வியாழன், 31 டிசம்பர், 2015

குஜராத்தி உணவும் கிராமிய மணமும்


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 27

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26


சாப்பிட வாங்க:  ஒருவருக்கான உணவு!

அஹமதாபாத் நகரில் இருக்கும் பாலாஜி கோவிலில் தரிசனம் செய்த பிறகு இரவு உணவு எங்காவது வெளியே சாப்பிடலாம் என அஹமதாபாத் நண்பர் சொல்ல, ஏதாவது குஜராத்தி உணவகத்திற்குச் செல்லலாம் என நினைத்தோம். அதற்கு நண்பர், எங்களை அஹமதாபாத் நகரில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்று அற்புதமானதோர் அனுபவத்தினை வழங்குவதாகச் சொல்லி, வாகனத்தினை அங்கே செலுத்தினார்.  அங்கு சென்று எங்களுக்கு உண்மையாகவே அற்புதமான அனுபவம் தான் கிடைத்தது.

வாஸ்னா சாலை, வாஸ்னா, அஹமதாபாத் எனும் விலாசத்தில் அமைந்திருக்கும் விஷாலாஎனும் உணவகத்திற்குத் தான் எங்களை அழைத்துச் சென்றார். பெயருக்கு ஏற்றவாறு விசாலமான இடத்தில் தான் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. பொதுவான உணவகங்கள் போன்று கதவுகளோ, நான்கு சுவர்களுக்கு நடுவேயோ அமைந்திருக்காமல், திறந்த வெளியில் சிறிய சிறிய குடிசைகள் அமைந்திருக்க, அங்கே நன்கு மெழுகப்பட்ட மண் தரையில் பாய் விரித்து, எதிரே நீண்ட மரக்கட்டைகள் இருக்க, அதிலே பெரிய தையல் இலைகள் போட்டு உணவு பரிமாறுகிறார்கள்.



இயற்கையான சூழலில், மின்சார விளக்குகளுக்குப் பதிலாக லாந்தர்களின் ஒளியில், மிதமான இயற்கைக் காற்று வீச, அங்கே அமர்ந்து உணவு உண்பது, நாம் ஏதோ கிராமத்தில் இருப்பது போல உணர்வினை நமக்கு தருகிறது. நாம் அமர்ந்து சாப்பிட இருக்கைகள் இல்லாத சமயத்தில், நம்மை மகிழ்விக்க கிராமிய இசைக் கலைஞர்கள் இசைக்கிறார்கள். சில இடங்களில் பொம்மலாட்டம் போன்ற பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க அவற்றை நாம் ரசித்துக் கொண்டிருக்கலாம். இடையே இடம் காலியான உடன், நம்மை விஷாலா சிப்பந்திகள் அழைத்து நமக்கான இடத்திற்குச் சென்று அமர்த்துகிறார்கள்.

பொதுவாக உணவகங்கள் எனில் கை கழுவும் இடம் என இருக்கும். இங்கேயும் உண்டு. ஆனால் சற்றே வித்தியாசமாக, ஒரு மண் பானை வைத்திருக்க, ஒருவர் பித்தளை குடுவைகளிலிருந்து நீரை சாய்க்க, நாம் பொறுமையாக கையைச் சுத்தம் செய்து கொள்ளலாம். பிறகு நாம் அமர்ந்து கொள்ள, ஒவ்வொரு சிப்பந்தியாக வரிசையாக வந்து அவர்கள் பரிமாறப் போகும் உணவின் பெயரைச் சொல்லி வைத்துக் கொண்டே போகிறார்கள். வரிசை வரிசையாக பலவித உணவுகள் வந்தபடியே இருக்கின்றன.

