வியாழன், 21 ஜனவரி, 2016

எதிர்பாரா பதிவர் சந்திப்பு – பட்டு மோகம் மற்றும் சில!



சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தது போல, பொங்கலுக்கு முதல் நாள் தமிழகம் வந்து சேர்ந்தேன்.  விமான/பேருந்து பயணத்தின் போது கிடைத்த அனுபவங்கள் குறித்து இன்னும் எழுதவில்லை. எழுதுவேன்! :) அதற்கு முன்னர் நேற்று நடந்த ஒரு எதிர்பாரா பதிவர் சந்திப்பு பற்றியும் வேறு சில விஷயங்கள் பற்றியும் இன்று ஒரு பதிவாக, இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்து விட்டேன்! முதலில் பதிவர் சந்திப்பு பற்றி பார்க்கலாமா?

நேற்று திருவரங்கத்திலிருந்து திருச்சியின் பிரபல கடைவீதியான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலைக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு தமிழகப் பயணத்திலும் இச்சாலையில் இருக்கும் மங்கள் & மங்கள் அல்லது சாரதாஸ் மற்றும் மதுரை ஃபேமஸ் ஜிகிர்தண்டா கடைகளுக்குச் செல்வது வழக்கமாகி விட்டது! இம்முறையும் விதிவிலக்கல்ல! ஷாப்பிங் செய்வதற்கு நம்மவர்களுக்குச் சொல்லித்தரவா வேண்டும்! அதுவும் எனக்காகவே சில வேலைகளை வைத்திருப்பது வழக்கமாயிற்றே!

முறுக்கு அச்சு வேலை செய்யல, இண்டக்‌ஷன் ஸ்டவ் மாத்தணும் [அதைப் பயன்படுத்துவதே இல்லை என்றாலும்!] என்று சில வேலைகளுக்காக மங்கள் & மங்கள் சென்றிருந்தேன்.  அங்கே பலத்த கூட்டம்.  இங்கே எப்போதுமே திருவிழாக் கூட்டம் தான்! என் முறைக்குக் காத்திருக்க, ஒரு குரல்....  “நீங்க வெங்கட் தானே!”  யாரென்று தெரியவில்லையே... என்று குழப்பமாய் முழிக்க, அவரே தொடர்ந்தார்.  “வலைப்பூவில் எழுதும் வெங்கட் தானே நீங்கநான் பாண்டியன்.......”  ”அரும்புகள் மலரட்டும்வலைப்பூ எழுதும் பாண்டியன் என்று சொல்ல இன்ப அதிர்ச்சி.

அவரும் அதே போல சில வேலைகளுக்காக அவரது துணைவியுடன் வந்திருக்க ஒரு சில வார்த்தைகள் பேசினோம்.  எதிர்பாராத விதமாக பதிவருடன் சந்திப்பு நிகழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.  எப்போதோ எனது பக்கத்தில் எனது புகைப்படத்தினைச் சேர்த்திருந்தேன். அப்போது பார்த்ததை நினைவில் வைத்திருந்து எனை அடையாளம் கண்டு அவர் பேசினார்.  நன்றி பாண்டியன்......... 

சமீபத்தில் வேலை இடமாற்றம் காரணமாக அதிகமாக எழுத முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  விரைவில் பதிவுகள் தொடர்ந்து எழுதும் வாய்ப்புகள் அமையட்டும்......

மங்கள் & மங்கள் கடையில் சட்டைப்பையின் எடை கொஞ்சம் குறைந்த பிறகு எதிர் பக்கம் இருக்கும் சாரதாஸ் உள்ளே நுழைந்தோம். வருடத்தின் 365 நாளும் இங்கே மக்கள் அலைகடலென திரண்டு வந்தபடியே இருக்கிறார்கள்.  நேற்றும் அப்படியே.  பட்டுப் பிரிவுக்குள் இதுவரை சென்றதில்லை.  இம்முறை ஒரு திருமணத்திற்காக பட்டுப்புடவை வாங்க வேண்டி அங்கேயும் செல்ல நேர்ந்தது. அப்பாடி.....  என்னவொரு கூட்டம்.  எள் போட்டால் கீழே விழாது போல! அத்தனை பேர் அங்கே சூழ்ந்திருந்தார்கள். 

