சனி, 5 மார்ச், 2016

சுழற்றிச் சுழற்றி….


 படம்: இணையத்திலிருந்து......

தில்லி வந்த புதிதில் சுமார் மூன்று வருடங்கள் கரோல்பாக் பகுதியில் இருந்திருக்கிறேன் என்றாலும், அங்கே இப்படி ஒரு இடம் இருந்ததாய் அறிந்திருக்கவில்லை. அதன் பிறகும் தெரிந்து கொள்ளவில்லை.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தில்லி நகருக்குள்ளும் இப்படி ஒரு இடம் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கரோல் பாக் பகுதியில் இருக்கும் அஜ்மல் கான் ரோடு பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது.  மிகவும் பிரபலமான கடை வீதி அது – தில்லி வரும் தமிழர்கள் பலரும் இங்கே பேரம் பேசி பல பொருட்களை வாங்குவார்கள் – அப்படியும் ஏமாந்து தான் போகிறார்கள் என்பது பற்றி இங்கே சொல்லப்போவதில்லை!  அந்த சாலையின் முடிவில் D.B. Gupta ரோடைக் கடந்து உள்ளே சென்றால் கிஷன்கஞ்ச் ரயில் நிலையம் வரும். அதன் அருகில் இருக்கும் ஒரு இடம் தான் நான் மேலே சொன்ன இடம்….

சென்ற ஞாயிறன்று நானும் சில நண்பர்களும் அங்கே சென்று வந்தோம்.  தில்லியின் நடுவே இத்தனை பெரிய இடத்தில் ஒரு மாட்டுத் தொழுவம் இருக்கிறது – ஆதரவற்ற பசு மாடுகள், இறைவனுக்கு வேண்டிக் கொண்டு விடப்பட்ட மாடுகள் என அனைத்தையும் அங்கே வைத்து பராமரிக்கிறார்கள் – பராமரிப்பது ஒரு தொண்டு நிறுவனம்.  அங்கே பலரும் வந்து மாடுகளுக்கு உணவு அளிக்கிறார்கள்.  மாடுகளுக்கு புல், சப்பாத்தி, சத்து உருண்டைகள் [லட்டு என அழைக்கிறார்கள்!] என அனைத்தும் கொடுக்கிறார்கள். 

மாடுகளுக்கு உணவான புல் அங்கேயே கிடைக்கிறது – தோட்டத்தில் வெட்டிய புற்களைச் சிறு சிறு துண்டுகளாக்க ஒரு இயந்திரமும் உண்டு. அவற்றை நீங்கள் வாங்கிக் கொடுக்கலாம், இல்லையெனில் சத்து உருண்டைகள், கோதுமை, மக்காச்சோளம் ஆகிய இரண்டும் கலந்து செய்யப்பட்ட சப்பாத்திகள், மக்காச் சோளம் என அனைத்தும் அங்கே விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.  ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுக்கு வாங்கினால், உங்கள் கைகளாலேயே மாடுகளுக்கு ஊட்டி விடலாம்.

நாங்களும் அங்கே சப்பாத்திகளும், சத்து உருண்டைகளையும் வாங்கி எங்கள் கைகளால் மாடுகளுக்கும், கன்றுக் குட்டிகளுக்கும் ஊட்டி விட்டோம்.  அனைத்தையும் நாக்கைச் சுழற்றிச் சுழற்றி வாங்கிச் சாப்பிட்ட மாடுகளை பாசத்தோடு கழுத்தில் தடவிக்கொடுக்க, இன்னும் கொஞ்சம் தடவி விடேன் என்பது போல கழுத்தை மேலே தூக்கிக் காண்பிக்கும் மாடுகள்….  எத்தனை எத்தனை வண்ணங்களில் மாடுகள்.  சில கன்றுக் குட்டிகள் மிக அழகாக இருக்க, அவற்றை விட்டு வர மனமில்லை – என்றாலும் அங்கே இருக்கும் சாணி வாசம் நம்மை இருக்க விடாது!

சில மணித்துளிகள் அங்கே இருந்து மாடுகளுக்கு உணவளித்து வந்ததில் ஒரு வித மனத் திருப்தி கிடைத்தது என்னவோ உண்மை.  அங்கே நோய்வாய்ப்பட்ட ஒரு மாடும் இருந்தது – அதைத் தனியாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள் – நிற்க முடியாமல் உட்கார்ந்திருந்தது. அதற்கும் கொஞ்சம் தீனி போட்டு வந்தோம்.  அம்மாடு இன்னும் சில நாட்களில் இப்பூவுலகில் இல்லாமலும் போகலாம்! 



