வியாழன், 29 அக்டோபர், 2015

பேட் த்வாரகா – ருக்மணியின் கிருஷ்ணர்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 17

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16

நன்றி: துளசி டீச்சர்....

தள்ளு மடல் வண்டி இதுபற்றி சென்ற பகுதியில் சொல்லும் போது, படம் எடுக்கவில்லை என்று சொல்லியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அந்தப் படம் நான் எடுக்கவில்லையெனிலும், நம்ம உலகம் சுற்றும் வாலிபி [வாலிபனுக்கு பெண் பால்!] துளசி டீச்சர், பதிவு பற்றிய என்னுடைய முகப்புத்தக இற்றையில் இந்த வண்டியா பாருங்க!ன்னு படம் அனுப்பி வைச்சாங்க! அதே தான் அதே தள்ளு மடல் வண்டி தான் என்று நன்றியுடன் சேமித்துக் கொண்டேன். அந்தப் படம் மேலே!



கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் மக்கள் வெள்ளத்தினை கடந்து சென்றால், சில படிகள் கோவிலை நோக்கி இறங்கிச் செல்கிறது. அப்படிகள் முழுவதிலும் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள். ஒரு மணி நேரம் ஆகுமே அதுவரைக்கும் நின்று கொண்டிருக்க முடியாதே...  படிகளில் மக்கள் அமர்ந்திராத இடமாகப் பார்த்து கால்களை வைத்து ஒரு மாதிரி கீழே இறங்கினோம். கோவில் கதவுகளுக்கு வெளியே சிலர் நின்றிருக்க, நாங்களும் நின்று கொண்டோம்.



நின்று கொண்டிருந்தபோது காதைத் தீட்டி வைத்திருக்க, கோவிலுக்குள் அலைபேசி, புகைப்படக்கருவி போன்றவற்றை அனுமதிக்க மாட்டார்கள் எனத் தெரிய, அவற்றை பத்திரமாக எங்கே வைப்பது என்று பார்த்தேன்.  அதற்கும் பதில் கிடைத்தது. படிகள் வழியே மேலே போனால் பொருட்கள் பாதுகாப்பு அறை இருக்கிறது – அங்கே வைத்துக் கொள்ளலாம்! சரி என மற்ற இருவரும் வரிசையில் நிற்க, நான் மட்டும் மீண்டும் படிகளில் அப்படியும் இப்படியுமாக ஒரு வித நடனம் ஆடியபடியே முன்னேறினேன்! பாதுகாப்பு அறைக்கு வந்தால் அதுவும் மூடியிருந்தது!



சரி அப்படியே சில நிமிடங்கள் உலாத்துவோம் என நான் நடந்து கொண்டிருந்தேன். படகுத் துறையிலிருந்து மக்கள் வந்தபடியே இருந்தார்கள். உள்ளூர் மக்களுக்கு கோவில் திறக்கும் நேரம் சரியாகத் தெரியும் என்பதால், அவர்கள் கவலையில்லாது வீட்டின் வாயில்களிலே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  சின்னச் சின்ன கடைகளின் வாயில்களில் பல விதங்களில் கிருஷ்ணர் பொம்மைகளும் மற்ற பொருட்களும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  அவற்றையெல்லாம் பார்ப்பதில் சில நிமிடங்கள் கரைந்திருக்க, மீண்டும் கோவிலை நோக்கி நடந்தேன். நான் சென்று சேர்வதற்கும் பாதுகாப்பு அறையின் ஜன்னல் திறப்பதற்கும் சரியாக இருந்தது.


ஆக்கப் பொறுத்தவனுக்கு, ஆறப் பொறுக்கவில்லைஎன்று சொல்வது போல, பலர் ஜன்னலுக்குள் கைகளை விட்டு தத்தமது பொருட்களை உள்ளே கொடுக்க முயற்சித்தார்கள்.  ஜன்னலுக்குள் இருக்கும் நபர் ஒரே சமயத்தில் பத்து கைகளைக் கண்டு அதுவும், விதம் விதமான வகை அலைபேசிகளோடு நீண்ட கைகளைக் கண்டு குழம்பிவிட வாய்ப்புண்டு! பத்து கைகளோடு பதினொன்றாக நானும் கையை நீட்டினேன். கையில் இருந்த பையை எடுத்துக்கொண்டு டோக்கனை வைத்தது அப்புறத்து கை!



