எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, October 3, 2015

பிரயாண இன்பத்திலே.....ரெயில் பிரயாணமே ஒரு தனி ஆனந்தம். முன்பின் தெரியாத நாடுகள், பசுஞ்சோலைகள், சலசலவென்று ஓடும் ஆறுகள், கம்பீரமாக ஓங்கி நிற்கும் மலைகள், வெவ்வேறு பழக்க வழக்கமுள்ள ஜனங்கள், அவர்களின் நிறம் நிறமான உடைகள்...! அது ஒரு புது உலகம்! புகையைக் கக்கிக்கொண்டு, கடகடவென்று ஓடும் பிரம்மாண்டமான எஞ்சின் நம்மைக் கந்தர்வ உலகத்துக்குக் கொண்டுபோய் விடுகிறது. வாணாசுரனுடைய மகள் உஷாவுக்கு, அவளுடைய தோழி சித்திரலேகை எத்தனையோ அழகிய காட்சிகளை ஓவியம் வரைந்து காண்பிப்பாளாமே, அது போல நமது ரெயில் வண்டியும் நாம் இதுவரைக்கும் கற்பனையில் கூடக்காணாத ஆயிரமாயிரம் இனிய காட்சிகளை நம் கண்ணெதிரே காண்பித்துக் கொண்டு ஓடுகிறது.

இதெல்லாம் சரிதான். ஆனால் நாம் உட்கார்ந்திருக்கும் வண்டியையும், ஸ்டேஷன் பிளாட்பாரத்தையும், வெயிட்டிங் ரூம்களையும் பார்க்கத்தான் சகிப்பதில்லை. திருவாளர் ராமசாமி தம் பெரிய குடும்பத்தோடு திண்டிவனம் ஸ்டேஷனில் என்னோடு ரெயில் ஏறினார். வண்டி புறப்பட்டதும் செல்லப் பெட்டியிலிருந்து வெற்றிலை பாக்கையும் சுருள் சுருளாக புகையிலையையும் எடுத்தார். வாயில் அடைத்துக் குதப்பினார். தம் பெஞ்சில் இருந்தபடியே இரண்டு முன்பற்களுக்கு இடையிலிருந்து ‘ஷ்ரீக்கென்று தம்பலத்தை வீசினார். அடடா! அது ஓர் அலாதிக் காட்சி! ஸ்ரீமதி ராமசாமி பழத் தோல்களை வண்டிக்குள் எறிகிறாள். பெரிய பையன் சேகர், மிக்ஸ்சர் சாப்பிட்ட காகிதத்தை ஸீட்டுக்கு அடியில் கிழித்துப் போருகிறான். குழந்தை ரஞ்சிதம் வேர்க்கடலைத் தோலோடு விளையாடுகிறாள்.

வெயிட்டிங் ரூமுக்குப் போனாலோ, மிஸ்டர் ஸ்டூடண்ட் பிடித்துப் போட்ட சிகரெட் துண்டு உள்ளே கனலும் நெருப்போடு லேசான புகை வீசுகிறது. வழிக்குத் தயிருஞ்சாதம் கட்டி வந்த ஸ்ரீமான் மடிசஞ்சி ஓர் ஓரமாகச் சோற்றுப் பருக்கையை இறைத்திருக்கிறார். அழகான இயற்கைக் காட்சிக்கு நடுவே அமைந்த ஸ்டேஷன் கட்டிடத்திலும், கண் காணாத உலகத்தையெல்லாம் நமக்குக் காட்டி ஓடும் ரெயிலுக்குள்ளும் இந்த அலங்கோலக் காட்சிகள் மட்டும் இல்லாதிருந்தால், நம்முடைய பிரயாணம் எவ்வளவு இன்பமாக இருக்கும்!

இப்படி அசுத்தம் செய்யும் பிரயாணிகளைக் காணும்போது அவர்களுக்குச் சமூகப் பொறுப்பை உணர்த்துவது நம்முடைய கடமை. அகத்தூய்மையும், புறத் தூய்மையும் பிரயாண இன்பத்துக்கு இன்றியமையாதவை.