ஒவ்வொன்றின் பெயரைக் கேட்கும்போதே அது என்ன, எப்படி இருக்கும் என்ற உணர்வு உங்களுக்கு நிச்சயம் வரும்! சில உணவுகளின் பெயர்களை உங்களுக்குச் சொல்லட்டா – ஹஜ்மாஹஜம், பாஜ்ரி ந ரோட்லா, மகாய் ந ரோட்லா, பாக்டி[ரி], மேத்தி ந தேப்லா, கிச்சடி, கடி, மக்கன், படாடா நு ஷாக், லீலு ஷாக், கதோல், ஃபார்சன், லீலீ சட்னி, லசன் சட்னி, தலியா நி சட்னி, பாப்பட், கூட், காக்டி, பீட், சுக்டி.....  இதைத் தவிர சலாட், ஊறுகாய் போன்றவையும் உண்டு.  கூடவே  நீர் மோர் வந்து கொண்டே இருக்கிறது. எல்லா உணவுமே அளவுச் சாப்பாடு போல அல்ல – எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  ஒவ்வொரு நாளும் கொடுக்கும் காய்கறிகளும் மாறிக் கொண்டே இருக்கும்.  இத்தனை வகை உணவினையும் ருசித்த பிறகு முடிவில் ஐஸ்க்ரீம் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பும் உண்டு!



நாங்கள் தரையில் அமர்ந்து எதிரே இருக்கும் இலையில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவினையும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்து அடுத்த உணவின் ருசியை உணரக் காத்திருக்க, ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக எல்லா உணவின் ருசியும் பார்த்தோம்.  முதல் முறை வைத்த அனைத்தையும் உண்டாலே வயிறு நிரம்பிவிடும் எனத் தோன்றியது. ஒவ்வொன்றாய் ரசித்து ருசித்து சாப்பிட்டு, நடுநடுவே நீர் மோரையும் தண்ணீருக்கு பதிலாக குடித்துக் கொண்டிருந்தோம். நீர் மோர் டம்ளரை கீழே வைத்தவுடன் ஒரு சிப்பந்தி வந்து அதை நிரப்பி விடுகிறார்! சுக்டி எனும் இனிப்பை சுடச் சுட சாப்பிட்டு நாக்கு பொசுங்க வைத்துக் கொண்ட கதையை முன்னரே “சாப்பிட வாங்கபகுதியில் எழுதி இருக்கிறேன்.

ஒவ்வொரு உணவு வகையாக ருசித்துச் சாப்பிட்டு மிகவும் பிடித்த சிலவற்றை மட்டும் இரண்டாம் முறை கேட்டு உண்டு எழுந்திருக்க நினைத்தபோது தரையில் கையை ஊன்றி தான் எழுந்திருக்க முடிந்தது – அவ்வளவு அதிகமாக சாப்பிட்டு இருக்கிறோம்! கைகளில் வெண்ணையும், நெய்யும் இருக்க, சுத்தம் செய்து கொள்ள வெதுவெதுப்பான நீரை ஒரு சிப்பந்தி ஊற்ற, கைகளைச் சுத்தம் செய்து கொண்டோம்.  அதன் பிறகு ஐஸ்கீர்ம் அல்லது சூடான குலாப்ஜாமூன் – இரண்டில் எது வேண்டும் எனக் கேட்க, குலாப்ஜாமூனுக்கே எங்கள் ஓட்டு!  அதையும் சாப்பிட்டு அப்படியே கொஞ்சம் நடந்தோம். சில பொருட்கள் விற்பனைக்கும் அங்கே இருந்தன. அக்கடைகளை பார்வையிட்டபடியே கொஞ்சம் நடந்தோம்.  கயிற்றுக் கட்டில்கள் ஆங்காங்கே இருக்க, அவற்றில் கொஞ்சம் உட்கார்ந்து கதை பேசினோம்.


இங்கே இன்னுமொரு விஷயமும் உண்டு – அது ஒரு அருங்காட்சியகம் – பலவிதமான பாத்திரங்கள், குடுவைகள் போன்றவற்றைச் சேகரித்து இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மிக அருமையாக வைத்திருக்கும் அவற்றைப் பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு.  கட்டணம் இல்லாமலே உங்களுக்குக் காண்பிக்க, இணையத்திலிருந்து ஒரு காணொளியை உங்கள் வசதிக்காக இணைத்திருக்கிறேன்! எஞ்சாய் மாடி!



