எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 3, 2016

முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!வகுப்பில் 40 பேர் இருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால் அனைவருமே முதல் மதிப்பெண் எடுப்பது சாத்தியமில்லை. ஒருவரோ இருவரோ எடுக்கலாம்.  ஆனால் அனைவருமே முதல் மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்று கவலையோடு இருக்க முடியுமா? முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை போராட்டங்கள் – கிட்டத்தட்ட 14 வருடங்கள் [Pre KG சேர்க்காமல்] குழந்தைகளை அவர்களது குழந்தைமை மறக்கடித்து முதல் மதிப்பெண் எடுக்க வேண்டுமே என்பதற்காக துரத்திக் கொண்டே இருக்கிறோம்.

அதுவும் தில்லி போன்ற பெருநகரங்களில் குழந்தைகளுக்கு இருக்கும் மன அழுத்தம் மிக மிக அதிகம். போட்டிகள் நிறைந்த இடம் அது. ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதாக இருந்தாலும், போட்டிகள் அதிகரிக்கும்போது மன அழுத்தமும் அதிகமாகிவிடுகிறது. கல்வியின் தரத்தினை உயர்த்துகிறார்களோ இல்லையோ வருடா வருடம் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக்காக வாங்கும் கட்டணங்களை உயர்த்தி விடுகிறார்கள். அதிலும் ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாய் புற்றீசல் போல பல தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தபடியே இருக்கின்றன.

போதிய அளவு அரசுப் பள்ளிகள் இல்லை. இருக்கும் பள்ளிகளிலும் போதிய அளவு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை.  பள்ளியில் சொல்லித் தருவதை விட பல ஆசிரியர்கள் தங்களது வீட்டில் தனியாக படிப்பு சொல்லித் தந்து பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.  அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களே கூட தம் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள் எனும்போது அரசுப் பள்ளியில் குழந்தைகளை யார் சேர்ப்பார்கள்?

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியும், ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ வசதியும் இலவசமாக கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இருக்க வேண்டும் என்றாலும், நடைமுறையில் இல்லை என்பது மிகவும் சோகமான விஷயம்.  பெண் குழந்தைகளுக்கு படிப்பறிவு தேவையில்லை என்ற நிலை தான் இன்னும் பல இந்திய கிராமங்களில்.  தற்போதைய அரசின் திட்டமான “Beti Bachao, Beti Padao” – பெண் சிசு வதை தடுப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் நல்லதொரு திட்டம் – என்றாலும் இதனை நடைமுறைப் படுத்துவதில் சுணக்கம் இருப்பதும் தெளிவு!.

திடீரென்று இந்தப் பதிவு எதற்கு என்பது சிலருக்கு யோசனையாக இருக்கலாம்.  தலைப்பினைப் பார்த்த நண்பர்கள் சிலருக்கு இந்தப் பதிவு எதற்கு என்பது புரிந்திருக்கும்.  ஆமாம் நண்பர்களே, இந்தப் பதிவு நான் சமீபத்தில் வாசித்த “முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளேஎனும் புத்தகத்தினை படித்த பிறகு தோன்றிய எண்ணங்களே.  சமீபத்தில் புதுக்கோட்டை சென்ற போது இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற தமிழாசிரியருமான நா. முத்துநிலவன் ஐயா அவர்கள் இப்புத்தகத்தினை எனக்கு வழங்கினார்கள். நேற்று காலையில் தான் புத்தகத்தினை வாசிக்க எடுத்தேன். புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் கல்வி சார்ந்த கட்டுரைகள். ஒவ்வொரு பெற்றோரும், மாணவர்களும் படிக்க வேண்டிய புத்தகம். புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.....

ஓடி விளையாடு பாப்பாஎன்ற பாரதி பாட்டை ஒப்பிக்காமல் – விளையாடப்போன குழந்தைக்குக் கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக்கூடங்களால் மன அழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப்படுத்தி, சிரித்துக் கூடப் பேசாத ஆசிரியரால் அதிகமாகாதா என்ன?

‘நாளை பள்ளி விடுமுறைஎன்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒரு வகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?

மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே, பல பெற்றோர்!

மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறுவழி என்ன?....  எப்படியாவது மதிப்பெண் வாங்கவைக்கும் எந்திரம் தானா ஆசிரியர்கள்?

