எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 7, 2016

ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 8

என்ன நண்பர்களே, லோக்டக் ஏரிக்கரையிலிருந்து புறப்பட உங்களுக்கும் மனமில்லையா?  இருந்தாலும், புறப்படத்தானே வேண்டும்.  நாங்களும் அந்த அமைதியான, இயற்கை அன்னையின் தாலாட்டுப் பாடலைக் கேட்டபடியே இருந்துவிட நினைத்தாலும், புறப்பட்டோம்.  வந்த வழியே திரும்ப வரவேண்டும் என்றாலும், வழியில் மேலும் சில இடங்களையும் பார்த்தபடியே வர வேண்டும் என்பது எங்கள் திட்டம்.  வழியில் கண்ட காட்சிகளையும், இடங்களையும் பற்றி இப்பதிவில் பார்க்கலாமா?


கடைவீதி கலகலக்கும்......

நாங்கள் சென்றபோது காலை நேரம் என்பதால் வழியில் உள்ள ஊர்களில் அத்தனை ஆள் நடமாட்டம் இல்லை.  திரும்பி வரும் போது முன் பகல் என்பதால் ஊரில் உள்ள அனைவருக்கும் துயிலெழுந்து நடமாட ஆரம்பித்திருந்தார்கள்.  கடைத்தெருக்கள் மக்களாலும், வண்டிகளாலும் நிரம்பி இருந்தது.  வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான காய்கறிகள், ராஜபவனி போல அமர்ந்து வர வசதியான உயர ரிக்‌ஷாகள் என அனைத்தையும் கவனித்தபடி வந்தோம். 


ராஜபவனி!

வழியிலே ஒரு கடைத்தெரு – நிறைய மக்கள் நடமாட்டம், ரிக்‌ஷாக்கள், காய்கறிகள் வாங்க வந்திருக்கும் மணிப்பூரி பெண்மணிகள் என இருந்தது.  ஒரு காய் வித்தியாசமாக இருந்தது.  எல்லாக் கடைகளிலும் கொத்துக் கொத்தாக அந்த காய் விற்பனை செய்யப்பட அனைவருமே அவற்றை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.   அது என்ன வித்தியாசமாக இருக்கிறதே என ஓட்டுனர் ஷரத் இடம் கேட்க, அவர் அந்த காயின் பெயர் யோங்க்சா என்றும் அதைச் சட்னியாக செய்து கருப்பு அரிசி சாதத்துடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா என சப்புக் கொட்டினார்.

அது என்ன யோங்க்சா சட்னி, கருப்பரிசி சாதம் என உங்களில் சிலர் கேட்கக்கூடும் என்பதால் எனது முந்தைய பதிவொன்றிலிருந்து சில வரிகளை உங்களுக்காக இங்கே தருகிறேன்.


யோங்க்சா
இந்த யோங்க்சாக் என்பது பீன்ஸ் வகைகளில் ஒன்றுஇது பெரிய மரத்தில் பட்டை பட்டையாகக் காய்த்துத் தொங்குகிறது. ஒவ்வொன்றும் முழ நீளம் இருக்கிறது! இந்த யோங்க்சாக்-கை அனைத்து மணிப்பூர் வாசிகளும் தினம் தினம் சாப்பிடுவார்கள் போலும்எங்கே பார்த்தாலும் இந்தக் காய்களை கொத்துக் கொத்தாக வைத்து விற்பனை செய்கிறார்கள். அதை இப்பகுதிப் பெண்கள் ரொம்பவும் கவனித்து வாங்குகிறார்கள்காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம்! புழுக்கள் இல்லாது வாங்குவதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது! இந்த யோங்க்சா கொண்டு இரண்டு விதமாய் Side dish தயாரிப்பார்களாம். ஒன்று யோங்க்சா இரோம்பா, மற்றொன்று யோங்க்சா ஷிங்க்ஜூஎன்னடா இது வாயில நுழையாத பெயரா இருக்கேன்னு யோசிக்காதீங்க! கவலையும் படாதீங்கசாப்பிடும் போது வாயில் நிச்சயமா நுழைஞ்சுடும்! இந்த Side dish வெறும சாப்பிட முடியுமா? கூட Main dish வேணும்ல! அதுதான் குரங்கு அரிசி! குரங்கு அரிசியாகுரங்கு Mark இல்ல குரங்கு Brand அப்படி எதாவது இருக்குமோன்னு யோசிக்கக் கூடாது!

