ஞாயிறு, 8 நவம்பர், 2015

தேரா தாலி நடனம்



தமிழ் நாட்டின் பாரம்பரிய நாட்டியங்களில் பலவற்றை நாம் கண்டு ரசித்ததுண்டு. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை என்று எத்தனை எத்தனை நடனங்கள் நம் தமிழ் நாட்டில். என்றைக்காவது வேறு மாநிலங்களில் இருக்கும் இது போன்ற நடனங்களை பற்றி சிந்தித்தது உண்டா? தலைநகர் தில்லியில் சில சமயங்களில் கலைவிழாக்கள் நடக்கும். அந்த சமயங்களில் இந்தியாவிலிருந்து பல்வேறு கலைஞர்கள் வந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அப்படி சில நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு.

சென்ற வாரத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது தெரியவர, ஒரு நாளாவது செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். Indira Gandhi National Centre for the Arts சென்ற வாரத்தில் National Cultural Festival of India எனும் ஒரு விழாவினை 1 – 8, நவம்பர் தேதிகளில் நடத்துகிறார்கள். தினம் தினம் பல்வேறு நடனங்களும், இசை நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது. தினம் காலை 10.00 மணிக்கு ஆரம்பித்தால் இரவு வரை நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரே ஒரு தினம் மட்டும் தான், அதுவும் மாலை வேளையில் செல்ல முடிந்தது.

அன்று பல நடனங்களை பார்த்தேன். அதிலிருந்து ஒரு நடனம் தான் இன்று நாம் பார்க்கப் போகும் தேரா தாலி நடனம். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடப்படும் இந்நடனம் முழுவதும் பெண்களால் ஆடப்படும் நடனம். இந்த நடனம் மற்ற நடனங்களைப் போல் அல்லாது உட்கார்ந்த படியும் படுத்த படியும் ஆடும் நடனம். உடலில் பதிமூன்று இடங்களில் மஞ்சீரா என அழைக்கப்படும் ஜால்ரா கட்டிக்கொண்டு, கைகளிலும் ஜால்ரா வைத்து அவற்றை பயன்படுத்தி ஓசை எழுப்புவார்கள். வாய்களில் ஒரு பெரிய கத்தியை வைத்துக் கொண்டும், படுத்தபடியும் இவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் போது நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. 

பின்புலத்தில் சில ஆண் கலைஞர்கள் பாட்டிசைக்க, பெண்கள் உட்கார்ந்தபடியே நடனம் ஆடுகிறார்கள். கைகளில் இருக்கும் ஜால்ராவை சுழற்றி சுழற்றி உடம்பில் கட்டிக் கொண்டிருக்கும் மற்ற ஜால்ராக்களில் அடித்து அடித்து ஒலி எழுப்புகிறார்கள். வாயில் நீண்ட கத்தியை வைத்துக் கொண்டு கைகளை சுழற்றும்போது நமக்கு கொஞ்சம் கலக்கலாகவும் இருக்கிறது – கூரான கத்தி முனையில் கைகள் பட்டுவிட்டால்....  ஆனால் கலைஞர்களுக்கு அந்த பயம் இல்லை.....

அந்த நடனத்தின் போது எடுத்த சில படங்கள் இன்றைய ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  நிகழ்ச்சியை காணொளியாக எடுக்கவில்லை. ஒரே சமயத்தில் புகைப்படமும் எடுத்து காணொளியும் எடுக்க முடியாது! அடுத்த நிகழ்ச்சியில் இதற்காகவே கூட ஒருவரையும் அழைத்துக் கொண்டு போக வேண்டும்!

















என்ன நண்பர்களே வித்தியாசமான ஒரு நடனம் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.  காணொளி பார்க்க விரும்புவர்கள், youtube-ல் பார்க்கலாம்.  சில தேரா தாலி நடனங்களின் காணொளிகள் இருக்கின்றன.  ஒன்றிரண்டை பார்த்து ரசிக்கலாம்!

நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.  

