எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 11, 2016

தில்லி புத்தகத் திருவிழா – 2016இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வந்த புத்தகச் சந்தை இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. எப்போதும் ஃபிப்ரவரி மாதம் நடக்கும் எனில் இம்முறை ஒரு மாதம் முன்னதாகவே ஜனவரியில்....  சனிக்கிழமை 9 ஆம் தேதி தான் துவக்கம்.  நேற்று ஞாயிறு இரண்டாம் நாள் – இதை விட்டால் அலுவலக நாட்களில் செல்வது கடினம் என்பதால் நேற்று சென்று வந்தேன். 

பெரும்பாலும் தமிழகத்திலிருந்து தில்லி புத்தகத் திருவிழாவிற்கு வரும் பதிப்பகங்கள்/புத்தக விற்பனையாளர்கள் மிகவும் குறைவு – விரல் விட்டு எண்ணி விடும் அளவு தான் இருப்பார்கள். நியூ செஞ்சுரி, காலச்சுவடு, ஓம்காரம், பாரதி போன்ற வெகு சில பதிப்பகங்களும், புத்தக நிலையங்களும் வருவார்கள்.  அவர்களது பதிப்புகள் தவிர பல பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதால் தில்லியிலேயே புத்தகம் வாங்க ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு முறை செல்வதுண்டு.

இம்முறையும் சென்று புத்தகங்கள் வாங்கலாம் என நேற்று மெட்ரோவில் பயணித்து பிரகதி மைதான் நிலையத்தில் இறங்கினால் வாயிலிலேயே நீண்ட மலைப்பாம்பு போன்ற வரிசை – மெட்ரோ நிலையத்திலேயே நுழைவுச்சீட்டு விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. என்னிடம் Multiple Entry Pass இருந்ததால் [புத்தகச் சந்தை நடத்தும் National Book Trust-ல் நண்பர் இருக்கிறார்!] நேராக வரிசையில் நானும் இணைந்தேன். குறுக்கே புகுந்து விரைவில் செல்ல நினைத்த படிப்பாளிகளும் வரிசையில் நின்று நொந்த படிப்பாளிகளும் சண்டை போடும்போது பார்க்கவே கஷ்டமாக இருந்தது! அத்தனை பீப் வார்த்தைகள்!

நுழைவாயில் நெருங்க நெருங்க வரிசையில் நின்றிருந்த பலருக்கும் பொறுமை இல்லை! இரண்டே இரண்டு காவல்காரர்கள் எல்லா ஆண்களையும் தடவல் பரிசோதனை செய்து பீடி, சிகரெட், பான் பராக், குட்கா ஆகியவற்றை வெளியே எறிய, அதற்கும் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக என்னையும் தடவல் பரிசோதனை செய்து உள்ளே அனுப்ப, நேரடியாக 12-12A எண் கொண்ட அரங்கினை நோக்கி நடந்தேன் – அங்கே தான் Regional Language பதிப்பாளர்கள்/புத்தக நிலையங்களின் கடைகள் இருப்பதால்!

வழியிலேயே நண்பரும், தில்லி தினமணி நாளிதழில் பணிபுரிபவரும் வர அவருடன் சிறிது நேரம் பேசினேன்.  அவருடன் இன்னுமொரு தினமணி ரிப்போர்ட்டரும் வந்திருக்க, அறிமுகம் செய்து கொண்டேன்.  தமிழ்நாட்டிலிருந்து நியூ செஞ்சுரி மற்றும் ஓம்காரம் பதிப்பகத்தினர் மட்டுமே வந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்ல, அப்போதே கொஞ்சம் உற்சாகம் குறைந்து விட்டது.  சரி வந்தது வந்தோம், பார்த்து விடுவோம், என அரங்கத்தினுள் நுழைந்தேன். 

ஒரே ஒரு தமிழ் பதிப்பகம் என்பதால் நேராக அங்கே சென்று பார்வையிட, எனக்குத் தேவையான புத்தகங்கள் ஏதுமில்லை.  கல்கி, சாண்டில்யன் என என்னிடம் இருக்கும் புத்தகங்கள் நிறையவே இருந்தது.  புறநானூறு விளக்கத்துடன் இரண்டு தொகுதிகள் கொண்ட புத்தகம் பார்க்கும்போதே வாங்க வேண்டும் எனத் தோன்ற எடுத்துப் பார்த்தேன்.  ஆனால் வாங்கவில்லை! சிறிது நேரம் மற்ற புத்தகங்களையும் பார்வையிட்டு, மற்ற அரங்குகளுக்கும் சென்று வந்தேன்.

