திங்கள், 21 மார்ச், 2016

மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 6

சென்ற பகுதியில் மணிப்பூர் நகரில் இருக்கும் வைஷ்ணவர்களின் மிக முக்கிய வழிபாட்டுத் தலம் ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தாஜி கோவில் மற்றும் ISKCON நிர்வகித்து வரும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் ஆகிய இரண்டு வழிபாட்டுத் தலங்கள் பற்றி பார்த்தோம்.  அதன் பிறகு தேநீர் அருந்தி விட்டு நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது நகரில் அமைந்திருக்கும் ஒரு விளையாட்டு அரங்கம் நோக்கி தான்.


படம்: இணையத்திலிருந்து.....

மேரி கோம் – இவரை அறியாதவர் யார்? குத்துச் சண்டை விளையாட்டு வீரரான இவர்   மணிப்பூரைச் சேர்ந்தவர் தான். மணிப்பூர் நகரில் கால்பந்து தான் முக்கியமான இக்கால விளையாட்டாக இருந்து வந்திருக்கிறது. மேரி கோம் ஒலிம்பிக் போட்டிகளிலும் மற்ற பன்னாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்ற பிறகு எங்கே பார்த்தாலும் மேரி கோம் படங்களையும் அவரின் புகழையும் பார்க்க முடிந்தது. 

மேரி கோம் – மணிப்பூரின் ஒரு சாதாரண கிராமத்தில் “கோம்” எனும் பழங்குடியில் பிறந்தவர்.  மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் – பத்தாவது வகுப்பினைக் கூட முடிக்காதவர் – குத்துச் சண்டை விளையாட்டில் பயிற்சி பெற்று முன்னேற வேண்டும் என்ற வெறியில் படிப்பை விட்டவர் – பெண்களுக்கான விளையாட்டே இல்லை என்று அவர் பெற்றோர்களும் மற்றவர்களும் தடுத்தாலும் விடாது குத்துச் சண்டையில் பயிற்சி பெற்றவர்.  மணிப்பூரில் நடைபெற்ற ஒரு குத்துச் சண்டையில் பங்குகொண்டு முதன் முறையாக பரிசு பெற்று அந்த செய்தி நாளிதழில் வந்தபோது அவரது தந்தை மிகக் கடுமையாக கடிந்து கொண்டாராம். 


படம்: இணையத்திலிருந்து.....


என்றாலும் விடாது பயிற்சி பெற்று பல பதங்கங்களையும், கோப்பைகளையும் வென்றவர் – பத்தாவது படிப்பை நிறுத்திய பின்னர் போட்டிகளில் பங்கு கொண்ட பிறகு மீண்டும் தனிப்பட்ட முறையில் படிக்க ஆரம்பித்து பட்டம் பெற்றார்.  இந்திய அரசு அளிக்கும் அர்ஜுனா விருது, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ போன்ற பல பட்டங்களையும் வென்றார்.  மணிப்பூர் முழுவதும் எங்கே சென்றாலும் மேரி கோம் படங்களையோ, அவர் பற்றிய பதாகைகளையோ பார்க்க முடிந்தது.


படம்: இணையத்திலிருந்து.....


Magnificient Mary என்று மணிப்பூர் மக்களால் அழைக்கப்படும் மேரி கோம் தனது மாநிலத்தில் குத்துச் சண்டை பயிற்சி தருவதற்காகவே ஒரு பயிற்சி நிலையம் அமைத்து பலருக்கும் குத்துச் சண்டை பயிற்சி அளித்து வருகிறார்.  அவரது முழுப் பெயர் மாங்தே சுங்நேய்ஜங் மேரி கோம் என்பதாகும். எங்களது வாகன ஓட்டி ஷரத் அவர்களுக்கு தங்கள் மாநிலத்தின் பெருமையான மேரி கோம் பற்றி சொல்லும்போதே அத்தனை மகிழ்ச்சியும் குதூகலமும் அவருக்கு. ஷரத் தனது மகளையும் குத்துச் சண்டை பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு அனுப்புவதாகவும் சொல்லி அவருடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