“கல்வி புகட்டப்படுவதல்ல! பூக்க வைப்பது! ‘கல்விஎனும் சொல்லே, ‘உள்ளிருக்கும் திறனை வெளியே கொண்டுவருவதுஎனும் ஆழ்ந்த இனிய பொருளைக் கொண்டதுதானே? மாட்டுக்கு மருந்து புகட்டுவதும், மாணவர்க்குக் கல்வி புகட்டுவதும் ஒன்றல்லவே?

ஒரே புத்தகத்தை இரண்டு வருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளி பிசகாமல் வாந்தி எடுத்து எழுதிக் காட்டுவதுமாய்க் கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது வேண்டுமானால் சாதனைதான்.

பதவிகளுக்காகவே வாழும் மனிதர்கள் – தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய் கூட வராதாம்!

தனக்குக் கற்றுக் கொடுக்காத துரோணாச்சாரிக்கு, குருதட்சணையாக கட்டை விரலை வெட்டிக் கொடுத்த ஏகலைவன் செயல், குருபக்தி என்றல்லவா போற்றப்படுகிறது! இதை ஆச்சார்யாரின் குருத்துரோகம் என்றல்லவா சொல்லித் தந்திருக்க வேண்டும்?

புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளைச் சொல்லி விட்டு புத்தகம் பற்றிய தகவல்களையும் சொல்லி விடுகிறேன்!

எம்.பி.பி.எஸ். படித்தால், மருத்துவர் ஆகலாம்,
பி.ஈ. படித்தால் பொறியாளர் ஆகலாம்,
பி.எல். படித்தால் வழக்குரைஞர் ஆகலாம்,
ஐ.ஏ.எஸ். படித்தால் மாவட்ட ஆட்சியர் ஆகலாம்,
எதுவுமே படிக்காமல் மந்திரியும் ஆகலாம்.
ஆனால், என்ன படித்தால் மனிதர் ஆகலாம்?

மனிதரைப் படித்தால் மனிதர் ஆகலாம் என்பது புத்தக ஆசிரியர் நா. முத்துநிலவன் ஐயா அவர்களின் கருத்து!

புத்தகம் பற்றிய தகவல்கள்:

தலைப்பு: முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!
ஆசிரியர்: நா. முத்துநிலவன்.
வெளியீடு:

அகரம்,
மனை எண்.1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்-613007.
தொலைபேசி : 04362-239289.

விலை:   ரூபாய் 120/-

புத்தகத்தினைப் படித்துப் பாருங்கள் நண்பர்களே!

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து....

48 comments:

 1. நிறைவான நூல் அறிமுகம்..
  படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. நூல் அறிமுகமும் அதிலுள்ள கருத்துக்களும் தங்களின் பார்வையில் சொல்லியுள்ளது மிக அழகு.

  நூலாசியர் திரு.நா. முத்துநிலவன் அவர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. நல்ல கருத்துள்ள நூல். ஆனால், "சொல்லுதல் யார்க்கும் எளிய" என்ற குறள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. அருமையான கருத்துகளடங்கிய புத்தகம் போல. படிக்கணும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 5. நன்றி நண்பரே. (எத்தனையோ பேர் புத்தகம் காசுகொடுத்தும், நட்பாகவும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இவ்வளவு விரைவில் படித்து எழுதிய தங்களின் அன்புக்கும் விரைந்த செயல்பாட்டுக்கும் எனது தம-வாக்கும் வணக்கமும்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

   Delete
 6. பிரச்சனைகள் அநேகமாக எல்லோருக்கும் தெரிகிறது குறைகளும் புரிகிறது ஆனால் அதைச் சரிசெய்ய , அதாவது பூனைக்கு மணிகட்ட யார் வருவது. கல்வி என்பது மத்திய அரசின் கீழ் வரவேண்டும் பள்ளி செல்லும் வயதில் இருக்கும் அனைவருக்கும் இலவசக் கல்வி, சம கல்வி. இலவச சீருடை, இலவச மதிய உணவு என்று கட்டாயப்படுத்த வேண்டும்இது அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் உயர்வு தாழ்வு மறைய வழி வகுக்கும்முக்கியமாக மதிப்பெண் எனும் மாயை ஒழிய வழிவகுக்கும் 90 மார்க் வாங்கியவன் 91 மதிப்பெண்வாங்கியவனை விட க் குறைந்த அறிவு படைத்தவனா நமக்கு ஒரு பெனவொலெண்ட் சர்வாதிகாரி வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் நல்லதோர் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. நிறைய மாற்றங்கள் வர வேண்டும்....