வெளிநாட்டு பதிப்பகங்கள் இருக்கும் அரங்கான 7-ஆம் எண் அரங்கிற்குச் சென்றால் அங்கே சீன நாட்டிலிருந்தும் சௌதி அரேபியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் புத்தகக் கடைகள் இருந்தன.  பல இடங்களில் சீன எழுத்தாளர்கள் தங்களது அனுபவங்களை அவர்களது மொழியிலேயே பேச, ஒரீரு இடங்களில் மட்டும் அதை ஹிந்தியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஓரிடத்தில் அதுவும் இல்லை.  சீனாவின் மொழியான மண்டாரின் மொழியில் மணிப்பிரவாகமாக பேசிக்கொண்டிருக்க, அங்கே அமர்ந்திருந்த இந்தியர்கள் பலரும் மோன நிலையில் இருந்தார்கள்!

இன்னும் சில அரங்குகளுக்கும் சென்று பார்வையிட்டு அங்கிருந்து உணவகத்திற்குச் சென்று மதிய உணவினை முடித்துக் கொண்டேன்.....  காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்எனும் பாடலில் வருவது போல புத்தகம் வாங்க வந்து விட்டு உணவகத்தில் சாப்பிட்டு வந்தவன் நான் ஒருவனாகத் தான் இருக்க முடியும்! எனக்குத் தேவையான தமிழ்ப் புத்தகங்கள் வாங்குவதற்காகவே தமிழகம் வர வேண்டும் என நினைக்கிறேன். 

ஆமாம்....  இதோ கிளம்பி விட்டேன்.  அலுவலகத்தில் பணிச்சுமை சற்றே குறைந்திருப்பதால் பொங்கலுக்கு ஊருக்கு வரத் திட்டம்.  பதினான்காம் தேதி காலை தில்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்டு மாலை திருச்சிக்கு வந்து விடுவேன்.....   மூன்று வாரப் பயணம் என இப்போதைக்கு நினைப்பு – அது குறையவும் வாய்ப்பிருக்கிறது! விடுமுறை கிடைத்து விடும் என்றாலும், அவசரப் பணிகள் இருக்கிறது என நாட்களை குறைத்து விடாமல் இருக்க வேண்டும்! அனுப்பி விட்டு, பின்னாலேயே அலைபேசியில் அழைக்காமல் இருக்கவும் வேண்டும்! பார்க்கலாம்.

மெட்ரோவில் வீடு திரும்பும்போது அதிக அளவில் மக்கள் கூட்டம்.  பயணிகளுக்கிடையே இடைவெளியே இல்லை! பல ஜோடிகள் சயாமி இரட்டையர்களாக மாறி இருந்தார்கள்! ஒருவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. அவர் தனது சக்ரீன் டச் எடுத்துப் பார்க்க,  அழைப்பவரின் பெயர் வித்தியாசமாக சேமித்து வைத்திருந்தார் – என்ன பெயர் என்று தானே கேட்டீர்கள்?  “கும்பகர்ணன்...”  பெயர் எனக்கு ஏதோ ஒரு செய்தி சொல்வது போலத் தோன்றியது ஒழுங்கா கிடைச்ச ஒரு நாள் லீவில் கும்பகர்ணன் மாதிரி தூங்கறது விட்டு இப்படி சாப்பிடறதுக்காகவே புத்தகச் சந்தைக்கு போவாயோ?

வெங்கட்

புது தில்லி

52 comments:

 1. சென்னையில் நடக்கவேண்டிய புத்தகத் திருவிழா உங்களுக்காக ஏப்ரலில் நடக்க உள்ளது அவசியம் இங்கும் வரவும்

  ReplyDelete
  Replies
  1. ஏப்ரல் சமயத்தில் தமிழகம் வந்தால் நிச்சயம் புத்தகத் திருவிழாவிற்கு வருவேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 2. //ஒரு நாள் லீவில் கும்பகர்ணன் மாதிரி தூங்கறது விட்டு இப்படி சாப்பிடறதுக்காகவே புத்தகச் சந்தைக்கு போவாயோ?//

