை செய்து வந்தது. 1963 ஆம் ஆண்டு கேரளஅரசின் நிறுவனமான ஆகி பின்னர் 2002 ஆம் ஆண்டு பெருத்த நட்டம் காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டு திரும்பவும் 2010 ஆம் ஆண்டு Kerala Soaps Limited என்ற பெயயரில் புதிய நிறுவனமாக செயல்பட்டு சந்தன சோப்புகளை தயாரித்து விற்பனை வருகிறது;

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... இத்தனை மேலதிக தகவல்கள்..... சிங்களத்து குயில், எம்ஜிஆர் ஜோடி போன்ற தகவல்களும், கேரளா சோப் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. பழைய விளம்பரங்களை கண்டு மகிழ்ந்தோம்! அன்றிலிருந்து விளம்பர உலகம் இன்னும் மாறவில்லை என்பதயும் தெரிந்து கொண்டோம்!
  த ம8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 14. விளம்பரங்கள் மாறவே இல்லையோ....பல விளம்பரங்கள் அதே போன்றுதான் இன்றும். பொக்கிஷம் ரசித்தோம்....பொக்கிஷம் தொடரலாமே..

  கீதா: என்னிடமும் சில பழைய மலர்கள், இதழ்கள் இருக்கின்றன. ஆனால் இத்தனை பழசு அல்ல. அவற்றிலிருந்து ஒரே ஒரு முறை சில தகவல்கள் பகிர்ந்தேன் தளத்தில். மீண்டும் பதிய வேண்டும்...தொடருங்கள் வெங்கட்ஜி!

  ReplyDelete
  Replies
  1. பொக்கிஷம் - சனிக்கிழமைகளில் தொடரும்..... உங்களிடம் இருப்பதையும் பகிர்ந்து கொள்ளலாமே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....