மீண்டும் படிகளில் நடனமாடியபடி நண்பர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர, கோவில் வாயிலிலும் சலசலப்பு – கதவுகள் திறக்கப் போகிறார்கள். கதவு திறப்பதற்கு முன்னரே கோவில் பண்டிட்ஜி ஒருவர் வெளியே வந்து கோவிலின் அருமை பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தார். இக்கோவிலுக்கு வருபவர்களுக்கு இப்படி கோவிலின் கதை சொல்வது நல்ல விஷயம் – சில பல கட்டுக்கதைகளைச் சொன்னாலும் பரவாயில்லை. சொல்வதில் சில விஷயங்களாவது உண்மை இருக்குமே... 



கோவிலை நோக்கி முன்னேறும் வேளையில் கோவில் பற்றிய சில விஷயங்களையும் பார்த்து விடுவோம்.  மிகவும் பழமையானது இக்கோவில். ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னரே இப்பகுதியில் கோவில் இருந்திருக்கிறது.  பல முறை கடல் சீற்றங்களில் அழிந்து போனாலும் மீண்டும் மீண்டும் கோவிலை புதுப்பித்து இருக்கிறார்கள்.  தற்போதைய ஓக்கா துறைமுகம் கட்டப்படுவதற்கு முன்னர் [B]பேட்[t] த்வாரகா தான் துறைமுகமாக இருந்திருக்கிறது.



கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் சிலை ருக்மணியால் உருவாக்கப்பட்டது என்றும் தற்போதைய கோவிலை வல்லபாச்சாரியார் கட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் தான் கிருஷ்ண பரமாத்மாவினை சந்திக்க அவரது  நண்பரான சுதாமா வந்தார் என்றும், கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த அவல் தந்தார் என்றும் நம்புகிறார்கள்.  அதனால் இன்றைக்கும் இங்கே வரும் பக்தர்கள் பலரும் வீட்டிலிருந்து அவலுக்கு பதில் அரிசி கொண்டு வந்து இங்கிருக்கும் பூஜாரிகளுக்கு கொடுக்கிறார்கள். அப்படி நீங்கள் அரிசியோ, தானியமோ கொண்டு வரவில்லை என்றாலும் கவலையில்லை! பணமாக கொடுத்துவிடலாம். சுதாமா கதை, கிருஷ்ணர்-ருக்மணி கதைகள் என பலவற்றையும் ஹிந்தியில் சொல்லிக் கொண்டே பணம் கொடுக்கும் வசதியையும் அறிவித்து அதற்காகவே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் பணத்தினை கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள்.



வந்திருக்கும் அனைவருக்கும் சில அரிசி மணிகளை பிரசாதமாகவும் கொடுத்து அனுப்புகிறார்கள்.  கோவில் திறப்பதற்குள் சுற்றுப் பிராகாரத்தில் உள்ள இடங்களில் அமரவைத்து இப்படி கதைகள் சொல்வதையும், அரிசிக்கு காசு வாங்குவதையும் பார்க்க முடிந்தது. நாங்களும் இந்த கதைகளைக் கேட்டு முன்னேறினோம்.  எல்லாப் பக்கங்களிலிருந்தும் மக்கள் முண்டியடிக்க, கூட்டத்தோடு கூட்டமாக முன்னேறினோம்.  எங்களுக்கு முன்னர் சென்ற பூஜாரி கிருஷ்ணரின் கதைகள் சொல்லியபடியே வந்து கொண்டிருந்தார்.