  வெட்டி அலைச்சல்தான் போலிருக்கு. இருப்பினும் ஓர் நல்ல அனுபவத்தைப் பதிவாகக் கொடுக்க முடிந்துள்ளதில் சற்றே மகிழ்ச்சியடைவீர்கள்தானே. பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. இதுவும் ஒரு அனுபவம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. தலைநகர் டில்லி செய்திக்கு நன்றி. இருக்கின்ற புத்தகங்கள் போதும்; இனிமேல் புத்தகமே வாங்கக் கூடாது என்றுதான் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைவேன். ஆனாலும் திரும்பி வரும்போது எனது கைகளில் புத்தகங்கள்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 4. மலேசியாவின் மலர் வாசக வட்டத்திலிருந்து நண்பர் திரு கோகுலன் தில்லியிலிருந்து மலேசிய தொலைபேசி என்னில் அழைத்ததால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு அரங்கத்தில் நுழைந்தேன் ஏமாற்றமே மிஞ்சியது...அவரோ சீன நிறுவனத்தின் சார்பில் வந்திருப்பாதாக கூறியதுடன் சீனர் திரு சூன்சாங் மற்றும் அவரது சீன நண்பர்களை அறிமுகம் செய்தார், தமிழரான நண்பர் கோகுலனிடம் "நேஹாமா.... மக்கான்" என சீன மொழியில் (மாண்டரினில்) பேசிவிட்டு திரும்பவேண்டியதாக போனது... சிங்கப்பூரிலிருந்து யாராவது.....தமிழகத்திலிருந்து யாராவது .... என்று தேடியும் எந்த புத்தகப்பதிப்பாளரும் கண்ணுக்கு தென்படவில்ல, தமிழ் புத்தகங்களை பார்க்காமலே திரும்பவேண்டியதாக போனது... கோகி-ரேடியோ மார்கோனி.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... நல்ல அனுபவம் தான் உங்களுக்கும்.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோகி......

   Delete
 5. சரி... புத்தகங்களைப் பற்றித்தான் எழுதவில்லை.. சாப்பிட்டதையாவது அல்லது ஃபுட் கோர்ட்டைப் பற்றியாவது எழுதியிருக்கலாமே....

  ப்ளைட் பயணத்தில் உங்களுக்கு என்ன விஷயம் கிடைக்கும் "கழுதைக் காது" பகுதியில் எழுத?

  ReplyDelete
  Replies
  1. ஃபுட் கோர்ட் பற்றி தானே.... அடுத்து அங்கே சென்று வரும்போது எழுதிவிட்டால் ஆச்சு!

   ஃப்ளைட் பயணத்தில் கழுதைக் காது பகுதிக்கு எழுத என்ன கிடைக்கும்! .... கழுதைக் காது பகுதி எழுதியே சில மாதங்கள் ஆகிவிட்டது :) ஸ்வாரஸ்யமான விஷயம் காதில் விழுந்தால் நிச்சயம் சொல்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 6. புத்தகத் திருவிழா ஆனந்த அனுபவம்தான்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஜி!

   Delete
 7. சென்னைப் புத்தகத் திருவிழா ஏப்ரலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்கள். சென்னை வெள்ளத்தால் பதிப்பாளர்களுக்கும் ஏக்கர் நஷ்டமாம். சீன மொழி பேச்சாளர் எதிரே இந்திய வாசகர்கள் மோன நிலையில்...! ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. 'ஏக நஷ்டம்' ன்று வர வேண்டியது 'ஏக்கர் நஷ்டம்' என்று வந்தது மொபைல் சதி!

   Delete
  2. ஏக்கர் நஷ்டம் - :) இருக்கலாம்.... சம்பாதித்திருந்தால் ஏக்கர்களை வாங்கிப் போட்டிருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. ஏக நஷ்டம் - ஏக்கர் நஷ்டம்... :) அலைபேசியில் இப்படித் தான் நடக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. விடுமுறையில் கோவைக்கும் வரலாமே? ஊட்டி குளிருக்கும் டில்லி குளிருக்கும் உற்ற வித்தியாசங்களைப் பார்க்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. விடுமுறையில் கோவை வரும் திட்டமில்லை..... இருந்தாலும் கோவை வந்தால், வருவதற்கு முன் உங்களை நிச்சயம் தொடர்பு கொள்வேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 9. புத்தகக்கண்காட்சி போய் வர வேண்டுமென எண்ணியிருந்தேன். டெல்லி புத்தகக்கண்காட்சியில் குறைந்த பட்சம் சாகித்ய அகாதெமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் தமிழ் புத்தகங்கள் கிடைக்கும். தமிழ் பதிப்பகங்களை எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. சென்னை புத்தகக்கண்காட்சி சென்று வாருங்கள். அது இதற்கு நேர்மாறாக இருக்கும். கடந்த வருடம் 3 நாட்கள் சென்றிருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. NBT, சாகித்ய அகாடெமியின் Stall-களுக்கும் சென்று வந்தேன்.

   தமிழ் புத்தகங்கள் அவ்வளவாக கிடைக்காது எனத் தெரிந்தாலும், இந்த முறை ஒரு பதிப்பகமும் வரவில்லை - சென்ற முறை காலச்சுவடு, சந்த்யா பதிப்பகங்கள் வந்திருந்தார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி!