யோங்க்சா விற்பனைக்கு....
 மணிப்பூரில் கருப்பு வண்ணத்தில் அரிசி கிடைக்கிறது. அதைத் தான் இவர்கள் Monki rice-ன்னு சொல்றாங்க! Monki[ey]-ன்னா குரங்குன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்குமே! இந்த மோங்கி ரைசும் யோங்க்சா சட்னியும் இருந்தா போதும்எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன் என எங்கள் வாகன ஓட்டுனர் சொன்னார். அது எப்படி தயாரிக்கணும்னு கேட்டேன் – ”வாங்களேன் உங்களை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் சாப்பிடவே தரேனேஎன்று சொல்ல கொஞ்சம் ஜெர்க் அடித்தேன்! – “இல்லைப் பரவாயில்ல! செய்முறை மட்டும் சொல்லுங்க!”.  அவர் பாவம்சமையல் கலைல கொஞ்சம் Weak போல! இல்லை எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டாரு

மணிப்பூர் வாசிகள் கோடைக் காலம் முழுவதுமே இதை விரும்பிச் சாப்பிடுவார்களாம். குளிர் காலத்தில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்! சைவம், அசைவம் என இரண்டுமே தயாரிப்பது உண்டு. இந்த யோங்க்சாவை ஆங்கிலத்தில் Tree Beans என்றும், stinky beans, Smelly beans என்றும் அழைப்பதுண்டு. அதற்கும் காரணம் இருக்கிறது. யோங்க்சா சாப்பிட்டால் நமது சுவாசத்திலும், கழிக்கும் சிறுநீரிலும் ஒரு வித நாற்றம் இருக்குமாம்போலவே இரண்டு நாட்கள் வரை பக்கத்தில் ஒரு பய வரமாட்டான்! – ஏன் எனில் அபான வாயு வெளி வந்து கொண்டே இருக்குமாம்நல்ல வேளை இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும் நான் சாப்பிடல! பதினைஞ்சு நாள் பயணத்தில் முதல் நாள் தான் மணிப்பூரில்! அப்போதே இப்படி தொடங்கி இருந்தால் என்னாவது!

சாலைக் காட்சிகளைப் பார்த்தபடியே நாங்கள் சென்று சேர்ந்த இடம் பிஷ்ணுபூர் மாவட்டத்திற்குப் பெயர் வரக் காரணமாயிருந்த ஒரு கோவிலுக்கு.  பதினைந்தாம் நூற்றாண்டுக் கோவில் – கோவில் என்றதும் மிகப் பெரிய கோவில் என நினைத்து விட வேண்டாம்.  மிகச் சிறிய கோவில் தான். கோவிலும், கோவிலைச் சுற்றி ஒரு சிறிய பூங்காவும் பராமரித்து வருகிறார்கள்.  மணிப்பூர் நகரில் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட முதல் கோவில் இது என்றும் நம்பப்படுகிறது.  புராதனமான கோவில் என்பதால், இந்திய அரசின் தொல்பொருளியல் துறையின் கீழ் பராமரிக்கப் படுகிறது.  கோவில் எப்படி வந்தது எனும் கதையையும் பார்க்கலாம்…


பிஷ்ணுபூர் - விஷ்ணு கோவில்...

மணிப்பூர் ராஜாவான க்யாம்பாவும் போங் நகர ராஜாவான சாவ்பா கெ கோம்பா என்பவரும் இணைந்து தற்போதைய மியான்மார் பகுதியில் இருக்கும் க்யாங் எனும் நாட்டை கைப்பற்றினார்கள்.  வெற்றியில் மகிழ்ச்சி கொண்ட போங் ராஜா, தன்னுடன் சேர்ந்து போரிட்ட க்யாம்பாவுக்கு ஒரு சிறிய விஷ்ணு சிலையைப் பரிசளித்தாராம்.  அந்தச் சிலை கிடைத்த பிறகு க்யாம்பா விஷ்ணுவின் மீது பக்தி செலுத்த ஆரம்பித்ததோடு, ஒரு கோவில் கட்டச் செய்து அதில் விஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்.

விஷ்ணுவின் சிலை இங்கே வந்த பிறகு இந்த இடத்தின் பெயரும் விஷ்ணுவின் பெயராலேயே பிஷ்ணுபூர் என அமைந்துவிட்டது!
என்ன நண்பர்களே, இந்தப் பகுதியில் சொல்லப்பட்ட விஷயங்களை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.


அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..


நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

36 comments:

 1. ஸ்வாரஸ்யமான பயணக் குறிப்புக்கள். உங்களுடைய பாணியில் விவரித்ததை ரசித்தோம். அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 2. உடன் பயணித்தோம்
  கருப்பரிசியும் யோங்சாக்கும் இதுவரை
  அறியாத தகவல்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. இந்த ராஜபவனி தில்லியில் இருந்ததை விட மிகவும் சரிவாக இருக்கே!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். உயரமும் அதிகம்.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி.

   Delete
 4. சொல்லப்பட்ட விஷயங்களை ரசித்தேன்.