என்ன நண்பர்களே, காணொளியைக் கண்டு ரசித்தீர்களா?  அதெல்லாம் சரி, உணவுக்கான கட்டணம் எவ்வளவு என்பதைச் சொல்லவே இல்லையே என நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்! இன்றைய நிலவரப்படி கட்டண விவரம் கீழே!

Adult - 683/- (All Tax included) per person
Child – 395/- (3-11years) (All Tax included) per child

கொஞ்சம் அதிகம் தான் என நினைத்தாலும், நல்ல ஒரு அனுபவம் கிடைத்தது! இரவு 07.30 மணியிலிருந்து 11.00 மணி வரை இரவு உணவு கிடைக்கும்.  மதிய உணவு காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை கிடைக்கும். மதிய உணவு சற்றே குறைவு – பெரியவர்களுக்கு 521/- குழந்தைகளுக்கு 305/-.

அஹமதாபாத் நகருக்குச் செல்லும் வாய்ப்பிருந்தால் இங்கே சென்று வாருங்கள். சற்றே அதிக விலை என்றாலும் நிச்சயம் ரசிக்க முடியும்!

வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

டிஸ்கி:  கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு எனது பக்கத்தில் ஒரு பதிவு! இடைவிடாத பணிச் சுமை காரணமாக பதிவுகள் எழுதுவதும், நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதும் தடைபட்டிருக்கிறது! இனிமேல் தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடியும் என நினைக்கிறேன். பார்க்கலாம்! காலம் என்ன பதில் சொல்கிறது என!





செவ்வாய், 15 டிசம்பர், 2015

சாப்பிட வாங்க: [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி



தலைநகரில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குளிர் வந்து விட்டது. கூடவே குளிர் கால காய்கறிகளும்! குளிர் காலம் வந்து விட்டால் தில்லியில் காலி ஃப்ளவர், பச்சைப் பட்டாணி, கேரட், முள்ளங்கி என சில குளிர் கால காய்கறிகள் புத்தம் புதிதாய் கிடைக்க ஆரம்பித்து விடும். இந்தக் காலங்களில் தான் காலி ஃப்ளவர் பயன்படுத்தி சப்பாத்திக்கான விதம் விதமான சப்ஜிகள் செய்ய முடியும். இன்று நாம் பார்க்கப் போகும் [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி அப்படி ஒரு சப்ஜி தான்!

தேவையான பொருட்கள்:


காலி ஃப்ளவர் [1], பச்சைப் பட்டாணி [1 கப்], பெரிய வெங்காயம் [1], தக்காளி [1], பூண்டு [2 பல்], இஞ்சி [ஒரு சிறிய துண்டு], பச்சை மிளகாய் [1], மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, ஆம்சூர், ஜீரகம், பெருங்காயத் தூள், எண்ணெய், உப்பு [தேவைக்கு ஏற்ப] மற்றும் அலங்கரிக்க கொத்தமல்லி தழை. அம்புட்டு தேன்!

எப்படிச் செய்யணும் மாமு:



காலி ஃப்ளவரை தனித் தனிப் பூக்களாக எடுத்த பிறகு அதை மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதனை சிறிய சிறிய துண்டுகளாக கத்தி மூலம் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கொஞ்சம் சூடானதும், அதில் ஜீரகம் போட்டு பொரிந்தவுடன், பெருங்காயத்தினைச் சேர்க்கவும். பிறகு சிறிது சிறிதாய் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்க்கவும்.  பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்க்கவும். சற்றே வதக்கிய பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் காலி ஃப்ளவர் மற்றும் பட்டாணியைச் சேர்க்கவும்.  தேவையான அளவு உப்பினை மேலே தூவி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கி வைத்திருக்கும் ஒரு மூடியால் மூடி வைக்கவும்.  தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும். நடுநடுவே கரண்டியால் வதக்கவும்.
பச்சைப் பட்டாணியின் வாசம் மூக்கைத் துளைத்துக்கொண்டிருக்க, சற்றே மூடியைத் திறந்து கொஞ்சமாக ஆம்சூர் பொடியைத் தூவவும். மேலாக ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு கரண்டியால் கலக்கவும்.  இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பினை நிறுத்தி, நாம் செய்து முடித்த [G]கோபி[b] [k]கி [b]புர்ஜியின் மேலாக பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவவும்.

