எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, December 7, 2015

தொடரும் மழையும், திணறும் தில்லியும்......


 படம்: இணையத்திலிருந்து....

சில நாட்களாகவே தமிழகத்தின் சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் என பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையும், ஏரிகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீருமாகச் சேர்ந்து அந்த மாவட்டங்கள் முழுவதையும் மூழ்கடித்து இருக்கிறது. இயற்கையின் சீற்றத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நம்மை ஆண்டுவரும் கழகங்கள், அவற்றின் தலைவர்களின் பேராசை மற்றும் தவறான திட்டங்களும் சேர்ந்து இன்று இந்த நிலைக்கு உள்ளாகியிருக்கிறோம்.

திணறும் மக்களுக்கு உதவி செய்யும் பேரிடர் குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஊழியர்களுக்கு இணையாக தன்னார்வக் குழுக்களும், சக மனிதர்களும் தங்களாலான உதவிகளைச் செய்து வருவதைப் பார்க்கும் போது மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. மதமோ, ஜாதியோ எதுவுமே இந்த பேரிடர் சமயத்தில் தடையாக இல்லாது மனிதம் தழைத்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது மனதில் கொஞ்சம் மகிழ்ச்சியும் வருகிறது. சாதாரண மனிதர்கள் என்றைக்குமே சக மனிதர்களை, மதம், ஜாதி ஆகிய துவேஷம் இல்லாது சாதாரணமாகத் தான் பார்த்து வருகிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அரசியல் வாதிகளும், சந்தர்ப்ப வாதிகளும் மட்டுமே இவ்விஷயங்களை தூபம் போட்டு வளர்த்து வருகிறார்கள் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

எத்தனை பேர் களத்தில் இறங்கி தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்கள் என்பதை ஊடகங்களில் பார்க்கும் போதும், செய்திகளைக் கேட்கும் போதும் நானும் அங்கே வந்து களத்தில் இறங்கி பணி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் வருகிறது.  தில்லியில் இருந்தபடியே என்னால் முடிந்த சில உதவிகளைச் செய்தாலும் களப்பணி செய்ய முடியவில்லை என்ற எண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சோதனையான நேரத்தில் இத்தனை நல்ல விஷயங்கள் நடந்து வருவதை நினைத்து திருப்தி அடையும் அதே வேளையில், இந்த மாதிரி பேரிடர் சமயத்திலும் அரசியல் செய்யும் மாக்களை நினைத்தால் கோபம் கொப்பளிக்கிறது. ஏற்கனவே சாக்கடை நீரும் ஏரி நீரும் கலந்திருக்க இந்த அரசியல் சாக்கடையும் இதிலே கலக்க வேண்டுமா என்று ஆதங்கம் கொள்ள வைக்கிறது. மக்கள் அனைவரும் அதிகமான வேதனையில் வீழ்ந்திருக்க, அதையும் சில சதிகாரர்கள் சாதகமாக்கிக் கொண்டு திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதையும் கேட்டால் ஆத்திரம் வருகிறது. அத்தியாவசியமான பொருட்களை அநியாய விலைக்கு விற்று லாபம் பார்க்க நினைக்கும் மட்டமானவர்களை என்ன சொல்வது! போகும் போது கோவணத்தினைக் கூட உருவி விடுவார்கள் என்பதை அவர்கள் உணரவில்லையே......

தமிழக மக்கள் இப்படி வெள்ளத்தினால் தத்தளித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தலைநகர் தில்லியின் மக்களும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். Smog என்று சொல்லக்கூடிய புகை மூட்டம் தில்லியைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் பேருந்துகள், ஆட்டோக்கள் அனைத்தும் CNG மூலம் இயக்கத் துவங்கியபோது இருந்த சூழல் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. பகல் நேரத்திலேயே இரவு போல இருட்டும், கரும்புகையும் சூழ்ந்து தில்லி வாசிகளை திணறடித்துக் கொண்டிருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து....