  :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விசேட உணவு போலும். பதிவை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. இந்தப் பெயர்கள் நினைவில் நிற்க குறிப்பெடுத்துக் கொள்வீர்களா திருச்சியில் பெரிய ஆஸ்பத்திரி அருகே செல்லம்மாள் மெஸ் இருக்கிறது அங்கும் காட்டுயானம் அரிசி சாதம் என்று சமைக்கிறார்கள் சாதம் கருப்பாய் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான இடங்களில் அவ்விடம் பற்றிய தகவல்களை பதாகைகளாக வைத்திருப்பதுண்டு. அவற்றை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது வழக்கம். சில குறிப்புகளும் எழுதி வைத்துக் கொள்வதுண்டு - நாள் முடிவில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. #இரண்டு நாட்கள் வரை பக்கத்தில் ஒரு பய வரமாட்டான்! நல்ல வேளை சொல்லிவிட்டீர்கள் ,சந்தர்ப்பம் கிடைத்தால் சாப்பிடணும்னு நினைத்திருந்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. கருப்பரிசி சாப்பிடலாம். யோங்க்சா தான் பிரச்சனை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. விரிவான விளக்கம் புகைப்படங்கள் அருமை ஜி வாழ்த்துகள் தொடரட்டும் இன்னும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. சாப்பாடுவித்தியாசமான பெயராக இருக்கு)))தொடர்கின்றேன்பயணத்தை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 10. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் இப்படித்தான் நேர்ந்துவிடுகிறது. முடிந்த போது படியுங்கள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. ரிக்ஷா புதுவிதம். கறுப்பு அரிசியும், யோங்க்சாவும் பயமுறுத்துகின்றன. நல்ல ரசனை உங்களுக்கு வெங்கட். நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 12. கல கலக்கும் மணிப்பூர் காய்கறி கடைவீதியில் மணிப்பூர் மிர்ச் (U-morok) வாங்கி கடித்து பார்த்தீர்களா? - இப்படிக்கு, கடித்துப் பார்த்து கலகலத்துப் போன ஒரு ஜீவன்.

  ReplyDelete
  Replies
  1. மணிப்பூர் மிர்ச் பற்றி முன்னரே அறிந்திருந்ததால் இப்பயணத்தில் சுவைக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 13. மணிப்பூர் உணவு வகை அருமை. கோயில் வித்தியாசமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 14. பெயர்கள்தான் நினைவில் நுழைய மறுக்கின்றன. நீங்கள் நினைவில் வைத்திருந்து எழுதியிருக்கின்றீர்களே பாராட்டுகள் வெங்கட்ஜி!!!

  கருப்பரிசி சாப்பிடலாம்தான்...இங்கு அரிசிக் கடை ஒன்றில் ஒரு முறை பார்த்திருக்கின்றேன். கருப்பரிசி மிகவும் சத்துள்ள அரிசி. ஆப்பிரிக்காவில் விளைந்தது என்றும் சைனாவில் விளைந்தது என்றும் அரிசி வகைகளைப் பற்றி வாசித்த போது தெரிந்து கொண்டது. அந்த அரிசிதானா நீங்கள் சொல்லும் அரிசி என்பது தெரியவில்லை. அந்தக் காய் யோங்க்சா எங்கள் ஊர் பாடவரைக்காய் போல் உள்ளது ஆனால் பாடவரைக்காய் நாறாது...பெரிய கொடியாக இருக்கும். கறி செய்வதுண்டு எங்கள் வீட்டில்.

  அருமையான தகவல்கள் வெங்கட்ஜி. குறித்தும் வைத்துக் கொண்டு வருகின்றேன்.

  மிக்க நன்றி தொடர்கின்றோம்...(துளசிக்கு வேலைப்பளு. தவிர்க்க முடியாத காரணத்தால் வாசிக்க இயலவில்லை. நான் அவ்வப்போது பதிவுகள் பற்றி மெயில் அனுப்புகின்றேன்...)

  கீதா


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   சில குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வதும், படங்கள் எடுத்து வைத்துக் கொள்வதும் உதவுகின்றன.

   Delete
 15. அழகான படங்கள்... அருமையான பகிர்வு அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 16. சாப்பாட்டிற்கு அங்க அங்க என்ன பண்ணினீர்கள் என்பதையும் எழுதவும். நீங்கள் எழுதியிருப்பதெல்லாம் இதுவரை நான் படிக்காதது. தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. சாப்பாடு - வட இந்திய உணவகங்களுக்கே அழைத்துச் செல்ல உள்ளூர் ஓட்டுனரிடம் சொல்வது வழக்கம். சப்பாத்தி, தால் என ஒன்றாவது சுமாராக இருக்கும். அந்த அனுபவங்களும் எழுதுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 17. விஷ்ணுபூர் மக்களின் உணவு பழக்கம், அந்த ஊர்பற்றி, கோவில் விவரங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 18. பிஷ்ணுபூரின் காய்கறிகள், புகைப்படங்கள், கோவில் பற்றிய விபரங்கள் அனைத்தும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....