சாதாரணமாகவே குளிர் காலங்களில் மூன்று வேளையும் சப்பாத்தி தான் சாப்பிட வேண்டியிருக்கும்! அரிசி சாதம் சாப்பிட்டால் குளிர் இன்னும் அதிகமாகத் தெரியும்! அதன் கூட [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி இருந்து விட்டால் இன்னும் இரண்டு சப்பாத்திகள் அதிகமாக உள்ளே இறங்கும் என்பது நிச்சயம்!

என்ன நண்பர்களே, இன்றைக்கு உங்க வீட்ல செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

திங்கள், 14 டிசம்பர், 2015

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா – அஹமதாபாத் நகரில்...


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 26

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25


படம்: நன்றி - https://travelumix.wordpress.com


நண்பர் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு அவருடன் சற்று நேரம் பேசி கொண்டிருந்தோம். பிறகு அவர் அஹமதாபாத் நகரில் கட்டப்பட்டிருக்கும் பாலாஜி கோவில் பற்றிச் சொல்லி அங்கே அழைத்துப் போவதாகச் சொல்லவே அங்கே செல்வதற்காகத் தயாரானோம். தயாராகிக் கோவிலுக்குச் செல்லும் நேரத்தில் கோவில் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாமா....


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

நாம் வேங்கடேசன்/வெங்கடேசன் என அழைக்கும் பெருமாளை பெரும்பாலான வட இந்தியர்கள் பாலாஜி என்று தான் அழைக்கிறார்கள். குஜராத்திலும் பாலாஜி தான். 



படம்: நன்றி - https://travelumix.wordpress.com

திருப்பதி போலவே ஒரு கோவில் என்றாலும், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தினால் கட்டப்பட்ட பல கோவில்களில் இதுவும் ஒன்று என நினைத்தால் அது தவறு.  இதற்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவர்களுடைய சில யோசனைகளைக் கேட்டு கட்டப்பட்டதென்றாலும் கோவிலின் தினசரி பூஜைகள் மற்றும் நடவடிக்கைகளை நடத்த Sri Balaji Temple Development Trust என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் கோவில் நடத்தப்பட்டு வருகிறது. 



படம்: நன்றி - https://travelumix.wordpress.com

கோவிலுக்கான நிலம் கிடைத்த மூன்று வருடங்களுக்குப் பிறகு 2003-ஆம் ஆண்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. திருப்பதி, ஆந்திர மற்றும் தமிழக சிற்பிகள் 100 பேர் திருப்பதியில் தங்கி கோவிலுக்குத் தேவையான சிற்பங்களை தயாரிக்க, மேலும் 80 சிற்பிகள் அஹமதாபாத் நகரில் கோவில் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  திருமலா திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த வடிவமைப்பில் மிகச் சிறப்பாக உருவான கோவில் பொதுமக்கள் பார்வைக்கு 2007-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.



படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

விஸ்தாரமான இடத்தில் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டு வரும் கோவிலுக்கு நாங்கள் சென்று சேர்ந்தோம். வாகன நிறுத்தும் வசதிகள், திருமணம், பூஜைகள் போன்ற நிகழ்வுகளை நடத்த வசதிகள் என பல வித வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது இக்கோவில்.  வெளியிலேயே “ஃபோட்டோ பாட்னா மனாயி ச்சே!என்று எழுதி இருந்ததால் படம் எடுக்க வாய்ப்பில்லை! நானும் எனது புகைப்படக் கருவியை வீட்டிலேயே விட்டு வந்திருந்தேன் என்பதும் ஒரு காரணம்.   கோவில் உள்ளே நுழைகிறோம்.  அப்பப்பா என்னவொரு சுத்தம்....  மிகச் சிறப்பான பராமரிப்பினை மனதுக்குள் பாராட்டியபடியே உள்ளே நுழைந்தோம். 




படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

பொதுவாக விழாக்காலங்களில் இங்கே வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றாலும், நாங்கள் சென்ற அந்நாளில் எங்களைத் தவிர விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு பக்தர்களே என்பதால் நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. கொஞ்சம் மனதாரப் பேசவும் முடிந்தது!  ஆஹா எத்தனை அழகாய்ச் செதுக்கி இருந்தார்கள் சிற்பங்களை.  பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனும்படியான அழகு.  கூடவே சிலைகளுக்கு அணிவித்திருந்த ஆபரணங்கள்.......  ஒவ்வொன்றும் மதிப்பிட முடியாத அளவுக்கு அழகும் ஜொலிப்பும்..... 





நடுவே பாலாஜி, இரு புறங்களிலும் பத்மாதேவி மற்றும் கோதாதேவி என மிகச் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். எதிரே கருடர் கையைக் கூப்பியபடி இருக்க, கோவிலுக்கு வெளியே ஜெய விஜயர்கள் காவலுக்கு இருக்க, கொடி மரமும் உண்டு.  மிகச் சிறப்பாக அமைந்துள்ள கோவிலில் தரிசனம் முடித்து, பிரகாரத்தினை சுற்றி வரும் வழியில் மிகச் சிறிய தொன்னையில் [ஒரு ஸ்பூன் அளவு] பிரசாதமும் பெற்றுக் கொண்டு அங்கிருந்த அலுவலக அதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

கோவிலில் இருக்கும் வசதிகளைப் பற்றிச் சொல்லிய அவர், திருமலா திருப்பதி செல்ல நினைக்கும் குஜராத் மக்களின் வசதிக்காக இக்கோவிலிலேயே தரிசனம், மற்ற பூஜா சேவைகள் மற்றும் தங்குமிடம் பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதைப் பற்றிச் சொன்னார்.  கோவில் சிறப்பாக நடைபெற குஜராத் மக்களும் மற்றவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பொருளுதவியும், பண உதவியும் செய்வதைப் பற்றியும் சொன்னார்.  கோவிலில் சிற்பங்களுக்குப் போட்டிருக்கும் ஆபரணங்களைப் பார்க்கும் போதே அதைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது.

திருப்பதி கோவிலில் நடக்கும் அத்தனை விசேஷங்களும், சம்பிரதாயங்களும் இக்கோவிலிலும் கடைபிடிக்கிறார்கள் என்பதால் திருப்பதி போகாமலே அங்கே இருக்கும் பக்தர்கள் தரிசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

கோவிலில் பார்த்த மேலும் ஒரு விஷயம் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. சாதாரணமான பூட்டுகளைப் பார்த்திருந்த எனக்கு, அங்கே போட்டிருந்த ஒரு பூட்டு மிகவும் பிடித்துப் போனது.  மீன் வடிவில் பூட்டு! கோவிலின் அருகே இருக்கும் மண்டபத்தில் தசாவதார சிலைகளும் மிகப் பெரிய விஸ்வரூபச் சிலையும் உண்டு.  அஹமதாபாத் நகருக்குச் செல்லும் வாய்ப்பிருந்தால் நிச்சயம் இங்கே சென்று வேங்கடேசனை நிம்மதியாக தரிசித்து வரலாம்.

படம்: நன்றி - https://travelumix.wordpress.com

SG Highway என அழைக்கப்படும் Sarkhej Gandhinagar Highway-ல் Nirma Institute எதிரே அமைந்திருக்கும் இக்கோவில் காலை ஏழு மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். சனி மறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அரை மணி நேரம் அதிக நேரம் திறந்திருக்கும்.  

கோவிலில் தரிசனம் முடித்து நாங்கள் அடுத்ததாகச் சென்றது இரவு உணவு சாப்பிடுவதற்காக....  எங்கே சென்றோம், அங்கே என்ன அனுபவம் கிடைத்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

[G]குடும் [B]பாஜா.... – மத்தியப் பிரதேசத்திலிருந்து....


