திங்கள், 4 ஏப்ரல், 2016

மிதக்கும் தீவுகள்…

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 7


மிதக்கும் தீவுகள்

சென்ற பகுதியில் மணிப்பூர் நகரின் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் பற்றியும் அங்கே இருக்கும் விளையாட்டு அரங்கம் பற்றியும் பார்த்தோம். அதன் பிறகு தங்கும் இடம் சென்று இரவு உணவு முடித்து அன்றைய நாளின் அசதியைப் போக்க உறங்கி திரும்ப வருவதாய்ச் சொல்லி முடித்திருந்தேன். இதோ வந்து விட்டேன். உறக்கம் கழிந்து ஐந்து பேரும் தயாராக இருந்தோம்.  நாங்கள் ஷரத்-ஐ அழைக்கலாம் என அலைபேசியை எடுத்தபோது அவரிடமிருந்து அழைப்பு – தங்குமிடத்தின் வாயிலில் தான் காத்திருப்பதாகச் சொன்னார். கீழே வந்தோம். 


மீன் பிடிக்க வாரீயளா?

காலை உணவு கொஞ்சமாக ப்ரெட் டோஸ்ட், பராட்டா என எதாவது கிடைக்குமா எனக் கேட்க, உணவகத்தில் ஒரு மணி நேரம் ஆகும் என்ரு சொன்னார்கள்.  மணிப்பூர் வாசிகள் இத்தனை காலையில் உணவகத்திற்கு வரமாட்டார்கள் போலும்.  சரி வழியில் பார்த்துக் கொள்ளலாம் என புறப்பட்டோம்.  வழியில் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. குறிப்பாக சிறு சிறு கடைகள் – காய்கறி, பால் போன்ற பொருட்களை விற்பவர்களைத் தான் அதிகம் பார்க்க முடிந்தது.  பால் விற்பனை சற்றே வித்தியாசமாக!


போக்குவரத்து வாகனம்....

தரையில் ஒரு பாலீதின் ஷீட் போட்டு அதில் பால் பாக்கெட்டுகளை குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இது வித்தியாசமாக இருக்கிறதே என யோசிக்கும்போதே பல பெண்கள் இப்படி பால் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  எங்கிருந்தோ பாலை வாங்கிக் கொண்டு வந்து இப்படி தரையில் போட்டு விற்பனை செய்வதை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை! பயணிகள் பயணிக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் சிறிய வாகனங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள்.  ஆட்டோக்களில் கூட எங்கிருந்து எங்கே வரை செல்லலாம் என்பதை எழுதி வைத்திருக்கிறார்கள். 


ஏரிக்குச் செல்லும் பாதை.....  வழியிலே மோய்ராங்க் எனும் மாவட்டமும் வரும்!

வழியில் பல காட்சிகளைப் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தோம். ஓட்டுனர் ஷரத் வழக்கம் போல அந்தந்த ஊர்களைப் பற்றி அவருக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தார்.  சாலைகளில் அத்தனை மனித நடமாட்டம் இல்லை என்பதால் வாகனம் விரைவாகவே சென்று கொண்டிருந்தது. விரைவிலேயே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோக் டக் ஏரிக்குச் சென்று சேர்ந்தோம். இந்த ஏரி மணிப்பூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஏரி. மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தான் குடிநீர் விநியோகம்.


கரையோர வீடும்  மிதக்கும் தீவுகளும்...

தில்லியிலிருந்து விமானத்தில் வரும்போது மணிப்பூரின் விமான நிலையத்தில் தரையிறங்கு முன்னர் ஒரு பறவைப் பார்வையாக இந்த ஏரியைக் கண்டு ரசிக்க முடியும். பெரிய ஏரியில் ஆங்காங்கே பசுமையான தீவுகளைப் பார்க்க முடியும்.  இந்த தீவுகளில் ஒரு சிறப்பு இவை மிதக்கும் தீவுகள்…  ஃபும்டி என அவர்களது மொழியில் அழைக்கப்படும் இந்த மிதக்கும் தீவுகள், மண், செடிகள் என பலவற்றை தன்னுள் கொண்டது.  இந்த தீவுகளில் வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழும் பழங்குடியினரும் உண்டு. 


தனியே தன்னந்தனியே நான் மீன் பிடிக்கச் சென்றேன்......

அவர்களது முக்கியமான தொழிலே மீன் பிடிப்பது தான். சின்னச் சின்ன படகுகளில் தனியாளாக நின்று கொண்டு, கையில் நீண்ட குச்சியை வைத்து படகை ஓட்டியவாறே, தண்ணீரின் மேற்பரப்பில் அவ்வப்போது குச்சியால் அடித்துக் கொண்டு மீன்பிடிக்கும் அவர்களைப் பார்த்தபடியே நின்றிருந்தோம். நாங்கள் சென்ற நேரம் காலை என்பதால் அங்கே மக்கள் நடமாட்டமே இல்லை.  அங்கே இருக்கும் உணவகம் ஒன்றில் வேலை செய்பவர்களும், சில தொழிலாளிகளும் மட்டுமே இருந்தார்கள். 