மாசுத் துகள்களின் அதிகரிப்பால் பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை விட்டு விடலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறது தில்லி அரசு. இரண்டு நாட்களுக்கு முன்னர் வேறு ஒரு யோசனையும் வெளியிட்டிருக்கிறது. சாலையில் இருக்கும் அதீதமான வாகன எண்ணிக்கையைக் குறைக்கும் வழியாக ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்களைக் கொண்ட வாகனங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கிறது. அதாவது ஒன்றாம் தேதி ஒற்றைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்தினால், இரண்டாம் தேதி அவற்றை பயன்படுத்தக் கூடாது – அரசு பேருந்துகளோ, அல்லது தில்லி மெட்ரோவையோ தான் பயன்படுத்த வேண்டும்.

இப்போது இதைக் கொஞ்சம் மாற்றி திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் ஒற்றைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்களும், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரட்டைப் படை எண் கொண்ட வாகனங்களும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.  ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லா வாகனங்களையும் தடை செய்யவும் யோசித்து வருகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் 22-ஆம் தேதி Car Free Day என அறிவித்து சில பகுதிகளில் கார்கள் இயங்குவதை தடை செய்திருக்கிறார்கள்.

இப்படிச் செய்தால் ஒவ்வொரு நாளும் சாலைக்கு வரும் வாகனங்களை பாதியாக குறைத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறது தில்லி அரசு. நல்ல யோசனையாக இருந்தாலும், இதைச் செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலான விஷயம்.  தில்லியில் சாலை விதிகளை மீறும் வாகனங்களையே சரிவர கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த புதிய திட்டத்தினை எப்படி செயல்படுத்த முடியும் என்று புரியவில்லை. அரசு என்னதான் முயற்சி செய்தாலும், மக்களும் கொஞ்சமாவது ஒத்துழைக்க வேண்டும். சாதாரணமாகவே தில்லிவாசிகள் விதிகளை மீறுவதில் புகழ் பெற்றவர்கள்..... போலவே இவர்களுக்கு தங்கள் சுகம் மட்டுமே குறிக்கோள். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், நான்கு கார்களை வைத்துக் கொண்டு ஒரே திசையில் பயணித்தாலும், தனித் தனி வாகனங்களை பயன்படுத்துபவர்களை பார்க்க முடியும்.

தில்லியில் இருக்கும் மாசு மக்களுக்கு பல வித பிரச்சனைகளைத் தருகிறது. நெஞ்சு எரிச்சல், மூச்சடைப்பு, ஆஸ்துமா தொல்லைகள் என அனைத்தும் அதிகரித்து வருகிறது. வாகனப் புகை மட்டுமல்லாது, குளிர் காலம் என்பதால் பலரும் சாலைகளில் பிளாஸ்டிக் பேப்பர்களையும், வாகன டயர்களையும் கொளுத்தி குளிருக்கு இதமாய் அதைச் சுற்றி அமர்ந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. அதிலிருந்து வரும் புகை அவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தில்லி வாசிகளுக்கும் எமனாக மாறும் நிலை.

இப்படி சில நாட்களாகவே, இருக்கும் நிலை காரணமாக எதுவுமே எழுதும் மன நிலை இல்லை. பதிவுலகத்தில் அனைவருடைய நிலையும் இது தான் என்பது திண்ணம்.

மழை, வெள்ளம், மாசுபட்ட சுற்றுச்சூழல் என அனைத்தும் நமக்கு எதிராக அமைந்துவிட்டாலும், அத்தனை தடைகளையும் தகர்த்து, மீண்டு எழுவோம்......  மதம் மறப்போம்..... மனிதம் காப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.50 comments:

 1. மழையில் இருந்து மீண்டு வரும் வேலையில் மீண்டும் சின்ன அதிர்ச்சி கொடுத்து வருகிறது மழை. தன்னார்வர்களின் நிவாரண சேவைகள் அபாரமானது, *****
  நம்மாளுங்கதான் வீட்டுக்கு ரெண்டு மூணு டூ வீலர் வச்சிருக்காங்களே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 2. திணறும் மக்களுக்கு உதவி செய்யும் பேரிடர் குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஊழியர்களுக்கு இணையாக தன்னார்வக் குழுக்களும், சக மனிதர்களும் தங்களாலான உதவிகளைச் செய்து வருவதைப் பார்க்கும் போது மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. - ஆம் நண்பரே! இதோடு சென்னை,கடலூர் மாவட்டங்கள் அழிந்து விடுமோ என்று அஞ்சிய சூழலில் இன்னும் “மனிதம் அழியவில்லை“ என்று சொல்லாமல் சொல்லி அன்புமழை பொழியும் அனைவரின் உதவிகளையும் பார்க்க நெகிழ்கிறது நெஞ்சம். இந்த நிலை இந்தியத் தலைநகரிலும் என்றால்..ஆட்சியாளர்களிடம் உள்ள கோளாறுகளை இந்த வெள்ளத்தில் அலசிவிடவேண்டியதுதான்!. நன்றி நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

   Delete
 3. வணக்கம்
  ஐயா
  மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப இறைவனை பிராத்திப்போம்.. த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 4. இன்றைய சூழலுக்கு எது தேவை என்பதனை நன்றாகவே சொன்னீர்கள்.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 5. ஒற்றைப் படை ஐடியா நல்லாயிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 6. நல்ல பல தகவல்கள், பகிர்வுக்கு நன்றி,

  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 7. தலைநகரின் பிரச்னை வித்தியாசமானதாக இருக்கிறது. டெக்னாலஜி நம்மை விதம் விதமான சோதனைகளில் ஆழ்த்துகின்றன என்று தெரிகின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 9. உதவிசெய்யும் உள்ளம் கொண்டவர்களைக் காணும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைச் சரியானபடி பதிவு செய்துள்ளீர்கள். ஏதிலிகளுக்கு அரசல்லவா குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான உதவிகள் செய்ய வேண்டும்? அது கிடைக்காவிடில், பழைய காகிதங்களும், பிளாஸ்டிக்குகளும் ஓய்ந்த டயர்களும்தான் அவர்களுக்குத் துணை.

  ReplyDelete
  Replies
  1. ஏதிலிகள் மட்டுமல்ல, மெத்தப் படித்த பலரும் கூட இப்படி எரிப்பது பார்த்திருக்கிறேன் நண்பரே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 10. வணக்கம் ஜி நல்லதொரு அலசல் சாதாரண மனிதர்களிடம் மதவாதம் இல்லை என்பது உண்மை இனியெனும் மக்கள் உணர வேண்டும் பதிவு நன்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. ஜி தமிழ் மணம் No Such Post இப்படி வருகிறதே... ஏன் ?

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணத்தில் என்ன பிரச்சனை எனப் புரியவில்லை கில்லர்ஜி! அடுத்த பதிவு போடும்போது பார்த்துக்கலாம்! :)

   Delete
 12. சாலைகளில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த நல்ல யோசனையாகத் தோன்று கிறது நம்மவர்களுக்குக் கட்டாயப் படுத்தியே சில நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. கொஞ்சம் கொஞ்சமாக நாம் நவீனத்துக்கு பலியாகிவிட்டோமோ என்று பயமாக இருக்கிறது.
  த ம

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 14. தமிழகத்து நிலைமை குறித்த உங்கள் பார்வை நியாயமானது. கேஜரிவால் சொல்லும் கருத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. பதினைந்து நாள் சோதனை முயற்சியாக நடக்கும் என தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.... தில்லி மக்கள் இதற்கும் எதாவது குறுக்கு வழி கண்டுபிடிப்பார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி

   Delete
 15. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
  சில வேண்டுதல்கள்...

  இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
  மணிதம் இன்னும் மரிக்கவில்லை
  என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
  நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
  நிறையவே நாம் ஜாக்கிரதையாக
  செயல்பட வேண்டிய தருணம் இது...

  அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
  வேண்டுதல்கள்..