***

போர்ட்டர் மணி அடிக்கிறான். கார்டு பச்சைக்கொடி காட்டுகிறார். வண்டி புறப்படுகிறது. சிதம்பரம் திருவிழாவுக்குப் போகும் பக்திப் பழங்கள் அதோ ஓடோடியும் வருகின்றன. வண்டியில் ஏற்கனவே கூட்டம் அதிகம். புண்ணிய மூட்டையைச் சம்பாதிக்கக் கிளம்பும் இந்தக் கோஷ்டி டிக்கட் பரிசோதகர் வரும்போது ‘அரோஹராஎன்கிறது. விழுப்புரத்தில் ஏறிய புல்ஸூட் கனவான்பெரிய வியாபாரி என நினைத்தோமே. அவர் சங்கதி என்ன? அவருந்தான் கையை விரிக்கிறார். இப்படி டிக்கட் இல்லாமல் பல பேர் பிரயாணம் செய்வதால் ரெயில்வேக்குப் பல லக்ஷக்கணக்கான ரூபாய் நஷ்டம். இந்த நஷ்டம் யாருக்கு? இன்று ரெயில்வே என்பது நமது தேசீயச் செல்வம். ஜனங்களுடைய சொந்த ஸ்தாபனம் இது. ரெயில்வேயின் நஷ்டம் நம்முடைய நஷ்டம்.  ஆகையால் டிக்கட் இல்லாமல் யார் செல்வதாக நமக்குத் தெரிந்தாலும் அவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது நமது பொறுப்பு!
***

டிக்கட் இல்லாமல் பிரயாணம் செய்பவர்கள் இப்படி ஒரு புறம் இருக்க, டிக்கட் வாங்கியும் வேண்டுமென்றே ‘புட்போர்டுகளில் நின்றோ உட்கார்ந்தோ போக விரும்பும் இளைஞர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வண்டி தண்டவாளம் மாறும்போதும், உயர்ந்த பிளாட்பாரம் உள்ள ஸ்டேஷனில் வண்டி நிற்காமல் ஓடும்போதும் இந்த இளைஞர்களில் எத்தனையோ பேர் கை கால் ஒடிவதோடு நில்லாமல் உயிரையும் இழக்கிறார்கள். ஆதலால் வண்டியில் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், ‘புட்போர்டில் பிரயாணம் செய்யலாகாது என்று இவர்களுக்கு வற்புறுத்திக் கூறுங்கள். அப்படிக் கூறியும் கேளாவிட்டால் ரெயில்வே அதிகாரிகளிடம் இவர்களை ஒப்படையுங்கள். இத்தகைய பிரயாணிகள் கடுமையாக விசாரிக்கப்படுவதோடு, பெரும் தொகையை அபராதமாகவும் செலுத்த நேரிடும்.
***

நாட்டில் பருவ மழை இல்லை; அதனால் உணவும் இல்லை. உணவுப் பஞ்சத்தைத் தீர்ப்பதில் ரெயில்வே இன்று முக்கியப் பங்கு கொண்டிருக்கிறது. உணவுப் பொருள்கள் குறித்த நேரம் தவறாமல் அந்த ஊருக்குப் போய்ச் சேர வேண்டியது மிகவும் முக்கியம்; அவசரம். உங்கள் சாமான்களையும் அனுப்ப வேண்டியதுதான். ஆனால் பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு உணவுக் கவளம் போய்ச் சேருவது, நெருக்கடியான சமயத்தில் உயிரைக் கொடுப்பது போல. ஆகையால் வாகன் கிடைக்கும் வரையில் உங்கள் சரக்குகளை அனுப்பக் காத்திருப்பது நீங்கள் நாட்டுக்குச் செய்யும் நன்மை. அதோடு உங்கள் சிமெண்டை அனுப்ப வாகன்கள் கிடைக்கும்போது தாமதம் செய்யாமல் சரக்கை ஏற்றுங்கள். அதே போல உங்கள் சரக்கு வாகனில் வந்ததும் உடனே அவற்றை இறக்கிக் கொள்ளுங்கள். இதனால் போக்கு வரத்துக்கு அதிக வாகன்கள் கிடைக்க வசதி ஏற்படும்.