பூப் பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தான் ஆசை....

உணவகத்திற்குச் செல்லும் பாதை ஓரங்கள் முழுவதும் பூச்செடிகள் இருக்க, அவற்றில் இருந்த பூக்களையும் கேமிராவிற்குள் சிறை பிடித்தோம்.  உணவகத்திற்குச் சென்று அங்கே காலை உணவினை முடித்துக் கொள்ளலாம் என்றால் அங்கே அப்போது எதுவும் கிடைக்காது என்றும், தயாராக ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் என்று சொல்லி விட்டார் ஒரு சிப்பந்தி.  உணவகத்தின் உள்பக்கமும், வெளிபக்கமும் மிக அழகாய் வேலைப்பாடுகள் இருந்தன.  அனைத்தும் மூங்கிலால் செய்யப்பட்டவை.  அவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தோம். 


உணவகத்தின் மேற்கூரையில் மூங்கில் வேலைப்பாடுகள்....

இந்த லோக் டக் ஏரி பற்றி இன்னுமொரு விஷயமும் சொல்ல வேண்டும். இந்த ஏரியில் மிதக்கும் தீவுகளில் மிகப் பெரிய தீவு ஒன்றில் உலகின் ஒரே ஒரு மிதக்கும் தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. கைபுல் லம்ஜாவ் தேசியப் பூங்கா என அழைக்கப்படும் இப்பூங்காவில் பல அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.  இப்பூங்காவிற்குச் செல்ல ஆசை இருந்தாலும் கூட வந்திருந்த சில நண்பர்களுக்கு அங்கே செல்வதில் விருப்பமில்லை என்பதால் அந்த எண்ணத்தை நானும் பிரமோத்-உம் கைவிட்டோம். 


இந்தப் பூவிடம் என்ன சொன்னீர்கள்....  இவ்வளவு வெட்கப்படுகிறதே!

இந்த தேசியப் பூங்காவில் சாங்காய் என அழைக்கப்படும் மான்கள், சாம்பார் வகை மான்கள், மலைப்பாம்புகள், நரி, எலிகள் என பல உயிரினங்கள் உண்டு.  பறக்கும் நரிகள் என அழைக்கப்படும் ஆந்தைகள், காட்டுப் பூனைகள், விதம் விதமான பறவைகள் என பலவும் உண்டு. இவற்றைப் பார்த்து ரசிக்கவே ஒரு முறை வர வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.


நாங்க ஒரே குடும்பம்.....

சமீப காலங்களில் ஆகாயத் தாமரை படர்ந்து ஏரியின் பல பகுதிகளில் பரவி ஏரியினை அழித்து விடும் அபாயமும் இருப்பதாகத் தெரிகிறது.  போலவே ஃபும்டிக்களில் வீடு கட்ட எடுத்துச் செல்லப்படும் கட்டுமானப் பொருட்களாலும் ஏரியில் பல இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட அரசாங்கம் இப்போது தான் முழித்துக் கொண்டிருக்கிறது.  ஏரியைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சில முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். 


இப்படிக்கா உக்காந்து இயற்கையை ரசிப்போம் வாங்க!

ஆனாலும் ஏரியின் கரையோரத்தில் பல கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.  பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் போலவே இங்கேயும் சுற்றுலா வருபவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது சோகம்.  ஆங்காங்கே சில மேடைகளும், வட்ட வடிவ குடிசைகளும் கட்டி வைத்திருக்கிறார்கள்.  அவற்றில் அமர்ந்து கொண்டு ஏரியின் அழகை ரசித்துக் கொண்டிருக்கலாம்.  நாங்களும் அப்படி அமர்ந்து ஏரியின் அமைதியையும் இயற்கையையும் ரசித்துக் கொண்டிருந்தோம்.


 மரத்தில் இருந்த அழகிய கூடுகள்.....  எத்தனை திறமை இந்தப் பறவைகளுக்கு!

ஏரியின் ஓரத்தில் சில மரங்கள் – இலைகளில்லா மரங்கள்.  அவற்றின் கிளைகளில் சில கூடுகள் – மண் கொண்டு கட்டப்பட்டது போல! பறவைகளுக்கும் உயிரினங்களுக்கும் எத்தனை திறமை என்று வியக்காமல் இருக்க முடிவதில்லை.  அத்தனை நேர்த்தி அந்த கூடுகளில்….. 