தில்லியின் சாலைகள் பலவற்றிலும், குறிப்பாக பழைய தில்லி பகுதிகளிலும், தில்லி நகரின் எல்லைப் பகுதிகளிலும் நிறைய மாடுகளை சாலைகளில் பார்க்க முடியும். விரைந்து செல்லும் வாகனங்களில் அடிபட்டு கால்களிலும் உடலிலும் காயங்களோடு சுற்றி வரும் பல மாடுகளைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும்.  அவைகளைப் பாதுகாப்பாய் ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கான உணவு வழங்க முடியாதா எனத் தோன்றும்.  இயற்கையான சூழலில், சுதந்திரமாகத் திரிந்த விலங்குகளை, அவற்றின் இடத்தினை பிடுங்கிக் கொண்டு கட்டிடம் கட்டி நாம் வாழ, அவை இடமில்லாது சுற்றுகிறது. 

இப்படி இடமில்லாத பசுக்களையும், காளைகளையும் இந்த இடத்தில் விட்டு வைத்திருக்கிறார்கள்….  உணவும் கொடுத்து பராமரிக்கும் அந்த தொண்டு நிறுவனத்திற்கு என் வந்தனம்.  நெய்வேலியில் இருந்தபோது பக்கத்து வீட்டில் வளர்ந்த மாடுகளை பயந்து பயந்து தொட்டுப் பார்த்திருக்கிறேன்.  சென்ற ஞாயிறில் இந்த தொழுவத்திற்குச் சென்று மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் எனது கைகளாலேயே உணவளித்து அவற்றின் கழுத்தினைத் தடவிக் கொடுத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

கிட்டத்தட்ட ஆயிரம் மாடுகளாவது இங்கே இருக்கும். அனைத்தையும் பராமரிப்பதற்கு செலவு நிறையவே ஆகும். பசுக்களிடமிருந்து கிடக்கும் பால் விற்கப்படுவதிலிருந்து கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது போதுமான அளவு இருக்காது என்று தான் தோன்றுகிறது. நம்மைப் போல சிலர் அங்கே வந்து உணவளிப்பதாலும் தான் இச்சேவை தொடர்கிறது.  இதற்காகவே அவ்வப்போது அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அங்கிருந்து வந்தேன்…...

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

26 கருத்துகள்:

  1. நல்ல சேவை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதே போல கோ சாலையில் நானும் வாங்கித் தந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  3. அருமையான பகிர்வு சகோ, சாலையில் போகும் மாடுகளை இங்கு பார்க்கும் போதே கஷ்டமாக இருக்கும்,,, அவைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றால்,,, உண்மைதான் சகோ, அவைகளின் இடங்களை நாம் பிடுங்கிக்கொண்டு அவைகளை ரோட்டில் விடுகிறோம். ஒரு வேளை அவைகள் பேசினால்,,,

    நல்ல பகிர்வு தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  4. நல்ல தகவல்.. தஞ்சையைச் சுற்றிலும் பல கோயில்களில் கோசாலைகள் விளங்குகின்றன..

    பசுக்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் காக்கப்படவேண்டியவையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜி!

      நீக்கு
  5. நம்மூரிலும் சில கோவில்களில் பசுமடம் என்று இருக்கிறது இங்கெல்லாம் சாலைகளில் மாடுகள் திரியும் அவற்றைப்பிடித்துக் கட்டப் போனால் எங்கிருந்தோ சொந்தக் காரர்கள் வந்து விடுவார்கள்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  6. ஜீவகாருண்யம் தேவைதான் ,ஆனால் ,பசுக்களின் மீது மட்டும் காட்டுவதுதான் ....:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  7. நல்ல செயல் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. வாழ்த்துகள் ஐயா.தொடரட்டும் தங்கள் சேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!

      நீக்கு
  9. நவீன காலத்தில் மாடுகளின் பயன்பாடு குறைந்து விட்ட படியால் பராமரிக்க ஆட்கள் இல்லை. பாலின் தேவை இல்லை எனில் மாட்டினமே அழிந்து போய் இருக்கும் இப்படி யாராவது செய்தால்தான் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  10. அங்கு சென்று வரும் போதெல்லாம் மனதில் ஒரு தெய்வீகமான அமைதி ஏற்படுகிறது. அடுத்த முறை செல்லும் போது மறக்காமல் கேமரா கொண்டு செல்லவும். அங்குள்ள க்ருஷ்ணர் சிலை மாடு கன்றுகள் அனைத்தையும் படம் படித்து எங்களுடன் பகிருங்கள்.

    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

      நீக்கு
  12. முன்னைவிட கோசாலைகள் இப்போது கொஞ்சம் அதிகமாகவே காணப்படுவது நல்ல விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை. சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....