என்ன நண்பர்களே, மேலே எழுதி இருக்கும் விஷயங்கள் இப்போது நடப்பவை போல இல்லையே, இது என்ன, எப்போது எழுதப்பட்டது என்ற எண்ணங்கள் உங்கள் மனதிற்குள் ஓடுகிறது என்பதை நான் அறிவேன்.  இக்கட்டுரை எழுதப் பட்ட காலம் கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்பு! அதாவது 1951-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரை இது. எழுதியது யாரென்பது குறிப்பிடப்படவில்லை. ஒரு வேளை இது தலையங்கமாகக் கூட இருக்கலாம்.  இக்கட்டுரை வெளி வந்தது 1951-ஆம் வருட தீபாவளி போது வெளி வந்த அமுதசுரபி தீபாவளி மலரில்!


தலைநகர் தில்லி ரயில்வே அமைச்சகம் முன்பு நிற்கும் பழையகால ரயில் எஞ்சின்

ஆனால் ஒரு விஷயம் இங்கே சொல்லி ஆக வேண்டும். இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தின் அசுத்தம் பற்றி எழுதி இருக்கிறார்கள்.  அதே அசுத்தம் இன்றைக்கு வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் அசுத்தம் செய்யக் கூடாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் தொடர்ந்து அசுத்தமும், குப்பைகளும் கொட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ரயில் நிலையங்களில் எங்கு பார்த்தாலும், பான், குட்கா ஆகியவற்றை துப்பி போர்ட்டர்களின் உடையை விடச் சிவப்பாக்கி வைத்திருக்கிறார்கள். என்று தான் இவை சுத்தமாகுமோ! 

சுத்தம் மட்டுமல்ல, பயணச் சீட்டு இல்லா பயணம், ஃபுட்போர்டு பயணம் ஆகிய அனைத்தும் இன்றும் தொடர்கின்றன.  எத்தனை வருடங்கள் ஆனாலும் நாங்கள் எங்கள் குணத்தினையும், பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள மாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!

இத்தனை பழைய கட்டுரை உங்களுக்கும் படிக்க வசதியாக இங்கே தர நினைத்ததால் இந்தப் பதிவு!  அது மட்டுமல்ல உங்களுக்குத் தான் தெரியுமே எனக்கு பிரயாணம் செய்யப் பிடிக்கும் என்பது!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்....


டிஸ்கி: கட்டுரையில் வந்திருக்கும் படங்களையே இங்கேயும் கொடுத்திருக்கிறேன்..... நன்றி அமுதசுரபி, தீபாவளி மலர், 1951.

40 comments:

 1. ரயில் அனுபவங்கள் கல்கி எழுதியதாக இருக்கும் என்று நினைத்தேன்! இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. அமுதசுரபியில் வெளிவந்தது.... எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை ஸ்ரீராம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. அன்றிலிருந்து இன்று வரை நிலைமை மாறவே இல்லைஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. Old habits die hard என்பது சரிதான் போலிருக்கிறது. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.’ என்று பட்டுக்கோட்டையார் சொன்னதுபோல பயணிகளாக பார்த்து பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே இரயில் பயணம் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Old habits...

   உண்மை தான். சிலருக்கு, எத்தனை தான் மெத்தப் படித்தவரானாலும் இந்த பழக்கம் விடுவதில்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. ரயில் அனுபவங்கள் என்பது அமுத சுரபி போன்று தொடர்ந்து கிடைத்து கொண்டே இருக்கும் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குடந்தை சரவணன்.

   Delete
 6. அருமையான பயணப் பதிவு. அன்றைக்கும் இன்றைக்கும் பெரிதாக மாற்றம் இல்லையென்றாலும் சுத்த விஷயத்தில் முன்பை விட நம் மக்கள் கொஞ்சம் திருந்தி இருப்பதாக எனக்கு தெரிகிறது. ஆனாலும், என்னைவிட அதிகம் பயணம் மேற்கொள்பவர் நீங்கள்தான். அதனால் உண்மைநிலை உங்களுக்கு தான் நன்றாக தெரியும்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. செல்லும் பல இடங்களிலும் இப்படி நிறைய பார்க்கிறேன். கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது என்றாலும் நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 7. பதிவைப் படிக்க ஆரம்பிக்கும்போதே எழுத்து நடையை வைத்து பல வருடங்களுக்கு முன் வெளியான கட்டுரை என அறிந்தேன். காலம் மாறினாலும் நாம் மாறவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. பௌத்த நல்லிணக்கச் சிந்தனைக்களை காண http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html வருக.