இப்பகுதியில் தான் ஷங்காசுர வதம் நடந்ததாகவும் கதைகள் உண்டு. அந்தக் கதை – “சங்கு வடிவில் இருந்த ஒரு அசுரன் ஷங்காசுரன். மக்களை இம்சித்து அவர்களைக் கொன்று மீண்டும் சங்குக்குள் பிரவேசித்து கடலுக்கடியில் சென்று விடுவானாம் இந்த அசுரன். அவனது கொடுமைகளை அடக்க, கிருஷ்ணரும் அவனைத் தொடர்ந்து கடலுக்குள் சென்று ஷங்காசுரனை வதம் செய்து அந்த சங்கை தனக்கு அணிகலனாக ஆக்கிக் கொண்டுவிட்டாராம்.   இது இங்கே நடந்ததாகச் சொல்கிறார்கள். என்றாலும், தனது குருவான சாண்டீபனின் மகனை ஷங்காசுரன் கடத்திச் சென்று கடலுக்குள் வைத்திருப்பதாக அறிந்த கிருஷ்ணரும் பலராமனும் ஷங்காசுரனை வதம் செய்து குருவின் மகனை மீட்டதாகவும் சில கதைகள் படித்திருக்கிறேன்.



இப்படி விதம் விதமாக புராணக் கதைகள் கேட்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.  கதைகள் கேட்டபடியே [B]பேட்[t] த்வாராகவில் குடிகொண்டிருக்கும் கிருஷ்ணனையும் தரிசித்து அங்கிருந்து வெளி வந்தோம். கோவிலுக்குள் செல்ல எத்தனை அவசரப்பட்டார்களோ, அதே போலவே வெளியே வருவதற்கும் மக்களுக்கு அவசரம். சீக்கிரமாகச் சென்று படகு பிடிக்க வேண்டுமே! நாங்கள் மெதுவாக கோவிலில் கிடைத்த அனுபவங்களை யோசித்தபடியே படகுத் துறையை நோக்கி நடந்தோம்.  மீண்டும் ஒரு படகுப் பயணம்....  அதிலும் சில அனுபவங்கள்..... அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாமே!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

டிஸ்கி: இப்பகுதியில் புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை என்பதால், இணையத்திலிருந்து சில ஓவியங்கள்..... வரைந்த ஓவியர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும்.

36 கருத்துகள்:

  1. தள்ளு மாடல் வண்டி நம்மூர் மீன்பாடி வண்டி மாதிரி இருக்கிறது!

    அரிதான கோவில். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பேட் துவாரகை கிருஷ்ணனின் தரிசனம் உங்களால் எங்களுக்குக் கிடைத்தது. நன்றி. ஓவியங்கள் மிகவும் அழகாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. கதைகளோடு படங்களும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  4. ரொம்ப அழகான சின்ன உருவம் நம்ம கண்ணன். எனக்குக் கூட்டத்தில் ஒரு முறையும், ஏகாந்தமா ஒருமுறையும் தரிசனம் ஆச்சு. சாயங்காலம் கோவில் திறந்த சமயம் போனதால் கதைகள் ஒன்னும் கேக்கலை :-(
    நம்ம தளத்தில் இது. http://thulasidhalam.blogspot.com/2010/02/14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவினையும் படிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. பயண அனுபவமும் படங்களும் அருமை!
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேதுராமன் கிருஷ்ணன்.

      நீக்கு
  7. நிறைந்த தகவல்களுடன் அழகிய படங்களுமாக - இனிய பதிவு..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  8. பேட் துவாரகா கோவில் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. பதிவுக்கு அழகு சேர்க்கும் படங்களின் அணிவகுப்பு அழகு.. நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  10. மக்களுக்கு எதிலும் அவசரம்தான்! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. கோவில்கள் பற்றிய பதிவில் நிச்சயம் கதைகள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  12. படகு பயணத்தில் நானும் வருகிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  13. ஓவியப்படங்கள் நன்று ஜி தொடர்கிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  14. கதைகளும் சுவாரஸ்யம்! உங்கள் பயணமும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. ஓவியங்கள் அழகு. தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  15. அனுபவத்தொடர் மிகவும் சுவார‌ஸ்யம்! த‌ள்ளுமாடல் வண்டி அழகு! ஓவியங்கள் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  16. கிருஷ்ணாய துப்யம் நம:
    அருமை வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  17. அருமை அருமை வெங்கட் சகோ :) நானும் சென்று வந்திருக்கிறேன். நேரம் கிடைக்கவில்லை பதிய :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் முடிந்த போது எழுதுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....