[G]குடும் [B]பாஜா.... ஆஹா பெயரைக் கேட்கும்போதே பிடித்திருக்கிறதே....  இது என்ன?  ஹிந்தியில் [B]பாஜா என்றால் மேளம் போன்ற வாத்தியக் கருவி. இந்த [G]குடும் [B]பாஜாவும் ஒரு வாத்தியக் கருவிதான்.  சோழிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட [G]குடும் எனும் வாத்தியத்தினை இடுப்பில் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடியே ஆடும் நடனம் ஒன்று தான் இந்த [G]குடும் [B]பாஜா நடனம்.  மத்தியப் பிரதேசத்தின் [D]டிண்[d]டோரி, மாண்ட்லா மற்றும் ஷாஹ்டோல் மாவட்டங்களில் இருக்கும் பூர்வ குடிமக்கள் ஆடும் நடனம் தான் இந்த [G]குடும் [B]பாஜா.

சில வாரங்களாக பகிர்ந்து வரும் நடனங்களைப் பார்த்த அதே National Cultural Festival-ல் தான் இந்த நடனத்தினையும் கண்டு ரசித்தேன். இடுப்பில் வாத்தியத்தினைக் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடியே ஆடுகிறார்கள். சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் வேகமாகவும், தலையை ஆட்டியபடியே இவர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது நமக்கும் ஒரு வேகம் வந்துவிடுகிறது.  பின்னணியில் Shehnai, Flute, Manjira, Timki போன்ற வாத்தியங்கள் இசைக்க இவர்களும் தங்களது [[G]குடும் வாத்தியத்தினை இசைத்தபடியே நடனமாடுகிறார்கள். 

நடுநடுவே பிரமிட் வடிவங்களை அமைத்து, ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்றபடியும் வாத்தியம் இசைக்கிறார்கள். சுற்றிச் சுற்றி ஆடும்போது அவர்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தொடைகளுக்கு நடுவே மேளத்தினை வைத்துக் கொண்டு இசைப்பது கடினமான ஒரு விஷயம் என்று புரிகிறது.

கைகளில் வாத்தியத்தினை இசைக்கும் குச்சிகள் இருந்தாலும், நடுநடுவே ஒரு கையில் குச்சியை வைத்து வாசிக்கும்போதே மறு பக்கம் தங்களது முழங்கையால் வாத்தியம் இசைக்கிறார்கள். இந்த இசையும் நடனமும் அவர்கள் கொண்டாடும் திருவிழாக்கள், பூஜைகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் முக்கியமான இடம் பெறுகிறது.  நிகழ்ச்சியில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  படங்களைப் பார்த்த பிறகு இந்த நடனம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம்!























சில வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றை காணொளியாக சேமித்து வைத்திருக்கிறார் Ami Charan Singh என்பவர்.  அவருக்கு நன்றி. நடனத்தினைப் பாருங்களேன்!




என்ன நண்பர்களே இந்த வாரத்தில் இங்கே பகிர்ந்து கொண்ட படங்களையும் நடனத்தினையும் ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்......

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

ஃப்ரூட் சாலட் – 154 – 100 பாய்கள் – அன்பை மட்டும் – அம்மா விளம்பரம்

நல்ல மனம் வாழ்க!:

தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல நல்லுள்ளங்கள் பற்றிய தகவல்கள் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து படித்து வருகிறோம்.  அப்படிப்பட்ட ஒரு செய்தி ஒன்று இங்கே! பகிர்ந்து கொண்ட திரு மானா பாஸ்கர் அவர்களுக்கு நன்றி.



21 ஆண்டுகளுக்கு முன்பு என் அண்ணன் இருதய அறுவை சிகிச்சை பலனின்றி... மரணித்தபோது அழுதது. அதன் பிறகு இந்தச் செய்தியை அறிந்தபோது... இப்போதுதான் என்னை அறியாமல் சத்தம்போட்டு அழுதுவிட்டேன்.