நாங்களும் தட்டுத்தடுமாறி அங்கே சென்று எங்களுக்குத் தேவையானதைச் சொல்ல, மூன்று நாற்காலிகள் எங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்க அதில் அமர்ந்து கொண்டோம்.  எங்கள் மீது இடித்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் பலர் பட்டுப் புடவைகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குத் தேவையான புடவையை எடுத்துக் கொண்டு ரசீது போடும் இடத்திற்கு வந்தால் அங்கேயும் அத்தனை மக்கள் கூட்டம்.  ஒருவர் கையில் மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமலஹாசன் தோளில் ஒரு நீண்ட லிஸ்டை வைத்திருப்பாரே அது போல பட்டுப்புடவைகளின் லிஸ்ட் வைத்துக் கொண்டு ரசீது போட்டுக் கொண்டிருந்தார் கடைச் சிப்பந்தி.



ஒவ்வொரு புடவைக்கும் விலையைச் சேர்க்கச் சேர்க்க, கொடுக்க வேண்டிய கூட்டுத்தொகை பார்க்கும் போதே மனதில் கிலி! நீண்ட வால் போன்ற இருந்த புடவை லிஸ்டில் குஞ்சலம் போல இரண்டு வேட்டி மட்டும்! மொத்தத் தொகை ஆறு இலக்கத்தில் – நான்கு லட்சத்தி சொச்சம்!  அப்பாடி! பட்டின் மீது இருக்கும் மோகம் இன்னும் குறையவே இல்லை என்பதற்கு இதுவும் சாட்சி. சர்வ சாதாரணமாக இத்தனை புடவைகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.  இத்தனை கூட்டமாக இருக்கிறதே – தினமும் இப்படித்தானா? என்று கடைச் சிப்பந்தியைக் கேட்க, இன்றைக்கு முகூர்த்த நாள், அதனால் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வந்திருக்கிறார்கள். சாதாரண நாள்களிலும் இதில் பாதி அளவில் இருக்கும்!என்றார்.

வேறு சில துணிகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தோம். அதே சாலையில் இருக்கும் மதுரை ஃபேமஸ் ஜிகிர்தண்டா கடையில் 30 ரூபாய்க்கு ஒரு “மினிமம்ஜிகிர்தண்டா வாங்கிக் குடித்து/சாப்பிட்டு நகர்ந்தோம்.  அங்கே சில ஆட்டோக்கள் காத்திருக்க, வரிசையில் முதலில் இருந்தவரிடம் திருவரங்கம் செல்ல பேசிக் கொண்டிருக்கையில் இரண்டு மூன்று ஆட்டோக்களுக்குப் பின் இருந்த ஆட்டோவின் ஓட்டுனர் ஒரு பெண்மணி. காக்கி உடையில் சவாரிக்காகக் காத்திருந்தார்.  இங்கே காக்கி உடையில் இருந்தாலும் அவருக்கும் பட்டின் மீது ஆசை இருக்குமா இருக்காதா, நிச்சயம் இருக்கும் என்ற எண்ணத்தோடு திருவரங்கத்தினை நோக்கி புறப்பட்டோம்......

நேற்றைய நாளில் எதிர்பாராத பதிவர் சந்திப்பு, சில நிகழ்வுகள் என அனைத்தையும் யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தோம்.  இன்னும் சில நாட்களில் வேறு ஒரு பதிவர் சந்திப்பும் நடக்க இருக்கிறது என்பதையும் இப்போதே சொல்லி விடுகிறேன். சந்தித்த பிறகு அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்!

வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....


42 கருத்துகள்:

  1. எதிர்பாரா சந்திப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான் அதையும் ரசனையூடன் சொல்லியிருந்த விதம் அழகுதான். பட்டு புடவைல போயி இத்தன காச ஏன்தான் போடுறாங்களோ????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாரதா ஜி!

      நீக்கு
  2. ஏற்கனவே ஒருவரையொருவர் பார்த்திராத போதிலும், வலைப்பதிவின் போட்டோக்கள் மூலம் மட்டுமே நிகழ்ந்துள்ள எதிர்பாராத பதிவர் சந்திப்பு மிகவும் ஆச்சர்யம்தான்.

