செவ்வாய், 22 மார்ச், 2016

சாப்பிட வாங்க: பட்டாடா நு ஷாக்…..




என்னம்மா கண்ணு! பேருலயே ஷாக் இருக்கே, சாப்பிட்டா ஷாக் அடிக்குமோ? என்ற பயம் தேவையில்லை.  குஜராத் மக்கள் சப்ஜி என்பதைத் தான் ஷாக் என்று சொல்கிறார்கள் அவர்கள் மொழியில்! பட்டாடா என்பது நம்ம உருளைக் கிழங்கன்றி வேறில்லை!  வட இந்தியர்களுக்கு உருளைக் கிழங்கில்லையேல் உயிரில்லை! அதை மற்ற எல்லா காய்கறிகள், பருப்பு வகைகள் என அனைத்துடனும் சேர்த்து சமையல் செய்வார்கள்.  வெண்டைக்காய் உடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைப்பதை நீங்கள் பார்த்ததுண்டா?  இங்கே நான் பார்த்ததுண்டு! சாப்பிட்டதும் உண்டு!

குஜராத் மாநில பயணம் செய்தபோது இப்படித்தான் எந்த உணவகத்திற்குச் சென்றாலும் மெனு கார்டைப் பார்த்த போது எல்லா சப்ஜிகளிலும் ஷாக்! அப்போது தான் எனக்குத் தெரிந்தது ஷாக் என்றாலும் ஷாக் அடித்தமாதிரி நாம் பயப்படத் தேவையில்லை என்பதை!  சரி வாங்க, இன்னிக்கு இந்த பட்டாடா நு ஷாக் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு [தோல் எடுத்தது – சற்றே பெரிய துண்டுகளாய்] - 2 ½ கப், தக்காளி – 1 [சற்றே பெரிய துண்டுகளாய்], கடுகு, ஜீரகம், பச்சை மிளகாய்-இஞ்சி விழுது, பெருங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், ஜீரகப் பொடி, சர்க்கரை [1 ஸ்பூன்], எண்ணை, கொத்தமல்லி தழை – கொஞ்சம், தண்ணீர், உப்பு – தேவைக்கேற்ப!

எப்படி செய்யணும் மாமு:

வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். பட், படார் என வெடித்ததும், ஜீரகத்தினைச் சேர்க்கவும்.  அதுவும் வெடிக்கும் வரை காத்திருக்கவும்! அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை! இஞ்சி-பச்சை மிளகாய் விழுது மற்றும் பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.  வதக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் உருளைக் கிழங்குகளைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.  ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்க்கவும்.  நான் பொதுவாக சர்க்கரை சேர்ப்பதில்லை – ஒரு அசட்டு தித்திப்பு இருக்கும் என்பதால்! மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும் – அதுக்குன்னு கடிகாரத்தைப் பார்த்தபடியே இருக்கத் தேவையில்லை! எல்லாம் ஒரு தோராயமான கணக்கு தான்!

மிளகாய்ப் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

1 ¼ கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.  கொஞ்சம் கொதிக்க ஆரம்பித்ததும் மூடி வைக்கவும்.  இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மூடியை எடுத்து விட்டு கலக்கி விடவும்.  சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் உருளைக் கிழங்கு நன்கு வெந்து இருக்கும். தேவையெனில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்!

மூடியை எடுத்து விட்டு, ஜீரகப் பொடி, மற்றும் மல்லிப் பொடியைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். அடுப்பை அணைத்து விடலாம்!

வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு கொத்தமல்லித் தழைகளை தூவி அழகு படுத்துங்கள்…..  சப்பாத்தி மற்றும் பூரியோடு இதைச் சாப்பிட நீங்கள் நிச்சயம் ஷாக் ஆக மாட்டீங்க!  குஜராத்தி பாணி உருளைக் கிழங்கு சப்ஜி செய்து பார்த்து உங்களுக்குப் பிடித்ததா எனச் சொல்லுங்கள்!

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்


வெங்கட்.

புது தில்லி. 

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஈஸியோ ஈஸி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ம்ம்ம்ம், இது நிறையப் பண்ணிச் சாப்பிட்டாச்சு. இதே போல் தக்காளி இல்லாமல் நீர்க்கப் புளிஜலம் விட்டுப் பஞ்சாபி முறையில் ஆலு கி லாஞ்சியும் சாப்பிட்டாயிற்று. பண்ணியும் பார்த்தாச்சு! தக்காளியைத் துண்டுகளாகப் போடுவதற்குப்பதிலாகத் தோல் நீக்கிவிட்டு ஜூஸாகவும் சேர்க்கலாம். அல்லது தக்காளி ப்யூரியும் சேர்க்கலாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. என்ன இருந்தாலும் சப்பாத்திக்கு உ.கி.க்கு அடுத்து தான் மத்த சப்ஜி எல்லாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. செய்துவிட வேண்டியதுதான், நன்றாக இருக்கிறது பார்க்கவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  6. இதனுடன் வெங்காயமும் சேர்த்து வதக்கி குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டால் ஆச்சு...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதன் சுவை வேறு, இதன் சுவை வேறு!

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி வெங்கட்.

      நீக்கு
  7. இராமேஸ்வரத்தில் இந்த வகை பட்டாடா ஷாக் உண்ட நினைவு. நன்றாகவே இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. இஞ்சி சேர்ப்பதால் வாயு பயம் இல்லை. படிக்க நன்றாக இருந்தது.
    மாமியார் மும்பையில் குடித்தனம் செய்தவர் என்பதால்
    அவர் செய்து பார்த்திருக்கிறேன். குஜராத்தில் பவென்ஃபகாயம் அவ்வளவாகச் சேர்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த உருளை நல்ல ருசியாக இருக்கும்.
    நன்றி வெங்கட்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  9. நானும்கூட செய்யலாம் போலயே.... ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யலாம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. வணக்கம்
    ஐயா
    விதி முறைப்படி செய்திடுவோம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  12. ஆஹா... சுலபமான வழி முறையாத்தான் இருக்கு...
    செய்து பார்த்துட வேண்டியதுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  13. ஆம் ஜி குஜராத் உணவில் சப்ஜிக்களை ஷாக் என்றே சொல்லுகின்றார்கள்...இது அடிக்கடி செய்வதுண்டு..குஜராத்தி உணவில் பெரும்பாலும் வெங்காயம் பூண்டு அவ்வளவாகச் சேர்ப்பதில்லை இல்லையா...தெரிந்தது என்றாலும் உங்கள் குறிப்பையும் சேர்த்துக் கொண்டாயிற்று மிக்க நன்றி ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....