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. அருமையான நூல் பற்றி பலரும் பேசியாயிற்று. வாசிக்க வேண்டும். அவரிடம் வாங்க வேண்டும் புத்தகத்தை. நானும் ஆசிரியர் என்பதால் உங்கள் கருத்து மற்றும் முத்துநிலவன் ஐயா அவர்கள் சொல்லிய வரிகள் அனைத்தும் அருமை...அதுவும் இறுதிவரி எதைப்படித்தால் மனிதர் ஆகலாம்..அருமையான கேள்வி. பதிலும் அருமை!! நல்ல பகிர்வு வெங்கட்ஜி.

  கீதா: ‘நாளை பள்ளி விடுமுறை’ என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒரு வகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?// மிகவும் சரியே. பள்ளிக்குச் செல்வதையே விரும்பாத..அதுவும் சிறு வயதில் மட்டுமல்ல, 5 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பிலும் கூட, அவனிடம் நான் சொல்லியது இன்று ஒரு நாள் போனால் இரண்டு நாள் லீவு என்று சொல்லித்தான்...அப்புறம் படிக்க வைத்தது கூட அவன் விரும்பிய கால்நடை மருத்துவர் என்பதைச் சொல்லிப் பாடம் அல்லாத பிற புத்தங்களையும் வாசிக்க வைத்து என்று...நார்மல் குழந்தைகளே பள்ளிக்குச் செல்வதை ஏதோ கடமையாக, விருப்பமின்றிச் செல்லும் போது கற்றல் குறைபாடு இருந்த மகனைப் போன்ற குழந்தைகள் அனைவரும் பாவம். தாரே ஜமீன் பர் படம்தான் நினைவுக்கு வருகின்றது. அதில் இருந்த பையனைப் போன்றுதான் இருந்தான் என்மகன். பள்ளியை வெறுத்தான். பள்ளிகள் குழந்தைகளை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். உங்கள் கருத்துகளும் அருமை. புத்தகத்தில் உள்ள கருத்துகளும் அருமை ஜி. நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. நல்லதொரு விமரிசனம் படித்த திருப்தி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 10. அருமை ஜி நானும் இதைப்படித்த ஞாபகம் இருக்கின்றது ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. நல்ல நூல் விமர்சனம்!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 12. மிக மிகத் தேவையான நூல். இங்கே பேரன் படும் பாட்டைப் பார்த்தாலே கவலையாக இருக்கிறது. கல்லூரிக்குச் செல்ல 9 ஆம் வகுப்பில் இருந்து முடுக்கப் படுகிறார்கள்.
  மிக மிக வருத்தமான நிலை. அழகாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள் வெங்கட்.
  நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 13. விமர்சனம் அருமை ஐயா
  புத்தக வெளியீட்டு விழாவின்போதே
  புதுகைக்குச் சென்று புத்தகம் வாங்கிப்
  படித்து மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 14. #ஆனால், என்ன படித்தால் மனிதர் ஆகலாம்?#
  இந்த கேள்விக்காகவே என் ஏழாவது வாக்கு :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 15. நல்ல நூலைப் பற்றிய நல்ல விமர்சனம். சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாக அமைந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 16. காலத்துக்கு அவசியமான நூல். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 17. அருமையான விமரசனம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 18. என்ன படித்தால் மனிதர் ஆகலாம்? அருமையான கேள்வி?
  அவர்கள் விரும்பியதை படிக்க வைத்தால் அவர்கள் பார்வையில் நாம் மதிப்புக்குரிய மனிதர்களாவது நிச்சயம் அல்லவா?
  த.ம

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 19. அருமையான நூல் விமர்சனம் சகோ.
  தம . கஉ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete

 20. அருமையான நூல் திறனாய்வு. பாராட்டுக்கள்! இந்த நூலை வாங்கி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள நூலகத்தில் வைத்து ஆசிரியர்களை படிக்க சொல்லவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 21. நல்ல விமர்சனம்,, தொடருங்கள் சகோ,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 22. படிக்கத் தூண்டும் நூல். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 23. நல்லதொரு விமரிசனத்திற்கு நன்றி. இந்தப் புத்தகம் குறித்துக் கேள்விப் படவில்லை. அறிமுகத்திற்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 24. அருமையாச் சொல்லியிருக்கீங்க... இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்... 10 கட்டுரைகள் வாசித்துவிட்டேன்... கல்வியின் நிலை குறித்து விரிவான விளக்கமான பார்வை... அருமையான கட்டுரைகள்... விமர்சனம் அருமை அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....