காலை நேரம், மக்கள் நடமாட்டமும் இல்லை என்பதால் இயற்கையை ரசிப்பதில் எந்தவித தடங்கலும் இல்லை.  நாங்கள் இன்னும் கொஞ்சம் அச்சூழலில் இருந்து ரசிக்கிறோம்.  நீங்களும் மனக்கண்ணில் அவ்விடங்களைக் கண்டு இயற்கையின் எழிலில் மகிழ்ந்திருங்கள்.  விரைவில் அடுத்த பகுதியில் சந்திப்போம்….

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. ஏரி... அதில் மிதக்கும் தீவுகள்.. அதில் தேசியப் பூங்கா... அதில் அரிய வகை விலங்குகள்.. ஆச்சர்யம்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வெங்கட்ஜி!!! இப்போதே போக வேண்டும் போல இருக்குதே!! ஏரியும் அதிலும் மிதக்கும் தீவு மிதக்கும் பூங்கா ...விலங்குகள்...ஜி நீங்கள் இந்தப் பயணத்தில் ரசிக்க முடியவில்லை என்றாலும் கண்டிப்பாக மற்றொருமுறை இந்தப் பூங்காவை பார்த்து ரசித்துவிட்டு வாருங்கள். நான் மகனிடம் சொல்லிக் குறித்துவைத்துக் கொண்டேன். நானும் மகனும் பயணம் மேற்கொள்வதில் உங்களைப் போன்று மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் ஆதாலால் மகன் என்னிடம் அடிக்கடி சொல்லுவது...உடல்நலனை நன்றாக வைத்துக் கொள். வயதானாலும் என்னுடன் பயணம் செய்யும் நிலையில் இருக்க வேண்டும் மேலை நாட்டவரைப் போல. என்று.

    மிகவும் ரசித்தோம் வெங்கட்ஜி....மிக்க நன்றி. தொடர்கின்றோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது இங்கே சென்று வாருங்கள் கீதா ஜி! நிச்சயம் ரசிக்க முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. உங்களை கண்டு நான் பொறாமை பல சமயங்களில்படுகிறேன். எப்படிதான் இப்படி பல இடங்களுக்கு சென்று பார்தது ரசித்து அதை அழகாக பயணப் பதிவுகளாக பதிகிறீர்கள் என்றுதான்....ஹும்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் செய்ய கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது மட்டுமே எனக்குத் தெரிந்தது. பயணம் சென்று வந்த பிறகு கட்டுரைகளாக எழுதி வைத்தால் நமக்கும் பின்பு படித்து ரசிக்க முடியும். போலவே அதைப் படிக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். எனக்கும் சில பேரைப் பார்த்து பொறாமை உண்டு! :) பல விஷயங்களை அசால்டாக செய்து முடிக்கிறார்கள்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  5. மணிப்பூரைப் பற்றிய தகவல்களும் அழகிய படங்களும் மனதில் நிறைகின்றன.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. அழகிய படங்கள், மிதக்கும் தீவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  7. ஆஹா அற்புதமான இடம் போய்ப்பார்க்க ஆவலைத் தூண்டுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  8. மணிப்பூரில் நாங்கள் பார்த்த உருப்படியான இடம் இதுதான். அற்புதமான இடம். உங்கள் பதிவின் மூலம் மீண்டும் கண்டு களித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இந்த இடத்தினைப் பார்த்ததால் கட்டுரையை ரசித்திருப்பது புரிகிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  9. ஏரியில் மீன் பிடிப்பவர் அழகிய காட்சி பூக்களும் அழகு விரிவான தகவல்கள் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. நல்ல பகிர்வு சகோ...
    நேரில் பார்த்த ஆனந்தம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு


  11. மிதக்கும் தீவுகள் உள்ள லோக் டக் ஏரிக்கு அழைத்து சென்றமைக்கு நன்றி! அழகான பூக்களை அருமையாய் படம் எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. நீங்கள் படம் பிடித்துள்ள மூங்கில் வேலைப்பாடுகள், இறால் பிடிக்கும் சாதனம் என்று நினைக்கிறேன். இவைகளை ஏரியில் கட்டி விட்டுவிடுவார்கள் (தண்ணீருக்குள்ளே). இறால்கள் இதன் வாசல் வழியாக உள்ளே சென்றுவிடும் ஆனால் வெளியே வரமுடியாது. மாலையில் எல்லாவற்றையும் எடுத்து, அதிலிருந்து மாட்டியுள்ள இறால்களை எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

    தெரியாத பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்து எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு நல்ல வாய்ப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூங்கில் வேலைப்பாடுகள் அலங்காரத்திற்கு வைத்திருந்தன. அவை இறால் பிடிக்கும் சாதனமா என்பது தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. இந்த ஊர் பெயர்களை எல்லாம் லாட்டரி சீட்டு காலத்தில் கேள்வி பட்டிருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  15. நேரில் பார்க்கதான் எனக்கும் ஆசை! முதுமை இடந்தராதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமை இடந்தராதே.... உண்மை தான் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....