  1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

  2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

  3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

  4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

  5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

  உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

  நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

  உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிஅன்பேசிவம்.

   Delete
 16. ஜி தமிழ் மணம் இன்றும் No Such Post இப்படி வருகிறது கவனியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. என்ன பிரச்சனை என புரியவில்லை. தமிழ்மணம் தான் பதிலளிக்க வேண்டும்! :)

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 17. இயல்பு நிலைக்கு வாழ்வு திரும்பும் நாளை எதிர்பார்க்கின்றோம். தாங்கள் கூறிய மன நிலையில்தான் நாங்களும் உள்ளோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 18. ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலில் அக்கறை கொள்ள வேண்டிய தருணம்.

  தமிழ்மணம் வாக்களிக்க முடியவில்லை.

  தொடர்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்....

   Delete
 19. ஏற்கனவே சாக்கடை நீரும் ஏரி நீரும் கலந்திருக்க இந்த அரசியல் சாக்கடையும் இதிலே கலக்க வேண்டுமா என்று ஆதங்கம் கொள்ள வைக்கிறது//மிகவும் சரியே...தமிழகமே இந்த அரசியல் சாக்கடையில்தான் நாறுகின்றது. (கற்பூரம் நாறுமோ என்று ஆண்டாள் சொல்லிய நாறும் நல்ல சொல். இங்கு நாற்றம் நல்ல அர்த்தத்தில் சொல்லவில்லை..!!!)

  மக்களும் திருந்த வேண்டும், அரசும் நிறையவே திருந்த வேண்டும். நல்ல தலைமை இல்லை என்ற ஆதங்கம் வருகின்றது. இனியேனும் வந்தால் நல்லது.

  தில்லியிலும் ஸ்மாக் செய்தித்தாளில் பார்த்தோம். நல்ல யோசனைதான். நீங்கள் சொல்லுவது போல் அதை எவ்வளவுதூரம் நடைமுறைப்படுத்த முடியும் குறிப்பாக ஞாயிறு....என்பது யோசனைக்குரியதே.

  மக்கள் முனையலாம் நல்ல எண்ணத்துடன்...

  இரு பகுதியிலுமே மக்களின் ஆதரவு மிக முக்கியமே...

  தமிழ்மணம் ஓட்டு வேலை செய்யவில்லை பரவாயில்லை அதனால் என்ன நமக்குப் பதிவும் கருத்தும்தான் முக்கியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 20. மீண்டு எழுவோம்...... மதம் மறப்போம்..... மனிதம் காப்போம்.....///வாருங்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 21. மிகச் சரியா சொன்னீங்க. பெய்த பெருமழையில் எழுதிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச பதிவர்களையும் காணோம் . ஹ்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 22. தமிழ் மணம் உங்களுக்கு மட்டும் வேலை செய்யவில்லை ஜி

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் தெரிகிறது. அடுத்த பதிவு எழுதும் போது தமிழ்மணம் சரி செய்ய முயற்சிக்கிறேன்.

   Delete
 23. வணக்கம் ஐயா
  மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப இறைவனை பிராத்திப்போம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமதி.

   Delete
 24. அன்பு நண்பரே
  தொடரும் மழையும், திணறும் தில்லியும்...... நல்ல பகிர்வு.
  சரியான நேரத்தில் எழுதி உள்ளீர்கள். நமது அரசியல் வாதிகள் எப்போது திருந்துவார்கள்.
  I totally agree with Mr Tulasidharan.
  Vijay
  Delhi

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 25. //மழை, வெள்ளம், மாசுபட்ட சுற்றுச்சூழல் என அனைத்தும் நமக்கு எதிராக அமைந்துவிட்டாலும், அத்தனை தடைகளையும் தகர்த்து, மீண்டு எழுவோம்...... மதம் மறப்போம்..... மனிதம் காப்போம்.....//

  அருமையாகச் சொல்லி முடித்துள்ளீர்கள். மகத்தான மனித நேயம் வாழ்க !

  ReplyDelete
 26. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....