எங்களது குழுவில் இருந்த சில நண்பர்களுக்கும் குத்துச் சண்டை மிகவும் பிடித்தமான விளையாட்டு என்று சொல்ல உடனேயே மேரி கோம் பிறந்த ஊரைச் சென்று பார்க்கலாமா என்று கேட்டார் ஷரத்.  இன்றைக்கு நேரம் இருக்காது, நாளை செல்லலாம் என்று அவரே சொல்லி விட்டு, அதற்கு பதிலாக இம்ஃபால் நகரில் இருக்கும் முக்கிய விளையாட்டு அரங்கமான குமான் லம்பக் விளையாட்டு அரங்கத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

பல மணிப்பூர் இளைஞர்களும் இளைஞிகளும் அங்கே கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்.  ஓட்டமும் பயிற்சிகளும் எங்களையும் அப்பக்கம் கொஞ்சம் இழுத்தது. மாலை நேரம் என்பதால் நாங்களும் அரங்கத்தினை ஒரு சுற்றாவது ஓடி வரலாம் என முடிவு செய்தோம். ஓடியும் வந்தோம்! இரண்டு சுற்று ஓடி வர, எங்களில் நால்வருக்கு மூச்சு வாங்கியது! உடற்பயிற்சி செய்யாமல் அலுவலகம் வீடு என இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்!

அங்கே இருந்த சில இளைஞர்களிடம் பேசி அவர்களது பிடித்தமான விளையாட்டு பற்றியும் கேட்டு அவர்களோடு சில மகிழ்வான நிமிடங்களைக் கழித்தோம். எங்களுடன் வந்திருந்த ஓட்டுனர் ஷரத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. அங்கே இருந்து புறப்பட்டு நாங்கள் தங்கியிருந்த Hotel Bheigo விற்கு வந்து சேர்ந்தோம்.  காலையில் எங்களது இருப்பிடங்களிலிருந்து புறப்பட்டது. தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதால் சற்றே ஓய்வெடுத்து விட்டு இரவு உணவு தேட வேண்டும்.  ஓட்டுனர் ஷரத்   நாங்கள் தங்குமிடத்திலேயே வட இந்திய உணவும் கிடைக்கும் எனச் சொல்லி புறப்பட்டார்.

நாளை காலை விரைவில் வரச் சொல்லி அவருக்கு விடை கொடுத்தோம்!  சற்று நேரம் ஓய்வெடுத்து அதன் பிறகு உணவகத்திற்குச் சென்றோம். நானும் நண்பர் பிரமோத்-உம் ஒரு அறையில் தங்க, சுரேஷ், சசி மற்றும்  நாசர் ஆகிய மூவரும் மற்ற அறையில் தங்கினார்கள்.  இங்கே இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும் – முதல் விஷயம் முதல் பகுதியில் சொன்னது போல என்னைத் தவிர மற்ற நான்கு நண்பர்களும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். நான் சாப்பிடுவதில்லை என்றாலும் மற்றவர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு பிரச்சனை இல்லை!

இரண்டாம் விஷயம் – என்னையும் நண்பர் பிரமோத்-ஐயும் தவிர்த்த மற்ற மூவரும் இப்படி பயணிக்கும் போது ஒன்றிரண்டு கோப்பை மதுபானம் அருந்துவது வழக்கம் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்தப் பழக்கம் எப்படி எல்லாம் தொடரப் போகிறது என்பதை போகப் போகச் சொல்கிறேன்!  இப்போதைக்கு இரவு உணவு பற்றிய விஷயத்திற்கு வருவோம்.

உணவகத்திற்கு சென்று என்ன இருக்கிறது எனக் கேட்க, வரிசையாக அசைவ உணவுகளாகவே சொல்லிக் கொண்டிருந்தார் அங்கே இருந்த சிப்பந்தி. கடைசியாக போனால் போகிறது என ஆலு மட்டர் [உருளைக்கிழங்கும் பட்டாணியும்], ஆலு கோபி [உருளைக்கிழங்கும் காலிஃப்ளவரும்] இருக்கிறது எனச் சொன்னார்.  நாங்கள் சப்பாத்தி, ஆலு கோபி, ஆலு மட்டர், சிக்கன் ஜிஞ்சர், எக் ஃப்ரைட் ரைஸ், ப்ளைன் ரைஸ், சப்பாத்தி என எங்கள் தேவையைச் சொல்லி காத்திருந்தோம்….

”காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!” என்று பாடாத குறை தான். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு தான் நாங்கள் சொன்ன உணவு வந்தது! அதற்குள் பசி எங்களைத் தின்றிருந்தது! எதிர் புறத்தில் அமர்ந்திருந்த மூன்று நண்பர்கள் அருந்தியிருந்த சுரா பானம் அதன் வேலையைக் காட்டத் துவங்கி இருந்தது! சிரிப்பும் பேச்சுமாக அவர்கள் தங்கள் பராக்கிரமங்களைச் சொல்லியபடியே உணவு உண்ண நானும் என்னுடைய பங்குக்கு சைவ உணவைச் சாப்பிட்டு முடித்தேன்!

பொதுவாக இரவு நேரம் உணவு சாப்பிட்ட பிறகு அப்படியே கொஞ்சம் நடப்பது வழக்கம்.  என்றாலும் அன்றைக்கு ஏனோ நடக்கத் தோன்றவில்லை.  அனைவரும் தங்குமிடத்திற்குத் திரும்பி உறக்கத்தைத் தழுவினோம் - நாளைய நாள் எங்களுக்குத் தரப் போகும் அனுபவங்களை மனதில் நினைத்தபடியே…..

இந்த பயணத்தில் முதல் நாள் நாங்கள் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் இப்பகுதியோடு முடிந்தன! அடுத்த பகுதியிலிருந்து இரண்டாம் நாள் அனுபவங்கள்! படிக்கத் தயாராக இருங்கள்…. நான் சற்றே உறங்கி விட்டு வருகிறேன்!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



28 கருத்துகள்:

  1. தயாராக இருக்கிறோம். உறங்கிவிட்டு வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. மேரி கோம் திரைப்படம் வாயிலாகத்தான் பரிச்சயம். எத்துணை அற்புதமான வீராங்கனை.. அவ்வளவு தூரம் போய்விட்டு அவர் பிறந்த ஊரைப் பார்க்காமல் வருவதா? அவசியம் பார்க்கவேண்டும். சுவையான சுவாரசியமான பயண அனுபவங்களை நாங்களும் ரசித்தபடி தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி. இரண்டாம் நாள் பயணத்தில் அவர் ஊர் உண்டு!

      நீக்கு
  3. குத்துச்சண்டை போட்டியின் மேல் விருப்பம் கிடையாது. கோவிலுக்குப் போனால் தொற்றிக் கொள்ளும் பக்தி போல மேரி கோம் ஊர் சென்றதும் ஓடத்தோன்றி உடல் நலத்தில் கவனம் சென்றிருக்கிறது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மணிப்பூரின் பயண அனுபவங்கள் - ரசனை..

    மேரி கோம் அவர்களைப் பற்றி தங்கள் வாயிலாக அறிந்திட ஆவல்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  6. பயணக்கட்டுரை ஸ்வாரஸ்யமாக உள்ளது. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  7. சுவாரஸ்யமான அனுபவங்கள் நிறைய இருக்கும் போலத் தெரிகின்றதே வெங்கட்ஜி!

    மேரி கோம் பற்றிய திரைப்படம் பார்த்திருக்கிறோம். அற்புதமான வீராங்கனை. பெண்கள் போகத்தயங்கும் விளையாட்டுத் துறை. அவரது ஊருக்கும் சென்று வந்திருக்கிறீர்கள். அறிய ஆவலாக இருக்கிறோம். தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. நான் இம்பால் சென்றிருந்தபோது எனக்கும் முதலில் நினைவுக்கு வந்தது ஐரோம் ஷர்மிளா மற்றும் மேரி கோம் தான். அருமையான பதிவு. தொடர்கிறேன்.
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  9. திறமைசாலியை அடக்கி வைக்க முடியாது நல்ல உதாரணம் .மேரி கோம்!அவர் வீட்டைக் காண ஆவலோடு இருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  10. நானும் தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா
    தொடருங்கள் காத்திருக்கோம்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  12. மேரி கோம் பற்றி தெரிந்துக் கொண்டேன் ஐயா.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!

      நீக்கு
  13. நல்ல பகிர்வு அண்ணா...
    நாளைய நாள் அனுபவத்திற்க்காக நாங்களும் காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....