20 கருத்துகள்:

  1. வணக்கம் சார் உண்மையில் இன்று ஒரு புதிய நடனத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்...பயணங்களே புதிய அனுபவங்களைத்தருகின்றன....நன்றி சார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. இந்த நடனம் பற்றி அறிந்திருந்தாலும் கல்லூரிக் காலத்திலேயே, கல்லூரி விழா போட்டிகளுக்கு, இந்திய பாரம்பரிய நடனங்கள், இசைகள், உடைகள் என்று பலவகைப் போட்டிகளுக்காக அறிந்தது. ஆனால் அப்போது எங்கள் ஊரில் (நாகர்கோயில்) இவற்றிற்கான பொருட்கள் ஆத்தென்டிக்காக கிடைக்கவில்லை என்றாலும், நடனமும் கூட ஒருவிதம் சமாளித்தநர். மிசோரம் பகுதிகளில் உள்ள பேம்பூ நடனம் (bamboo dance),அஸ்ஸாமின் பிஹு, குஜராட்த்ஹின் கர்பா என்று எங்கள் குழு அன்றைய காலகட்டத்திற்கு நன்றாகவெ செய்தார்கள். (நான் உதவி மட்டுமே). இப்போது காணொளிகள் நிறைய இருக்கின்றன.

    தங்கள் புகைப்படங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. ஒரிஜினல் நடனங்களை, அந்தந்தப் பகுதி மக்கள் ஆடியதை நான் நேரில் கண்டதில்லை.. எல்லாம் உங்கள் பதிவுகளின் வழிதான்...அருமை..புகைப்படங்கள் மிக அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி..நல்ல நல்ல தகவல்கள் விரிவான விளக்கங்களுடன் நாங்கள் அறிய முடிகின்றது. நீங்கள் நேரில் கண்டு பதிவதால்

    அடுத்த பதிவில் நீங்கள் எடுக்க முடிந்தால் காணொளிகள் பகிருங்களேன்...

    மிக்க நன்றி வெங்கட் ஜி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி எடுக்கவும் எண்ணம் உண்டு. அடுத்த நிகழ்ச்சிகளில் எடுக்க முயல்கிறேன்....

      மேலதிகத் தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. ரசித்தேன். இது புது மாதிரியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  4. அருமையான படங்கள். நடனத்தைப் பற்றிய தகவல்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் சிறப்பு...

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. கேள்விப்படாத நடனம் அண்ணா.. உட்கார்ந்து கொண்டே எப்படித் தான் நடனமாடுகிறார்ளோ??போட்டோஸ் ழகா இருக்கு.. பகிர்விற்கு நன்றி அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா.

      நீக்கு
  7. நடனம் புதுமையாய் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. கேள்விப்பட்டது இல்லை! புகைப்படங்கள் மூலம் இன்று அறிந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  9. தேரா தாலி நடனம் பற்றிய பதிவும் படங்களும் பிரமாதம். இந்திய தூதரகத்தில் (கென்யாவில்) பணிபுரிந்தபோது ஜோத்பூர் மகாராஜாவுடன், ராஜஸ்தான் கிராமியக் கலைஞர்கள் நைரோபி (கென்யாவின் தலைநகர்) வந்திருந்து ஆட்டம் காட்டினர்!. அசத்தலான கலைநிகழ்ச்சியாக, இந்தியாவின் புகழ்பரப்புவதாக அது அமைந்தது. அதற்குப்பின் உங்கள் பதிவில் பார்க்கிறேன் நாட்டியப் படங்களை. ராஜஸ்தானின் கிராமியக் கலைஞர்கள், பாடகர்களை நான் மிகவும் ரசிக்கிறேன். தங்கள் பாரம்பரியத்தை இழக்காதிருக்கிறார்கள். அதில் பெருமைகொள்பவர்கள். ஆதலால் பாராட்டுக்குரியவர்கள்.
    -ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னமும் ராஜஸ்தானிய கலைஞர்கள் தங்களது பாரம்பரிய கலைகளை தொடர்ந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்க விஷயம் தான்.

      தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி!

      நீக்கு
  10. தேரா தாலி நடனம்,ரசிக்க தேறும் நடனம்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....