    திருச்சி மங்கள் அண்ட் மங்கள் மற்றும் சாரதாஸ்ஸுக்குள் நுழைந்து, பட்டாக வந்த வேலையை பட்டென வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, சிட்டெனப் பொறுமையுடன் வெளியேறியுள்ளது மிகப்பெரிய சாகசம் தான். வாழ்த்துகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரே பார்த்திராத போதிலும் சந்தித்தது ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  3. அரும்புகள் சில மாதங்களாக மலரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்! உங்கள் சந்திப்பின் மூலம் விளங்கிவிட்டது. பட்டு மோகம் அவ்வளவு சீக்கிரம் நம்ம ஆட்களிடம் பட்டுப்போகாது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  4. எதிர்பாரா சந்திப்பாக இருந்தாலும் அருமை. அடுத்த சந்திப்பினை எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. சந்திப்புகள் மேலும் தொடரட்டும் ஜி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. ஶ்ரீரங்கத்திலேயே இன்டக்‌ஷன் ஸ்டவ் ரிப்பேர் செய்து தராங்க! மங்கம்மா நகர் ஆர்ச் பக்கத்திலே இடப்பக்கமாகக் கடை இருக்கு. எல்லா எலக்ட்ரானிக் பொருட்களும் ஏ.சி. ஸ்டெபிலைசர் உட்படச் செய்து தராங்க. ஆனால் குடும்பத்துடன் வெளியே செல்ல இது ஒரு சந்தர்ப்பம். இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கத்தில் இருப்பது தகவல். பார்க்கிறேன். வெளியே போக சந்தர்ப்பம். அதே தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. இப்போ வரதெல்லாம் மிக்சட் பட்டு தான் என்றாலும் மக்கள் அள்ளிக்கொண்டு தான் போறாங்க. டிசைன்கள் புதுமையாகப் போடறாங்க இல்லையா? ஆனால் நல்ல சுத்தமான பட்டு வேண்டும் எனில் கோ-ஆப்டெக்ஸ் மட்டும் தான். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. அருமையாக இருந்தது தங்களின் பதிவு. நன்றி
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்....

      நீக்கு
  9. ஆகா..எங்க பாண்டியனைத் திருச்சியில் புடிச்சிட்டீங்களா? நல்லது.
    அப்படியே வரும் 24-01-2016 காலை புதுக்கோட்டை வந்துடுங்க அய்யா!
    (ஆமா..புடவை வாங்கணும்னா நம்ம வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் கிட்ட சொன்னாப் போதுமே! வகைவகையா வச்சிருக்காரு மனுஷன்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுக்கோட்டை.... வருகிறேன்!

      தனபாலன் பற்றிய தகவலுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  10. பாண்டியன் ஜியைப் பார்த்த பரவசத்தில் ,பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலான்னு பாடி மகிழ்ந்து விட்டீர்கள் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  11. சுவாரஸ்யம்தான். ஆனால் நீங்கள் டெல்லியிலிருந்து வீடு திரும்பிய அன்றே கூட ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்ந்து விட்டிருக்குமே... இரண்டு பதிவர்களைச் சந்தித்திருப்பீர்களே....!

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிலும் பதிவர் சந்திப்பு... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. சுத்தமான பட்டு வேண்டும் எனில் - தஞ்சை திருபுவனம் தான்!..

    நீங்கள் குறிப்பிட்டுள்ள வந்து - அனுபவித்த அவஸ்தை இன்னும் மறக்க இயலாதது..

    காசைக் கொடுத்து கஷ்டத்தை வரவழைத்துக் கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவர்கள் நம் மக்கள்..

    பதிவு கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  13. பாண்டியன் உண்மையில் புத்திசாலிதான் புகைப்படத்தை வைத்து நேரில் மனிதரை கட்னு பிடிப்பது எனக்கு கைவருவதில்லை வாழ்த்துகள்
    //மங்கள் & மங்கள் கடையில் சட்டைப்பையின் எடை கொஞ்சம் குறைந்த பிறகு எதிர் பக்கம் இருக்கும் சாரதாஸ் உள்ளே நுழைந்தோம்.//
    இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளில் அதிகமாக இதுபோன்ற நுணுக்கங்கள் காணப்படுகிறது. சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நுணுக்கங்கள்.... :)) எனக்கு இது தோன்றவில்லை.