இவர்களுக்கு வீடே கிடையாது. மரத்தடியில்தான் இவர்களை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். எல்லா ஊரும் இவர்களின் ஊரே.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 100 பாய்களை வாங்கித் தந்திருக்கிறார்கள்... தற்சமயம் அவிநாசியில் வசிக்கும் நரிகுறவர்கள்.

வீடே இல்லாதவர்கள்... வீட்டை இழந்தவர்களை நோக்கி இதயக் கரம் நீட்டியிருக்கிறார்கள்.

இ.எம்.ஐ துரத்துவதற்காக... ‘‘money... money’’ என ஓடிக்கொண்டிருக்கிற நாமெல்லாம் செஞ்ச உதவி... பாசி மணி ஊசி மணி விற்கிறவங்களுக்கு முன்னால சும்மா சார்!

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பூங்கொத்துகள்!

அன்பை மட்டும்....





அமுல் வெண்ணை:

காலத்திற்கு ஏற்றபடி விளம்பரம் செய்வதில் அமுல் மாதிரி எந்த நிறுவனமும் செய்ய முடிவதில்லை.  இங்கே பாருங்களேன் இந்த விளம்பரத்தினை.....



இதெல்லாம் ஒரு பிரச்சனையா?:


இரண்டு மூணு நாளா வெறும் இன்கமிங் தான்! அவுட்கோயிங் இல்லவே இல்லைன்னு யாராவது சொன்னா, இதெல்லாம் பெரிய பிரச்சனையா?” என்று சொல்லக் கூடும். கஷ்டப்பட்டா தானே தெரியும். இந்த ஆசாமியைப் பாருங்க – ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல, கிட்டத்தட்ட இரண்டு வாரமா “அவுட் கோயிங்க்!”  என்னத்துக்கு ஆகறது! விளம்பரம் தான் என்றாலும்,  கடைசியில் அவருக்கு கிடைக்கும் மன நிம்மதி! PIKU பட அமிதாப் மாதிரி பிரச்சனை ரொம்பவே கஷ்டம் தான்....  பாருங்களேன்!


Google க்கு ஒரு பாடல்:


வானவில் மனிதன்மோகன்ஜி அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு காணொளி அதைப் பார்க்காதவர்கள் பார்க்க வேண்டி இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்..... அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று எண்ணியதால்!

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா?
---------------------------------------------------------
செம்பரம்பாக்கமென்னும் ஏரித்தாய்
பிரசவித்த செல்வமகள் :
அடையாறேன பெயர் கொண்டு
புக்ககம் சேர்ந்திடவே
தொடங்கினள் நற்பயணம்.
உல்லாசமாய் புறப்பட்ட
பெண்ணவளும் வழியதனில்
எதிர்கொண்டாள் பெரும் துன்பம் .
மாசற்ற அவள் வடிவம்
வாஞ்சையான அவள் வருடல்
வாளிப்பான அவள் தேகம்:
பொறுப்பரோ கயவருமே ?
அவள் பாதையதை சிதைத்தாரே ;
பயணத்தை தடுத்தாரே:
பேதையவள் என் செய்வாள் ?
பொலிவெல்லாம் நலிவுற்று
புக்ககம் வந்தடைந்தாளே !
வண்ணமகள் திருக்கோலம்
கண்டே்தான் கொண்டவனும்
அடைந்திட்டான் பெருங்கோபம் ..
கோபமது உறுமாறி
வஞ்சமென ஆனதுவே.
புக்ககத்தார் ஆசியுடன்
கொண்டவனின் துணைகொண்டு
கூரையேறி சண்டையிட
புறப்பட் டாள் மங்கையவள்.
பொங்கி எழுந்த அவளெதிரே
யாரும் தப்பிட கூடிடுமோ?
ஆசிபெற்றாள் தாயிடமே
மீட்டெடுத்தாள் தன் வழியை
நீக்கினளே மாசனைத்தும்
பெற்றனளே அழகு திருக்கோலம் !
மடையரே உணர்வீரோ - இனியேனும்
நடப்பீரோ மாண்புடனே !
Subhasree Muraleetharan 

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.