   Delete
 10. தமிழ் நாட்டுக்கு சென்று புத்தகங்களை அள்ளி வாருங்கள் ஜி

  ReplyDelete
  Replies
  1. அப்படியே செய்து விடுவோம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. நல்ல பகிர்வு. விடுமுறை சிறப்பாக அமையட்டும். தைப் பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. வருக.. வருக.. தமிழகம் வருக.. சென்னை வந்தால் தொடர்பு கொள்ளவும். நண்பர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. வரும் 27-ஆம் தேதி சென்னை வரும் வாய்ப்பிருக்கிறது.... வருவது உறுதியானால் உங்கள் மின்னஞ்சலில் முன்னரே தெரிவிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஜி.

   Delete
 13. பல்பு வாங்கியதைக் கூட இவ்வளவு சுவாரசியமாய் சொல்ல உங்களால்தான் முடியும் :)

  ReplyDelete
  Replies
  1. பல்பு வாங்கி புலம்புவதை விட இது மேல்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 14. வாங்க வாங்க...அன்புடன் வரவேற்கின்றோம்..சார்.

  ReplyDelete
  Replies
  1. புதுக்கோட்டைக்கும் வரும் திட்டமிருக்கிறது. முன்னரே தெரிவிக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 15. சென்னை புத்தகச் சந்தை இந்த ஆண்டு தள்ளிப் போய் விட்டது.உங்கள் பதிவு ஓர் ஆறுதல்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 16. வணக்கம்
  ஐயா.

  தில்லி நிகழ்வை அனைவரின் பார்வைக்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 17. அஹா புத்தகம் வாங்கப் போய் விருந்துண்ட கதை .. :) பொங்கல் வாழ்த்துகள் உங்கள் இல்ல முகவரியை இன்பாக்ஸில் தெரிவிக்க வேண்டுகிறேன் சகோ :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   இன்பாக்ஸ் மூலம் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. முகவரி தெரிவிக்கிறேன்.

   Delete
 18. உங்கள் பதிவு இரண்டு இன்னும் வாசிக்கவில்லை.
  நாளை வாசிக்கிறேன்... கொஞ்சம் பிரச்சினைகளால் வரமுடியவில்லை.

  தாங்களுக்குத்தான் பயணம் என்றால் பிடிக்குமே... ஒரு பயணத் தொடரில் மாட்டிவிட்டிருக்கேன்... முடியும் போது எழுதுங்கள் அண்ணா...
  விவரம் என் தளத்தில்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது படியுங்கள்..... பிரச்சனைகளை முடித்து பிறகு வரலாம். கவலை இல்லை!

   பயணத்தொடர் பதிவின் அழைப்பிற்கு நன்றி. நாளை வெளியிடுகிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 19. சென்னையில் இம்முறை ஏப்ரல் மாதத்தில் அல்லவா..

  ReplyDelete
  Replies
  1. ஏப்ரல் மாதம் என்று தான் அறிவிப்பு வந்திருக்கிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 20. ரசித்துப் படித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 21. நூற்கண்காட்சிக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 22. சீன மொழி...நம்மவர்கள் மோன நிலை ரசித்தோம்....இங்கு புத்தகக் கண்காட்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம் பல பதிப்பகங்கள் பாவம் பெரும் பாதிப்பு.

  //“கும்பகர்ணன்...” பெயர் எனக்கு ஏதோ ஒரு செய்தி சொல்வது போலத் தோன்றியது – ஒழுங்கா கிடைச்ச ஒரு நாள் லீவில் கும்பகர்ணன் மாதிரி தூங்கறது விட்டு இப்படி சாப்பிடறதுக்காகவே புத்தகச் சந்தைக்கு போவாயோ?// அஹஹஹஹ்ஹ் ரொம்பவே ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 23. ஒரு புத்தக திருவிழா முடிந்தால்அடுத்ததில் இரட்டிப்பாக வாங்கலாம்☺

  உங்களுக்கும்குடும்பத்தினர்அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 24. புத்தகத் திருவிழாவில் சாப்பாடு சாப்பிட்டு முடித்து இருக்கிறீர்கள்....
  கும்பகர்ணன் ரசிக்க வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 25. பொங்கல் புத்தகத் திருவிழா சென்னையில் இன்று முதல் துவங்கி விட்டது? சென்னை வந்தால் தொடர்பு கொள்ளவும் 9444091441. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   சென்னை 27-ஆம் தேதி அன்று சென்னை வரும் உத்தேசம் உண்டு. வந்தால் அழைக்கிறேன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....