      நீக்கு
  14. வெங்கட்ஜி உங்கள் வீட்டிலேயே இரு பதிவர்கள் இல்லையா....!!!!அதுவே ஒரு சந்திப்போ!!?? அஹஹ் அரும்புகள் மலரும் பாண்டியன் பல நாட்களாகிவிட்டது பதிவுகள் காணவில்லையே என்று..காரணம் தெரிந்தது. எதிர்பாரா சந்திப்பு மகிழ்வுதான்.

    கீதா: பட்டு மோகம் இப்போது இன்னும் எகிறியிருக்கிறது. ஏனென்றால் நிறைய வந்திருக்கின்றது பட்டில் என்று. எனக்காக நான் இதுவரை பட்டின் பக்கம் சென்றது இல்லை. வாங்கியதும் இல்லை. சமீபத்தில் எனது கசின்களின் பெண்கள் கல்யாணம் நிச்சயம் ஆகியிருப்பதால் கடைக்குச் சென்றால்..ஹப்பா எவ்வளவு வகைகள். மக்கள் லட்சக்கணக்கில் வாங்குகின்றார்கள். டிசைனர் பட்டு என்றெல்லாம் வந்திருக்கிறது.

    நல்ல சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எகிறி இருக்கும் பட்டு மோகம்.... உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  15. ஆரம்பத்தில் வலையுலகம் நுழைந்து வலைப்பதிவராக நான் எழுதத் துவங்கிய நேரம். சிலசமயம் எனது பதிவுகளுக்கு பின்னூட்டமென்று எதுவுமே இருக்காது. அப்போது “ புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றி கவலைப் படாதீர்கள்! சாலையில் யாரும் உங்களை “அவர் பெரிய வலைப் பதிவர்” என்று சொல்லப் போவது இல்லை.” என்று எழுதினேன். இன்று அந்த வார்த்தைகளை உங்களது ’அரும்புகள் மலரட்டும்’ அ.பாண்டியனுடனான எதிர்பாராத சந்திப்பு பொய்யாக்கி விட்டதில் மிக்க மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  16. இந்த மோகத்தால் தான் பல ஊர்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றன...! தமிழ் நாட்டில் சாரதாஸ் கடையில் தான் விலை குறைவாக இருக்கும்... சரக்கை பணமாக மாற்ற வேண்டுமென்றால் அங்கு தான் செல்வோம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  17. நண்பர்களுடனான சந்திப்பு என்றும் இனிமையே
    வேறு ஒரு ச்ந்திப்பு இருக்கிறதா
    ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. பாண்டியனை நீங்கள் பதிவில் சந்தித்தது நான் நேரில் சந்தித்தது போல உணர்கிறேன்..
    வாழ்த்துகள்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  19. ஆஹா! எதிர்பாராத இனிமையான சந்திப்பு! //சட்டைப் பையின் எடை// ஹாஹா ரசித்தேன் அண்ணா. அடுத்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் களை கட்டுதே.:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் களை கட்டுதே.... அட அங்க வரைக்கும் தெரிஞ்சுடுச்சா... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரர்
    நமது சந்திப்பு நமக்கு மட்டுமல்லாது நமது நண்பர்களுக்கும் மகிழ்வைத் தந்திருக்கிறது என்றால் இதுவே உண்மையான மகிழ்ச்சி. இனியாவது பதிவுகளைத் தொடர வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். நாளை புதுக்கோட்டை நண்பர்களைச் சந்திக்க இருக்கிறீர்கள். நான் அங்கு தற்சமயம் இல்லையே என்ற ஏக்கம் எட்டிப் பார்க்கிறது. அதற்காக தானோ என்னவோ நம்மை முன்கூட்டியே சந்திக்க வைத்திருக்கிறான் இறைவன். அழகாக பதிவிட்டுள்ளீர்கள். வாழ்த்துகளும் நன்றிகளும் சகோதரர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி பாண்டியன். எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது. அதிக நேரம் உங்களுடன் பேச முடியவில்லை - இருவருமே முக்கிய கடமைகளில் இருந்தோம் அல்லவா!

      தொடர்ந்து எழுதுங்கள் பாண்டியன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாண்டியன்.

      நீக்கு
  21. நம் மக்களுக்கு என்று தணியும் இந்த பட்டு மற்றும் தங்கம் மோகம் என்று பாடலாம் போல. அந்த வேறொரு பதிவர் சந்திப்பு பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....