  ReplyDelete
  Replies
  1. இப்போது தான் விடுபட்ட பலரது பதிவுகளை படித்துக் கொண்டு வருகிறேன் ஐயா. விரைவில் உங்கள் பதிவினையும் படிக்கிறேன்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. முன்னைக்கு இப்போது பரவாயில்லை. என்றாலும் இன்னமும் வட இந்திய மாநிலங்களில் வெற்றிலை, பாக்கு, பான், குட்கா போட்டுக் கொண்டு துப்புவது குறையவில்லை. அதுவும் முன் பதிவு செய்யாத பொதுப்பெட்டிகள் பிரயாணத்துக்கே லாயக்கில்லாமல் இருக்கின்றன. மனிதர்களாய்ப் பார்த்து மாறினால் தவிர இவை எல்லாம் மாறப்போவது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 10. காலங்கள் மாறினும் காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 11. ஆம்.., attitude இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கு...
  போர்ட்டருக்கு "ன்"ன்னும்; கார்டு, பரிசோதகருக்கு "ர்"ரும் போடும் வழக்கம் உட்பட...

  ReplyDelete
  Replies
  1. பழைய கட்டுரையை தட்டச்சு செய்யும் போதே எனக்கும் இவ்வெண்ணம் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்.

   Delete
 12. ஆஹா... இந்தியாவில் ரிக்கெற் எடுக்காமல் எண்ணம் போல் எங்கு வேண்டுமானமும் நின்றும் அமர்ந்தும் செல்ல முடியும் என்பது இப்போது தான் புரிகிறது ! இருப்பினும் எது சரி எது தவறு என்று மிகவும் ஆணித் தரமாக விளக்கி இப் பகிர்வினை வெளியிட்டு உள்ளீர்கள் இப்படி எல்லோரும் சிந்தித்தால் மாற்றம் உண்டாகும் உண்டாக வேண்டும் ! சிறந்த பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள் ஜி!

   Delete
 13. அந்தக் காலத்துக் கட்டுரை நடை சுவையாகத்தான் இருக்கிறது படிக்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 14. மாற்றம் மக்கள் நினைத்தால் வர வைக்கலாம் ஜி

  ReplyDelete
  Replies
  1. மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றம்.... உண்மை தான். இல்லையெனில் கடுமையான சட்டமும், அதை ஒழுங்காக செயல்படுத்தும் அரசும் இருக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி!

   Delete
 15. இந்த மாதிரி கட்டுரை எழுது வதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் நீங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 16. இன்னும் 50 வருஷம் ஆனாலும் நம்ம ஜனங்கள் திருந்த மாட்டார்கள் போல! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 17. அருமையான கட்டுரையை வாசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 18. பல செய்திகள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறதே
  நல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 19. அன்றும் இன்றும் ஒரேநிலை ஐயமில்லை நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. அந்த எழுத்து நடை படங்கள் பார்த்ததும் நிச்சயமாக இது பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என்பது தெரிகின்றது. எழுத்து நடையைப் பார்த்தால் கல்கியாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. ஆனால் யாரென்று தெரியவில்லை என்று நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள்.

  64 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டதுதான் இப்போதும் தொடர்கின்றது...அப்படி என்றால் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, முன்னேற்றம் என்ற பெயரில் பல கண்ணாடிகள் அணிந்த மேல் நாட்டுக் கடைகள், காஃபி ஷாப்புகள் என்று பல வந்தாலும் இந்தியா அழுக்காகத்தான் இருக்கின்றது....இந்தியா மட்டுமல்ல அதை ஆளும் அரசியல்வாதிகளும் அழுக்காகத்தான் இருக்கின்றார்கள்..

  அது சரி சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் ரயில்வே துறையினரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு-அதாவது பிரதமர் நாடு சுத்தம் என்று எல்லோருக்கும் ஒரு தினம் அறிவித்தாரே - அப்போது ரயிலில் சுத்தம் செய்வது மேற்கொள்ளப்பட்டது இடையில் வரும் நிறுத்தங்களில்....இப்போது காணவில்லை...ஒப்பந்தம் முடிந்தது போலும்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....